78
சேரன் செங்குட்டுவன்
தன் தன்மபத்தினியாகிய இளங்கோவேண்மாளோடுங் கூடி
வேந்தர் பெருமானான செங்குட்டுவன் அவ்வரங்கினை அடைந்து அதனில் வீற்றிருப்பானாயினன்.
அப்போது, மறையவர் நிறைந்த பறையூர்வாசியும், கூத்தில் வல்லவனுமாகிய சாக்கையன் ஒருவன் அரசன் முன்வந்து நின்று, சிவபிரான் திரிபுரங்களை எரித்தவிடத்தே உமையவளை ஒரு பாகத்துக்கொண்டு ஆடிய கொட்டிச் சேதம்* என்னுங் கூத்தினை அப்பெருமான் ஆடியமுறையே நடித்துக் காட்டக், குடவர் கோமானும் கோப்பெருந்தேவியும் அதனைக் கண்டு மகிழ்ந்தனர். இங்ஙனம், அவ்விருவரது நன்கு மதிப்பையும் பெற்றுக் கூத்தச்சாக்கையன் விடைபெற்று நீங்கியபின், செங்குட்டுவன் மனைவியுடன் அந்நிலாமுற்றத்தைவிட்டுப் புறப்பட்டு அரசிருப்பாகிய பேரோலக்கத்தை அடைந்தான். அடைந்தபின்னர், நீலன் முதலாய கஞ்சுகமாக்கள் மறையோனான மாடலனுடன் அவ்விடம் வந்து, வாயில் காவல்ரால் தம்வரவை மன்னனுக்கறிவித்து, அவனாணை பெற்று உட்சென்று அரசனை வணங்கிச் சொல்லுகின்றார்:— "வெற்றி வேந்தே! தேவரீர் எங்களுக்கிட்ட கட்டளைப்படியே, சோழரது பழமைதங்கிய நகாஞ்சென்று, அங்கே, வச்சிரம் அவந்தி மகதநாட்டரசரால் அளிக்கப்பெற்ற பந்தருந் தோரணவாயிலுங் கொண்ட சித்திரமண்டபத்தில் வீற்றிருந்த செம்பியர் பெருமானைக்கண்டு, வடநாட்டுப் போரில் அகப்பட்ட ஆரிய மன்னரை அவ்வேந்தனுக்குக் காட்டி அவனடி வணங்கி
* இது, கொடுகொட்டி, கொட்டி எனவும் வழங்கும் ; 'திரிபுரா தீமடுத் தெரியக்கண்டு இரங்காது கைகொட்டி நின்றாடுதலிற் கொடுமையுடைத்தாதல் நோக்கிக் கொடுகொட்டி என்று பெயர் கூறினார்' என்பர் அடியார்க்குநல்லார். (சிலப். 6. 43).