உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக் கனிகள்/நாவடக்கம்

விக்கிமூலம் இலிருந்து

34. நாவடக்கம்

561. பேசாத மொழி உறையிலுள்ள வாள். பேசிவிட்டால் வாளைப் பிறன் கையில் கொடுத்து விடுகிறாய்.

குவார்ல்ஸ்

562.வாள் தரும் புண்ணினும் நா தரும் புண்ணே கொடியது. வாள் தரும் புண் உடலை மட்டுமே பாதிக்கும், நா தரும் புண்ணோ ஆன்மாவையும் பாதித்துவிடும்.

பித்தகோரஸ்

563.இதயமே தீயனவற்றின் உற்பத்திசாலை, தீயனவற்றை விற்குமிடம் நா.

லெய்ட்டன்

564. உபயோகிக்க உபயோகிக்க அதிகக் கூர்மை பெறும் ஆயுதம் தீய நா ஒன்றே.

இர்விங்

565.அறிவு பெற விரும்பினால் நாவை அடக்கும் அறிவைப் பெறுவாய்.

லவாட்டர்

566.நாவைப் பரிசோதித்து வைத்தியர் உடல் நோயை அறிவர். அறிஞர் ஆன்ம நோயை அறிவர்.

ஜஸ்ட்டின்

567.பிறர் நாவை தாம் அடக்கமுடியாது; ஆனால் பிறர் மொழிகளை நாம் அலட்சியம் செய்யமுடியும்.

கேட்டோ



568.மூடனுக்கு “மௌனமாயிரு” என்பதைவிட உயர்ந்த உபதேசம் கிடையாது. அதன் நன்மையை அறிந்து விட்டால் அவன் மூடனாயிரான்.

ஸாதி

569.மௌனம் என்பது மூடர்கள் பெற வேண்டிய அறிவு. அறிஞர் குணங்களில் ஒன்று.

பாய்லோ

570.சகல குணங்களிலும் மௌனம் சிறந்ததாகும். அதன் மூலம் பிறர் குறைகளை அறியவும் நம் குறைகளை மறைக்கவும் முடியும்.

ஜீனோ

571.ஒருவனைச் சந்தித்தால் அவன் வாய் திறவாதிருந்தால் அவனை அறிவுமிகுந்தவன் என்று எண்ணுவேன். இரண்டாம் முறையும் பேசாதிருந்தால் ஜாக்கிரதை உடையவன் என்று கருதுவேன். ஆனால் மூன்றாம் முறையும் மௌனம் சாதித்தால் அறிவு சூன்யம் என்று சந்தேகிப்பேன்.

கோல்ட்டன்

572.இரண்டு காதிருந்தும் ஒரு நாவே இருப்பதால் பேசுவதைவிடக் கேட்பதே அதிகமாயிருக்க வேண்டும்.

பழமொழி

573. இன்சொல் கூறுதல் எளிதே. ஆனால் தீயசொல் கூறாதிருக்க மௌனம் ஒன்றே தேவை. அதற்கு விலையொன்றும் தரவேண்டியதில்லை.

டிலட்ஸன்

574அறிவு,மௌனம் கற்பிக்கும்; அன்பு பேசக் கற்பிக்கும்.

ரிக்டர்

575.முட்டாளின் உயர்ந்த ஞானம் மௌனம். அறிஞனின் பெரிய சோதனை பேச்சு.

குவார்ல்ஸ்

576.அறிவுள்ளவனே நாவைக் காக்கும் ஆற்றலுள்ளவன்.

லுக்காஸ்

577.மொழியாத மொழி ஒருநாளும் தீங்கு செய்வதில்லை.

காஸத்

578.காலமறிந்து மௌனமாயிருத்தல் கடினமான பாடமே. ஆனால் வாழ்வில் அறியவேண்டிய பாடங்களில் அதுவும் ஒன்றாகும்.

செஸ்ட்டர்பீல்டு

579.மௌனமாய் இருக்க முடியாதவன் பேசுவது எப்படி என்பதை அறியான். செய்வது எப்படி என்பதையோ, அதை அறியவே மாட்டான்.

லவாட்டர்

580.அறிஞர் சில மொழிகளில் பல கூறிவிடுவர். மூடர் பலமொழிகளில் சிலவே கூறுவர்.

ரோஷிவக்கல்டு

581.விஷயமில்லாத பொழுது விஷயமில்லை என்பதை வெளிக் காட்டாதவன் பாக்கியவான்.

ஜார்ஜ் எலியட்

582.எறும்பைப்போல் உபதேசிப்பவர் யாருமில்லை; ஆனால் எறும்போ பேசுவதே இல்லை.

பிராங்க்ளின்

583.பயனில் சொல்லுக்குப் பொறுப்பாவதுபோல் பயனில் மௌனத்துக்கும் பொறுப்பாவோம்.

பிராங்க்ளின்

584.நா தான் மனிதனிடமுள்ள நல்ல அம்சம்; கெட்ட அம்சமும் அதுவேதான். அது நம் வசமானால் அதைவிட உயர்ந்த பொருளில்லை. நாம் அதன் வசமானால் அதைவிடத் தீய பொருளில்லை.

அனார்காரிஸ்

585.பேச்சு பெரியதே; ஆனால் மௌனம் அதனினும் பெரியதாகும்.

கார்லைல்