உள்ளடக்கத்துக்குச் செல்

என் தமிழ்ப்பணி/அறா அலியரோ அவருடைக் கேண்மை!

விக்கிமூலம் இலிருந்து

14. அறா அலியரோ அவருடைக்
கேண்மை!

நெய்தல் நிலத்து நல்லோன் ஒருவனைக் கணவனாகப் பெற்றுக் களித்து வாழ்ந்திருந்தாள் ஒரு நங்கை. மனைவிபால் மாறாக் காதல் கொண்டிருந்த அவன் உள்ளத்தில் கடமையுணர்வும் இடம் பெற்றிருந்தது. அதனால் அவளை மணந்து மனையறம் மேற்கொண்ட சின்னாட்களுக்குள்ளாகவே, தங்கள் இல்லற வாழ்க்கைக்கு இனிய துணைபுரிவதாய பொருளீட்டி வரும் பணியில் சென்றது அவன் மனம், அது கிடைக்கும் கடல் கடந்த நாடுகளுக்கும் கலம் ஏறிச் சென்று விட்டான் அவன்.

பொருளின் இன்றியமையாமையை உணர்ந்த அவளும் அவன் போக்கிற்கு உடன் பட்டாள்; அவன் போய் விட்டான். வேண்டும் பொருளீட்டிக் கொண்டு விரைவில். வந்து விடுவேன் என்று கூறிச் சென்றவன் நாட்கள் பல ஆகியும் வந்திலன்: கடல் கடந்த நாடுகளுக்குச் சென்றவர் மீள்வதற்குரிய கீழ்க் காற்று வீசும் காலமும் தொடங்கி விட்டது. ஆயினும் அவன் வந்திலன்; காதலனைப் பிரிந்து தனித்துக் கிடந்து துயருறுவாள், அவன் வாராக் காலம் வளரவளர மேலும் மேலும் துயர் உற்றாள். அவள் உடல் நலனும் குன்றிற்று.

நாள் முழுதும், வீட்டினுள் அடைபட்டுக் கிடந்து வருந்துவாள், மனத்துயரம், மனைப்புறம் சென்று உலாவி, மாலைக் காட்சிகளைக் காணின் சிறிது மறையும் என்று கருதிய தோழி ஒரு நாள் மாலை, அவளைக் 'கடல்வரை சென்று வரலாம் வா' என அழைத்தாள்; தலைவன் ஏறிச் சென்ற கலம், கொண்டல் கொணர வந்து கரை சேர்கிறதா எனக் கண்டு வரலாம் என்ற கருத்தால் அவளும் அதற்கு இசைந்தாள். இருவரும் கடற்கரை நோக்கி நடந்தனர்.

இடை வழியில் ஒரு காட்சி : வயலில் வெண்ணெல் கதிர் முற்றித் தலை சாய்ந்து கிடந்தது. நாரை ஒன்று வரப்பில் அமர்ந்து இரை தேர்ந்து உண்டு உவந்திருந்தது. சிறிது நாழிகைக்கெல்லாம் வயலுக்குரியார் கூட்டமாய் வந்து வயலில் இறங்கிக் கதிர்களை அறுக்கத் தலைப்பட்டனர்; அவர் செயல் கண்ட நாரை, ஈங்கிருந்து இரை தேர்தல் இனி இயலாதே என ஏங்கிச் செயலற்று சிந்தை நொந்தது. நாரை அவ்வாறு உளம் நொந்து கொண்டிருக்கும் போதே களம்பாடி வாழ்வார். அவண் வந்து சேர்ந்தனர். வந்தவர் கழனிக்குரியாரை வாழ்த்த, தம் தண்ணுமைகளை முழக்கினர். அவ்வொலி நெஞ்சு வருந்தி நிற்கும் நாரையைத் துணுக்குறச் செய்து விட்டது. உடனே அது அது காறும் தனக்கு உணவூட்டி வாழ்வளித்து வந்த வயலை மறந்து விட்டு தான் இருந்து வாழும் பனை மரத்து மடலுக்குப் பறந்து சென்றது.

இக்காட்சியைக் கண்டவாறே இருவரும் கடற்கரையை அடைந்தனர்; ஆங்கு வாணிபம் கருதி வெளிநாடு சென்றிருந்த கலங்கள் வரிசை வரிசையாக வந்து கரை சேரும் காட்சியைக் கண்டனர்: அவ்வாறு கரையேறும் கலங்களுள் : தன் காதலனுக்குரிய கலம் இல்லாமையை அப்பெண் கண்டு கொண்டாள். அவள் கலக்கம் மிகுந்தது. கண்கள் நீர் சொரிந்தன. கவலையை மாற்றிக் களிப்பூட்ட உதவும் எனும் கருத்தோடு காண வந்த கடற்கரைக் காட்சிகள் அவள் கலக்கத்தை மேலும் மிகுவிப்பனவாகவே தோன்றின. கான்ற் சோலைக்கு அணித்தாக ஓடிய கழியைப் பார்த்தாள்; ஆங்கு, மலர்ந்து மணம் வீசிய மலர்கள், மாலை வரவால், வாய் குவிந்து வாடுவதைக் கண்டாள்.

அது காதலன் வாராமையால் தன் உள்ளம் உவகை இழந்து, உணர்விழந்து சோர்ந்து போவதை நினைவூட்ட நின்று வருந்தினாள். கடலை நோக்கினாள். அது 'ஓ' எனப் பேரிரைச்சல் எழுப்பி, அலை வீசி ஆர்ப்பரிப்பதைக் கண்ணுற்றாள். காதலன் வாராமையால் துயர் உற்றுக் துன்ப அலைகள் தொடர்ந்து வீசும் தன் உள்ளத்தையே அக்கடலில் கண்டாள்; அவள் கண்கள் குளமாயின; கடல் நீரிலும், கழி நீரிலும் மீன் கவர்ந்துண்டு உயிர் வாழும் பறவை கூட்டம், வாழிடம் மீள்வதற்குரிய மாலைக் காலம் வந்ததும், தம் தொழிலைக் கைவிட்டுக் கரைக்கண் வளர்ந்திருக்கும். புன்னை மரங்களில் உள்ள தம் கூடுகளை அடைந்து அடங்குவதைக் கண்டாள்.

இப்பறவைகளுக்கு உள்ள உணர்வுதானும் நம் கணவர்க்கு இல்லையே; கடமை முடிந்ததும் விரைந்து வீடடடைய வேண்டும் என்ற உணர்வு அவர்க்கு உண்டாகவில்லையே என எண்ணினாள். உள்ளம் நொந்தாள், உள்ளம் நொந்திருப்பாளை ஆங்கு ஒலித்த வண்டோசை கவர்ந்தது.

வண்டுகள் சில கரைக்கண் காணப்படும். மரஞ்செடிகளின் மலர்களுக்கும், கழிப் பூக்களுக்குமாக மாறி மாறித் திரிவதைக் கண்டாள். உயிர்கள் எல்லாம் ஒருங்கே அடங்கும் அந்திக் காலத்தில் அவ்வண்டுகள் மட்டும் அலைந்து திரியும் அக்காட்சி, பொருள் தேடிப் போனவர் எல்லாம் மீண்டு வந்து மனை புகவும், தன் காதலன் மட்டும் மீளாது பொருள் மேல் சென்ற வேட்கையால் போன நாட்டில் அலைந்து திரியும் காட்சியை அவள் அகக்கண் முன் கொணர்ந்து காட்டக் கலங்கிக் கண்ணிர் சொரிந்தாள். 

அப்பெண்ணின் அகத்தெழு துயரைத் தோழி அறிந்து கொண்டாள். இவளை இவ்வாறு வருந்த விடுத்துச் சென்று இன்னமும் வந்திலனே. அவன் அன்பு இருந்தவாறு என்னே! என் எண்ணி வருந்தினாள். வருந்தியதோடு நில்லாது. இவளை இவ்வாறு துயர்க்கடலில் ஆழ்த்தி வருத்துவதினும், அவனோடு கொண்ட நட்புத் தொடர்பு அறுந்து போகினும் நன்றாம் என நாக் கூசாது கூறியும் விட்டாள்.

தோழி கூறிய கடுசொல், அப்பெண்ணின் செவியில் சென்று தாக்கிற்று; அவள் நிலை கலங்கிப் போனாள்; நட்பின் திறம் அறிந்தவள் அப்பெண்; தனக்கு உணவளித்து உயிர் ஓம்பிய நீர்நிலை நீர் வற்றிப் போனதும் அந்நீர் நில்லயை மறந்தோடும் மாண்பிலா உயிர் போன்றதன்று அவள் உயிர் நிலை; அந்நீர் நிலை நீர் அற்றுத் தன் உயிர் போக்கும் நிலை உற்றபோதும், அந்நீர் நிலையை விட்டு நீங்காது வாழும் ஆம்பற் கொடி போன்றது அவள் உயிர்.

கணவன்பால் அத்தகைய உயரிய நட்பே கொண்டிருந்தாளாதலின், தோழி கூறியது கேட்டு நெஞ்சு நடுங்கினாள்: வரும்போது வழியில் கண்ட வயற் காட்சியே, தோழியை அம்முடிவிற்குக் கொண்டு விட்டது போலும்: நெல்லரிவார் வருகை கண்டு அஞ்சியும், களம்பாடுவார் முழக்கிய தண்ணுமை ஒலி கேட்டு வெருவியும், தனக்கு வாழ்நாள் முழுதும் உணவளித்து உயிர் ஓம்பும் வயலை விடுத்து ஓடிய நாரை போல், பொருள் மேற்சென்ற வேட்கை மிகுதியால் கணவன் தன்னைத் தனியே விடுத்துப் பிரிந்து போனமையாலும், அவன் போயிருக்கும் பொழுது,மாலையும் மனத்தை மருட்டும் நிகழ்ச்சிகளும் மேலும் துயர் செய்வதாலும், தான் அவன் அன்பைத் துறந்துவிட வேண்டும் எனத் துணிந்து விட்டாள் போலும். அது உயர்ந்த நட்புடையார்க்கு ஒழுக்கம் ஆகாதே; தோழி இதை அறியாதவள் அல்லள், அறிவே உருவாய் அமைந்த அவளை அந்த முடிவிற்குக் கொண்டு விட்டது தன் கவலையும் கண்ணிருமேயாம் என உணர்ந்தாள்.

உடனே தோழியை நோக்கி, “தோழி! மரவினம், மாவினம் முதலாம் அனைத்துயிர்களும், மாலை வந்துற்றதும் செயலற்று அடங்கியுள்ளன. ஆனால் அவற்றை அந்நிலையில் இருக்க விட்டிலது இவ்வாடை; இதோ பார்; இதுகாரும் அசைவற்று அடங்கியிருந்த இத் தாழையை இப்போது வீசும் வாண்டக்காற்று, பேயாட்டம் ஆட்டிஅலைக் - கழிப்பதைக் காண்; தாழையைத் தளர வைக்கும் அதே வாடைதான், துயர் அடங்கியிருந்த என் நெஞ்சையும் துன்பத்திற்குள்ளாக்குகிறது. வாடையால் வருந்தியே என் நெஞ்சம் செயலிழந்து துயர் உறுகிறது. நம்மைத் தனியே விடுத்துப் பிரிந்து போய் நம்மை வருத்தும் அவர், விரைவில் மீண்டு வரும் அருள் உள்ளம் அற்று ஆங்கே வாழ்வதால் நம்மை மேலும் வருத்துகிறார் என்பது உண்மையே என்றாலும், இப்போது நம்மைப் பெரிதும் வருத்துவது இவ்வாடையே ஆகும்.

ஆகவே அவர் நட்பு அழிந்து போக ஆசைப்படுவது அறிவுடைமையாகாது? அவர் துன்பமே தரினும், அவரொடு கொண்ட நட்பு அழிவுறாது என்றென்றும் நிலைபெற்று வாழ்வதையே விரும்புகிறேன். நான்; அவரை அடைந்து அவர் மார்பிற் கிடந்து இன்புறும் இனிய வாழ்க்கையை விரும்பி அவர்பால் சென்று, அவரையே சுற்றிச் சுற்றித் திரியும் நம் நெஞ்சு அவர் நட்பை இழந்து நம்பால் வராதிருப்பதையே விரும்புகிறேன், நான். தோழி! அவரை மணந்து - அவரால் மாண்புற்ற நாம் இப்போது அவர் கடமையுணர்வால் காதல் உணர்வு அற்றுக் கிடக்கிறார் என்பதால் அவரோடு கொண்ட நட்புறவை அறுத்துக் கொள்வதோ, அவரை அறவே மறந்து விடுவதோ அழகல்லவே; அது வழியில் கண்ட நாரை போலும், நன்னெறி அறியா நயமிலிகள் செய்யும் செயல் அல்லவோ? ஆகவே, தோழி! அவ்வெண்ணத்தை இப்போதே மறந்து விடுவாயாக” என அவளுக்கு அறிவுரை புகட்டினாள்.

கொடுமையே செய்யினும் கொண்டானை மறந்து விடுதல் குடிப்பிறந்தார்க்குக் கூடாது எனக் கருதும் அப் பெண்ணின் பேருள்ளம் வாழ்க.

“கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப
நீல நிறப் பெருங்கடல் பாடு எழுந்து ஒலிப்ப,
மீன்ஆர் குருகின் மென்பறைத் தொழுதி
குவை இரும் புன்னைக் குடம்பை சேர,

5. அசைவண்டு ஆர்க்கும் அல்குறு காலைத்
தாழை தளரத் தூக்கி மாலை
அழிதக வந்த கொண்டலொடு கழிபடர்க்
காமர் நெஞ்சம் கையறுபு இனையத்
துயரம் செய்து நம் அருளாராயினும்

10. ஆறா அலியரோ அவருடைக் கேண்மை;
அளி இன்மையின் அவனுறை முன்னஇ
வாரற்க தில்ல தோழி! கழனி
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை

15. செறிமடை வயிரிற் பிளிற்றிப் பெண்னை
அகமடல் சேக்கும் துறைவன்
இன்துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே”

தினை : நெய்தல்

துறை : தலைமகன் பொருள்வயின் பிரிந்த வழி,
தலைவியின் துயர்கண்டு வருந்திய தோழிக்குக் தலைவி
சொல்லியது.



புலவர் : குன்றியனார்.

1. மாலை: வரிசை வரிசையாக;

2. பாடு : அலையோசை

3. ஆர் : உண்ணும்; பறை; இறகினை உடைய:
தொழுதி-கூட்டம்;

4. குவை; பருத்த; இரும்; பெரிய;

5. அல்குறு காலை : உயிர்கள் அடங்கும் அந்திக்
காலம்;

6. தூங்கி; அசைந்து;

7. அழிதக; வருந்த; கொண்டல்; கீழ்க்காற்று; கழி
படர்-மிக்க துன்பம்

8. கையநுபு; செயலற்று; இணைய; வருந்த;

10. அறா அலியர்: அழியாதிருக்குமாக

11. அளி; அருள்; அவண் உரை; ஆங்கு வாழ்தலை;
முனை இ-வெறுத்து;

12. தில்ல;விருப்பத்தை புலப்படுத்தும் இடைக்சொல்;

14. வெரீஇய-அஞ்சிய;

15. செறி-திரண்ட; மடை; மூட்டு வாயினை உடைய:
வயிரின்-கொம்புவாத்தியம் போல்; பெண்ணை
பனைமரம்:

சேக்கும் : தங்கும்.