உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக் கனிகள்/கடவுள்

விக்கிமூலம் இலிருந்து

5. கடவுள்


136. கடவுளைத் தன்னில் காணாதவனுக்குக் கடவுள் இல்லை.

டால்ஸ்டாய்

137.மக்களிடையே கடவுளை நாடுக.

நோவாலிஸ்

138.நானில்லையானால் கடவுளும் இருக்க முடியாது.

எக்கார்ட்

139.கோவிலில் வைத்துக் கும்பிடும் கடவுளை மனிதனே சிருஷ்டித்தான். அதனால் மனிதன் தன்னைப் போலவே கடவுளையும் படைத்திருக்கிறான்.

ஹெர்மீஸ்

140.கடவுள் கோவில் கட்டும் இடத்தில் எல்லாம் சாத்தானும் ஒரு கோவில் கட்டிவிடுகிறான். அதுமட்டுமா? அவன் கோவிலுக்கே அடியார்களும் அதிகம்.

டீபோ

141.மனிதனுக்கு எத்துணைப் பைத்தியம்! ஒரு புழுவைச் சிருஷ்டிக்க முடியாது. ஆயினும் கணக்கில்லாத கடவுளரைச் சிருஷ்டித்துக் கொண்டேயிருக்கிறான்.

மான்டெய்ன்

142.கடவுள் தகுதியுடையவர்க்குத் தாட்சண்யம் காட்டுவார். தகுதியற்றவர்களே நியாயத்தை மட்டும் வழங்குவர்.

பிளாட்டஸ்

143.தெய்வபக்தி லட்சியமன்று, சாதனமே. அந்தச் சாதனத்தால் ஆன்ம விருத்தி அடையலாம். வேஷதாரிகளே தெய்வ பக்தியை லட்சியமாகச் செய்து கொள்வர்.

கதே

144.பரிபூரண நிலையில் ஆன்மாவுக்கு ஏற்படும் சொற்ப அவாவை வைத்தே கடவுள் இருப்பதைக் கணித சாஸ்திரமுறையைக் காட்டிலும் அதிகமாய் நிரூபித்துக் காட்டலாம்.

ஹெம்ஸ்டர் ஹூஸ்

145.'அவன்' என்னும் மொழி அவனைக் குறைத்து விடுகிறது.

டால்ஸ்டாய்

146.ஆண்டவன் இலன் எனினும் அறநெறி நிற்போம் என்பவரே அவன் அடியராவர்.

ராபர்ட் பிரௌனிங்

147.ஒருவன் கடவுள் பக்கம் இருப்பின், அவன் ஒருவனே பெரும்பான்மைக் கட்சி ஆகிவிடுவான்.

வெண்டெல் பிலிப்ஸ்

148.ஆன்மாவுக்கு வெளியே கடவுளைத் தேடினால் கடவுளின் விக்கிரகங்களை மட்டுமே காண்பாய். ஆன்மாவை ஆராய்ந்தால் அங்குள்ள உணர்ச்சிகளும் எண்ணங்களும் ஆண்டவனை அறிவிக்கும்.

149.அயலார்க்கு நன்மை செய்யும்பொழுதுதான் ஆண்டவனைத் துதிப்பதாகக் கூறமுடியும்.

-ஸ்வனரோலா

ஸாக்ரடீஸ்


150.தேவைகள் குறையும் அளவுக்கே தெய்வத்தன்மை அடைவோம்.

ஸாக்ரடீஸ்

151.பரிபூரணமே தேவரை அளக்கும் கோல். பரிபூரணத்தில் பற்றே மனிதரை அளக்கும் கோல்.

கதே

152.ஆன்ம எளிமை கண்டே ஆண்டவன் மகிழ்கிறான். எளிமைக் குணத்தைக் கண்டுதான் மகிழ்கிறான்; இறக்கும் குணத்தைக் கண்டன்று.

கதே

153. குழந்தை இயல்புடையவர்-அதாவது எளிதில் மகிழ்பவர், அன்பு செய்பவர், பிறர்க்கும் மகிழ்வூட்டுபவர். இவர்க்கே கடவுள் ராஜ்யம்.

ஆர். எல். ஸ்டீவன்ஸன்

154.கடவுள் பார்ப்பதைப் போல் எண்ணி மனிதரோடு வாழ்க; மனிதர் கேட்பதைப் போல் எண்ணிக் கடவுளோடு பேசுக.

ஸெனீகா

155.மனிதர் அறிய விரும்பாதது எதையும் கடவுளிடம் கேட்காதே. கடவுள் அறிய நீ விரும்பாதது எதையும் மனிதனிடம் கேட்காதே.

ஸெனீகா

156.வட்டத்தில் எந்தவிடத்திருந்தும் மத்திக்குச் செல்ல வழியுண்டு. எவ்வளவு பெருந் தவறானாலும் இறைவனிடம் செல்ல வழியுண்டு.

ரூக்கர்ட்

பாஸ்கல்

157.கடவுளை அறிதல், கடவுளிடம் அன்பு செலுத்துதல் இரண்டிற்கும் இடையிலுள்ள தூரம் எவராலும் இவ்வளவு என்று சொல்ல முடியாது.

-பாஸ்கல்

158.கடவுளை அறிந்துவிடுவோமென்று எதிர்பார்க்க இயலாது. ஆனால், கடவுளை அறியாமல் வேறு எதையும் அறியவும் எதிர்பார்க்க இயலாது.

-பூடின்

159.மனிதர்க்குப் பேருணர்ச்சி தந்து போருக்கு நடத்திச் செல்லும் மூன்று மொழிகள் கடவுள், நித்யத்வம், கடமை என்பன. முதல் விஷயம் அறிவுக்கு அப்பாற்பட்டது; இரண்டாவது நம்ப முடியாதது; மூன்றாவது ஒரு காலும் அலட்சியம் செய்ய முடியாதது.

மையர்ஸ்

160.ஏதேனும் பழுதிலாத ஒன்றை இயற்ற முயல்வதைப்போல் ஆன்மாவைப் புனிதமாக்குவதும் சமயவாழ்வு வாழச் செய்வதுமானது வேறெதுவும் இல்லை. ஏனெனில் பரிபூரணமே கடவுள். அதனால் பூரணத்தை நாட முயல்பவன் கடவுள் தன்மையை நாடுபவனாவான்.

மைக்கேல் எஞ்சலோ

161.கடவுளின் நீதி மெதுவாகத்தான் நகரும். ஆனால் ஒருபொழுதும் வழியில் தங்குவதில்லை. தவறு செய்தவனைச் சேர்ந்தேவிடும்.

ராபர்ட் பிரௌணிங்

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்_கனிகள்/கடவுள்&oldid=998425" இலிருந்து மீள்விக்கப்பட்டது