உள்ளடக்கத்துக்குச் செல்

ஏழாவது வாசல்/சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?

விக்கிமூலம் இலிருந்து
420009ஏழாவது வாசல் — சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?பாவலர் நாரா. நாச்சியப்பன்இராமகிருஷ்ண பரமஹம்சர்

சண்டை நல்லதா? சமாதானம்
நல்லதா?

வடக்கே அஸ்தினாபுரம் என்ற ஊர் இருக்கிறது. அங்கே நெடுங்காலத்துக்கு முன்னே திருதராட்டிரர் என்று ஒருவரும் பாண்டு என்று ஒருவரும் இருந்தார்கள். அவர்கள் அண்ணன் தம்பிகள். திருதராட்டிரரின் பிள்ளைகள் நூறு பேர். பாண்டுவின் பிள்ளைகள் ஐந்து பேர். நூறு பேருக்கும் கௌரவர்கள் என்று பெயர். ஐந்து பேருக்கும் பாண்டவர்கள் என்று பெயர்.

இவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள். அந்தக் கதைக்குப் பெயர் பாரதம் என்பதாகும்.

சிறு பிள்ளைகளாயிருக்கும் போது இவர்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் இருந்தார்கள், அப்போது அவர்கள் துரோணாசாரியார் என்பவரிடம் கல்வி கற்று வந்தார்கள்.

அந்தக் காலத்திலே ஒரு நாள் மாலை நேரம். அர்ச்சுனனும் கர்ணனும் ஆற்றங்கரையோரத்தில் காற்று வாங்கிக் கொண்டு வந்தார்கள். அப்போது அர்ச்சுனன் கர்ணனைப் பார்த்து, “கர்ணா? சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?” என்று ஒரு கேள்வி கேட்டான்.

'அதற்கு, சமாதானம்தான் நல்லது’ என்று கர்ணன் சொன்னான்.

"ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்று அர்ச்சுனன் கேட்டான்.

'அர்ச்சுனா, சண்டை வந்தால் நான் உன்னை அடித்து விடுவேன். அதை உன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. அழுது விடுவாய்! நீ அழுவதைப் பார்த்தால் எனக்கு மனம் பொறுக்காது. நானும் அழுதுவிடுவேன். இரண்டு பேரும் அழுவது நல்லதா? நீயே சொல்” என்றான் கர்ணன், “கர்ணா, நம்முடைய சண்டையைப் பற்றி நான் கேட்கவில்லை. பொதுவாக உலகத்துக்குச் சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?” என்று கேட்டான் அர்ச்சுனன்.

"இந்தப் பொதுப் பேச்சிலெல்லாம் எனக்கு ஈடுபாடு கிடையாது” என்று உதறி விட்டான் கர்ணன்.

“ஒன்றுக்கும் உதவாத பயல்! இவனைக் கொன்று போட்டால் தான் நல்லது” என்று தன் மனத்துக்குள் சொல்லிக் கொண்டான் அர்ச்சுனன்.

பிறகு அர்ச்சுனன் தங்கள் ஆசிரியரான துரோணாச்சாரியாரிடம் சென்றான்.

"குருதேவரே, சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?” என்று கேட்டான் அர்ச்சுனன்.

“சண்டைதான் நல்லது!” என்றார் துரோணாச்சாரியார்.

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான் அர்ச்சுனன். “அர்ச்சுனா, சண்டை ஏற்பட்டால் பணம் கிடைக்கும். புகழ் கிடைக்கும். சண்டையில் இறந்து போனால் வீரக்கல் நாட்டுவார்கள். காவியத்தில் போற்றுவார்கள்; பகைவனும் பாராட்டும் பேறு கிடைக்கும்” என்றார் துரோணாச்சாரியார்.

பிறகு அர்ச்சுனன் பீஷ்மரிடம் சென்றான்.

“தாத்தா, சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?” என்று கேட்டான்.

“சமாதானம்தான் நல்லது!” என்றார் தாத்தா பீஷ்மாச்சாரியார்.

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான் அர்ச்சுனன்.

"குழந்தாய், சண்டையினால் வீரர் குலத்துக்குப் பெருமை ஏற்படலாம். ஆனால் சமாதானம் நிலவினால் உலகத்துக்கே பெருமை” என்றார் பீஷ்மர்.

அர்ச்சுனனுக்கு அப்போதும் மனம் அமைதி அடையவில்லை. யார் சொன்ன பதிலும் சரியானதாக அவனுக்குத் தோன்றவில்லை.

சில நாட்கள் கழிந்தன. அஸ்தினாபுரத்திற்கு வேத வியாசர் வந்தார். அர்ச்சுனன் அவரிடம் சென்றான்.

"வியாசர் பெருமானே, சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?’ என்று கேட்டான் அர்ச்சுனன்.

“அர்ச்சுனா, சில சமயங்களில் சண்டை நல்லது. சில நேரங்களில் சமாதானமே நல்லது. இது அவ்வப்போது உலகம் இருக்கும் நிலைமையைப் பொறுத்தது” என்றார்.

அதன் பிறகு கூட அர்ச்சுனன் சரியான பதில் கிடைத்ததாக எண்ணவில்லை.

“சண்டை நல்லதா?சமாதானம் நல்லதா?” இந்தக் கேள்வி அவன் மனத்தை நெடுநாள் உறுத்திக் கொண்டேயிருந்தது.

பல ஆண்டுகள் கழிந்தன. துரியோதனன் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தான். பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்து வந்தார்கள்.

பாண்டவர்கள் தங்கள் நாட்டைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுத் துரியோதனனுக்குத் தூது விடுத்தார்கள். அவர்களுடைய தூதுவராகக் கண்ணன் புறப்படவிருந்தார்.

அப்போது அர்ச்சுனன் கண்ணனிடம் சென்றான்.

“கண்ணா, சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?” என்று கேட்டான்.

“இப்போதைக்கு சமாதானம்தான் நல்லது. அதனால்தான் சமாதானம் பேசத் தூது போகப் போகிறேன்” என்று கூறிவிட்டுக் கண்ணன் புறப்பட்டார். அதன் பிறகு அர்ச்சுனன் யாரையும் கேள்வி கேட்கவில்லை. கடைசியில் அவனே கௌரவர்களை எதிர்த்துச் சண்டைக்குப் புறப்பட்டு விட்டான்.