ஏழாவது வாசல்/திருடன் போட்ட வேடம்

விக்கிமூலம் இலிருந்து

திருடன் போட்ட வேடம்

ஓர் ஊரில் ஒரு திருடன் இருந்தான். நள்ளிரவில் வீடுகளில் புகுந்து திருடுவது அவன் வழக்கம், திருடித் திருடி அவன் திருட்டுத் தொழிலில் தேர்ந்தவனாகி விட்டான்.

சின்னவீடு, பெரியவீடு, ஏழைவீடு பணக்காரன் வீடு எல்லா வீட்டிலும் அவன் திருடியிருக்கிறான், ஆனால் அரசனுடைய அரண்மனையில் மட்டும் அதுவரை அவன் திருடியதில்லை.

அரண்மனையில், அதுவும் அரசனிடத்தில் ஏதாவது திருடிவிட வேண்டும் என்று ஒரு நாள் தோன்றியது. அரண்மனையில் புகுந்து யாரிடமும் அகப்படாமல் அரசனுடைய பொருளைத் திருடிக் கொண்டு வந்துவிட்டால் தான் பெரிய திறமைசாலி என்று சொல்லிக் கொள்ள முடியும் என்று அவன் நினைத்தான்.

திட்டமிட்டபடி அவன் ஒரு நள்ளிரவில் அரண்மனைக்குள் புகுந்தான். எப்படியோ அரண்மனைக் காவலாளிகள் கண்ணில் படாமல் உள்ளே நுழைந்து விட்டான். அரசனுடைய படுக்கையறை யருகிலும் சென்று விட்டான். அப்போது அரசன் அரசியுடன் பேசிக் கொண்டிருந்தான். பேசி முடித்து உறங்கட்டும் என்று திருடன் வெளியே ஓர் இருட்டு மூலையில் ஒளிந்து காத்துக் கொண்டிருந்தான்.

அந்த அரசன் தெய்வபக்தி யுடையவன். தெய்வபக்தியைக் காட்டிலும் அவனுக்கு அடியார் பக்தி அதிகம். அதாவது, தெய்வத்தை வணங்குகின்ற பக்தர்களை அந்த அரசன் தெய்வமாகவே எண்ணி வணங்குவான். அப்படிப்பட்ட அந்த அரசனுக்கு ஓர் அழகான மகள் இருந்தாள். இளவரசியான அந்த மகள் திருமண வயதை யடைந்தாள். அதனால் அவளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று அரசி ஆசைப்பட்டாள். ஆகவே, அவள் அன்று இரவு, தன் மகள் திருமணத்தைப் பற்றி அரசனிடம் பேசத் தொடங்கினாள். “அரசே, நம் மகள் திருமண வயதையடைந்துவிட்டாள். விரைவில் அவளுக்கு நல்ல மாப்பிள்ளை ஒருவனைப் பார்க்க வேண்டுமே!” என்றாள் அரசி.

“ஆம் நம் மகளுக்கு நாம் பார்க்கும் மாப்பிள்ளை ஒரு தெய்வ பக்தராக இருக்க வேண்டும்” என்றார் அரசர்.

“அப்படியானால்...?”

“நம் ஊர் ஆற்றங்கரையிலே சாமியார்கள் இருக்கிறார்கள் பார்த்திருக்கிறாய் அல்லவா? அவர்களில் ஒருவருக்கு நம் மகளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும். தெய்வத்தின் அருளால் பிறந்த நம் மகளைத் தெய்வ பக்தர் ஒருவருக்குக் கொடுக்கவே விரும்புகிறேன்” என்றான் அரசன்.

“தங்கள் விருப்பமே என் விருப்பம் என்றாள், அரசரை என்றுமே எதிர்த்துப் பேசியறியாத அரசி.

“நாளையே நான் ஏற்பாடு செய்கிறேன்” என்றான் அரசன். அதற்கு பிறகு அவர்கள் பேச்சை நிறுத்தி விட்டு உறங்கி விட்டார்கள்.

வெளியில் ஒளிந்திருந்த திருடன் அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். நான் இங்கு வந்த நேரம் நல்ல நேரம்தான். இளவரசியை மணம் புரியும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. நான் இப்போது திருட வேண்டியதில்லை. நாளை ஆற்றங்கரைக்குப் போய் சாமியார்களோடு சாமியாராய் உட்கார்ந்து விட வேண்டியதுதான். வாய்ப்பு இருந்தால் இளவரசியின் கணவன் ஆகிவிடுவேன். அதனால் அரசருக்கு வாரிசும் ஆகிவிடுவேன்” என்று எண்ணிக்கொண்டே திருடன் அங்கிருந்து கிளம்பினான்.

எப்படித் தந்திரமாய் அரண்மனையின் உள்ளே நுழைந்தானோ அப்படியே வெளியேறி விட்டான். மறுநாள் அவ்வூர் ஆற்றங்கரையில் சாமியார் வேடத்துடன் போய் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டான்.

அரண்மனை அதிகாரிகள் வந்தார்கள். ஆற்றங்கரையில், மரங்களின் அடியில் ஆங்காங்கே உட்கார்ந்து இறைவனை நோக்கித் தொழுதுகொண்டிருந்த சாமியார்களைக் கண்டார்கள். ஒவ்வொருவரிடமாகச் சென்றார்கள். “ஐயா, தாங்கள் எங்கள் அரசன் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று கேட்டார்கள். குடும்ப வாழ்க்கையே வேண்டாம் என்று வந்திருந்த அந்த உண்மையான சாமியார்கள் இளவரசியைத் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்கள். அதிகாரிகள் அரசருடைய விருப்பத்தை எவ்வளவோ எடுத்துக் கூறியும் அந்தச் சாமியார்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

சாமியார் வேடத்தில் இருந்த திருடனிடம் வந்தார்கள். மற்ற சாமியார்கள் மறுத்து விட்டதைக் கவனித்த திருடன், தான் உடனே ஒப்புக் கொண்டால் ஐயம் தோன்றக் கூடும் என்று எண்ணி முதலில் மறுத்துவிட்டான். ஆனால் அதிகாரி மேலும் மேலும் வேண்டிய போது இப்பொழுதே ஒப்புக் கொள்ளலாமா, இன்னும் சிறிது நேரங்கழித்து ஒப்புக்கொள்ளலாமா? என்று நினைத்துக் கொண்டே பதில் பேசாமல் இருந்தான்.

அதிகாரிகள் அரசனிடம் திரும்பிச் சென்றார்கள். “மன்னவா, எந்தச் சாமியாரும் இளவரசியைத் திருமணம் புரிய ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், இளம் வயதுடைய ஒரு சாமியார் இருக்கிறார். தாங்களே நேரில் வந்து கேட்டுக் கொண்டால் ஒரு வேளை அவர் ஒப்புக் கொள்ளக் கூடும்” என்றார்கள். இதைக் கேட்ட அரசன் உடனே ஆற்றங்கரைக்குப் புறப்பட்டான்.

அதிகாரிகள் சுட்டிக்காட்டிய சாமியார் வேடத்தில் இருந்த திருடனிடம் வந்தான். தன் விருப்பத்தை எடுத்துக் கூறினான்.

திருடன் அப்பொழுது சிந்தித்தான்.

“சாமியார் வேடத்தில் இருக்கும் என்னை அரசனே வந்து கெஞ்சுகிறான். வேடத்தில் இருக்கும்போதே இவ்வளவு பெருமையிருந்தால், உண்மையான சாமியாராக இருந்தால் எவ்வளவு பெருமையுண்டாகும். அரசன் மகள் எனக்கு வேண்டாம். இன்று முதல் நான் உண்மையான சாமியாராகவே ஆகிவிடுகிறேன். இனி எனக்குக் கடவுளே எல்லாம்.”