மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/வேலைக்காரி சொன்ன வேதனைக் கதை
வேதனைக் கதை
‘என்னவோ, எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். சரியாயிருந்தால் ‘சரி' என்று எடுத்துக் கொள்ளுங்கள்; தப்பாயிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். 'அப்பனாயிருக்கட்டும், அண்ணனாயிருக்கட்டும்; வயதுக்கு வந்த ஒரு பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு கலியாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதை மீறி அந்தக் குழந்தையின் அப்பா இரண்டாவது கலியாணம் செய்துகொண்டது முதல் தப்பு; அப்படியே பண்ணிக் கொண்டாலும் இளையாளுக்குப் பயந்து அவளை மாமா வீட்டுக்கு அனுப்பி வைத்தது இரண்டாவது தப்பு; அந்த மாமா வயதுக்கு வந்த பிள்ளையோடு வயதுக்கு வந்த பெண்ணைப் பழகவிட்டது மூன்றாவது தப்பு; அப்படிப் பழகிய பிறகு அதை இன்னொருவன் தலையில் கட்டப் பார்த்தது நான்காவது தப்பு: அந்த இன்னொருவன் விழித்துக் கொண்ட பிறகு அதை அதன் மாமாவின் பிள்ளைக்கே கட்டி வைத்தது சரிதான் என்றாலும், கட்டி வைத்தபின் அவர்கள் இருவரையும் பிரித்து வைத்தது ஐந்தாவது தப்பு. இத்தனை தப்பு பண்ண பெரியவர்கள் அந்தக் குழந்தை பண்ண ஒரே ஒரு தப்புக்காக அதை வீட்டை விட்டே விரட்டிவிடலாமா? நீங்களே சொல்லுங்கள்!
தாயற்ற அது நடுத் தெருவில் நின்று அழுதபோது என் மனசு கேட்கவில்லை; 'நான் அப்போதே சொன்னேனே, கேட்டாயா குழந்தை?, என்றேன். ‘என்ன சொன்னாய்?' என்கிறீர்களா? சொல்கிறேன்; 'கன்னிப் பெண்ணாயிருந்தாலும் பரவாயில்லை; உன்னை வளைய வரும் பயலுக்கே உன்னைக் கலியாணம் பண்ணி வைத்துவிடுவார்கள். நீயோ கலியாணமான பெண்; இப்படியெல்லாம் செய்யக் கூடாது, அம்மா!’ என்று சொன்னேன். அது கேட்கவில்லை; ‘தஸ்,புஸ்' என்று தான் படித்த கோணல் பாஷையில் ஏதோ சொல்லி, என் வாயை அப்போது அடக்கிவிட்டது.
அதைத் தேடி வந்த பையனும் அப்படி ஒன்றும் மோசமாயில்லை; பார்ப்பதற்கு லட்சணமாய்த்தான் இருந்தான். அவனும் கொஞ்சம் கோணல் பாஷை படித்தவன் போலிருக்கிறது. அந்தப் பாஷையிலேயே அவனும் அதனுடன் பேசுவான். எனக்கு ஒன்றும் புரியாது. இதெல்லாம் எப்பொழுது நடக்கும் என்கிறீர்கள்? இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு சித்தியும் அப்பாவும் சிரித்துப் பேசிக் கொண்டே மாடியறைக்குப் படுக்கப் போய்விட்ட பிறகு நடக்கும். அப்படித்தான் படுக்கப் போகிறார்களே, அந்தக் குழந்தையையும் அழைத்துக்கொண்டு போய் அவர்கள் அங்கே படுக்க வைத்துக் கொள்ளக் கூடாதா? மாட்டார்கள்; அதைக் கீழேயே விட்டுவிட்டுப் போய் விடுவார்கள். அப்போதுதான் அந்தப் பயல் திருடனைப் போல் பதுங்கிப் பதுங்கி வருவான்; இருட்டில் திருட்டுப் பாலைக் குடித்து விட்டுப் போகும் பூனையைப்போல் தன் காரியத்தை முடித்துக் கொண்டு போய்விடுவான்.
இதை நான் யாரிடம் சொல்வது? எப்படிச் சொல்வது? இப்படித் தினமும் நடக்கும் என்கிறீர்களா? நடக்காது. எப்பொழுதோ ஒரு நாள்தான் நடக்கும். இந்தக் கூத்து நடப்பதற்கு முன்னாலேயே இதை நான் யாரிடமும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் எனக்குப் பலகாரம் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பார்கள்; சில சமயம் பணமும் கொடுப்பார்கள். ‘இதெல்லாம் எதற்கு, வேண்டாம்!' என்பேன் நான். கேட்க மாட்டார்கள்; கட்டாயப்படுத்திக் கொடுப்பார்கள். வாங்காவிட்டால் ‘சித்திக்கும், அப்பாவுக்கும் பயப்படுவது போதாதென்று இந்தக் குழந்தைகள் நமக்குமல்லவா பயப்பட வேண்டியிருக்கும்?’ என்று நான் அவற்றை வாங்கிக் கொண்டு பேசாமல் இருந்து விடுவேன்!
இதெல்லாம் பழைய கதை. புதிய கதை என்ன வென்றால், நடுத் தெருவில் நின்று அழுத அந்தக் குழந்தையை நான் என்னுடைய வீட்டுக்கு அழைத்தேன். அது வரவில்லை; அதற்குப் பதிலாக 'எனக்கு ஒரு வீடு பார்க்கிறாயா?' என்றது அது. 'ஏன்.' என்றேன் நான்; ‘நாங்கள் இருவரும் குடியிருக்கத்தான்!' என்று. அது சொல்லிற்று. 'பார்ப்பவர்கள் ஏதாவது சொல்ல மாட்டார்களா?' என்றேன்; ‘சொன்னால் சொல்லட்டும்!' என்று அது எதற்கும் துணிந்து நின்றது. 'இளங்கன்று பயமறியாது’ என்று நினைத்த நான், 'வீடு கிடைக்கும் வரை எங்கே இருப்பாய்?' என்றேன். ‘ஹாஸ்டலில் என் சிநேகிதி ஒருத்தி இருக்கிறாள்; அவளுடன் இருப்பேன்!' என்றது. 'சரி, அந்த இடத்தைக் காட்டு; வீடு கிடைத்தால் வந்து சொல்கிறேன்!' என்றேன் நான்; 'காட்டுகிறேன்; ஆனால் நீ அந்த இடத்தை வேறு யாருக்கும் காட்டிக் கொடுத்து விடக் கூடாது!’ என்றது. அது. ‘அப்படிச் செய்வதாயிருந்தால்தான் எப்பொழுதோ செய்திருப்பேனே!' என்றேன் நான் சிரித்துக்கொண்டே. அதுவும் அழுவதை மறந்து சிரித்துக்கொண்டே என்னை அழைத்துக்கொண்டு போய் அந்த இடத்தைக் காட்டிற்று.
அதைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது, 'ஆமாம், அந்தப் பயல் உன்னுடன் குடித்தனம் செய்ய ஒப்புக் கொண்டானா?' என்றேன்; ‘ஒப்புக் கொண்டார்!’ என்றது அது. ‘என்னவோ? பார்க்கவே பார்த்தாய், அந்தரத்தில் விடாதா ஆளாகப் பார்த்தாயே? அதைச் சொல்!' என்று நான் அன்றே அந்த வீட்டு வேலைக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டுக் குழந்தைக்கு ஏற்ற வீடாகத் தேடி அலைந்தேன்.
கடைசியாக மாம்பலத்தில் ஒரு வீடு கிடைத்தது. குழந்தையை அழைத்துக்கொண்டு போய் அந்த வீட்டைக் காட்டினேன்; பிடித்திருந்தது. அதற்கு மேல் அந்தப் பயலும் ஒரு நாள் வந்து வீட்டைப் பார்த்தான்; அவனுக்கும் பிடித்திருந்தது. இருவரும் ஒரு நல்ல நாள் பார்த்து அதில் குடியேறினார்கள். இதுவரை நல்ல முறையில்தான் குடித்தனமும் செய்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் இருவருடைய முகத்திலும் எப்பொழுது பார்த்தாலும் ஏதோ ஒரு வேதனை குடி கொண்டிருக்கிறது. அதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!’ என்று அவள் தன் 'வேதனைக் கதை'யைச் சொல்லி முடிக்க, 'ஏறு, வண்டியில்!' என்று விக்கிரமாதித்தர் அவளுக்குத் தம் காரின் கதவைத் திறந்து விடுவாராயினர்.
'எதற்கு, சுவாமி?’ என்று அவள் பீதியுடன் கேட்க, ‘மாம்பலம் போக!’ என்று அவர் சாவதானமாகச் சொல்ல, ‘ஐயோ, வேண்டாம் சுவாமி! அந்தக் குழந்தைகளை ஒன்றும் செய்ய வேண்டாம், சுவாமி!' என்று அவள் அலற, 'ஒன்றும் செய்ய மாட்டேன்; நீ ஏறு, வண்டியில்!' என்று விக்கிரமாதித்தர் அவளை வண்டியில் ஏற்றிவிட்டு, அவளுடன் மங்களத்தையும் மணவாளனையும் ஏறச் சொல்லிவிட்டு, தாமும் சிட்டியுடன் ஏறி, 'மாம்பலத்துக்குப் போ!’ என்று பாதாளசாமியிடம் சொல்வாராயினர்.
வண்டி மாம்பலத்தை அடைந்ததும், 'எங்கே இருக்கிறது அவர்களுடைய வீடு?’ என்று விக்கிரமாதித்தர் வேலைக் காரியைக் கேட்க, அவள் அவர்களுடைய வீட்டைக் காட்ட, பாதாளசாமி வண்டியைக் கொண்டு போய் அவர்கள் வீட்டு வாயிலில் நிறுத்துவானாயினன்.
‘இறங்குங்கள்!' என்றார் விக்கிரமாதித்தர்; எல்லோரும் இறங்கினார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு அவர் உள்ளே செல்ல, அங்கே கோகிலத்தோடு இருந்த கோபாலன் அவர்களைப் பார்த்ததும் 'திருதிரு' வென்று விழிக்க, ‘இவன்தானே அடிக்கடி காணாமற் போகும் உங்கள் கோபாலன்?' என்று விக்கிரமாதித்தர் மணவாளன் பக்கம் திரும்பிக் கேட்க, 'இவனேதான்!' என்று அவர் வாயெல்லாம் பல்லாய்ச் சொல்ல, ‘கலியாணத்துக்குப் பிறகு நீங்கள் வைக்காத தனிக் குடித்தனத்தை இவர்களே வைத்துக் கொண்டு விட்டார்கள்; அவ்வளவுதான் விஷயம். குடித்தனம் என்றால் சும்மா நடக்குமா? செலவுக்குப் பணம் வேண்டாமா? அதற்குத்தான் இவன் அடிக்கடி காணாமற் போய்க்கொண்டிருக்கிறான்! இவன் இருக்குமிடத்தை அவ்வப்போது உங்களிடம் வந்து சொல்லி, இவனுக்காக நீங்கள் கொடுக்கும் ரூபாய் ஐந்நூறை வாங்கிக்கொண்டு போய் இவனிடம் கொடுப்பவர்கள் வேறு யாருமில்லை; இவனுடைய நண்பர்கள்தான்!' என்ற விக்கிரமாதித்தர், 'ஏன் தம்பி, அப்படித்தானே?' என்று கோபாலனைக் கேட்க, 'ஆமாம்!' என்று அவன் தலையைக் குனிந்துகொண்டே சொல்ல, ‘கோகிலத்தின் கலியாணத்திபோது ஒரு மொட்டைக் கடிதம் வந்ததே, அதை எழுதியவன்கூட நீதானே?' என்று அவர் பின்னும் கேட்க, ‘நானேதான்!' என்று அவன் பின்னும் சொல்ல, ‘இப்போது எல்லா மர்மங்களும் விளங்கி விட்டன அல்லவா? இனி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்; ஆனால் ஒன்றை மட்டும் செய்யாதீர்கள். அதாகப்பட்டது, எந்தக் காரணத்தை முன்னிட்டும் இனி இவர்களைப் பிரித்து வைக்காதீர்கள். படிப்பவர்கள் எந்த நிலையிலும் படிப்பார்கள்; படிக்காதவர்கள் என்ன செய்தாலும் படிக்க மாட்டார்கள்!’ என்று சொல்லிவிட்டு விக்கிரமாதித்தர் நடக்க, சிட்டி அவரைத் தொடருவாராயினர்."
மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான கோமளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, "நாளைக்கு வாருங்கள்; நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கல்யாணி சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு.....