உள்ளடக்கத்துக்குச் செல்

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்/விஞ்ஞான சோசலிச வித்தகர்

விக்கிமூலம் இலிருந்து


விஞ்ஞான சோசலிச வித்தகர்!

உலக நாடுகளெல்லாம் விழித்து எழுந்து தங்களது எதிர்கால வாழ்க்கைக் கோட்டைக்கு சோசலிச அடிப்படையினையே அஸ்திவாரமாக்கிக் கொண்டு இயங்கி வருகின்றன. நம்முடைய இந்திய நாடும் அரசும் சோசலிச சமுதாய அமைப்பே நமது இறுதி இலட்சியம் என திட்டவட்டமாக அறிவித்து அதனை அடைவதற்கான செயல்முறைகளில் கவனம் செலுத்தி வருகிறதைப் பார்க்கிறோம்.

இந்திய அரசு விரும்பும் ஜனநாயக சோசலிசத்திற்கும், சோவியத் யூனியனின் நடைமுறைகளில் இருக்கும் சோசலிச முறைகளுக்கும் இடையே செயல்முறை வேறுபாடுகள் உண்டு. ஆனால் அஸ்திவார இலட்சியம் ஒன்றே ஒன்று தான்.

சோசலிசம் என்ற இந்தச்சமநீதி சமுதாய அமைப்புமுறை அன்று உலகப் பாட்டாளி மக்களின் இனிய கனவாக இருந்தது. சோவியத் ரஷ்யாவிலே இந்த சீர்மிகு அமைப்புமுறை இன்ப நினைவாக, இனிய அனுபவமாகக் காட்சி தருகின்றது.

வறுமைக் காட்டிலே வனவிலங்குகளாய் அலைந்து கொண்டு இருக்கின்ற மக்களின் வீழ்ச்சிக்கான அடிப்படையைப் பற்றிச் சிந்தித்து, அவர்களுடைய வாழ்க்கையைப் பலப்படுத்தி கைதூக்கி விடுவதற்கான கருவியினை விஞ்ஞானமுறையிலே உருவாக்கி விளக்கிய முதல் அறிஞன் காரல் மாக்ஸ், ஒரு சிந்தனைச் செம்மல், தத்துவப் பேராசிரியர், ஏழைகள் வாழ்க்கையைச் சிந்தித்தவர். முதாலாளிகளின் முதுகெலும்பை முறித்தவன். அவன் துவக்கி வைத்த பேரியக்கம், இன்றும் உலகத்தில் பல நாடுகளிலே, பல தத்துவங்களிலே, பாட்டாளி மக்களின் வாழ்க்கையிலே உயிரோட்டமாக ஜீவ களையோடு ஒளிவிடுகின்றன.

தத்துவ ஞானி காரல் மார்க்ஸ் 1818ஆம் ஆண்டு மே திங்கள் 5-ம் நாள் ஜெர்மனி நாட்டில் உள்ள டிரியா என்னும் ஊரில் பிறந்தார். யூத வழக்கறிஞரான ஹீன்ரிச்சு இவருடைய தந்தையாவார். அன்றைய ஜெர்மன் அரசு யூத இனத்தவரிடம் விரோதம் காட்டுவதைப் பழிவாங்குவதை அறிந்த அவர் சீர்திருத்த கிருஸ்துவ சமயத்தைத் தழுவிக்கொண்டார்.

காரல் மார்க்ஸ் தான் பிறந்த ஊரிலே ஆரம்பக் கல்வி கற்றார். படிப்படியாக கல்வியில் உயர்ந்து, தத்துவம், வரலாறு, சட்டம் ஆகிய மூன்று கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். 1831ஆம் ஆண்டில் தத்துவப் பேராசிரியர் பட்டத்தைப் பெற்றார். பான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிய வேண்டும் என்பது அவருடைய ஆசை. ஆனால் அதற்கேற்ற சூழ்நிலை அமையவில்லை. அதனால் எண்ணத்தை விட்டுவிட்டார். அதற்குக் காரணம் இருந்தது.

அன்றைய அரசு, மக்கள் பேச்சுரிமை, எழுத்துரிமைகளுக்கு விரோதமாக இருந்தது.சுருங்கச்சொன்னால் மக்கள் அறிவு வளர்ச்சி பெறுவதையே அரசு விரும்பவில்லை. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அரசு விருப்பம்போல் ஆடும்படி அடிமைப்படுத்தப்பட்டனர். சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை.இந்தக் காரணத்தால்தான் காரல் மார்க்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் எண்ணத்தைக் கைவிட்டார்.

அதிசயிக்கத்தக்க அறிவும், ஆராய்ச்சித்திறனும், உரிமை உணர்ச்சியும் கற்றவராக காரல் மார்க்ஸ் திகழ்ந்தார். அதைக் கண்ட அவருடைய தந்தையார் இவ்வளவு திறமைமிக்க தன் மகன் அடிமை வேலையில் ஈடுப்படக்கூடாது என்று எண்ணினார். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார். 1838-ல் தன் தகப்பனார் இறந்தபின், காரல் மார்க்ஸோ குடும்பச்சுமையை சுமந்தார். கோலூன் என்னும் இடத்தில் புதிய செய்தித்தாளை ஒருவர் துவங்கினார். மார்க்ஸ் அதற்கு கட்டுரைகள் எழுதினார். அதனால் அவருடைய பெயரும், புகழும் நாடெங்கும் பரவின.சிலமாதங்களுக்கு பிறகு அவர் பதிப்பாசிரியர் ஆனார்.

அந்தப் பத்திரிக்கையின் மூலமாகப் புரட்சிக் கருத்துகளையும், உணர்ச்சிகளையும், எழுச்சிகளையும் மக்களிடையே அதிகமாகப் பரப்பினார். அதனை அந்நாட்டு அரசு கண்காணித்து வந்தது. ஒரு கட்டுரையை ஒருமுறை அல்லது இருமுறை படித்துப் பார்த்துப் பிறகு வெளியிட வேண்டுமென அரசுகட்டளையிட்டது.இவ்வாறு செய்தும் கூட செய்தித்தாளின் போக்கு மாறவில்லை. அரசாங்கம் பத்திரிக்கை வெளிவராதபடி தடுத்து விட்டது.

நாட்டுரிமை, பொருளாதாரம் முதலிய துறைகளில் அவர் பெற்றிருக்கும் அறிவு போதாது என்று மேலும் பல நூல்களை ஆர்வத்தோடு கற்றார். அவர் எழுதிய கட்டுரைகள், நூல் முதலியவற்றின் வாயிலாக இவர் கொள்கை நாடெங்கும் பரவி மக்களிடையே விழிப்பையும், பரபரப்பையும் உருவாக்கின. மதம், கலை, விஞ்ஞானம் இவற்றை மக்கள் சிந்திக்கும் முன், உண்பது, உடுப்பது போன்ற உலக வாழ்விற்குத் தேவையான செயல்களில் அக்கறை செலுத்த வேண்டும் என்று மார்க்ஸ் கூறினார். இவரது கொள்கை உலகத்திற்கு புதியது அல்ல, இவர் அதனை மக்கள் வாழ்க்கையோடு இணைத்து பழக்கத்திற்கு கொண்டு வர முயற்சித்தார்.

நாகரீக சமுதாயத்திலே அரசியல், சட்டத்திட்டம் முதலிய அனைத்தும் பொருளாதார வளர்ச்சியின் அடைப்படையில் இருக்கவேண்டும் என்று எண்ணினார்.இந்தக் கருத்துகளை யெல்லாம் அவர் ‘மூலதனம்’ என்ற நூலிலே விளக்கினார். வான் வெஸ்ட்பேலன் என்பவளை இவர் 1843ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். அவள் செல்வக் குடும்பத்தில் பிறந்தவள். அவள் தந்தையும், மார்க்ஸ் தந்தையும் இணைபிரியா நண்பர்கள், அவள் சிறுமியாக இருந்தபோது அவளைத் தந்தையார் அழைத்துக்கொண்டு, மார்க்ஸின் வீட்டிற்கு வருவார். அப்போது மார்க்சும் வெஸ்ட் பேலனும் ஒருவருக்கொருவர் அன்பு கொண்டனர். தன்னுடைய படிப்பு முடிந்தபின் அவளை மணந்து கொள்வதாக மார்க்ஸ் கூறியிருந்தார். பத்திரிக்கை ஆசிரியர் பணியை விட்டுவிட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மார்க்ஸ், அவளை மணந்தார். கூர்மையான அறிவும், தெளிவான சிந்தனையும் உடைய, அந்த பெண் வாழ்நாள் முழுவதும் கணவனுக்கு உற்றத் துணையாக வாழ்ந்து வந்தாள்.

பண்டங்களின் உற்பத்தி முறையையும், அதனால் உண்டாக்கப்படும் முதலாளி இனத்தையும், அவ்வினத்தை இயக்கும் பொதுவிதியையும், ‘மூலதனம்’ என்ற நூலில் மார்க்ஸ் ஆராய்கிறார். முதலாளிகளின் மூலதனத்தை இருவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று நிலையான மூலதனம், மற்றொன்று மாறும் மூலதனம். இயந்திரக் கருவிகள் முதலியவற்றிற்காக செல்வத்தை முடக்குவது நிலையான மூலதனம். இந்த மூலதனத்தால் பண்டங்களின் மதிப்பு பெரிதும் உயர்வதில்லை. மூலப்பொருள்களை திருத்தியப் பண்டமாக அமைத்து தரும் உழைப்பாற்றலே மாறும் மூலதனம்என்பது.அதுவே பண்டங்களுக்கு மிகுந்த மதிப்பு உண்டுபன்னுகிறது. பண்டங்களின் மதிப்பு உயரும்போது முதலாளிக்கு ஆதாயம் அளிக்கிறது. ஆதலால் உழைக்கும் ஆற்றலின் அடிப்படையிலே இலாபத்தைக் கணக்கிடவேண்டும் என்று மார்க்ஸ் கூறினார்.

பண்டங்களின் இயல்புகளை மார்க்ஸ் பல கோணங்களிலிருந்து ஆராயும் போதும் பல அரிய உண்மைகளை விளக்குகிறார். பண்டங்களின் உற்பத்தியையும், பண்ட மாற்றத்தையும் பற்றிப் பின்னர் விரிவாகக் கூறுகிறார். பண்டமாற்றம் செய்யும்போது கிடைக்கும் ஆதாயத்தில் பெரும் பங்கு உழைக்கும் ஆற்றலுக்கே சொந்தம் ஆக வேண்டும். தொழிலாளர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை முதலாளிகள் கொடுப்பதில்லை. அதனால் தொழிலாளர்கள் முன்னேற்றமில்லாமல், எப்போதும் வறியவர்களாய் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலை நீடித்தால் தொழிலாளர்வர்க்கம் அழிந்து போகும். இதைத் தவிர்க்க புரட்சி ஒன்றே வழி என்று அவருக்குத் தோன்றியது.

தொழிலாளர்கள் ஒற்றுமையோடு உரிமைக் கிளர்ச்சி செய்ய வேண்டும். தொழிச்சாலைகளை தேசியமயமாக்க வேண்டும். தனிமனிதனுக்கு உரிமை, என்ற நிலை மாறி பொதுவுடைமை ஆகவேண்டும். முதலாளிக்கு ஈட்டுப் பணம் கொடுக்கலாகாது என்று மார்க்ஸ் கூறுகிறார்.

முதலாளியினம் இருக்கும் வரை, தொழிலாளிக்கு முன்னேற்றமே இல்லை என்பது அவரது கருத்து. புரட்சியின் மூலம் தொழிற்சாலைகளைப் பொதுவுடைமை ஆக்கிவிட்டால், தொழிலாளிகள் இப்போது உழைப்பதைவிட, மிக ஆர்வமாக, ஊக்கமாக உழைப்பார்கள். நாட்டில் உற்பத்தி பெருகி, எங்கும் செல்வமும் செழிப்பும், நிலவும். தொழிலாளர் ஏவுவாரின்றி இயங்கும் இயந்திரம் போல, பிறர் தூண்டுதல் இல்லாமலே வியக்கத்தக்க முறையில் உழைத்து உற்பத்தியைப் பெருக்கி நாட்டை, செல்வ நாடாகச் செய்வர். உலகம் முழுவதும் இந்தக் கொள்கை பரவும்போது ஒழுங்கும், அமைதியும் தாமாகவே நிலவும். அந்த நிலையை அடைவதற்குப் புரட்சியே ஒரு கருவியாக உள்ளது என்பது மார்க்ஸ் முடிவு.

ஆகவே, இவர் அதனால் ஏற்படும் தீய விளைவுகளையும் கருதாமல் அதனை வலியுறுத்துகிறார். தன்னலம், விருப்பு, வெறுப்புயின்றி நடுநிலையில் இருந்து ஆராய்பவர்கள் இந்த முடிவுக்கே வந்து தீர்வார்கள் என்பது மார்க்ஸின் துணிவு. மார்க்ஸின் கொள்கை சோசலிசம் என்பதிலிருந்து சற்று மாறுபட்டதாகும். சோசலிசமும் தனியுரிமைகளை தேசிய மயமாக்க விரும்புகிறது. ஆனால் அது மிதமான போக்கில் மேற்கொள்கிறது. மார்க்ஸ் கொள்கை மிகத்தீவிரமாக புரட்சி முறையைக் கூறுகின்றது. அது, விஞ்ஞான சோசலிசம் அல்லது கம்யூனிசம் எனப்படும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உழைப்பிற்கேற்றவாறு பலனை அளிக்க வேண்டும் என்று அது கூறுகிறது அது வாயிலாக மனிதனை மிகுதியாக உழைக்கும்படி அது தூண்டுகிறது. கம்யூனிசம் அவனவன் ஆற்றலுக்குத் தக்கவாறு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வழிவகுக்கிறது. மனிதன் பேரிழப்பை மேற்கொள்வதற்கு வேண்டிய தூண்டுதல் பொதுவுடைமையில் இல்லை. இவ்விரு கொள்கைகளில் கடவுள் நம்பிக்கைக்குப் பெரும்பாலும் இடமில்லை எனலாம்.

மார்க்ஸ் கொள்கைகள் மக்களிடையே பரவினபோது அவர்களிடையே விழிப்பு ஏற்பட்டது. 1848–ஆம் ஆண்டு ஒரு பெரிய கிளர்ச்சியைத் தொடங்கினார்கள். மார்க்சும் அந்த இயக்கத்தில் கலந்து கொள்ளவே, அப்போது ஜெர்மன் அரசாங்கம் அவரையும் அவர் மனைவியையும், நாட்டைவிட்டு வெளியேற்றியது. கணவனும் மனைவியும், பாரிஸ் சென்றனர். அங்கும் அரசாணை துரத்தியது. பின்னர், பிரஸ்ஸல்ஸுக்குச் சென்றார்கள். அங்கும் புரட்சியின் சின்னங்கள் தோன்றின. மார்க்சும் அவரது மனைவியும் சிறைப்பட்டனர். புரட்சிக்குப் பிறகு அவர்கள் இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்பட்டனர். தொழிலாளர்களுக்காக உழைக்க வேண்டும் என நோக்கம் உடையவர் மார்க்ஸ். இவர் இலண்டனிலும் பிரஸ்ஸல்சிலும் இருந்த பல புரட்சிக்குழுக்களுடன் சேர்ந்து இடைவிடாது உழைத்தார். முதலாளியினமும், அரசாங்கமும் இவரைத் தாக்கினர். தொழிலாளிகளிலும் சிலர் இவரை உணர்ந்து கொள்ளாமல் அவநம்பிக்கை கொண்டார்கள். படிப்படியாக மார்க்ஸ் கூறும் கொள்கையின் உயர்வையும் அதனால் தமக்கு ஏற்படும் நன்மையையும் எண்ணி தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்தனர். மார்க்ஸ் தொழிலாளர்கள் முன்னனியில் நின்று புரட்சி செய்தார்.

ஜெர்மனில் ஜனநாயக ஆட்சி ஏற்பட்டது. மார்க்ஸ் தமது வாழ்நாள்களிலே அதைக் காணும் வாய்ப்பைப் பெற்றார். இந்த இயக்கங்களில் எல்லாம் மார்க்சுக்கு நல்ல நண்பராய் இருந்தவர் பிரட்ரிக் எங்கெல்ஸ் என்பவர் ஆவர். இருவரும் இணைபிரியா நண்பர்கள். ஒரே விதமான சிந்தனையாளர்கள், உண்மையான நட்பு இவர்களிடையே இருந்தது. எங்கல்ஸ்-காரல் மார்க்ஸின் மாணவர். நூல் வெளியீட்டில், துணையாசிரியர். இவர்களுடைய கொள்கைகளைப் பரப்புவதிலும் எண்ணங்களை எடுத்துச்சொல்லுவதிலும், இவருக்கு வருவாய் தேடுவதிலும் பெரும் உதவியாக இருந்து வந்தார்.

மார்க்ஸ் குடும்பம் லண்டனில் வறுமையுடன் போராடியது. அன்பான மனைவி, உண்மையுள்ள ஒரு பணிப்பெண், குழந்தைகள், இவர்கள் அடங்கியக் குடும்பம். பணமில்லாமல், வருவாயில்லாமல் தவித்தது. வறுமையினால் நோயும் அவர்களைப் பற்றியது. ஆகவே குழந்தைகள் இரண்டு இறந்தன. நோயினால் மார்க்ஸ் வேதனைப்பட்டார். செல்வத்திலே பிறந்த இவருடைய மனைவி, வறுமையில் நலிந்து கிடந்தாள். எங்கல்ஸின் பெருந்தன்மை இவர்களுக்கு பொருளாக உருவெடுத்தது.

மார்க்ஸ் நூல்கள் பல இயற்றி இருந்தாலும், அவற்றுள் ‘மூலதனம்’ என்ற நூல் மிகச்சிறந்த நூலாகும். தொழிலாளர்களுக்கு அது ஒரு மறை நூலாக கருதப்படுகிறது. உலக மொழிகள் பலவற்றில் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. 1859–ஆம் ஆண்டில் உலகப் புகழ் பெற்ற டார்வின் உயிரினங்களின் தோற்றம். என்ற ஒரு நூலை எழுதி அப்பொழுதுதான் வெளியிட்டார். அதே நேரத்தில், அரசியல் பொருளாதார திறனாய்வு என்ற நூலை மார்க்ஸ் எழுதியிருந்தார். காரல் மார்க்சுக்கு பலமொழிகள் தெரியும். அவருடைய தாய்மொழி ஜெர்மன், அத்துடன் ஆங்கிலம், பிரஞ்சு, ருசியா ஆகியமொழிகளையும் கற்றார்.

ஓய்வின்றி மார்க்ஸ் உழைத்ததின் பயனாக அவருடைய உடலில் கல்லீரல் கட்டி உண்டாயிற்று. அதனால் உடல்நலம் குன்றினார். சிறந்த மருத்துவர்களால் அந்நோய் குணமானது. உடனே ப்ளுரசி என்ற நோயால் தாக்கப்பட்டார். அச்சமயத்தில், அவருடைய மனைவி புற்றுநோயால், தீராத துன்பத்தை அடைந்தார். 1881-ல் மார்க்ஸ் மனைவி இறந்தாள். அதற்கு பிறகு 1883-ம் ஆண்டில் அவருடைய மூத்த மகள் திடீர் என மறைந்தாள். அந்த ஆண்டிலேயே சாய்வு நாற்காலி ஒன்றிலே சாய்ந்த படியே மார்க்சும் காலமானார்.

மார்க்ஸ் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை அயல் நாடுகளிலே கழித்தார். இங்கிலாந்தில் இவர் வாழும் பொழுதுதான். இவர் புகழ் பரவியது. அவர் பிறந்த ஜெர்மனி நாடு 19-ஆம் நூற்றாண்டு வரையிலும் பொருளாதாரத் துறையில் சீர்குலைந்திருந்தது. அந்தச் சூழ்நிலையில் அவர் ஜெர்மனியிலே வாழ்ந்திருந்தால், முதலாளித்துவத்தின் அநீதிகளை, கொடுமைகளை அறிந்திருக்கமாட்டார். இங்கிலாந்தில் அவர் இருந்தபோது பிரிட்டிஷ் நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறியிருந்தது. அப்போது அங்கே தங்கியிருந்த மார்க்ஸ் பொருளாதாரத் துறையில் சிறந்த ஞானத்தை, அறிவு நுட்பத்தைப் பெற்றார்.

காரல் மார்க்ஸ் கம்யூனிசக் கொள்கையை ருசியா, சீனா போன்ற நாடுகளும் கூட முற்றிலும் ஏற்றுக்கொள்ளவில்லை.அவரது கொள்கையை பொருளாதார நிபுணர்கள், தத்துவ வித்தகர்கள், சிந்தனையாளர்கள், சமுதாயச் சீர்திருத்தச் சிற்பிகள் நாட்டின் அன்றைய முன்னேற்றத்தை விரும்பியவர்கள் அனைவரும் கண்டித்தார்கள். அவருடைய கொள்கையைப் போற்றியவர்களை விடத், துற்றியவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள். ஏனென்றால், அவருடைய கொள்கை அடிப்படையிலேயே தவறு என்றும் அவருடைய எண்ணங்கள் எதிர்காலத்தில் நிறைவேறாதது மட்டும் அல்ல, எதிர் பார்த்ததற்கு நேர் எதிராகவும் முடியக்கூடும் என்றும் பேசினார்கள்.

முதலாளிகளின் ஆதிக்கத்தில் தொழிலாளர்கள் வறுமையில் வாடுவார்களேயன்றி, மகிழ்ச்சியுடன் இருக்க மாட்டார்கள் என்றும் மார்க்ஸ் கூறினார். ஆனால், 

அமெரிக்கா ஐக்கிய நாடுகளிலும், தொழிலாளர்கள் இன்பமாக வாழ்ந்து வருகிறார்கள். எவ்வளவு சிறந்த கொள்கையாக இருந்தாலும்.அதனை அடைகின்ற நெறியும் சிறந்ததாக இருக்கவேண்டும். மார்க்ஸ் கூறும் வழி தொழிலாளர்களின் வாழ்வுக்குக் கொடுமையாகவும், கொலையும், குருதியும் நிறைந்ததாகவும் இருக்கின்றது. இந்தக் காரணங்களைக் காட்டி பெட்ரண்ட் ரஸ்சல், பெர்னாட்சா போன்ற பேரறிஞர்கள் வன்மையாக கண்டனம் செய்தார்கள். பெர்னாட்சா கூறும் போது தொழிற்சாலைகளைத் தேசிய மயமாக்கினால், முதலாளிகளுக்கு ஈடு வழங்கப்படவேண்டும் என்றும், அப்போதுதான் நாட்டின் வளமும், நலமும், அன்பும், அமைதியும் நிலையாக நிற்கும் என்றார்.

ஒரு நாட்டில் உள்ள மக்கள், கல்வியிலும், பகுத்தறிவிலும் முன்னேற்றம் அடைந்து இருந்தால், அந்த மக்கள் தங்களது உரிமைகளுக்கு அழிவு தேடும் எந்தக் கொள்கையையும் ஏற்றுக் கொள்ளவோ, வரவேற்கவோ மாட்டார்கள். அவர்களுக்கு உணவும், உடையும் மட்டும் தான் பெரியவை அல்ல. நாட்டின் உரிமையும், பேச்சுரிமையும், வாழ்க்கையுரிமையும் முக்கியமானவை என்றே கருதுவார்கள். மார்க்ஸின் கொள்கைகளை பலர் குறை கூறிக் கண்டனம் செய்திருந்தாலும், இவரால் மனித இனத்திற்கு உழைக்கும் மக்களுக்கு விளைந்த நன்மைகள் ஏராளம் ஆகும். ஏனென்றால் தொழிலாளர்கள் மனித இனத்தின் உயிர்நாடிகள் என்றார். அவர்களுடைய உரிமைகள், தடையின்றி வழங்கப்படவேண்டும் என்றும், வளர்க்கப்பட வேண்டும் என்றும், அந்த நோக்கத்தின் அடிப்படையில் பண்பாட்டையும், நாகரீகத்தையும் புதிய முறையில் உருவாக்கித்தந்து மார்க்ஸ் பெருமை பெற்றார்.

பழமையின் பிடிப்பிலே இயங்கிக் கொண்டிருந்த சமுதாயத்திற்கு, மார்க்ஸ் கொள்கை, ஒரு மின் தாக்குதல் போல் அதிர்ச்சியை அளித்தது. அதனால் இவரது புரட்சிக் கொள்கை ஏழை மக்களிடையே நன்கு பரவியது. பொருளாதார நிலையில் பெருத்த வேற்றுமை இருக்கக் கூடாது என்ற உண்மையை, மக்களும், ஆட்சியாளர்களும் ஒப்புக்கொண்டார்கள். அதற்குப் பிறகு, எந்த வழியில் தொழிலாளர்களுக்கு உதவிகளைச் செய்யலாம், எப்படி செய்யலாம் என்று அரசினர்கள் சிந்திக்கலானார்கள். அதன் பயனாக தொழிலாளர்கள் வேலை நேரம், ஊதியத்தின் விடுமுறை, தங்குமிடம், மருத்துவ ஒய்வு, மருத்துவ வசதி, பதவி நீடிப்பு, வயோதிகர்க்கான பாதுகாப்பு, ஓய்வூதிய பலன்கள் கிடைத்தன.

காரல் மார்க்ஸ் இவ்வாறு ஏழைத் தொழிலாளர்கள் வறுமையைப் போக்க, அவர்களது துன்பத்தை நீக்க, ஓய்வு ஒழிச்சலின்றி நாடு நாடாக அலைந்து அனுபவிக்க முடியாத துன்பங்களையும், வேதனைகளையும் ஏற்று, அனுபவித்து அந்தந்த நாட்டு ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளுக்கெல்லாம் பலியாகி இறுதியிலே தனது கொள்கைக்கு சிறந்த வெற்றியைத் தேடித் தரும் தத்துவச்சூழ்நிலையை மக்களிடையேயும், தொழிலாளர்களிடையேயும் உருவாக்கியதற்கு பின்பே இவ் உலகை விட்டு மறைந்தார்.

வறுமையில் வாடும் ஏழைத் தொழிலாளர்களின், துன்பத்தை நீக்கி, இன்பவாழ்வை ஓங்கச் செய்ய காரல் மார்க்ஸின் கொள்கை சிறந்த வழிகாட்டியாக அமைந்துவிட்டது. பகுத்தறிவும், நேர்மையுமுடைய எந்த மனிதருக்கும் எந்தக் கட்சிக்கும், எந்த அரசுக்கும், கருத்து வேற்றுமை இருக்க இயலாது. ஆனால், அந்த உயர்ந்த தத்துவ முறையை தொழிலாளர்கள் அடைவதற்குத் துன்பங்களும், துயரங்களும் ஏற்படலாம். குறிக்கோள் சிறந்ததாக இருத்தல் மட்டும் போதாது, அதனை பெறுகின்ற நெறியும், தூயதாக இருக்கவேண்டும். மார்க்ஸின் தொழில் துறைத்தத்துவம், சிறந்த நெறியின் மூலம் அடையக்கூடும்.அது தொழிலாளர் உலகிற்கு மிகச் சிறந்த நன்மையாக காட்சித்தரும்.