ஊசிகள்/பக்கம் 66-74
மறுபக்கம்
❖
மகாத்மாவின்
சிலையைச்செய்ததில்
மாபெரும் மோசடி யாமே!
ஆத்திரம் வேண்டாம்
அன்பரீர்......
மோசடி செய்ததற் கிடையில்
ஏதோ
சிலையும் செய்ததாய்
நினைத்துக் கொண்டால்
நெஞ்சம் மகிழ்ந்து போவீர்!
அரம் போலும்...
❖
எங்கள்
தேசிய மயம்
அரம் போன்றது......
'இதுபோல் பளபளப்பு
இல்லை’
என்று மக்கள்
ஏத்திப் புகழத்
தனியார்துறையைச்
சரியாய்த் தினமும்
கூர்மைப்படுத்திக்
கொடுக்கும்...
67
கொ(டு)த்து வைத்தவர்
என்னருந்தமிழ்தாய்
ஈன்ற மக்களே!
உங்களைப் போல
உலகில் யாரே
கொடுத்துவைத்தவர்......!
சினிமா.அரங்கில்
அரசியல் கூத்து;
அரசியல் மேடையில்
சினிமாச்சண்டை.
ஒரேஒரு கல்லில்
இரண்டு மாங்காய்......
உங்களைப் போல
உலகில் யாரே
கொடுத்து வைத்தவர்
கல்வி சிறந்த தமிழ் நாடு
❖
பி.யு.சி.யா?
ஒரு நூறு போதும்.
பி.எஸ்.சி.பி.எட்
இருநூறு ஆகும்.
எம்.எஸ்.சி. ஆயிரம்
எம்.பி.பி.எஸ். ஏழு ஆயிரம்.
இங்கே
சேர வாரும்
செகத் தீரே!
தங்க முதலாளி
❖
ஒருநாள் ஒருபொழு தேனும்
நான்உண்ணாமல
தான் உண்ண மாட்டார்......
கொக்காகட்டும்
கோழியாகட்டும்
எதுவாகட்டும்
எனக்கே முதலில்
மூக்குப் பிடிக்கத்
தின்று முடித்து நான்
மூச்சு விடுவதைப்
பார்த்த பிறகுதான்
இலையில் கையை
எடுத்து வைப்பார்......
உயிரையே என்னிடம்
ஒளித்து வைத்துள்ளார்......
எங்க முதலாளி தங்க முதலாளி
கேப்பையில் நெய்வழியும் என்றால்...
❖
கெட்டேன்
பெரிய மனிதனின்
பேச்சைக் கேட்டுக்
கெட்டேன் கெட்டேன்!
இப்போது
சீனிக்கொன்று
சீமை -
எண்ணெய்க்கொன்று
மைதா
மாவுக்கொன்று
எருமைப்
பாலுக்கொன்று
புழுத்த
அரிசிக்கொன்று
என்று
ஐந்துக்குமேலேவேண்டுமே!
இரண்டுக்கு மேலே இல்லையே!
கத்தி... வந்தது
டும்.. டும்.. டும்..
ஒரு நாள் காலையில்
உள்ளம் அதிர -
ஒரு குரல்:
சிவனார் ஏறும்
ரிஷப வாகன
வெள்ளித் தகடு களவு
ஒரு நாள் மாலையில்
ஒலிபெருக்கியில்
காது கிழிய
ஒரு குரல்
தர்ம கர்த்தா
தங்கமணிக்கு
வெள்ளிவீரவாள் பரிசு
கண்ணன் காட்டிய வழி
❖
பலரிடம் திருடி
ஒருத்திக் குதவி
அவன்
அனாதை ரட்சகன் ஆனான்
ஊரைச் சுரண்டி
வழிவிடு முருகன்
திருக்கோயிலுக்குக்
குடமுழுக்காட்டி
இவன்
பெரியதருமிஷ்டன்ஆனான்
கந்து வட்டிக்கந்தசாமி
கண்ணன்காட்டிய வழியில்!
கடமையைச் செய்...
❖
பத்து மணிக்குச்
சரியாய் நுழைந்தேன்
கூட இருப்போரிடத்தில்
கொஞ்சம்
குசல விசாரணை
தலை வலித்தது.
தேநீர்குடிக்க
நாயர்கடைக்கு நடந்தேன்
ஊரில்இருந்து
யாரோ வந்தார்
ஒருமணி நேரம்
உரையாடல்
இடையில்
உணவை மறக்கலாமா?
உண்டு தீர்த்த
களைப்புத் தீர
ஒரு
கன்னித்துக்கம்
முகத்தை அலம்பிச்
சிற்றுண்டி நிலையம்
சென்று திரும்பினேன்
வேகமாய்
விகடனும் குமுதமும்
படித்து முடித்தேன்
மெல்லக்
காகிதக்கட்டை எடுத்துத்
தூசியைத் தட்டித்துடைத்துக்
கடமையைச் செய்யத்
தொடங்கும் போது...
கதவை அடைத்தான்
காவற் காரன்
மணி ஐந்தாயிற்றாம்!