உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/வேத மத இந்தியா

விக்கிமூலம் இலிருந்து

வேத - மத - இந்தியா!

டந்த நெருக்கடி நிலையின் அதிகாரக் கடுபிடிகளைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்துப் பார்ப்பன அதிகாரிகளும் தங்கள் இனத்திற்கு எத்துணையளவு வலிமை தேடிக்கொள்ள முடியுமோ, அத்துணையளவு தேடிக்கொண்டது, எல்லாருக்கும் வெளிப்படையாகத் தெரிந்துவிடாத கமுக்கமான ஒரு செய்தி. தமிழகத்தைப் பொறுத்த அளவில் அன்றைய ஆளுநர் சுகாதியாவும், அவர் செயலர்களாயிருந்த தாவே. சுப்பிரமணியன்களும், கோட்டையில் இருந்துகொண்டு எத்தனை யெத்தனையோ உள்முகத் தமிழ் - தமிழின அரிப்பு வேலைகளைச் செய்து கொண்டு இருந்திருக்கின்றனர்! அவர்களின் சார்பு சலுகை முதலியவற்றைப் பயன்படுத்தி, அன்று எழுந்த, காஞ்சி காமகோடியாரின் பெரியார் பாணிச் சுற்றுச் செலவு இன்றுவரை ஒயவில்லை. இன்றிருக்கும் நிலைகளோ காமகோடியாரின் கால்களுக்கும், வாய்க்கும் இன்னும் வலிவூட்டுவன, தென்பூட்டுவன. ஏனெனில் அவரினத்திற்கு என்றென்றும், தாசர்களாக இருந்து, கால் செருப்பாகத் தேய்வதற்கு முத்தையாக்களும், ‘மகாலிங்க’ங்களும், பக்தவத்சல, சுப்பிரமணியங்களும், ‘கண்ணதாசன்’களும், ‘சிவஞான’ங்களும் ஏராளமாக இங்குள்ளனர்! இந்நிலையில், இந்தியாவை ஆளுவது இந்திராவாக இருந்தால்தான் என்ன; தேசாயாக மாறினால் தான் என்ன? தமிழினத்தைப் பொறுறத்தவரை பேராயக் கட்சியும் சனதாவும் பார்ப்பனியத்தின் இருதலைப் பறவை என்பதே நம் கருத்து. எனவேதான் அரசியல் பொருளியலில் வடவர் ஆளுமையும், அறிவியல், பண்பாட்டியலில் பிராமணியமும் தமிழகத்தில் வேரூன்றுவதற்கான அடிப்படை முயற்சிகள் அனைத்தும் மிகவும் துணிவாகவும், வெளிப்படையாகவும் செய்யப்பெற்று

வருகின்றன; வருவதற்கு வாய்ப்புகள் கொடுக்கப் பெறுகின்றன. ஆகவே, தமிழர்கள் இக்கால் இவ்வகையில், மிகமிக விழிப்பாக இருக்க வேண்டிய கட்டாயத்திற்கும், தற்காப்பு முயற்சிக்கும் கொண்டுவரப் பெற்றிருக்கின்றனர். இது வெறும் மேலோட்டமான உணர்வுநிலைக் கருத்தன்று; இன்றைய நாட்டு அரசியல் நிலையின் குமுகாயப் பல்நோக்கு உண்மையாகும்!

பொதுவாகவே, இந்தியா என்றாலோ அஃது ஆரியர்கள் தேசம், இந்துக்கள் என்றாலே அவர்கள் ‘பிராமணர்கள்’ அல்லது அவர்களின் தலைமையை ஒப்புக்கொண்ட அடிமைகள்; இந்தியப் பண்பாடு, நாகரிகம் என்றாலே அவை பூணுரல் போடுவதும் குடுமி வைப்பதும், பஞ்சகச்சம் கட்டிக் கொள்வதுந்தாம் – என்று அமெரிக்க, பிரிட்டிசுக் கலைக் களஞ்சியங்கள், உருசியா, சீனா போலும் பொதுவுடைமைக் கொள்கை வாழும் நாடுகளில் வெளிவரும் நூல்கள் இவற்றில் எல்லாம் விளக்கம் வரும்படி, இங்கிருக்கின்ற பிராமண வரலாற்றுப் பேராசிரியர்கள் நூல்கள் எழுதி, அச்சிட்டு, அவற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாகவும் பரவலாகவும் சிறப்புறப் பரப்பி வருகின்றனர். இத்தகைய பேராசிரியர்கள் வரலாறு என்னும் பெயரில் எதை எழுதினாலும், அதை அச்சிட்டு வெளியிடுவதற் கென்றே தில்லியிலும் பம்பாயிலும் ஆரியப் பார்ப்பனச் சார்பான பணமுதலை வெளியீட்டகங்கள் பல உள்ளன. (உண்மையாகச் சொல்ல வேண்டுமானால், இவர்களால் எழுதப் பெறும் வரலாறு என்பது, இக்கால் ஆட்சித் தலைமையில் உள்ள வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, இவர்கள் தங்களுக்கும் தங்கள் இனத்திற்கும், சார்பாகவும், நன்மை பயக்கும்படியாகவும், பெருமை ஏற்படும்படியாகவும் உண்மை நிகழ்ச்சிகளைத் திரித்தும், தவிர்த்தும், பொய் நிகழ்வுகளைக் கூட்டியும், சேர்த்தும் எழுதிக்கொள்ளும் கற்பனைக் கதையாகும்)

இவ்வரலாற்று நூல்களுக்கொப்பாக, வடஇந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் வலிவான செய்தித்தாள்களும், அரசு விளம்பரத் துறைகளின் கீழ்ச் செயல்படும் வானொலி, தொலைக்காட்சிக் கருவிகளும் இவர்களின் ஆளுமையில் உள்ளதால் இவர்கள் தம் வேத புராணப் பொய்யுரைகளையும் புளுகுரைகளையும் மிக எளிதாகவும் விரைவாகவும் பரப்ப முடிகிறது. அத்துடன், இங்குள்ள காமகோடிகளும், வரதாச்சாரிகளும், நாராயண ராமானுசர்களும், ராம தேசிகன்களும் – தங்கள் விருப்பம்போல் கருத்தறிவிக்க முடிகிறது; கதைக்க முடிகிறது; காலப் பொழிவுகள் நடத்த முடிகிறது! இவர்கள் அனைவரும் ஒருமுகமாகவும் ஒரே மூச்சாகவும் அண்மைக் காலங்களில் கூறிவரும்

கருத்துகள் ஒன்றுமறியாத ஏழை எளிய மக்களை ஏமாறச் செய்வன. அவர்களிடையில் கொஞ்சம் நஞ்சமிருக்கும் அறிவுணர்வுகளையும் இழந்து போகச் செய்வன. இவர்களைத் தட்டிக் கேட்பதற்குரிய அரசியல் அதிகாரங்களோ, சட்ட அமைப்புகளோ நம்மவர்க்கு இடந்தருவனவாயில்லை. ஏனெனில், இவர்கள் தங்கள் இனநலன்களைப் பரப்பும் வகைகளுக்கு உதவியாகவே இங்குள்ள இந்துமதம் என்னும் வேத மதமும் இந்திய அரசியலமைப்பும் இருக்கின்றன. இவ்வேத மதத்திற்கு எதிர்ப்பாக இங்குள்ள தமிழர் மதங்களாக உள்ள சிவனிய மதமும் மாலிய மதமும் இணைந்து செயல்படுவதில்லை. ஏனெனில் இவ்விரு பெரிய மதங்களையும், இவற்றைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சிறுதெய்வக் கோட்பாடுகளையும் ஏற்கனவே வேதமதமாகிய இந்துமதம் செரித்துத் தன்னுள் அடக்கி ஆட்கொண்டு விட்டது. தமிழில் ஏற்படுத்தப்பெற்ற சமசுக்கிருத மொழிக் கலப்பைப் போல், இம்மதங்களின் உள்ளேயும் புகுந்து இரண்டறக் கலந்துபோன ஆரியக் கொள்கைக் கலப்பை இவை தவிர்த்துக் கொள்வனவாயில்லை.

மேலும், இவ்விந்திய அரசும், ஏதோ எல்லா மதங்களுக்கும் சலுகைகள் காட்டுவதைப்போல, உள்முகமான கொள்கைப் பூசல்களையும் மூடநம்பிக்கைகளையுமே வளர்த்து வருகிறது. அதேபோல் வெளிப்படையாக இங்குள்ள சாதிப்பூசல்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று போலித்தனமாகக் கூறிவந்தாலும், உள்முகமாக, எல்லாச் சாதியினர்க்கும். ஏதோ ஒவ்வொரு வகையில் சலுகைகளும் சார்புகளும் காட்டி என்றென்றும் இந்நிலத்தில் சாதிப் பூசல்கள் இருக்கும்படியும், சாதி வேறுபாடுகள் நிலைக்கும்படியும் செய்து வருகிறது. சாதிகளற்ற குமுகாயம் இருக்க வேண்டும் என்பதில் நடுவணரசுக்குக் கொஞ்சமும் அக்கறை யிருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு சாதிகள் அழிக்கப்பட்டால் பிராமணீயமும் அழிந்துவிடும் என்று அவர்கள் அஞ்சுவதாகத் தெரிகிறது. எனவே அவர்கள் மறைமுகமான பிராமணீயக் காவலர்களாகவே செயல்படுகிறார்கள். அவ்வாறு அவர்கள் சாதி வேறுபாடற்ற ஒரு குமுகாயத்தை உருவாக்க விரும்பினாலும், பிராமணியத்தை அழித்துக்கொள்ள அவர்கள் அணியமாயில்லை. பிராமணீயந்தான் இவ்விந்திய நாட்டில் என்றென்றும் தலைமையிடத்திலிருந்து செயல்பட வேண்டும் என்று அவர்கள் கருதுவதாகவும் தெரிகிறது. இதை அவர்களின் நடவடிக்கைகள், மத ஏற்பாடுகள், மறைமுகச் சட்ட அமைப்புகள் இவற்றின் வழியாக உறுதிப்படுத்தி வருகிறார்கள். இந்தியாவுக்கு விடுதலை வந்தால் பிராமணீயமும் அதன் வேரான வேதமதம் என்னும் இந்துமதமும் அழிந்துபோய்விடலாம் என்று அஞ்சியே, 1924ஆம் ஆண்டில், இந்தியாவுக்கு விடுதலை கொடுக்க வேண்டுமா வேண்டாமா என்று ஆராய்வதற்காகப் பிரிட்டிசுக்காரர்

அமைத்த சைமன் குழுவிடம் (Simon Commission), இந்தியாவில் அப்போதிருந்த வேதமதத் தலைவர்களெல்லாரும் ஒன்று சேர்ந்து, இந்தியாவிற்குத் தன்னுரிமை கொடுக்க வேண்டாம்; எப்போதும் போலப் பிரிட்டிசாரே ஆளுதல் வேண்டும் என்று தம் தூதுவர் வழியாகக் கருத்தறிவித்தனர். இச்செய்தியை இங்குள்ள பலர் மறந்திருக்கலாம். அல்லது இது பலருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.

இவ்வாறு, அவ்விடைக் காலத்தில், ஒருவாறு வலுக் குறைந்தும் அஞ்சிக்கொண்டும் கிடந்த வேதமதம் என்னும் அப்பட்டமான ஆரிய – இந்து – மதம், இக்கால் நச்சுப் பாம்பு தலைதூக்குவதுபோல், காஞ்சி காமகோடிகளின் வழியாகத் தலைதூக்கி வருவதற்கு, வடநாட்டு ஆட்சியாளரின் ஒருமித்த பேரனைப்பே கரணியமாக இருக்கமுடியும். அல்லாக்கால், இந்துமதக் கொள்கைப் பரப்புதலுக்கும், அதன் ஆணி வேரான சமசுக்கிருத மொழி வளர்ச்சிக்கும் இப்படி ஓடோடியும் – வரிந்து கட்டிக்கொண்டும் பரிவுரைகளும், பாதுகாப்புகளும், சலுகைகளும் கொடுத்துப் பார்ப்பனப் பாதந்தாங்கிகளாவார்களா?

சமசுக்கிருத மொழிக்குக் கோடிகோடியாக நல்கைகள் ஒதுக்கப்படுகின்றன. சமசுக்கிருதப் புலவர்களுக்கு மாத ஊதியங்கள் வழங்கப் பெறுகின்றன. சமசுக்கிருத பல்கலைக் கழகம் ஒன்றைத் தென்னாட்டுப் பகுதியில் நிறுவப் பெருமுயற்சி நடந்து வருகிறது. கடந்த சனவரி 1ஆம் பக்கலில் சென்னையில் நடந்த சமசுக்கிருத சம்மேளனம் அம் மொழிக்கு ஆக்கத்தரும் பல வேண்டுகோள்களை நடுவணரசுக்கு விடுத்துள்ளது. காஞ்சி காமகோடியார், இந்து மதமாகிய வேத மதத்தையும் அதற்கடிப்படையாகவுள்ள வேதங்களையும் பற்றி வானளாவும் புளுகுரைகளையும் பொய்யுரைகளையும் ஊர்தோறும் நாள்தோறும் பரப்பி வருகிறார். “இந்துமதம் என்பது ‘அநாதி’; எவ்வாறு நில இயல் வல்லுநர்களாலும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களாலும் உலகம் தோன்றிய காலத்தையும், மாந்தன் தோன்றிய காலத்தையும் சரியாக உறுதிசெய்ய முடியவில்லையோ, அதுபோல் இந்துமதமும் அநாதியானது. எவ்வாறு மற்ற மதங்களின் தோற்றத்தை நாள், வரையரை செய்து கூற முடியுமோ, அதுபோல் இம்மதத்தைக் கால வரையறை செய்து கூறமுடியாது” என்று அறிவியல் பொருத்தமில்லாமல் பேசி வருகிறார். இனி, நாராயண இராமானுச சீயர் என்பவர், சென்னையில் பிப்பிரவரி மாதம் நடந்த, வேதம் வல்லார்கள் பெயரகராதி – மூன்றாவது தொகுதி வெளியீட்டு விழாவில், வேதங்களைப் பாதுகாக்கவும், பயிலவும் பரப்பவும் தென்னாட்டில் ‘வேத விசுவகலாசாலையை’ (வேதப் பல்கலைக் கழகத்தைத் தொடங்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விழாவில் அந்நூலை வெளியிட்டுப் பேசிய தமிழக ஆளுநர் திரு. பட்டுவாரி – பேசுகையில், இன்று இந்தியர்களாகிய நாம் உலகில் மதிப்புடன் வாழ்வதற்கு நம் முன்னோர்கள் படைத்த வேதங்களும், வேதவாழ்வுமே காரணமாகுமென்றுற வேதப்பெருமையைப் பேசியுள்ளார்.

இப்படி அரசுச் சார்புள்ளவர்களெல்லாம் வேதங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பது, இவ்விந்திய நாடு ஒரு வேத மத நாடு என்னும் கருத்தை உருவாக்குமேயன்றி, இங்குப் பலவகையான மதக் கொள்கைகளும் பண்பாடுகளும் உள்ளவர்கள் வாழ்வதாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்குத் தெரிவித்ததாகாது. இனி, வேதங்களைப் பற்றி அளவுக்கு மீறிய வகையில் பெருமை பேசப் பெறுகிறது. இந்திராகாந்தி எப்படிப் பொய்யுரைகளைப் பேசியே அரசியல் ஆளுமை பெற முயற்சி செய்தாரோ, செய்கின்றாரோ, அப்படியே ஆராய்ச்சியறிவற்ற பொய்யுரைகளைப் பேசியே காஞ்சி காமகோடி பீடத் தலைவராகிய சயேந்திர சரசுவதியும் இந்துமத ஆளுமையைப் பெற முயற்சி செய்கிறார்.

இந்துமத முயற்சிகள் என்னும் போர்வையில், ஆரியப் பார்ப்பனரின் வேதமதக் கொள்கைகளே வேர் ஊன்றப் பரப்பப்பெற்று வருகின்றன. வேதமதம் என்பதும் புராண மதம், பௌராணிக மதம் என்பவையும் ஒன்றே! அதுவே இக்கால் இந்து மதம் என்னும் என்னும் பெயர் பெற்று, இந்திய அரசியலிலும் குமுகாயத்திலும் பார்ப்பனியத் தலைமையை என்றென்றும் நிலையாக்கிக் கொண்டு வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் பொழுதே, பிராமணர்கள் விழிப்பாயிருந்து இந்து மதத்திற்கும், அது சார்ந்த சாதியமைப்புகளுக்கும் வேத, ஆகம புராண, இதிகாசங்கள் தழுவிய பிராமணியத்திற்கும் பெருங்காப்புச் செய்து கொண்டனர். இந்துமதம் என்பது எப்படி வேதமதமோ, அப்படியே ‘இந்து தர்மம்’ என்பதும் வேத தர்மமே! வேத தர்மம் என்பது பிராமண தர்மமே! பிராமண தர்மம் என்பது மனு முதலிய மிருதிகளின் தர்மமே! இனி மனுதர்மம் முதலிய பதினென் மிருதிகளும், பிராமணனே இங்குள்ளவர்களுக்குத் தெய்வம் என்பதையும், அவன் பேசும் சமசுக்கிருதமே தேவமொழி என்பதையும், சூத்திரர்களாகிய நாம் என்றென்றும் அவனுக்கும் அவன் மொழியாகிய சமசுக்கிருத மொழிக்கும் நிலையான அடிமைகள் என்பனவற்றையுமே வலியுறுத்தும்!

எனவே, இந்திய அரசியல் ஆளுமை முயற்சிகளில் இந்துமதக் கோட்பாடுகள் தலையிடாதபடி பார்த்துக்கொள்ளல் வேண்டும். அதற்காகப் பலவகை முயற்சிகள் தேவை. மிகவும் முன்னெச்சரிக்கையான செயல்பாடுகளை நாம் செய்து கொண்டாலொழிய, இங்கு இந்துமதச் சார்பான கொள்கைகளையே நடுவணரசு தொடர்ந்து கடைப்பிடித்து வரும். அத்தகைய ஏற்பாடுகளே படிப்படியாகச் செய்யப் பெற்று வருகின்றன. சமயச் சார்பற்ற அரசு என்று அரசியல் சட்ட அமைப்பில் கூறப்பெறுவது, பிராமணிய மதமான இந்துமதக் கொள்கைகளைப் பல்லாற்றானும் பரப்புவதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுவாகவே, மாந்தன் செய்யும் அரசியல் ஆளுமை முயற்சிகளில் எந்த மதமோ, அதன் ‘தர்மம்’ என்னும் கோட்பாடுகளோ தலையிடவே கூடாது. ஏனெனில் அவ் விரண்டும் இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம், மக்களுக்கு மக்கள் மாறுபடுவன. அவற்றை அரசியல், பொருளியல், குமுகவியல், நயன்மை(நீதி) முதலிய துறைகளில் புகுத்தி, மக்களைப் பகுத்தறிவற்றவர்களாகவும், ஒரு சாரார்க்கு மற்றொரு சாராரை அடிமைப்பட்டவர்களாகவும் செய்துவிடல் கூடாது. ஏனெனில் அரசியல் நெறிமுறைகள் பெரும்பாலும் நிகழ்காலத்தைப் பற்றித் தீர்மானிக்கும் தன்மையுடையவையாக இருத்தல் வேண்டும். சமயம் என்பதும், அதுகூறும் ‘தர்மம்’ என்னும் மதக்கோட்பாடும், கடந்த கால எதிர்காலத் தொடர்புடையவை. இன்னுஞ் சொன்னால் முற்பிறவி, பிற்பிறவிக் கற்பனை சான்றவை. அவை ஏற்கனவே வகுக்கப்பட்ட மக்களின் வேறுபாட்டுக் கொள்கை உடையவை. எனவே அவற்றை உட்படுத்தி எந்த வகையான வகையான நடைமுறை அரசியல் கொள்கையையும் வகுப்பதற்கு நாம் ஒப்புக்கொள்ளக் கூடாது. அவ்வாறு வகுக்கப் புகுந்தால், மக்களில் ஒரு பகுதியினர். தங்களைப் பிறவியில் மேம்பட்டவர்களாகக் கருதியும், தெய்வங்களுக்கு மிக நெருக்கமுடையவர்களாகப் புனைந்துரைத்தும், மற்ற பகுதியினரைத் தாழ்ந்த இழிவான பிறவியாளர்களாகவும், தெய்வத் தொடர்பற்றவர்களாகவும் கூறி, அடிமைப்படுத்தி, என்றென்றும், தாங்களே நிலையான ஆட்சியாளர்களாகத் தங்களைச் செய்துகொள்ள வேண்டியிருக்கும். அந்த வகையில்தான் இந்தியாவின் இப்பொழுதைய நடைமுறை அரசியல் கொள்கைகள் இருந்து வருகின்றன என்பதை, அறிவுக்கவலை கொண்ட – நடுநிலை உள்ளங் கொண்ட – சான்றோர்கள் நன்கு உணர்தல் வேண்டும்.

இக்கால இந்தியாவின் அரசியல், பொருளியல், குமுகவியல், கலை, பண்பாடு, வெளிநாட்டுத் தொடர்பு முதலிய அத்தனைத் துறைகளிலும் இந்துமதக் கோட்பாடுகளே கடைப்பிடிக்கப் பெற்றுவருகின்றன. இந்து மதம் என்பது முற்றும் பார்ப்பன மதமே ஆகையால், பார்ப்பனரின் வேத, புராண, இதிகாசங்களில் கூறப்பட்ட கொள்கைகளே இன்றைய அரசியலாகவும், மற்ற மக்கள் துறை ஈடுபாட்டுக் கொள்கைகளாகவும்

காட்டப்பெற்று வருகின்றன. இவ்வாறு திட்டமிட்டுப் பிற இனத்தைச் சாய்க்கும் பிராமணரின் நச்சுத்தன்மை நீங்கினால் ஒழிய, இவ்விந்திய நாட்டு அரசியல் சமவுடைமை அரசியல் என்றோ குடியரசுத் தன்மை வாய்ந்தது என்றோ கூறிவிட முடியாது. இனநிலையில் ஆரியத்தையும், மொழி நிலையில் இந்தி, சமசுக்கிருதத்தையும், அரசு நிலையில் வடவர் தலைமையையும் நிலைப்படுத்துவதே என்றென்றும் நடுவணரசுக் கொள்கையாக இருந்து வருகிறது.

‘இந்தியப் பண்பாடு என்பதே வேதகால ஆரியப் பண்பாடுதான்’ என்று அப்பட்டமாக எழுதப்பெற்றும் பேசப்பெற்றும் வருகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. இராதாகிருட்டிணன் தம் முன்னாளைய இங்கிலாந்துப் பேச்சு ஒன்றில்(Upton Lectures) “ஆரியர்களுடைய வேத கால அமைப்பே, புராண இதிகாசங்களால் வளர்ந்து, பின்னர் திராவிட மக்களுடன் கொண்ட தொடர்பின் விளைவாக இந்தியப் பண்பாடாக வளர்ச்சி பெற்றது” என்பதை உறுதிப்படுத்திப் பேசியுள்ளார். ஆரியப் பண்பாடே, இங்குள்ள நாகரிகம், மதம், கலை, அரசியல் என்றால், அவர்கள்தாமே இங்குள்ள தலைமைப் பதவிகளுக்கும், அதிகாரங்களுக்கும் உரிமையுடையவர்கள் என்பதாகப் பொருள்படும்! பின் எங்ங்ண் இது குடியரசு என்றோ, சமவுடைமை அரசு என்றோ ஆகும் ? இக்கூற்றின் உண்மைப் பொருளை நன்கு எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனவேதான், இங்குள்ள அனைத்துத் துறைகளையும் ஆரியப் பார்ப்பனீயம் கைப்பற்றிக்கொண்டு, அவரல்லாத பிறரை ஆளுமைப்படுத்தியும் அடிமைப்படுத்தியும் ஆண்டுகொண்டு உள்ளது. இவ்வகையில் பிராமணர்கள் அனைவரும் ஒருவர்க் கொருவர் ஒத்துழைப்பவர்களாகவும் ஒருங்கிணைந்தவர்களாகவும் ஈடுபட்டு வருவதைத் தமிழர்கள் நன்கு உணர்ந்துகொள்ளுதல் வேண்டும். இங்குள்ள தினமணி, இந்து போலும் பச்சைப் பார்ப்பன இதழ்களில், வேத, புராண முயற்சிகளுக்கும் செய்திகளுக்கும் பெரிய எழுத்துகளிட்டு முதலிடந் தந்து விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. வேத, புராணங்கள் பரவப் பரவத்தான் பிராமணியத்திற்கு எழுச்சியும் காப்பும் ஏற்படும் என்பது இவர்களின் கோட்பாடு. அறிவியல் தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்குக் கூட, வேத, புராணத் தொடர்புகளைக் காட்டிப் பொதுமக்களை ஏமாற்றுவதில் இவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். நிலா மறைப்பு (சந்திர கிரகணம்) எப்படி ஏற்படுகிறது என்பது அறிவியல் படித்த அனைவருக்கும் தெரியும்! அந்நாளில் கங்கையில் மக்கள் புனித நீராடினர் என்பதை ஒரு செய்தியாகப் பரப்பினால்தான், இவர்களின் வேத, புராணக் கொள்கைகளுக்கு வலிவு ஏற்படும் என்பது இவர்களின் எண்ணம்! எனவே அச்செய்தி அனைத்துப் பார்ப்பன இதழ்களிலும் தவறாமல்

போடப் பெறுகிறது! காஞ்சி காமகோடியாரின் இந்துமத வேத, புராணப் பரப்புதல் முயற்சிகளுக்கு இவர்கள் கொடுக்கும் விளம்பரங்களைப் பார்த்தாலே, மக்களைத் திட்டமிட்டுத் தம் மதக்கோட்பாடுகளுக்கு இரையாக்கும் முயற்சி நன்கு புலப்படும். சமசுக்கிருத மொழி வளர்ச்சியில் இவர்களுக்குள்ள அக்கறை, தமிழ்வளர்ச்சியில் நம் தமிழர்களுக்கு இருக்குமானால் நம் இனம் இவ்வளவில் அடிமைப்பட்டிருக்காது. இவர்கள் இதழ்க்ளில் தமிழர் இனநலக் கட்சிகளுக்கோ, மொழிவளர்ச்சிச் செய்திகளுக்கோ சிறிதும் விளம்பரம் தருவதில்லை. ஆனால் தமிழர் இதழ்களிலோ, வேத புராண முயற்சிகளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு விளம்பரங்கள் தரப் பெறுகின்றன! இது மட்டுமா? அவர்களின் பாலியல் குப்பைத் தொட்டிகளாக விளங்கும் கவர்ச்சியேடுகளின் முதலாளிகளே தமிழர்கள் தாம்! அதிலும் தமிழ், தமிழின முன்னேற்றத்திற்கு உழைப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தமிழினத் தலைவர்கள்தாம் என்பதை மிக வருத்தத்துடன் கூறிக்கொள்ள வேண்டியிருக்கிறது! தமிழனின் தாராள மனப்பான்மை என்னும் இளித்தவாய்த் தன்மைக்கும், காட்டிக் கொடுக்கும் இரண்டகச் செயலுக்கும், குட்டக் குட்டக் குனிந்து கொடுக்கும் இழிந்த அடிமைத்தனத்திற்கும் வேறு என்ன சான்றுகள் வேண்டும்?

இன்னொன்றை இங்கெடுத்துக் காட்டுவது மிகமிக இன்றியமையாதது. இக்கால் பிராமணர் நடத்தும் இதழ்கள் சிலவற்றில், பச்சையாகவும் கொச்சையாகவும் தாறுமாறான பாலியல் வெறிவுணர்வு நிரம்பிய கதைகளும் கட்டுரைகளும் வண்ணப் படங்களுடன் வெளியிடப்பெற்று வருகின்றன. இவை தமிழ்ப் படிக்கும் மக்களிடையில் மொழித் தாழ்ச்சியையும் மனத்தளர்ச்சியையும், அறிவுவீழ்ச்சியையும் ஏற்படுத்தும் என்பது உறுதி. இந்நிலைகளுக்கிடையில் சமசுக்கிருதம் உயர்வானது; வேதமதமாகிய இந்துமதக் கொள்கைகள் உயர்ந்தன என்னும் எண்ணம் வளரும்படி ஒருவகைக் கருத்து. கரவாகவும் சூழ்ச்சியாகவும் பரப்பப்பட்டு வருகிறது. தமிழர்கள் இந்நிலையை மிகவும் எச்சரிக்கையாக எண்ணி உணர்ந்து கொள்வதுடன், அவ்விதழ்களை அறவே புறக்கணிக்கவும் வேண்டும் என்பது அறிந்துகொள்க.

இனி, தமிழ் மொழியின் இயற்கையமைப்பையும் அதன் அறிவியல் கூறுபாடுகளையும் அறியாதவர்களே, அம்மொழியைவிட, சமசுக்கிருதத்தை உயர்வாகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் கருதுவர். உண்மையில் சமசுக்கிருதத்தின் மொழியியல் அமைப்பையும், அதன் கலவைத் தன்மையையும் அறிந்த எவரும், அதனை உயர்தனிச் செம்மொழியாகிய, தமிழினும் உயர்வாகக் கருத மாட்டார்கள். இந்நிலையில்தான் சமசுக்கிருத மொழியைப் பற்றி இக்கால் அரசியல்

அதிகாரத்தில் உள்ள அமைச்சர்களும், தலைவர்களும்கூட வானளாவ உயர்த்திப் பேசி வருகின்றனர். இதற்குப் பிராமணர்களின் பொய்யுரைகளும் புனைவுரைகளுமே கரணியமாக இருக்க முடியுமேயன்றி, வேறு அடிப்படைகள் எதுவும் இருக்க முடியாது; அம்மொழி தேவமொழி யென்னும் குருட்டுக் கொள்கையும் அறியாமை எண்ணமும் இங்குள்ள மாநில ஆளுநர், நடுவண் அமைச்சர்கள் உட்பட அனைவர்க்கும் இருப்பதைப் பார்த்தால், ஒன்றால், இவர்களுக்கு அம்மொழி பற்றிய வரலாறு எதுவும் தெரியாது என்றே எண்ணி, இரங்க வேண்டியுள்ளது; அன்றால் இவர்கள் வேண்டுமென்றே பார்ப்பனீய இனச் சார்பினராக மாறி, அவர்களின் தலைமைக்கும் தில்லுமல்லுகளுக்கும் தங்களை ஒப்புக் கொடுத்துக்கொண்ட அடிமைகளோ என்று கருத வேண்டியுள்ளது. இல்லெனில் இவர்கள் இச் சமசுக்கிருதத்தை ஏதோ ‘தெய்வங்கள்’ பேசுகிற மொழியென்று மயங்கி, அதன் வளர்ச்சிக்குத் தங்களை அடகு வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

இக்கால் சமசுக்கிருத வளர்ச்சிக்கென 6–ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 2 கோடியே 63 இலக்க உருபாவை அரசு ஒதுக்கியுள்ளது. அம்மொழியின் ஆராய்ச்சி வளர்ச்சிக்கும், கற்பிக்கும் முயற்சிக்கும், அஞ்சல்வழிக் கல்வி, அமைப்புக் கல்வி போன்ற ஏற்பாட்டிற்கும், அம்மொழியை வலுப்படுத்துவதற்கும் அத்தொகை செலவிடப்பட வேண்டும் என்பது அதன் திட்டமாகும். ஏற்கனவே உள்ள ‘தேசிய சமசுக்கிருத’ அமைப்பு நிறுவனத்தின்வழிப் புதுதில்லி, திருப்பதி, சம்மு, பூரி, அலகாபாது ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் சமசுக்கிருதக் கல்வி நிலையங்களில் அம்மொழி பயிலும் மாணவர் ஒவ்வொருவருக்கும் மாதம் 100 உருபா முதல் 250 உருபா வரை உதவிச் சம்பளங்கள் அளிக்கப் பெற்று வருகின்றன. இவ்வமைப்புக்குத் தலைவராக உள்ளவர் நடுவணரசுக் கல்வி, கலை, பண்பாட்டுத் துறை அமைச்சரான பர். பி.சி. சந்தர் என்பவர், மக்களின் வரிப் பணத்தில் வாழ்ந்து வரும் இவர், ‘சமசுக்கிருத மொழியை எல்லா வகையானும் வளர்ச்சியுறச் செய்யும்படி அவ்வக்கால் அறிக்கைகள் விட்டுவருவது, மற்ற தேசிய மொழியாளர்க்கு எவ்வாறு நடுநிலைமை தாங்குவதாகும் என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள 86 பல்கலைக் கழகங்களில், சமசுக்கிருதத்தை ஏறத்தாழ 70 பல்கலைக் கழகங்களிலும் இந்தியை ஏறத்தாழ 65 பல்கலைக் கழகங்களிலும் கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கும்பொழுது, தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் முதலிய தென் திராவிட மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கு ஏன் பத்துக்கும் குறைந்த அல்லது ஒன்றிரண்டு கூடிய

எண்ணிக்கையுள்ள பல்கலைக் கழகங்களில் மட்டும் வாய்ப்பேற்படுத்திக் கொடுக்க வேண்டும்? திரவிடர்கள் நடுவணரசுத் தலைமையைக் கைப்பற்ற முடியாமல் இருக்கும் சூழ்ச்சி மிகுந்த அரசியல் அமைப்பை வைத்துக் கொண்டு பிராமணியம் அரசாளும் உண்மையை இது தெரிவிக்க வில்லையா?

இன்னும் இந்திய மக்கள் தொகையில் நூற்றுக்கு மூன்று பேராக உள்ள ஆரியப் பார்ப்பனரின் மொழியாகிய சமசுக்கிருதத்தைப் பேசுபவரின் மொத்த தொகையே அரசு மக்கள் தொகை மதிப்பீட்டுக் கணக்கின்படி 500 பேராக இருக்க, பிற தேசிய மொழிகளுக்குள்ள உரிமையைப்போல் அச் சமசுக்கிருத மொழியில், வானொலியில் செய்தி அறிக்கைகள் படிப்பதும், நாடகங்கள் நடிப்பதும், பாடல்கள் பாடுவதும், தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள், கதைப்பொழிவுகள், உரையாடல்கள் நிகழ்த்துவதும் எப்படிப் பிராமணிய வளர்ச்சிக்குத் துணைபோகாத – அல்லது அவ்வினக் காவலுக்கு உதவாத செயல்களாகும்? இது பச்சைப் பார்ப்பனீயக் கொடுமைகள் அல்லவா? பெரும்பான்மை மொழியினர் நலத்தை நசுக்கி ஒரு சிறுபான்மையினரின் வளர்ச்சிக்குத்துணைபோகின்ற அரசின் இரண்டகச் செயல் அல்லாமல் இதை வேறு என்னவென்று சொல்ல முடியும் மிகச் சிறுபான்மையுள்ள பார்ப்பனரிலும் சமசுக்கிருதம் நன்கு படித்த ஒரு சிலருக்குத்தானே இந்நிகழ்ச்சிகள் புரியும்! ஓர் இரண்டு நூறு பேர்களுக்காக, கோடிக்கணக்கான மற்ற மக்களின் உரிமை பறிக்கப்பட வேண்டுமா? இஃது என்ன நேர்மை? என்ன நடுநிலைமை?

இந்த நிலையில் “பள்ளிகளில் சமசுக்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்” என்று வேறு, கடந்த சனவரியில் சென்னையில் கூடிய சமசுக்கிருத சம்மேளனம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கு அச் ‘சம்மேளனம்’ கூறும் கரணியங்கள்தாம் எத்துணைப் பொய்யும், புளுகும், குறும்புத்தனமும் பிற மொழியாளரை அவமதிக்கும் தன்மையும் வாய்ந்தனவாக உள்ளன! அம்மாநாட்டில் கூறிய கருத்துரைகளையும் தீர்மானங்களையும், தமிழ்ப் பற்றாளர்களும் தமிழ்த் தலைவர்களும், கண்ணுற வேண்டும் என்பதற்காக அச்செய்தி அப்படியே திருத்தமின்றிக் கீழே கொடுக்கப் பெறுகிறது:– (தினமணி – சென்னை – சனவரி – 2)

“ஹிந்தி பிரசார சபையைப் போல ஸ்ம்ஸ்கிருத பிரசார சபை ஒன்று பல்கலைக் கழக அந்தஸ்தில் அமைந்தால்தான் தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் பரவ முடியும்.. அதற்கு மத்திய சர்க்கார் ஆவன செய்ய வேண்டும்... சம்ஸ்கிருதம் படித்த மாணவர்கள் மற்ற மாணவர்களைவிடக் கெட்டிக்காரர்களாகவும்

படிப்பில் சிறந்தவர்களாகவும் விளங்குவது நிரூபிக்கப்பட்டுள்ளது. சமசுக்கிருதம் ஜெர்மனி அமெரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் எல்லோராலும் கற்றுக் கொள்ளப்படுகிறது. நம் நாட்டில் ஒவ்வொருவரும் சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்வது மிக அவசியம்.

..... விஞ்ஞான யுகமான இக்காலத்தில்கூட, ஸம்ஸ்கிருத நூல்கள் கணிதம், வான சாஸ்திரம், ஜியாமெண்டரி, டிரிகனாமெண்ட்ரி, அல்ஜீப்ரா, பூகர்ப ஆராய்ச்சி, அணு ஆராய்ச்சி, கட்டிட நிர்மாணம் ஆகியவற்றிற்கு பெரும் உதவியாக உள்ளன.....

..... எல்லா மாநில சர்க்கார்களும் உடனடியாக ஸம்ஸ்கிருதத்தைக் கட்டாய பாடமாகச் சொல்லித்தரவேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு நமது புராதன கலாச்சாரமானது புரியவரும்.

..... ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு சம்ஸ்கிருத நிறுவனம் ஏற்படுத்தி, மத்திய நிறுவனம், அவற்றின்மூலம் ஸம்ஸ்கிருதம் நாடு முழுவதும் பரவவும், மேல் படிப்புகளும் ஆராய்ச்சிகளும் நடத்தவும் முழு ஆதரவு தரவேண்டும் என்று மத்திய சர்க்காரை இந்தச் சம்மேளனம் கேட்டுக்கொள்கிறது.

......... தற்பொழுதைய ஹிந்து அறநிலைய அமைப்பு முழு அதிகாரமும் உள்ள அறநிலையங்கள் ஸ்தாபனம் நிறுவப்பட வேண்டும்.

.......... மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் சமயக்கல்வி சொல்விக், கொடுக்க வேண்டும் என்று கல்வி அதிகாரிகளையும் சென்னை சர்க்காரையும் இந்த சம்மேளனம் கேட்டுக் கொள்கிறது.

– எப்படி? நடுவணரசைக் கேட்டுக்கொள்ளும் தீர்மானங்கள் அல்ல இவை? நாளை நடைபெறவிருக்கும் திட்டங்கள்! இவை மட்டுமா? இன்னும் எத்தனை, எத்தனை?”

சமசுக்கிருத மொழியை அடிப்படையாகக் கொண்டு தான் பிராமண மதமாகிய வேத மதமும் அஃதாவது இந்துமதமும், பிராமணியமும் நிலைத்து நிற்கவும், வளர்ந்து ஓங்கவும் முடியும். சமசுக்கிருத மொழி அழியுமானால், பிராமணியம் இந்தியாவில் ஒரு நொடிப்பொழுதும் உயிர் வாழ முடியாது. “ஓரினத்திற் கடிப்படையாகவுள்ளது அவ் வினத்தின் மொழியே. அம்மொழி அழியுமானால்

அவ்வினமும், அவ்வினத்தைப் பற்றி வளரும் கலைகளும் பண்பாடும் பிற அறிவுக்கூறுகளும் படிப்படியாகவும் ஆனால் விரைந்தும் அழிந்துவிடும்” என்னும் இயற்கைக் கோட்பாடே, சமசுக்கிருத மொழி நிலையிலும் உண்மையாகச் செயற்படும் என்பது, பிராமணர்களுக்கு தமிழினத்தவர்களைவிட நன்கு தெரியும். இவ்வகையிலேயே வடநாட்டவர்களான ஆரியப் பார்ப்பனர்களும் தங்கள் ஆட்சியதிகாரங்களை நிலைப்படுத்தும் முயற்சியாக, இந்தியை இந்நாட்டின் ஆட்சிமொழி யாகவும் இணைப்பு மொழியாகவும் ஆக்குவதில் பெரிதும் முனைப்பும் பரபரப்பும் காட்டுகின்றனர். இவ்வுண்மையைத் தமிழர்கள் நன்கு விளங்கிக்கொள்ளுதல் வேண்டும்.

இந்திமொழி சமசுக்கிருத அடிப்படை கொண்டது. எனவே அதன் வளர்ச்சி சமசுக்கிருத ஆக்கத்திற்கு ஒருவகைத் துணையாக நிற்கும் என்பதைப் பிராமணர்கள் உணர்ந்திருக்கின்றனர். இந்தியை ஆட்சி மொழியளவில் இந்நாட்டின் அதிகார மொழியாக நிலைப்படுத்திவிட்டால், அதன் வேராக நின்று சமசுக்கிருதம் இயங்கும் அல்லது இயக்கும் என்பதையும் அவர்கள் நன்கு உணர்வர். எனவேதான் சமசுக்கிருத வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொள்ளும் பிராமணர்கள் இந்தி நுழைவிலும் ஓரளவு அக்கறை காட்டி வருகின்றனர். வடநாட்டினரின் இந்திமொழி வளர்ச்சியையும், சமசுக்கிருத மொழி எழுச்சியையும் தடுத்து நிறுத்தும் ஆற்றல், திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ்மொழிக்கே உண்டு. மற்றைய அனைத்துத் திராவிட மொழிகளுக்கும் சமசுக்கிருதம் புறக்கணிக்கப்படும் ஒரு மொழியன்று. சமசுக்கிருதத்தை விடுத்து அம்மொழிகள் ஒருபோதும் தம்மளவில் நின்று தனித்தியங்கா; உயிரும் வாழா, தமிழ்மொழியின் நிலை அவ்வாறானது அன்று. சமசுக்கிருத மொழியின் கூட்டுறவை எவ்வளவுக் கெவ்வளவு அது தவிர்க்கின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு தன்னளவில் நின்று தனித்து வளர்ந்து செழிக்கும் தன்மையுடையது. சமசுக்கிருத மொழித் தொடர்பே தமிழ்மொழியின் தனித்தன்மையையும், அதன் அறிவு வளத்தையும் வளர்ச்சியையும் கெடுக்க வல்லது. எனவே மற்றைய திராவிட மொழிகளான மலையாளம், தெலுங்கம், கன்னடம், துளுவம் முதலிய மொழிகள் சமசுக்கிருதத் தொடர்பை ஒரு காலத்தேனும் விட்டுவிடும், அல்லது தளர்த்திக் கொள்ளும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. அவ்வாறு செய்வது அவற்றின் தற்கொலை முயற்சியாகவே இருக்கும். மேலும் சமசுக்கிருத மொழியின் தொடர்பை அவை கைவிடக் கைவிட அவற்றின் தாய்மொழியாகிய தமிழ்மொழிக்கு அவை மிக நெருக்கமான மொழிகளாகிவிடும். இன்னுஞ் சொன்னால், அவை தமிழாகவும் ஆகிவிடும். அக்கால் அவற்றின் சொற்களில் மட்டும் இடச்சிதைவும், காலச்சிதைவும், வரலாற்றுச் சிதைவும் நன்கு புலப்படும்படி இருக்கும்.

எனவே, அவை சமசுக்கிருதத்தைத் தவிர்த்துக்கொள்ள இயலவே இயலாது. அவற்றிற்கு அது விருப்பமானதாகவும் இல்லை. சமசுக்கிருதத்தைத் தவிர்த்துக்கொள்ள இயலாதபொழுது, அம்மொழியை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்து சமயச் சார்பையும் அவற்றின்வழிப் பிராமணியப் பிடிப்பையும் எவ்வாறு அவற்றால் விட்டுவிட முடியும்? இவ் வுண்மையை மொழியளவிலும் அதன்வழி இன அளவிலும், அவற்றின் வழி வரலாற்றளவிலும் நன்கு விளங்கிக்கொள்ளாத நிலையில் தான், தமிழர்களிடையே திராவிட இயக்கம் என்று ஒன்று தோற்றுவிக்கப் பெற்றது. அவ்வாறு தோற்றுவிக்கப்பெற்ற திராவிட இயக்கத்திற்குத் திராவிட நாடு பெறுவது ஒரு தலையாய குறிக்கோளாக விருந்தது. காலப்போக்கில் அவ்வியக்கத்தையும், அதன் குறிக்கோளையும் மிகக் கடினமான கற்பனைகள் என்றுணர்ந்த அதன் தலைவர்கள், அம் மெய்ம்மமல்லாத நோக்கங்களுக்குத் தம் காலத்தையும் முயற்சிகளையும் செலவிடுவது அறியாமை என்று கண்டபின், அவற்றைக் கைவிட்டுவிடத் துணிந்தனர். ஆனால் இத்துணைக் காலம் தம் அறியாமைப் போக்கை நம்பித் தம் உடன்வந்த ஒன்றுமறியாத பல்லாயிரக் கணக்கான பேதை மக்களை உடனடியாக ஏமாற்ற விரும்பாத அவர்கள், அக் கைவிடுப்புக்கு முற்றும் பொருத்தமில்லாத அரசியல் புறக்கரணியங்களைக்கூறி, நெடுநாள் முயன்ற அக் குறிக்கோள்களை, ஒரு நொடிப் பொழுதில் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டனர். இவ்வகையில் அவர்களின் பின்னைய தவறுகளின் முன்னைய தொடக்கம் எங்கே இருக்கின்றது என்பதை அவ்வியக்கங்களைச் சார்ந்த தலைவர்களுங்கூட அறியாத உணர்வுடையவர்களாகவே இருக்கின்றனர் என்பதை இரக்கத்துடன் குறிப்பிட வேண்டியிருக்கின்றது. தமிழினத்தின் படிப்படியான தோல்விகளுக்கு அடிப்படையான, அக் கரணியம் என்ன என்பதை இன்னமும் அவர்கள் உணர்ந்துகொள்ள அணியமாக இருப்பதாகவும் தெரியவில்லை. ஏனெனில், இப்பொழுதுள்ள குழப்ப நிலைகளிலேயே அவர்களுடைய அரசியல் வாணிகம் நன்கு நடந்துவருகிறது. அதைக் கெடுத்துக்கொள்ள அவர்கள் விரும்பாதது, ஆழ்ந்த இன வுணர்வற்றவர்களுக்கு இயற்கையே!

இனி, சமசுக்கிருதம் என்பது அரைச் செயற்கையான ஒரு மொழி என்பதை நம்மில் பலரும் அறியார் மாறாக, பிராமணரின் இந்துமத மயக்கங்களில் தம் மதியைப் பறிகொடுத்த தமிழர், அதை ஒரு தெய்வ மொழியென்றே கருதி, அச்சமும் நம்பிக்கையும் கொண்ட ஓர் உணர்வு கொண்டிருப்பதாகவே தெரிகிறது. மேலும், இந்திய அரசின் தலைமை யிடங்களில் உள்ள அதிகாரிகளும், பிற பார்ப்பனத் தலைவர்களும்

வாய் கோணாமல் கூறிவருவதைப் போல், ‘இந்திய மொழிகளனைத்துக்கும் தாய் சமசுக்கிருதமே என்றும் கோயில்களில் வழிபாடு செய்வதற்குரிய தெய்விகத் தன்மை கொண்டதும் அதுவே’ என்றும், ‘சமசுக்கிருதம் இறந்துபட்ட மொழியென்பது தவறானது’ என்றும், அது எல்லாரும் படிப்பதற்குக் கடினமானதென்று கூறுவதும் பிழையானது என்றும், இந்தியக் கலை, பண்பாடு இவற்றிற்கெல்லாம் அடிப்படையானது சமசுக்கிருதமே’ என்றும், ‘அதை அனைவரும் வேறுபாடில்லாமல் கற்கவேண்டும் என்றும், பலவகையாகத் தம் வாய்க்கு வந்தபடியெல்லாம், ஒன்றுமறியாத ஏழை மக்களிடமும், பார்ப்பனக் கொள்கைகளால் பலவகைக் குமுகாய, அரசியல் ஊதியங்களும் பொருளியல் நலன்களும் பெற்றுவரும் பணக்கார ஏமாளிகளிடமும் கூறிவருகின்றனர். இவற்றுக்கெல்லாம் இயைபாக, அரசுப்பதவி தாங்கும் அவ்வமைச்சர்களும் ஆளுநர்களும் அதிகாரிகளும், இந்துமத விழாக்களிலும், கோயில் குடமுழுக்குகளிலும் கலந்துகொள்வதும், பிராமணியக் கோட்பாடுகளுக்குத் தம்மை அடகுவைத்துக் கொள்வது போல், சமசுக்கிருத மொழிக்குக் கண்ணை மூடிக்கொண்டு அரசுப் பணத்தை எடுத்துக் கைத்தாராளமாகச் செலவழிப்பதும், அம்மொழி சர்ந்த இந்துமதக் கொள்கைகளுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் அளவிறந்து வழிவிட்டு ஒதுங்குவதும், மிகவும் ஒருசார்புத் தன்மையும் கொடுமையும் வாய்ந்தன ஆகும். சமசுக்கிருத மொழி வளர்ச்சியிலும், பிராமணியப் பரப்புதலிலும், இந்துமத எழுச்சியிலும் இவ்வரசு காட்டுகின்ற தலைக்கு மீறிய அக்கறையும் ஆர்வமும், இதனை ஒரு மதவெறி பிடித்த அரசு என்றுகூடக் கருதும்படி செய்துவிடுகின்றன. இந்துமதத் தலைவர்களுக்கும் மடாதிகாரிகளுக்கும் தங்களை ஆட்டடுத்திக் கொண்டு அடிமைப்படுவது, மதச்சார்பற்ற அரசுக்குரிய இலக்கணமாக இருக்க முடியாது. இந்திரா காந்தியின் வல்லாண்மைக் காலத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்த ஒரு பிராமண அடிமை, காஞ்சி காமகோடி பீடத் தலைவர் தங்களுக்கு ஆட்சி முறையில் வழிகாட்ட வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்த செய்தி, அரசு அதிகாரிகள் எப்படிப் பிராமணியத்திற்குத் துணைபோகிறார்கள் என்பதைத் தெளிவாக உணர்த்தும்.

பலபடியாக உயர்த்திப் பேசப்பெற்றுவரும் சமசுக்கிருத மொழியே பிராமணர்களுக்கு உயர்ந்த மொழி. அவர்கள் அதில் பேசிப் பழகி எழுத முடியாமற் போனாலும் அவர்களுக்குத் தாய்மொழியும் அதுவே! அவர்கள் தங்கள் தாய்மொழி தமிழ் என்று என்றைக்கும் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ ஒப்புக்கொண்டதே கிடையாது. அவ்வாறு ஒப்புக்கொண்டாலும் அது, அன்றைக்குள்ள

அரசியல், வாழ்க்கை முதலிய சூழல்களையும் பொறுத்தே பொருள்படுத்திக் கொள்ள வேண்டிய ஒன்றாகவே ஆகும். இவ் விடத்தில் மறைந்த நயன்மைக் கட்சித் தலைவர் வயவர் அதி. பன்னிர்ச்செல்வம் என்னும் தமிழர் தலைவரின் கூற்றை எச்சரிக்கையை நாம் நினைவுகூர்தல் நல்லது. “ஆரியப் பார்ப்பனர்கள் தேவையின் பொருட்டே தமிழைப் பயன்படுத்துகின்றனர் அஃதாவது ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வதைப் போல. மற்றபடி அவர்கள் சொந்த மொழியாகக் கருதுவது சமசுக்கிருதத்தையே. ‘தமிழைவிடச் சமசுக்கிருதமே மேல்’ என்பதே அவர்களின் முடிந்த முடிபாகும்” – என்பது அவர் கூற்று.

அரசியல் அதிகார நிலையில் பிராமணர்கள் எத்தனைக் கூறுகளாகப் பிரிந்து கிடந்தாலும், அவர்கள் மொழியாகிய சமசுக்கிருதத்தைக் கருதுகின்ற வகையிலும், அதனைக் கட்டிக் காத்து அதன்வழிப் பிராமணியத்தைப் பேணுகின்ற வகையிலும், அவர்களை வேறுபட்டவர்களாகக் கருத முடியாது என்பதற்கு மேற்கண்ட அடிப்படை உணர்வுண்மையே கரணியமாகும். காலஞ்சென்ற இராசாசிக்கும், காந்திக்கும், நேருவுக்கும், அவர்களின் அரசியல் பிறங்கடையினரான கிருபளானிக்கும், தேசாய்க்கும், இந்திராகாந்திக்கும் அரசியல், பொருளியல் கொள்கைகளில் அவற்றின் நடைமுறைகளில், எவ்வளவு மாறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள், மந்த விரைவுப் போக்குகள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் பிராமணர்களாகையால், சமசுக்கிருத மொழியைப்பற்றியும், வேதங்களைப் பற்றியும், இந்துமதக் கோட்பாடுகள் பற்றியும் அவர்களிடத்தில் எந்த வகையான வேறுபாட்டையோ, மாறுபாடான நடைமுறையையோ எவரும் காணமுடியாது. அவர்கள் இனத்தைப் பொறுத்தவரை, அவர்கள் அனைவரும் பிராமண இனக் காவலர்களே! இக்கருத்தை எந்தச் ‘சூத்திர’ சுப்பிரமணியமோ, ‘அநும’ பத்தவச்சலமோ, ‘வீடண’ மா.பொ.சியோ, ‘பிரகலாத’க் கண்ணதாசனோ, வேறு எவருமோ மறுத்துவிட முடியாது. மற்றபடி, அவர்களுக்கியைபாக இவ்வடிமை மக்கள் எழுதிக் காட்டும், அல்லது பேசிக் காட்டும், ‘அர்த்தமுள்ள இந்துமதக்’ கருத்துகளெல்லாம், அவர்களின் அடிமைத்தனத்தின், அல்லது அறியாமையின் அல்லது பணத்திற்குப் பவ்வீதின்னும் குணக் கீழ்மையின் வெளிப்பாடுகளாகவே இருத்தல் முடியும்.

சமசுக்கிருத மொழி பேணுதல் எவ்வாறு இவ்வாரிய வடவராட்சியில் நடைபெற்று வருகிறது என்பதற்கு இதற்கு முன்பும் சில சான்றுகளைக் காட்டியுள்ளோம். இன்னொரு வெளிப்படையான செய்தியையும் ஒரு சான்றாக இங்குக் காட்டுகிறோம். இந்தியாவில் ஏறத்தாழ இக்கால் 85 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றில்

பெரும்பாலானவற்றில் இந்தியாவின் 14 தேசிய மொழிகளுள் ஒன்றிரண்டையோ மூன்று நான்கையோ கற்கும் வாய்ப்புகள் உள்ளன. சில குறிப்பிட்ட பல்கலைக் கழகங்களில் சில குறிப்பிட்ட மொழிகளைக் கற்கலாம்’ அனைத்து மொழிகளையும் ஒரே பல்கலைக் கழகத்தில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துவது என்பது அத்துணை எளிதன்று. எனவே சில பல்கலைக் கழகங்கள் குறிப்பிட்ட சில மொழிகளைக் கற்பிப்பனவாய் உள்ளன. இணைப்பு மொழியாகக் கருதப்படும் இந்திமொழியை ஏறத்தாழ 70 பல்கலைக் கழகங்கள் கற்பிக்கின்றன. பஞ்சாபி மொழியில் படிக்க 3 அல்லது 6 பல்கலைக் கழகங்களில் தான் இயலும். அசாமி 2, 3–இல் கற்பிக்கப்பெறுகிறது. இந்தியை ஓரிரண்டு பல்கலைக் கழகத்தில்தான் கற்கலாம். உருது மொழியை ஏறத்தாழ 30 ப.க.க.–இல் படிக்கலாம். தமிழ் மொழியை 12 அல்லது 13 பல்கலைக் கழகங்களில்தான் கற்கலாம். இப்படி இந்தி, உருது, மராத்தி, வங்காளி, குசராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, ஒரியா, மலையாளம், அசாமி, சிந்தி ஆகிய 14 தேசிய மொழிகளையும் பலவாறான அளவில் பல்வேறு எண்ணிக்கையில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கும் இந் நடுவணரசு தேசிய மொழியல்லாத, ஏறத்தாழ 500 பேர் மட்டுமே பேசுவதாகவும், 5000 பேர்க்கு மட்டுமே தெரிந்ததாகவும் குறிக்கப்பட்டுள்ள சமசுக்கிருத மொழியைக் கற்றுக்கொள்ள மட்டும் ஏறத்தாழ 80, 82 பல்கலைக் கழகங்களில் வாய்ப்பளிப்பது ஏன்? அதன் முன்னேற்றத்திற்கு மட்டும் மக்களில் 97 விழுக்காட்டினர் தரும் வரிப்பணத்தில் தாராளமாக வாரி வழங்கப்படுவது ஏன்? இவ்வினாவிற்கான விடையில்தான் பிராமணியம் மறைமுகமாக இந்நாட்டை ஆண்டு வருகின்றது என்பதற்கான அடிப்படை உண்மையைக் காணமுடியும்! மற்றபடி அது பேராயக் கட்சி என்று பெயர் பெறலாம்; இந்திரா கட்சி எனப் பெறலாம்; பொதுவுடைமைக் கட்சி என்றுகூடச் சொல்லப்பெறலாம்; இல்லை அனைத்துக் கட்சிகளின் அவியலைப் போலும் ‘சனதா’ என்றும் மாற்றம் பெறலாம். பெயர்கள் என்னவானாலும் இந்தியாவைப் பொறுத்தவரை, அதனை ஆளக்கூடிய தகுதி வாய்ந்ததாகவும், வாய்ப்பு:நிறைந்ததாகவும், பிற அனைத்து இன மக்களைத் தன் காலடியில் போட்டு நசுக்கத் தக்க சாதி, மதக் கோட்பாடுகளைக் கொண்டதும், அவற்றுக்கடிப்படையான வேத, புராண, இதிகாச மூடமந்திரப் புளூகு மூட்டைகளைப் பின்புலமாகக் கொண்டதுமான பிராமணீயம் என்னும் சரக்கு ஒன்றே என்று அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

– தென்மொழி, சுவடி : 14, ஓலை : 10–12, 1977