உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடநாட்டியாத்திரை

55

கங்கையிற் றீர்த்தமாட்டிய காலத்தே எதிர்த்து வந்த ஆரியவரசர் ஆயிரவர்முன் தாம் ஒருவராகநின்று பொருத்த போர்க்கோலத்தைக் கடுங்கட்கூற்றமும், கண்விழித்து நோக்கியதன்றோ. இங்ஙனம், நீர்சூழ்ந்த இந்நிலவுலகத்தை வென்று தமிழ்நாடாகச்செய்த தாம் வடநாட்டில் யாத்திரை செய்யக் கருதின், ஆங்கு நும்மை எதிர்ப்பவர் யாவரோ? இமயமலைக்கு எங்கோனாகிய நீவிர் செல்லக்கருதியிருப்பது பத்தினிக்கடவுளைச் சமைத்தற்குரிய சிலையின் பொருட்டேயாதலால், ஆங்குவாழும் அரசர்க்கெல்லாம், வில்கயல்புலி யிவற்றை இலச்சினையாகக் கொண்ட நம் திருமுகத்தை முன்னே விடுத்தருளல் வேண்டும்” என்று கூறினன். இதுகேட்ட அழும்பில்வேள் என்னும் அமைச்சன் “இந் நாவலந்தீவில் நம் பகைவராயுள்ளாரது ஒற்றர்கள் இவ் வஞ்சிமாநகரைவிட்டு நீங்குபவரல்லர். இவ் வொற்றுக்களே பகையரசர் செவிகளில் நம் வடநாட்டியாத்திரைபற்றிய செய்திகளை அறிவிக்கத்தக்கன. அதனால் நம் யாத்திரையைப்பற்றி, இவ்வூரிற் பறையறைந்து தெரிவித்தலொன்றே போதியது” என்று உரைக்கச் செங்குட்டுவனும் அதற்கு உடம்பட்டனன். பின்னர்ப் பேரியாற்றினின்று புறப்பட்டு அரசன் தன் பெரும் பரிவாரங்களுடன் வஞ்சிமாநகரடைந்தான். அடைந்ததும், யானை மேல் முரசேற்றப்பெற்றுச் செங்குட்டுவனது வட நாட்டியாத்திரைபற்றியும், பகையரசர் வந்து பணியாவிடில் அவர்க்கு நேருங் கேடுகளைப்பற்றியும்,

“வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதோ றூழி யுலகங் காக்கென
விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்தோர்

கற்கொண்டு பெயருமெங் காவல னாதலின்