ஊசிகள்/பக்கம் 45-54
நாங்கள் நினைத்தால்...?
❖
நாங்கள் நினைத்தால்
நாலே நாளில்
பக்கத்தில் உள்ள
பட்டிகட் கெல்லாம்
போக்கு வரத்துப்
போய்வர நல்ல
பாதை போடுவோம்......
நாங்கள் நினைத்தால்
பாதையில் போய்வரும்
போக்குவரத்தைப்
பொசுக்கிப் போடுவோம்...
நாங்கள் மாணவர்கள்!
சரண்
❖
ம.பி. முதல்வர்
மகிழ்ச்சி அடைகிறார்......
காட்டில் மலையில்
கண்படாதிருந்த
இரவுக் கொள்ளையர்
இதயம் வெளுத்துச்
சரணடைந்தார்களாம்
சபதம் செய்தார்களாம்
ம.பி. முதல்வர் -
மகிழ்ச்சி அடைகிறார்......
அது சரி,
நாட்டில் தெருவில்
நடமாடு கின்ற
பாக்கியுள்ள
பகற்கொள்ளையர்கள்
என்றைக்குச்சரண்
அடைய எண்ணமாம்!
'ம.பி. முதல்வர்
மகிழ்ச்சி அடைகிறார்.
மக்கள் எப்போது
மகிழ்ச்சி அடைவதாம்?
மாயம்
❖
மண்ணைக் கொடுத்தால்
சர்க்கரையாக
மாற்றுவானாம் ஒரு
மாயக்காரன்......
இதனைப் போய்ச்சிலர்
பெரிதாய்ப்புகழ்கிறார்
நாங்கள்
ஆட்டக்காரரை
அனுப்பி வைத்தால்
கடத்தல்காரராய்
மாற்றி அனுப்புவாய்-
அடடாஉன்றன்
மாயமே மாயம்
மலாய் பூமியே!
எதிரொளி
❖
பெரிய நாட்டின்
பிரதமர் பொறுப்புடன்
மந்திரி மார்கள்
மத்தியில் சொன்னார்:
"விருந்தைக் குறைப்பீர்!
வெளிநாட்டுக்குப்
பறந்து போகும்
பழக்கம் குறைப்பீர்
தொலைப்பேசியிலே
சலசலவென்றே
பேசித் தொலைப்பதைப்
பெரிதும் குறைப்பீர்
குளுகுளு காரில்
கூட்டங்களுக்குச்
செல்வதைக் குறைப்பீர்
செலவைக் குறைப்பீர்......!"
எங்கோஇருந்தோர்
எதிரொளி கேட்டது:“பிரியம் மிகுந்த
பிரதமரே
உமது
மந்திரிசபையின்
எண்ணிக்கையை நீர்
கொஞ்சம் குறைப்பீர்
கொஞ்சம்......”
நவயுகக் காதல்
❖
உனக்கும் எனக்கும்
ஒரேஊர்
வாசுதேவ நல்லூர்......
நீயும் நானும்
ஒரே மதம்......
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்புங் கூட......
உன்றன்தந்தையும்
என்றன்தந்தையும்
சொந்தக்காரர்கள்
மைத்துனன்மார்கள்
எனவே
செம்புலப்பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே
துண்டு விழுந்தது
❖
அந்தி மாலையில்
அந்த மேடையில்......
'இங்கே பலப்பல
இரங்கற் கூட்டம்
நடப்பதுண்டு.”
நானும் தலைமை
வகிப்பதுண்டு.,
உங்கள் முயற்சியை
வாழ்த்துவ துண்டு.,
மக்களும் கேட்டு
மகிழ்வ துண்டு.........
தலைவர் வாயில்
அடிக்கடி துண்டு
விழக்காரணம்-அவர்
கழுத்தில் துண்டு
விழாக் காரணமென
விரைவில் புரிந்தது
அவசரக்காரன்
❖
மூன்று வருடம் முன்னால்...
அருப்புக் கோட்டை
அழகர்சாமி
காசநோயின்
காரணமாக
இருமி இருமி
எலும்பாய் மாறி
ஆஸ்டின்பட்டி
அரசினர்
மருத்துவ மனைக்கு
மனுப்போட்டானாம் -
வந்து தங்கி
வைத்தியம் பார்க்க.
போன செவ்வாயோ
புதனோ
அவனுக்கு
அனுமதி வழங்கி
அஞ்சல் போனதாம்!
அதற்குள் என்ன அவசரம்?
போன மார்கழியிலோ
தையிலோ, பொல்லாக்
காலன் போட்ட
கடிதம் கண்டதும்
போய்ச்சேர்ந்தானாம்
புத்தியில்லாமல்
அழகர்சாமி
அவசரக்காரன்!
சிந்தனை ஒன்றுடையார்
❖
மராட்டியத்தில்
சிவாஜி சேனை
வங்காளத்தில்
துர்க்காசேனை
அரியானாவில்
ஆசாத் சேனை
கர்நாடகத்தில்
திப்பு சேனை
கேரள சேனை
ஆந்திரசேனை
அம்மாதாயே,
உன்றன்புதல்வர்
சோடை போகவில்லை
உன்னைப் போலவே
சிந்தனை ஒன்றுடையார்!