எக்கோவின் காதல்/கண்மூடி வழக்கம்

விக்கிமூலம் இலிருந்து
3
கண்மூடி வழக்கம்


“என்ன வேலா! எங்கே புறப்படப் போகிறாய்? 'தடப்புடலாக அலங்காரஞ் செய்து கொள்கிறாயே, எங்கேயாவது விருந்தா?” என்று கேட்டுக் கொண்டே என் நண்பன் வேலனுடைய வீட்டிற்குள் நுழைந்தேன்.

“வாப்பா துரை! நல்லவேளை நீயே வந்து விட்டாய்! ம்....ம்....தலையை வாரிக்கொள்; பவுடர் போட்டுக் கொள்கிறாயா?" என்றான்.

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாமப்பா" எங்கே என்று கேட்டால் என்னென்னவோ சொல்கிறாயே!" என்றேன்.

"வா திருவொற்றியூருக்குப் போகலாம். இன்றைக்குத் தைப்பூசம் அல்லவா! இராமலிங்க வள்ளலாருக்குத் திருவிழா நடைபெறும். அதைப்பார்த்து விட்டு வருவோம். வா!” என்று இழுத்துக்கொண்டு சென்றான்.

நண்பன் சொல்லைத் தட்டமுடியாமல் நானும் சென்றேன். இரயில் புறப்படும் சமயம் ஓடி ஏறி விட்டோம்.

"வேலா! இன்னும் உனக்கு இந்தப் பைத்தியம் விடவில்லையா?” என்றேன்.  "துரை! பக்கத்து வீட்டுப் பெண்களோடு என் மனைவியும் அங்குச் சென்றிருக்கிறாள். அதனாலேதான் நானும் போகிறேன்” என்றான் வேலன்.

“உன் மனைவியைத்தான் ஏன் அனுப்புகிறாய்? உன் வீட்டைக்கூட இந்தச் சிறுவிடயத்தில் திருத்தமுடியவில்லை என்றால் நாட்டை எப்படி நீ திருத்தப்போகிறாய்?” என்று தாக்கிப் பேசினேன்.

“நண்பா! நீ மற்ற திருவிழாக்களைப் போல இதையும் எண்ணிவிட்டாயா? வள்ளலார் மற்ற நாயனார் ஆழ்வார்களைப் போல அல்லர். சிறந்த சீர்திருத்தக்காரர். சமூக ஊழல்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென்று ஓயாது உழைத்தவர். இதோ ஒன்று உதாரணத்துக்குப் பாரேன்.

“கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போகவேண்டும்" என்று எந்த அடியாராவது சொல்லியிருக்கிறாரா? இவர் உறுதியுடன் இத்தகைய உயர்ந்த கருத்துகளைச் சொன்ன காரணத்தாலேதான், சுயநலக் கூட்டம் இவரை எப்படியோ சரிக்கட்டி விட்டுச் 'சோதி'யில் கலந்து விட்டார் என்று விளம்பரம் செய்துவிட்டது. இத்தகைய பெரியாரின் விழாவிற்குச் செல்வதைக்கூடவா நீ வெறுக்கிறாய்?” என்று என்னை மடக்கினான்.

“அது சீர்திருத்தக்காரர் விழாவானாலும் சரி - சீனிவாசப் பெருமாள் விழாவானாலும் சரி காலம், பொருள் வீணாகிறதே என்றுதான் சொல்லுகிறேன். மேலும் அங்கு என்ன நடக்கிறது பார்த்தாயா? சீர்திருத்த உபதேசமா நடக்கிறது. அடிகள் கூறிய அறிவுரை அங்கு வந்துள்ள பக்தர்களுக்குப் பரிகாசமாக அலட்சியமாகப்படுகிறது. அங்குள்ள படத்திற்கு. மற்ற கோவில்களில் செய்யும் மரியாதைகளைத் தானே செய்கிறார்கள். நீயும் அப்படியேதான் நடந்து கொள்வாய். அதை விடுத்து ஏதேனும் உபதேசம் செய்யப் போகிறாயோ? இந்தக் 'கண்மூடிவழக்க'மெல்லாம் உன்னளவில் 'மண்மூடிப் போகவில்லையே' என்று கொஞ்சம் ஆவேசமாகவே நான் பேசினேன்.

'சரி சரி வந்தது வந்து விட்டோம். இனி என்ன அதைப்பற்றிப் பேசுவது' என்று வேலன் சொல்வதற்குள் திருவொற்றியூரை அடைந்தோம்.

வண்டியிலிருந்து இறங்கி வேலன் மனைவியும் பக்கத்து வீட்டாரும் தங்கியிருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கப் பெரும் பாடுபட்டுக் கடைசியில் கண்டுபிடித்து விட்டோம்.

நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கையில் அந்தப் பெண்கள் கூட்டத்தில் ஒரு பாவை மீது என் பார்வை விழுந்தது. அவள் தோற்றம் என் எண்ணத்தைக் கிளறிவிட்டது.

“வேலா அந்தப் பெண் யார்?” என்றேன்.

'விதவை' என்றான் வேலன்.

'அட!அந்தக் கிழவியைக் கேட்கவில்லை . கிழவிக்குப் பக்கத்தில் இருக்கும் கிளியைப் பற்றிக் கேட்கிறேன்.'

'அவளைத் தானப்பா நானும் சொல்கிறேன். அவள் ஒரு விதவை. அவளுக்கு வயது பதினான்கு: கணவன் இறந்து ஆறு மாதங்கள் தான் ஆகின்றன. எங்கள் சொந்தக்காரப் பெண். போதுமா அவளைப் பற்றிய விளக்கம்'.

"என்ன! அவள் விதவையா?” மின்சாரத்தால் தாக்குண்டமைப்போல் என் இதயத்திலிருந்து வெளிவந்தது இந்த வினா!  'ஆம், ஆழ்ந்த வருத்தத்திலிருந்து மேலெழும்பிய விடை இது.

அவள்மீது எனக்கு, நீங்கா அன்பு - காதல் அன்று - ஓர் இரக்க உணர்ச்சி - சகோதர வாஞ்சை என்னையறியாமல் தோன்றியது. எதிரிலிருந்த ஆலயத்தைப் பார்த்தேன். முணுமுணுத்தேன்.

அந்தோ ! என் நாட்டை எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் அங்கு நான் சோகக் காட்சியை தானே பார்க்கிறேன். மலர்ந்த தமிழகத்தைக் காணும் நாள் எந்நாளோ? அவள் அன்றலர்ந்த - நுகரப்படாத மலர் எனத் திகழ்கின்றாள். கசங்கிய மலரெனக் கருதி, ஒதுக்கி வைத்து விட்டது. இந்தச் சமுதாயம் என்ற எண்ணத்தோடு வந்த பெருமூச்சு வேலனை என் பக்கம் திருப்பியது,

'வேலா! அவளுக்குப் பெற்றோர்கள் இல்லையா? இச்சிறுவயதில் இந்நிலைக்கு ஏன் ஆளானாள்?' என்று பரிவுடன் கேட்டேன்.

'பெற்றோர்கள் உள்ளனர். காதலின் சுவையை நுகர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். அந்த நுகர்ச்சியில் இவளைப் பற்றிய நினைவு உண்டாகிறதோ இல்லையோ? உண்டானாலும் 'விதி' அவர்கள் கண்முன் காட்சியளிக்கிறது. அதைப் புறக்கணித்து விட்டு ஏதாவது எண்ணினாலோ சமூகம் தனது கோரப்பல்லைக் காட்டி அச்சுறுத்துகிறது.

அவள் சென்ற ஆண்டில் அழகுமிக்க ஓர் இளைஞனுக்கு மனைவியானாள். பொருத்தங்களும் நன்றாக இருக்கின்றன என்று பூசுரரும் கூறினர். இன்பமான வழியிலேயே சென்று கொண்டிருந்தது அவர்கள் வாழ்க்கைச் சகடம். மூன்று  மாதத்தில் காய்ச்சலுக்கு ஆளானான் கணவன். சில நாள்களில் மலைக் காய்ச்சலாக மாறியது. அந்த மாற்றம் இவளது மங்கலநாணை-கழுத்திடு கயிற்றை அறுக்கும் வாளாயிற்று. சகடத்தின் ஒரு சக்கரம் நொறுங்கவே அந்தச் சகடம் பயனற்றுப் போயிற்று' என்று கூறி முடித்தான்.

'அவள் பெயர் என்ன?

'புனிதம்' என்று அவளை அழைப்பார்கள் எனச் சிறிது வருத்தம் கலந்த குரலில் சொன்னான்.

'பெயர் புனிதம்' ஆனால், வாழ்வில் அஃது இல்லை என்று சொல்லிவிட்டு அங்கிருக்க மனமின்றி வேலனிடம் விடைபெற்றுக்கொண்டு, நான் திரும்பிவிட்டேன்.

வண்டியில் வரும்போதெல்லாம் அவளது நினைவு தான். நம்நாட்டுச் சகோதரிகளின் நிலையை நடுநிலையோடு ஒருவன் சிந்தித்துப் பார்த்தால் அவன் கட்டாயம் பைத்தியக்காரன் ஆகிவிடுவான் என்பதை என்னளவில் அன்று தெரிந்துகொண்டேன்.

ஒரு நாள் வேலன் என்னைச் சந்தித்தான். 'துரை! புனிதம் அன்று உன்னைக் கண்டதிலிருந்து உன் மீது அன்பு கொண்டிருக்கிறாள், என் மனைவியிடம் உன்னை மணந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறாள் என்பது அவள் பேச்சிலிருந்து நன்றாய்த் தெரிகிறது. நீ விதவை மணம் செய்துகொள்ள விரும்புகிறாயா? விரும்பினால் சொல். நான் அதற்கு முயற்சி செய்கிறேன்” என்றான்.

'வேலா! என் குணங்களை நன்கு தெரிந்து கொண்ட நீயா இப்படிக் கேட்கிறாய்? பெண்ணுரிமை வழங்குவதென்றால்  முதலில் மறுமணம் தான் கவனிக்கப்பட வேண்டும் என்று நான் பலமுறை கூறி வந்திருக்கிறேன். அவ்வாறிருந்தும் விரும்புவாயா?' என்று கேட்கிறாய். புனிதம் உடன்பட்டால் புகலிடம் தர நான் சம்மதிக்கிறேன். செயலில் இறங்கச் சித்தனாயிருக்கிறேன்' என்றேன்.

'அப்படியானால் இதற்கு வேண்டிய ஏற்பாட்டை விரைந்து செய்கிறேன்' என்று சொல்லிவிட்டு வேலன் போய்விட்டான்.

புனிதம் என் சொத்தாகப் போகிறாள் என்று எண்ணியதும் பூரிப்படைந்தேன். மேலும் மறுமணம் என்றதும் மனம் துள்ளி விளையாடியது. திடீரென்று மகிழ்வு தடைப்பட்டது. யாரோ இருவர் என் முன் நின்றனர். அவர்கள் பேசவும் செய்தனர்.

"துரை! என்ன செயல் செய்யத் துணிந்து விட்டாய்! நீ நினைப்பது பெருந்தவறு - என்பதை உணராமல் உடன்பட்டு விட்டாய்! அவள் உன் சகோதரி என்று எண்ணியதை மறந்துவிட்டாயா?” என்றார் ஒருவர்.

மற்றவர்; “அதனாலென்ன? அவள் நிலைக்கிரங்கியதால் அந்த எண்ணந் தோன்றியது. அதனால் 'சகோதரி' ஆய்விடுவாளா? மேலும் மணந்து கொள்ளு முன்பு யாரும் எந்தப் பெண்ணையும் அப்படித்தான் எண்ணுவார்கள். அதுதான் இயல்பு. அவருக்குள் அன்பு தோன்றிக் காதல் பெருகிய பின்பு முதலில் சகோதரர் எண்ணந் தோன்றியதே! அவள் உன்னைக் காதலனாகக் கருதுகிறாள். நீயோ விதவை என்ற சொல்லே இந்த நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும் என்று மனமார விழைகின்றாய். அதனால் தயங்காதே! தலை நிமிர்ந்து நில்! கூசாமல் குதித்துவிடு!” என்றார்.

“அப்படியானால் நீ உறுதியற்றவனாகிறாய்! மனக் கட்டுப்பாட்டை மதியாதவனாகிறாய்! முதலில் உடன் பிறப்பு என்று எண்ணிவிட்டு, அடுத்து அதை உரிமைப் பொருளாக்க எண்ணுவது, நீ உன் உள்ளத்தையே நம்பவில்லை என்று தான் பொருள்படும். மனம்போன போக் கெல்லாம் போய்க்கொண்டிருந்தால் உலக ஊழியனாக முடியுமா? சீர்திருத்தத் தொண்டு செய்ய முடியுமா? எண்ணிப்பார்! காதலின் ஏவலுக்கு ஆளாகாமல் எண்ணிப்பார்?” என்று முதல்வர் கூறினார்.

இரண்டாமவர் “அவள் காதலை நீ புறக்கணித்து விட்டதால் மட்டும் உன்னை உறுதியுடையவன் என்று கருதுகிறாயா? அது தவறு . அப்படியானால் நீ பெருங்கோழையாகிறாய் சமூகத்தை எதிர்த்து நிற்க அஞ்சுகிறாய்! விதவை பிழிந்தெடுக்கப்பட்ட சக்கைதானே என்று எண்ணுகிறாய். இந்தக் கோழைமனம் இருக்கும் வரை நீ எங்கே தியாகம் செய்யப் போகிறாய்! அது கிடக்கட்டும். உன் நண்பன் வேலனிடம் அன்று உறுதி மொழி கொடுத்தாயே அது என்னாவது? அவன் தான் என்ன நினைப்பான்! வாய்ச் சொல்லில் வீரம் பேசும் வஞ்சகன் என்று தானே உன்னைக் கருதுவான். இதுதான் உன் உறுதியா? மனக்கட்டுப்பாடா? சொல்லியதைச் செயலிற் காட்ட முனைவதை மனம்போன போக்கு என்பது குறைமதியினர் கூற்றல்லவா அஞ்சுகிறாயா? அச்சத்தை விடு. எதிர்ப்பைத் துச்சமென எண்ணு! வா! வளங்காண வா! வாகை சூட வா!" என்றார்.

நான் நிமிர்ந்தேன் இருவரும் மறைந்தனர்.

'கண் மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போகட்டும்' யாரோ நெடுந்தொலைவில் பாடுவது போல் மெலிந்த ஒசை என் காதில் மோதியது. சரி. நான் கோழையல்லன். உறுதி மொழியைப் புறக்கணிக்கும் உள்ளமுடையவனுமல்லன். எதிர்த்துச் செல்லும் சுறா நான். பற்றுக்கோடின்றிப் பரிதவிக்கும் அவள் சாய்வது சரியன்று. இனிமேல் நான் நீர். அவள் மீன். நான் தென்றல்; அதில் ஒன்றிவரும் மன்றல் அவள் என்ற முடிவுக்கு வந்தேன்.

'வேலா! வேலா!' என்று அழைத்துக் கொண்டே அவனுடைய வீட்டிற்குள் நுழைந்தேன். ஒருவரையும் காண வில்லை.

'வேலா!' என்று மீண்டும் சிறிது உரத்துக் கூவினேன்.

உள் அறையிலிருந்து இல்லை என்று பதில் வந்தது. அதைத் தொடர்ந்து எங்கோ அவசர வேலையாகப் போயிருக்கிறார் என்ற குரலும் வந்தது. நிமிர்ந்து பார்த்தேன். நிலையைப் பிடித்துக் கொண்டு நீலநிறப் பட்டுடுத்தி நின்றிருந்தாள் புனிதம்.

புனிதம்! இது வியப்பில் வெளிவந்த மூச்சு பேச்சில்லை!

நிலைத்து நின்ற நான் சமாளித்துக் கொண்டு சரி வருகிறேன். என்று அடி எடுத்து வைத்தேன்.

'இல்லை ..... உங்களை .... வந்தால் இருக்கச் சொன்னார்' என்று புனிதம் இழுத்துச் சொன்னாள். 'மரகதம் எங்கே?' என்றேன். மரகதம் வேலன் மனைவி.

'எதிர்வீட்டிற்குப் போயிருக்கிறாள்' என்று நாணிக் கொண்டு விடையளித்தாள் புனிதம்.

ஒரு வகையாக அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன். உள்ளம் வேகமாக ஓடும் தையல் இயந்திரத்தின் ஊசி போல வேலை செய்தது. வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டேன்.

“இந்தாருங்கள்” என்று சொல்லிக் கொண்டே விசிறியும் காப்பியும் மேசை மீது வைத்தாள். எனக்குக் குழப்பம் அதிகமாயிற்று.... இவள் காப்பிதரக் காரணம் என்ன? வேலனும் மரகதமும் எங்கே தான் போயிருப்பார்கள்? என்று என்னென்னவோ எண்ணினேன்.

அவள் கதவோரத்தில் கதவைப் பிடித்துக் கொண்டு ஒதுங்கி நின்றாள்.

பார்த்தேன் ........பார்த்தாள். சில வினாடிகள் மவுனம்.

'புனிதம்' என்று என் இதயம் பேசியது. என் உதடுகள் என் உள்ளத்தை அவளுக்குத் திறந்து காட்டின.

அவள் முகத்தாமரை மலர்ந்தது. இதழ்கள் அசைந்தன. என் கண் வண்டு பறந்தோடிப் பாய்ந்தது. வண்டைத் தொடர்ந்து சென்றேன். நான்கு கண்களும் எவ்வளவு பேச்சுகள் பேசின. அப்பப்பா! நெடுநேரம் கழிந்தது. பின்னர் வாய்கள் பேசத் தொடங்கின. பேச்சின் முடிவிலே தான் இது, தோழன் வேலனுடைய வேலை என்று தெரிந்து கொண்டேன். எங்களைச் சந்திக்கச் செய்ய வேண்டுமென்றே அவன் இந்தச் சூழ்ச்சி செய்துள்ளான்.

அங்கே இருவரும் காதல் தெய்வத்தின் மீது ஆணையிட்டு உறுதி செய்து கொண்டோம். அதன் பின் எங்கள் நெஞ்சங்கள் சந்தித்தன. அந்தச் சந்திப்பில் வேலனும் மரகதமும் எங்கள் தெய்வங்களாகக் காட்சியளித்தனர். சுருங்கச் சொன்னால் கண் மூடி வழக்கத்திற்குக் குழி தோண்டிவிட்டோம் மண்கொட்டி மூடிவிட வேண்டியதுதான் பாக்கி.

கண் மூடி வழக்கத்திற்கு நாங்கள் இருவரும் குழி தோண்டினோம். மண் போட்டு மூட வேண்டுமே. அதற்கு அவளுடைய பெற்றோரின் உதவியை நாடினோம். உதவி செய்ய மறுத்துவிட்டனர். உள்ளம் இடங்கொடுத்தாலும் சமூகம் அவர்களைச் 'சரி' என்று சொல்லவிடாமல் தடை செய்கிறது. கடைசியாக எப்படியோ அவர்களை உடன்படச் செய்துவிட்டான் வேலன்.

புனிதத்தின் பெற்றோர்கள் புலன்விசாரனை நடத்தினார்கள். விசாரணைக்குப் பின் எனக்குத் தண்டனை தரப்பட்டது. “புனிதம் உன் சொத்தில்லை ” என்று. ஏன்? என்று எதிர் வழக்காடினேன்.

நீ 'ஏழையாகப் பிறந்தது ஒரு குற்றம். அதை மன்னித்து விட்டாலும் வேறு சாதியில் பிறந்த இரண்டாவது குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாது' என்றனர்.

குற்றவாளியானேன்.

'வேலா! இனி என்ன செய்வேன்? 'ஏழை' -'வேறு சாதி இந்தக் குற்றங்களுக்காக என் சொத்துப் பறிமுதல் செய்யப்பட்டது!

'துரை! நீயா இப்படிக் கலங்குவது. அவை உன் குற்றமல்ல. இன்றுள்ள சட்டப்படி அவை குற்றமாகின்றன. அந்தச் சுயநலக் கும்மல் வகுத்த சட்டம். மனிதனை நசுக்குவதற்காக மனிதனாலேயே செய்யப்பட்ட சட்டம். சட்டம் என்றைக்கும் ஒரே மாதியான நிலையில் இருக்காது. சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் அல்லது கொளுத்த வேண்டும். அதன் பின்புதான் நீ குற்றவாளி இல்லை என்பதை மெய்ப்பிக்க முடியும்' என்று பரிந்து பேசினான்.

'நண்பா! அஃதிருக்கட்டும். நாங்கள் தோண்டிய ‘குழிக்கு' அவர்களிடம் 'மண்' கேட்டதால் அல்லவா அவர்கள் மறுத்தனர். நாங்களே முயன்று மண்ணை எடுத்துப் போட்டுக் குழியை மூடிவிட்டால் என்ன?

'அதுவும் நல்ல முடிவுதான். அதாவது நீங்கள் இருவரும் யாரும் அறியாமல் சென்று விடுவது என்றுதானே கூறுகிறாய்? ஆம்; அப்படிச் செய்வது தான் நல்லது. இல்லாவிட்டால் புனிதம் இறந்தாலும் இறந்துவிடுவாள்' என்று கூறி என் எண்ணத்தை உறுதியாக்கினான்.

வேலன் மரகதம் இருவரின் உதவியாலும் இன்பபுரிக்கு பயணம் ஆகிவிட்டோம்.

சில மாதங்கள் கழித்துவேலனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதைப் படித்தேன். உடனே விடை எழுதினேன்.

என் வாழ்வைப் புனிதமாக்கிய தோழா நாங்கள் நலம். உன் கடிதம் கிடைத்தது. புனிதம் ஓடிவிட்டாள் என்று தூற்றுகிறார்களா? தூற்றட்டுமே! கண் மூடிக் கூட்டங்களுக்கு அதைத் தவிர வேறென்ன தெரியும். ஒரு நாள் தூற்றும். மறுநாள் போற்றும் அந்த நாற்ற வாய்கள். அதைப் பொருட்படுத்தக் கூடாது.

நண்பா! 'கண் மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக வேண்டும்' என்ற உயிர் ஒலியை அன்று சொன்னாய். அந்த ஒலியே என் வாழ்வின் மூச்சாகவும் செய்தாய். அதற்கு எங்கள் நன்றி. நாங்கள் அந்த வழக்கத்தை மூடிய இடத்திலிருந்து மலர்ச்செடி முளைத்துள்ளது. அதாவது புனிதம் இன்னும் எட்டு மாதத்தில் தாயாகப் போகிறாள்!

அதற்குள் நான் சொன்னேன். ஆண் குழந்தை தான் பிறக்கும் -- அதற்கு வேலன் என்று பெயர் வைப்பேன் என்று.

அவள், 'இல்லையில்லை; பெண்தான் பிறக்கும்; நான் அதற்கு மரகதம் என்று பெயர் சூட்டுவேன்' என்று சொல்லுகிறாள்.

எப்படியோ இன்னும் எட்டு மாதத்தில் என் குடும்பத்தில் உங்களில் ஒருவர் தோன்றப் போகிறீர்கள்! என்று எழுதி, அஞ்சல் பெட்டியில் போடும் போது 'கண் மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக' என்ற இராமலிங்கவள்ளலார் மறைமொழி என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

★★★