ஊசிகள்/பக்கம் 15-24
வேகம்
❖
எங்கள்.ஊர் எம்.எல்.ஏ.
ஏழுமாதத்தில்
எட்டுத் தடவை
கட்சி மாறினார்
மின்னல் வேகம்
என்ன வேகம்?
இன்னும் எழுபது
கட்சி இருந்தால்
இன்னும் வேகம்
காட்டி இருப்பார்......
என்ன தேசம்?
இந்தத் தேசம்?
தமிழ்ப் பற்று
❖
தேவ பாஷையில்
தேர்ச்சி மிக்க
சாஸ்திரி ஒருவர்
சபையில் சொன்னார்;
“ஜாதி வேண்டும்”
“ஜாதி வேண்டும்:”
உடனே சீறி
ஒருதமிழ் மறவர்
ஓங்கிக்கத்தினார்;
"ஓய் ஓய், இனிநீர்
ஜாதி வேண்டும்
என்றால் பொறுமையாய்
இருக்க முடியாது என்னால்
சரியாய்ச்
சாதி வேண்டும்
என்றே சாற்றும். ”
சுரண்டலாமா?
❖
விழித்துப் பார்த்தேன்
விரலை மெதுவாய்க்
கடித்தொரு பாச்சை
கால்வாங்கியது.
பதைத்துக் கேட்டேன்:
'பாவப் பூச்சியே!
கட்டை விரல் ஏன்
தட்டுப்படாமல்
போனதுன் கண்ணில்?
மெலிந்திருக்கின்ற
சுண்டு விரலைச்
சுரண்டலாமா?
சுரண்ட லாமா?
சுரண்ட லாமா?’’
வறுமையே
வெளியேறு
எட்டு மாதமாய்
எங்கள்தலைவர்
தெருவில் நின்று
செழிக்கச் செய்தார்
முழக்கம்....
வறுமை
வெளியேறிற்றா
விரைவாய்...... ?
நேற்று
செட்டியார் வீட்டுத்
திருமணப் பந்தியில்
எதுவும் பேசாது
எங்கள்தலைவர்
எட்டி உதைத்தார்....
வறுமை,
வேக வேகமாய்
வெளியே றிற்று -
பரட்டைத்தலையும்
எலும்பும் தோலும்
கிழிந்த கந்தையுமாக...... !
மேயர் மகன்
தோட்டி மகனுக்குக்
கூறியது
குப்பாகுப்பா!
உன்னைப் பெற்ற தந்தைக்கு
உன்னைத்தானே
அடிக்கத் தெரியும்
என்னைப் பெற்ற தந்தைக்கு
இந்த ஊரையே
அடிக்கத் தெரியும்
இப்போதேனும்
ஒப்புக் கொள்ளேன்
என்றன்தந்தை
தானே பெரியவர்....
வணக்கத்திற்குரியவர்....
காதலோ காதல்
❖
'காதல் என்ன
கத்தரிக் காயா'
என்ற தொடர்கதை
'இரவில்' எழுதிய
வாணி மணாளன்
பகலில்
வாரச்சந்தையில்
கிலோ விலை ரூபாய்
இரண்டெனக் கேட்டதும்
அயர்ந்தார்; கண்களை
அகலத் திறந்தார்,,...
காய்கறிக்காரன்
கடுப்பில் கேட்டான்
'அத்தனை மலிவாய்
அள்ளிக் கொள்ள
கத்தரிக்காய் என்ன
காதலா...?'
பழக்கம் பொல்லாதது
ஆராவமுதன்
அமைச்சர்பதவியை
இழந்து வருந்தி
இருந்த ஒர் இரவில்
அருகில்துங்கிய
ஆசைமனைவியைச்
சும்மா சும்மா
சுரண்டலானார்:
அம்மாகேட்டார் ஆத்திரத்தில்:
”ஏன்தான் உங்களுக்கு
இன்னும் அந்தப்
பொல்லாப்பழக்கம்
போகவில்லையோ?”
வயிற்றுப் பா(ட்)டு
❖
என்னை யாரோ
என்று நினைத்துப்
புலவன் ஒருவன்
புகழத் தொடங்கினான்:
'நீண்ட கண்கள்
கூரிய நாசி
அகன்ற நெற்றி
அழகிய பற்கள்
வயிரத்தோள்கள்
மலைபோல் மார்பு,
தொடரவிடாமல்
இடையில் பாய்ந்தேன்:
'ஒகோஉனக்கு
ஒட்டிய வயிறு
போலும்...'
ப(பா)ட்டி மன்றம்
❖
பாட்டி செத்த பத்தாம்வினாடி
பெரிய குழப்பம் -
பினத்தை எரிப்பதா புதைப்பதா என்று
உள்ளூர்ப் புலவர் ஒடி வந்தார்
பட்டி மன்றம் வைத்துப்
பார்த்தால் என்ன என்று
ஆனை மாதிரி
❖
அப்புசாமியின்
அப்பா
ஆனைமாதிரி!
இருந்த போது
எம்.பி. பதவி...
இறந்த போது
சிவலோக பதவி...
அப்பு சாமியின்
அப்பா
ஆனைமாதிரி!