அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/உங்கள் சந்ததியார் கொடுப்பார்கள்
(72)
உங்கள் சந்ததியார் கொடுப்பார்கள்
டாக்டர் பெரன் என்பவர் ஹங்கேரியில் பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணர்.
அவர் கேட்கும் தொகையைக் கொடுத்தால்தான், அவர் அறுவை சிகிச்சை செய்வார். அவர் கேட்கும் தொகையோ அதிகம்தான். அவர் வெடுக்கு வெடுக்கென்று பேசக் கூடியவர். உலகில் பெரிய நிபுணர்களுக்கெல்லாம் இந்தக் குணம் இயல்பானது போலும்!
பெரிய ஆலை முதலாளி ஒருவர் டாக்டர் பெரனிடம் சென்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்பினார்.
“ரு 2500 கட்டணம் தர வேண்டும்"என்றார் டாக்டர்."
“அவ்வளவு தொகையா? மிக அதிகமாக இருக்கிறதே!” என்றார் ஆலை முதலாளி தயக்கத்தோடு.
"அப்படியானால், (மற்றொரு டாக்டரின் பெயரைக் குறிப்பிட்டு) அவரிடம் போனால், குறைந்த தொகைக்கு அறுவை சிகிச்சை செய்வார். தவிர, அந்தத் தொகையையும் கூட நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் வராது. ஏனெனில், உங்கள் சந்ததியினர் அதைக் கொடுத்து விடுவார்கள்” என்றார் டாக்டர் பெரன்.