உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

சேரன்-செங்குட்டுவன்

அறவோர்க்களித்தல் அந்தணரோம்பல் முதலிய தருமங்களைச் செய்து இல்லறத்தை இனிது நடத்திவந்தனா.

இங்ஙனம் நிகழ்ந்துவருங்கால், மிக்க அழகும் ஆடல் பாடல்களிற் றேர்ச்சியுமுடைய மாதவி என்னும் நாடகக் கணிகையைக் கோவலன் காதலுற்று, தன்பாலுள்ள பொருள்களை நாளும் அவள் பொருட்டுச் செலவிட்டு அவளுடன் மகிழ்ந்து வருவானாயினன். கண்ணகி தன் கணவனது பிரிவுக்கு வருந்தினளாயினும், அதனை வெளிக்காட்டா திருந்தாள். இங்ஙனம் நிகழ, சோழர்கள் இந்திரன்பொருட்டு ஆண்டுதோறும் நடத்தும் இந்திரவிழாவானது அக்காலத்து நடைபெற்றது. அதன்முடிவில் நகரத்துள்ளார், வழக்கம் போலத் தத்தம் பரிவாரங்களுடன் கடலாடுதற்குச் சென்றனர். கோவலனும் மாதவியுடன் கடற்கரையடைந்து ஓரிடத்திருந்து பலவகைப்பாடல்களைப் பாடிக்கொண்டு வீணையை எடுத்து வாசித்தான். அவன் பாடியவை, வெவ்வேறு அகப்பொருட்சுவை தழுவியிருந்தமையால், மாதவி, ‘இவன் வேறு மகளிர்பால் விருப்புடையன் போலும்’ என்றெண்ணிப் புலந்து, அவன் கையாழை வாங்கித், தான் வேறு குறிப்பில்லாதவளாயினும், அக்குறிப்புக்கொண்ட அகப் பொருட்சுவைதழுவிய பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வீணையை வாசித்தனள். அவள் பாடியவற்றைக் கேட்டிருந்த கோவலன் ‘வேறொருவன்மேற் காதல்கொண்டு இவள் பாடினள்’ என்றெண்ணி, ஊழ்வசத்தால் அவளைத் துறந்து தன் மனையடைந்து கண்ணகியைக் கண்டு, “பொய்யை மெய்யாகக் காட்டி யொழுகும் பரத்தையை மருவி வறுமையுற்றுக் கெட்டேன்; அஃது எனக்கு மிகவும் நாணைத்தருகின்றது”