உள்ளடக்கத்துக்குச் செல்

ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்/அறத்துப்பால்

விக்கிமூலம் இலிருந்து
அறத்துப்பால்
இல்லறவியல் - இல்வாழ்க்கை
அறத்தாறும் புறத்தாறும்
"அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்"

(பதவுரை) அறத்தாற்றின் = அறவழியிலே, இல் வாழ்க்கை ஆற்றின் = (ஒருவன்) இல்லறத்தை நடத்துவானேயாயின், புறத்தாற்றில் = அறவழிக்குப் புறவழியான மறவழியில் அதாவது தீயவழியில், போஒய்ப் பெறுவது = சென்று பெறக்கூடிய நன்மை, எவன் = என்ன? (ஒன்றுமில்லை).

(விளக்கவுரை) அற ஆறு - அறத்தாறு; புறஆறு = புறத்தாறு. அறத்துக்குப் புறம் அதாவது புறம்பு மறம் அதாவது தீமை. ஆறு - வழி, நெறி. ‘போய்’ என்பதுதான் 'போஒய்' என்றாயிற்று. எவன், என்ன, என் என்னுஞ் சொற்கள் ஒரே பொருள் உடையவை. எவன் என்பது பழைய வழக்கு.

உலகில் சிலரது குடும்ப வாழ்க்கை செம்மையுற நடத்தலைக் காண்கின்றோம். அந்தக் குடும்பத்தாரிடைக் குறையொன்றுங் கூறவியலாது. கணவன் மனைவி ஒற்றுமை, பெற்றோர் பிள்ளை ஒற்றுமை, விருந்தோம்பல், சுற்றம் தழுவல், பிறர்மனை நயவாமை, கள்-களவு-பொய்சூது முதலியன இன்மை, இன்பத்தில் துள்ளாமை, துன்பத்தில் கலங்காமை முதலிய பண்புகளுடன் வாழ்தல் தான் ‘அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றுதல்’ என்பது. இதற்கு எதிர்மாறான வாழ்க்கை 'புறத்தாற்றில் போகும் இல்வாழ்க்கையாகும். பெரும்பான்மையோர்க்கு அறத்தாற்று இல்வாழ்க்கையில் இன்பமோ, பெருமையோ, விறுவிறுப்போ இருப்பதாகத் தெரியவில்லை; அன்னோர்க்குப் புறத்தாற்று இல்வாழ்க்கையிலேயே பூரிப்புப் பொங்குகிறது: இன்பங் கொழுந்து விடுகிறது; விறுவிறுப்பு முறுக்கேறுகிறது. ஆனால், புறத்தாற்று இல்வாழ்க்கை முதலில் முன்னேற்றமாய்த் தென்படினும் பின்னர்க் கவிழ்த்து விடும்; ஆதலின் அறத்தாறே என்றும் நின்று நிலைத்து நீடிக்கும் என எச்சரிக்கின்றது இந்தக் குறள்.

(மணக்குடவர் உரை) இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்தவல்லவனாயின், புறநெறியாகிய தவத்தில் போய்ப் பெறுவது யாதோ?

(பரிமேலழகர் உரை) ஒருவன் இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவனாயின், அவன் அதற்குப் புறமாகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? புறத்தாறு -- இல்லைவிட்டு வனத்துச் செல்லு நிலை.

(ஆராய்ச்சி விரிவுரை) இந்தக் குறளில் அறத்தாறு புறத்தாறு என இரண்டு நெறிகள் பேசப்பட்டுள்ளன. அறநெறிக்குப் புறநெறி (எதிர்மாறான நெறி) மறநெறி (தீய வழிகள்) என இயற்கையாய்ச் சொல்லமைப்பு - தொடர் அமைப்புகளை ஒட்டி யான் உரை எழுதினேன். ஆனால் பழைய உரையாசிரியர்கள், இங்கே எனக்கு மேல் பெரும் புரட்சிப் பொருள் புகன்றுள்ளனர். அவர்தம் துணிவைப் பாராட்டுகிறேன், புறத்தாறு என்பதற்கு, இல்லற வாழ்க்கைக்குப் புறம்பான துறவற வாழ்க்கை - தவவாழ்க்கை என அவர்கள் பொருள் எழுதியுள்ளனர். நல்லமுறையில் இல்வாழ்க்கை நடத்தினால், துறவறத்திற்குச் சென்றுதான் தீரவேண்டும் என்பது கட்டாயம் இல்லை; துறவறத்திற்குச் சென்று பெறக்கூடிய நன்மை களையெல்லாம் இவ்வில்லறத்திலேயே பெறலாம் என்பது அவர்தம் கருத்து. உண்மைதானே!

உள்ளத்தில் ஒழுங்கு இல்லாமல், முற்றத் துறந்த முனிவரெனச் சொல்லிக்கொண்டு, காட்டில் திரிந்து தான் என்ன பயன்? காற்றை உண்டுதான் என்ன பயன்? கந்தலைக் கட்டி ஓட்டைச் சுமந்து இரந்து உண்டுதான் என்ன பயன்? ஒன்றும் இல்லை. எல்லாம் வெளிப்பகட்டே! ஆனால், பெண்ணுடன் வீட்டிலேயிருந்து சிற்றின்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், உள்ளத்தில் ஒழுங்கு உடையவர்கள் பேரின்பத்தையும் பெறுவார்கள். இதனை முற்றத் துறந்த முனிவரும் நுகர்ந்து கண்டவரும் (அனுபவ சாலியும்) ஆகிய பட்டினத்தாரே பகர்ந்துள்ளார்:

"காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தை சுற்றி
ஓடே எடுத்தென்ன உள்ளன்பு இலாதவர் ஓங்கு

[விண்ணோர்

நாடேய் இடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே"

என்பது பட்டினத்தடிகளின் பாடல், (நாரியர் - பெண்டிர்) பெண்ணுடன் இருப்பவர்கள் வீட்டுலகப் பேரின்பத்தையும் பெறுவார்கள் எனில், இவ்வுலக இன்பங்கள் எல்லாவற்றையுங்கூட எய்த முடியும் என்பதில் எள்ளளவு ஐயமும் இல்லையன்றோ? இன்னும் இப்பாடலுக்கு. வீட்டுலகம் (மோட்சம்) சென்று பெறும் பேரின்பத்தை இவ்வுலகிலேயே இல்லறத்தில் மனைவியுடன் இருந்து வாழ்ந்துகொண்டே பெற்றுவிடலாம் என்றும் பொருள் உரைத்துக் கொள்ளலாம். இந்தப் பாடலுக்கு எடுத்துக் காட்டு வேண்டுமானால் திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறே போதுமே! எனவே, பழைய உரையாசிரியர்கள் கூறியுள்ள இந்தப் புரட்சியான கருத்து நன்றாய்த்தான் உள்ளது. வள்ளுவரே பின்வரப்போகும் ஒரு குறளில் இந்தப் புரட்சியைக் கையாண்டுள்ளார். அந்தப் புரட்சியின் அனல் இங்கேயும் வீச, உரையாசிரியர்கள் இங்கேயே குளிர்காயத் தொடங்கிவிட்டனர். ஆயினும், இந்தப் பொருளுக்கு இந்தக் குறள் அமைப்பு இடம் தரவில்லை என்றே உணர்கிறேன். அறத்தாறு என்று சொல்லி, பின் புறத்தாறு என்றால், அது அறநெறிக்குப் புறம்பான மறநெறிதான். புறவாழ்க்கை என்று சொல்லியிருப்பின், இல்வாழ்க்கைக்குப் புறம்பான துறவு வாழ்க்கை எனப் பொருள் கொள்ளலாம். அவ்வாறு இல்லையாதலின், பழைய உரை பொருந்தாது என்பது இப்போது புரிகிறது. 'பிறர்தம் மதம் மேற்கொண்டு களைவ' என்னும் கொள்கையைப் பின்பற்றி யான் இக்குறளுக்கு உரை எழுதியிருக்கும் நுணுக்கத்தை இலக்கணம் கற்றோர் உணர்வர். தீயன கண்டிப்பதற்கும் இடம் இது.

இந்தக் குறளில் 'போஒய்' என ஒரு சொல் உள்ளது. இதன் உண்மையான உருவம் 'போய்' என்பதுதான். இதன் நடுவே 'ஒ' என்னும் ஓர் எழுத்து சேர்ந்துள்ளது. இந்த எழுத்துக்கும் இங்கே தனி ஒலி இல்லை. 'போ' என்பதை நீட்டிச் சொல்லும்போதே 'ஒ' என்பதற்கும் சேர்த்து நீட்டிவிட வேண்டும். 'போ-ஒய்' எனப் பிரித்துப் படிக்காமல், 'போஒய்' என ஒரே நீட்டாய் நீட்டிச் சொல்லி விட வேண்டும், 'போ' என்பதில் உள்ள (ப் + ஒ) உயிர் எழுத்தின் அளவை மிகுதியாக எடுத்து ஒலிப்பதற்கு அறிகுறியாக 'ஒ' என்பது சேர்க்கப்பட்டது. ஆதலின், இதனை இலக்கணத்தில் 'உயிர் அளபெடை' என்பர், இங்கே இந்த உயிர் அளபெடை இடம் அடைப்பதற்காகக் கையாளப்பட்டது . என்பது இலக்கண நூலாரின் கருத்து. இதை நான் ஒத்துக் கொள்வதில்லை. இடம் அடைப்பதற்கு வள்ளுவர்க்கு வேறு சொல் கிடைக்காதா? எனவே, ஒரு பொருள் கருதியே வள்ளுவர் இங்ஙனம் அமைத்துள்ளார். அதாவது. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றாதவர்களை நோக்கி, நீங்கள் புறத்தாற்றில் 'போஒய்' கிழிப்பது என்ன? என்று நீட்டி நெளித்து இளித்துக் காட்டி ஏளனம் செய்கி றார். இந்த 'ஒ' என்னும் ஓர் எழுத்தை இடையில் புகுத்தி அளவை மிகுதியாக எடுத்ததில் இத்துணைப் பொருட்சுவை பொதிந்து கிடப்பதை நுனித்துணர்ந்து மகிழ்க.

காமத்துப்பால்
களவியல் - தகையணங்குறுத்தல்
ஓஒ உடைந்ததே

(தெளிவுரை) போர்க்களத்தில் பகைவரும் நாணி அஞ்சத்தக்க என் வலிமை, இப்பெண்ணின் நெற்றியழகைக் கண்டதும் உடைந்து அழிந்து விட்டதே.

"ஒண்ணுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு"

(பதவுரை) ஞாட்பினுள் = போரிலே, நண்ணாரும் = பகைவரும், உட்கும் = நாணி அஞ்சக்கூடிய, என் பீடு = எனது பெரிய வல்லமை, ஒண்நுதற்கு = (இந்தப் பெண்ணின்) அழகிய நெற்றிக்கு (அதாவது, நெற்றியைக் கண்டதும்), ஓஓ = ஐயையோ, உடைந்ததே = உடைந்து ஒழிந்து விட்டதே - என்செய்வேன்.

(ஒண்மை = அழகு; நுதல் = நெற்றி; ஞாட்பு = போர்; நண்ணார் = பகைவர்; உட்குதல் = அஞ்சுதல் - நாணுதல்; பீடு = பெருமை, வலிமை.) (மணக்குடவர் உரை) இவ்வொள்ளிய நுதற்கு மிகவுங் கெட்டது போரின்கண் கிட்டாதாரும் உட்கும் எனது வலி.

(பரிமேலழகர் உரை) போர்க்களத்து வந்து நேராது பகைவரும் நேர்ந்தார் வாய்க் கேட்டஞ்சுதற் கேதுவாய என்வலி, இம்மாதர தொள்ளிய நுதலொன்றற்குமே அழிந்து விட்டது.

(ஆராய்ச்சி விரிவுரை), ஆசிரியர் இந்தக் குறளில் உயிர் இயல்புகளுள் ஒன்றினைப் பிழிந்து வைத்துள்ளார். இக் குறளைப் படிக்குங்கால், அந்தக் கருத்தே என் நெஞ்சை அள்ளுகிறது. உயிர்களின் உள்ள இயல்பை இங்கே ஒளிப்பதில் ஒரு சிறிதும் பயனில்லை; தெள்ளென எடுத்துக் காட்டுவல், காலனுக்கும் அஞ்சாத கடுங்கண் மறவர்கள் கூட, கருத்துக்கினிய காதல் நல்லாரிடம், வறுக்குஞ் சட்டியில் இட்ட வெண்டைக்காய் போல வாடி வதங்கிச் சுருண்டு மடங்கி விடுகின்றனரே! பறவை, விலங்குகளினிடமும் இவ்வியல்பைக் காணலாம். இஃதோர் உயிரியல்பு. இன உணக்கங்களுள் ஒன்றாகிய 'காதல் ஊக்கம்' (Mating) என உள நூலார் இதனைக் குறிப்பிட்டிருப்பது நினைவு கூரத்தக்கது. போர்க்களத்தில் பகைவர்களையெல்லாம் கலங்கச் செய்யும் பேராண்மையுறு தலைமகன், ஒரு பெண்ணின் நெற்றியழகுக்கு உடைந்தே போன எளிமையை என்னென்பது! 'அலுவலகத்தில் ஆரவாரஞ் செய்கின்ற ஐயா அடுப்பங்கரையில் அம்மாவிடம் அடக்கத்தான்' என்று உலகியலில் பேசப்படுவதும் இந்தக் கருத்தைத் தழுவியது தானோ?

காதல் சுவையில் விறுவிறுப்புடையவர்கள் இந்தக் குறளை ஊன்றிக் கவனிக்கவேண்டும். இன்று சில நாடகக் கதைகளாலும் நாட்டியங்களாலும் பரப்பப்படுகின்ற நாய்க் காதல் அன்று இக்குறளில் சொல்லப்படுங் காதல். பகைவர்களை முறியடித்துத் தாய் நாட்டுக்குத் தொண்டாற்றும் தறுகண் மறவனது தமிழ்க் காதலாகும் இது. வீரமற்ற கோழை நெஞ்சங்களுக்கு - சேலை கட்டிய உருவங்களின் பின்னே மோப்பம் பிடித்துத் திரிந்து வெம்பிப்போகும் இளம் பிஞ்சுகளுக்கு நினைவிருக்கட்டும் இது! இன்னோர்க்குக் காதலைப்பற்றி நினைக்க உரிமை ஏது?

இந்தக் குறளில் 'நண்ணாரும்' என்ற சொல்லுக்கு, 'போர்க்களத்தில் வந்து நண்ணாத-சேராத பகைவர்' எனப் பரிமேலழகர் உரை பகர்ந்துள்ளார். இவ்வாறு பொருள் கூறுதல் தமிழிலக்கிய மரபாகாது. இவர் இவ்வாறு பொருள் உரைத்ததற்குக் காரணம், நண்ணாரும் (நண்ணார்+உம்) என்பதில் உள்ள 'உம்' மை 'இறந்தது தழுவிய எச்ச உம்மை' எனக் கொண்டதுதான். 'அண்ணனும் - வந்துவிட்டார்' என்றால், இதற்குமுன்பு இன்னும் யாரோ வந்திருக்கிறார் என இறந்துபோன - அதாவது நடந்துபோன, எச்சமாய் உள்ள - அதாவது மறைந்திருக்கிற மற்றொரு கருத்தையும் தழுவுகிற 'உம்' தான் 'இறந்தது தழுவிய எச்ச உம்மை (உம்)' எனப்படுவது. எனவே நண்ணாரும் அஞ்சுவர் என்றால், இன்னும் யாரோ அஞ்சியுள்ளார் என மனத்திற் கொண்டு, போர்க்களத்தில் வந்த பகைவர் அஞ்சுவதல்லாமல், வராத பகைவரும் அஞ்சுவர் என்று பரிமேலழகர் கூறியுள்ளார். தமிழில் 'நண்ணார்' என்ற சொல்லுக்கு இஃதன்று பொருள். அதாவது, நண்ணுபவர்.- நண்ணாதவர் என்றால், போர்க்களத்தில் வருபவர்- வராதவர் எனல் தமிழ் மரபு அன்று . நண்ணுபவர்- நண்ணாதவர் என்றால், வந்து நட்பு கொள்பவர்-கொள்ளாதவர் எனலே சரி.

எப்போதுமே பகைவன் அஞ்சமாட்டான் - அவ்வாறு அஞ்சுபவன் பகைவனாகமாட்டான். தன்னால் முடியாவிட்டாலும் பகைவன் பணியமாட்டான். அஞ்சுபவனே பணிவான் - பணிபவனே அஞ்சுவான் - அடிமையே அஞ்சுவான். ஆனால், 'நண்ணாரும் உட்கும் பீடு' என்பது குறட் பகுதி. இங்கே நண்ணாரும் என்பதிலுள்ள 'உம்' 'உயர்வு சிறப்பு உம்மை' யாகும். அதாவது, அஞ்சாத உயர்ந்த சிறப்புடைய பகைவரையும் அஞ்சி வெட்கித் தலைகுனியச் செய்கின்ற அவ்வளவு பெரிய வீடு எனப் பொருள் கொள்க. 'நண்ணாரும் உட்கும் பிடு' என்பது, 'குறவரும் மருளும் குன்று' என்பது போன்ற தொடர் என்பதைப் பரிமேலழகர் உணராவிடினும், இலக்கணங் கற்ற ஏனையோராயினும் உணர்க. மேலும், இங்கே உட்குதல் என்றால், வெறும் பணிவு அச்சம் அன்று; தன் முடியாமைக்கு நாணித் தலை குனியும் படியான தோல்வியச்சமே உட்குதல் ஆகும்.

அடுத்து, 'பீடு' என்னும் சொல்லுக்குப் பொருள் காண 'வள்ளுவர் அகராதி'யையே புரட்டுவோம். வள்ளுவர் மற்றோரிடத்தில் 'ஏறுபோல் பீடு நடை' என்றுள்ளார். ஏறு - ஆண்சிங்கம். ஆண் சிங்கம் போன்ற பெருமித நடை என்பது அதன் பொருள். எனவே, அனைவரையும் ஆட்டிப் படைக்கும் 'ஆண்பிள்ளைச் சிங்கம்' ஆகிய தலைமகன், ஒருத்தியின் நெற்றியழகுக்குத் தன் ஆண்மையைக் கோட்டை விட்டுவிட்டான், என்பது புலனாகிறது.

இக்குறளில் உள்ள 'ஓஒ' என்பது உயிர் அளபெடை. இலக்கணக்காரர்கள் இப்போது சொல்லட்டும், இந்த உயிரளபெடை இடம் நிறைப்பதற்காகவா என்று? 'ஓஒ' என்று நீண்ட நேரம் கத்திக் கதறுவதுதானே இதன் பொருள்! இந்த 'ஓ' என்னும் இடைச்சொல் கழிவிரக்கப் பொருளில் உள்ளது. முன்பு இருந்து, இப்போது கழிந்து போனதற்காக வருந்துவதுதான் 'கழிவிரக்கம்'. முன் பிருந்த தனது பீடு இப்போது ஒழிந்து போனதாக 'ஓஒ' என வருந்துகிறான் அல்லவா? இந்த 'ஓ' என்னும் இடைச் சொல்லும், நண்ணாரும் என்பதிலுள்ள 'உம்' இடைச் சொல்லும் கப்பலில் ' சுக்கான்' திருப்புவது போன்ற இலக்கணத் திருப்பங்களாம். நண்ணாரும் என்பதிலுள்ள 'உம்' என்பது தலைவனுக்கு முன்பிருந்த பெருமையையும், "ஓஒ' என்பது இப்பொழுது ஏற்பட்டுள்ள சிறுமையையும் எடுத்துக்காட்டும் இரு துருவங்களுமாகும்,

அடுத்து, 'உடைந்ததே' என்னும் சொல்லைக் காண்பாம். உடைதல் என்பது, அழிவின் இறுதி எல்லையே, ஒரு கலமோ (பாத்திரமோ), ஒரு கண்ணாடிப் பொருளோ ஓட்டையானாலும் கீறல் விழுந்தாலும் ஓரளவு பயன் படுத்த முடியும்; ஆனால் உடைந்து போயின் முடியவே முடியாதன்றோ? இப்பொழுது காண்க, 'பீடு உடைந்ததே' என்பதிலுள்ள பொருள் நுணுக்கத்தை! . மேலும், 'உடைந்தது என்பதோடு நில்லாமல், இறுதியில் 'ஏ' சேர்த்து 'உடைந்ததே' என்று கூறியிருப்பது, உடைந்தே விட்டது என்ற உறுதிப்பாட்டையும், உடைந்தது உடைந்தது தானே என்ற வருத்தத்தின் அழுத்தத்தையும் அறிவிப்பதை ஓர்க!

ஒருவரின் முகக் கவர்ச்சிக்கு நெற்றியின் அழகிய அமைப்புச் சிறந்ததொரு காரணம் என்னும் உடற்கூற்றியல்பு இக்குறளால் விளங்குகிறதன்றோ? மயக்கத்தைப் போக்கும் திருநீறு (விபூதி), 'மாயை' என்னும் பெண்ணின் மயக்குகிற நெற்றியில் இடப்பட்டதும், காணும் இளைஞர்களின் காமமயக்கத்தை மிகுதியாக்கிவிட்டது என்னும் பிரபுலிங்க லீலை நூற்கருத்து ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. (செய்யுள் - 191).

படாஅ முலைமேல் துகில்

(தெளிவுரை) இந்தப் பெண்ணின் சாயாத கொங்கைகளின் மேல் அணியப்பட்டுள்ள ஆடையானது, மதம் பிடித்த யானையின் மத்தகப்பகுதியில் அணிந்துள்ள கட்படாம் போன்றுள்ளது.

"கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேற் றுகில்'"

(பதவுரை) மாதர் = இந்தப் பெண்ணுடைய, படாஅ முலைமேல் துகில் = சாயாத கொங்கைகளின்மேல் அணிந்துள்ள (மாராப்புத்) துணியானது, கடாஅ = மதமுடைய, களிற்றின்மேல் = ஆண் யானையின் மேல் அணிந்துள்ள, கட்படாம் = கட்படாம் போன்றுள்ளது.

(மணக்குடவருரை) மதயானை முகத்துக் கண்மறைவாக இட்ட படாம் போலும், மாதரே, நினது படாமுலை மேல் இட்ட துகில்.

(பரிமேலழகருரை) இம்மாதர் படாமுலைகளின் மேலிட்ட துகில், அவை கொல்லாமற் காத்தலின், கொல்ல தாயமதக்களிற்றின் மேலிட்ட முகபடாத்தினை யொக்கும்.

(விளக்கவுரை) சுடாம் = மதம்; களிறு = ஆண்யானை; கட்படாம் = யானை முகத்தில் - கண்பகுதியில் அணியும் உடை; படுதல் = சாய்தல் - படா = சாயாத - தளராத; துகில் = மெல்லிய பருத்தியாடை. கடாஅ, படாஅ என்னும் உயிர் அளபெடைகள், யானையின் மதத்தின் மிகுதியையும் கொங்கையின் தளராத உறுதியையும் உணர்த்துகின்றன. ஓர் அழகிய பெண்ணின் உருவத்தை வரையும் ஓவியப் புலவன், கொங்கைகளுக்கு என்ன தோற்றம் கொடுக்கிறானோ, அதே தோற்றத்தைத்தான் புலவர்கள் இலக்கியங்களில் சொற்களால் புனைகின்றனர். சிற்பமும் இப்படித்தான். எனவே, இது போன்ற இலக்கியப் பகுதிகளைக் கலைக்கண்கொண்டு கற்றலே நன்று! காமக் கண்கொண்டு கற்கவேண்டா! இதனை இதோடு நிறுத்திக்கொள்வோம்.