உள்ளடக்கத்துக்குச் செல்

கிழவியின் தந்திரம்/முயற்சி திருவினையாக்கும்

விக்கிமூலம் இலிருந்து



9. முயற்சி திருவினையாக்கும்

கோபாலன் ஒரு பிரம்மச்சாரி அவனுக்குத் தாயுமில்லை; தந்தையுமில்லை; சகோதரர்களும் இல்லை. அவன் ஒரு தனிக்கட்டை அந்த ஊரிலுள்ள குடும்பங்களுக்குச் சென்று. அவர்களுக்கு வேண்டிய காய்கறிகளை வாங்கிக் : கொடுத்தல், கடையில் வேண்டிய சாமன்களை வாங்கித் தருதல், இன்னும் அவர்கள் இட்ட பணிகளைச் செய்து நிறைவேற்றுதல் ஆகிய காரியங்களைச் செய்து வந்தான் அதனால் அவர்கள் மகிழ்ந்து அவனுக்கு அவ்வப்போது சாப்பாடு போட்டார்கள். பல குடும்பங்கள் உள்ள ஊர் ஆகையால், ஒவ்வொரு வேளையும் வெவ்வேறு வீடுகளில் அவனுக்கு உணவு கிடைத்து வந்தது.

அவன் ஒரு சங்கீத வித்துவானிடம் பழகினான். அவருக்கு வேண்டிய வேலைகளைச் செய்தான். அதனால் அவர் மகிழ்ந்து அவனுக்குச் சங்கீதம் கற்றுக் கொடுத்தார். கோபாலன் நல்ல புத்திசாலி.. ஆகையால் சங்கீதத்தை நன்றாகக் கற்றுக் கொண்டான். பல கீர்த்தனைகளை மனப்பாடம் பண்ணினான். சிட்டா ஸ்வரம் பாடுதல், கல்பனா ஸ்வரப் பாடுதல் முதலியவற்றில் அவன் வல்லவனாகத் திகழ்ந்தான்.

 சில கல்யாணங்களில் கச்சேரி செய்யும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது அதனால் பொருள் வருவாயும் உண்டாயிற்று. பொருள் சிறிது சேர்ந்தாலும் தன்னை ஆதரித்து வந்த குடும்பங்களுக்கு உதவி செய்வதையும் அவர்கள் வழங்கிய சாப்பாட்டைச் சாப்பிடுவதையும் அவன் விடவில்லை.

அவனுடைய உடல் மெருகேறித் தளதள வென்று வளர்ந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தான். அவனை ஆதரித்த வீட்டுக்காரர் ஒருவர் அவனைப் பார்த்து, "கோபாலா உனக்குச் கல்யாண வயது வந்து விட்டது. ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு குடியும் குடித்தனமுமாக வாழ்வதற்கு நீ முயற்சி செய்ய வேண்டும். சங்கீதக் கச்சேரிகளில் உனக்குப் பணம் கிடைப்பதனால் குடும்பம் நடத்துவதில் ஒரு சங்கடமும் இராது” என்றார். அதைக் கேட்ட கோபாலன், “இந்தப் பஞ்சையாகிய எனக்கு யார் பெண் கொடுப்பார்கள்?” என்றான். அந்தப் பெரியவர், “நீ பழைய கோபாலன் அல்லவே. ஒரு பெரிய சங்கீத வித்துவான் அல்லவா? உனக்கு யாரும் குதி போட்டுக் கொண்டு பெண்ணைத் தருவார்கள்” என்றார். “உங்களுடைய வாக்கு பலிக்கட்டும். கடவுள் சித்தம் எப்படியோ அப்படியே நடக்கும்” என்று கோபாலன் சொன்னான்.

கோபாலனைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொன்ன அந்தப் பெரியவரே ஒரு குடும்பத்திலுள்ள அழகான கன்னிகையைப் பார்த்து அவனுக்குத் திருமணம் செய்து கொடுக்கத் தீர்மானம் செய்தார். பெண் அழகாக இருந்தாள். கோபாலன் அந்தப் பெண்ணை வந்து பார்த்தான். அவனுக்குத் திருப்தியாக இருந்தது. அந்தப் பெண்ணுக்கும் அவனைப் பார்த்துத் திருப்தியாக இருந்தது.

பெரியவர்கள் நிச்சயித்தபடி ஒரு நல்ல நாளில் அந்தப் பெரியவரே கோபாலனுக்குத் தந்தையைப் போல இருந்து திருமணத்தை நிறைவேற்றினார். அதோடு அவன் குடும்பம் நடுத்துவதற்கு ஒரு நல்ல வீட்டைப் பார்த்து ஏற்பாடு செய்து கொடுத்-தார். ஒரு நல்ல நாளில் கோபாலன். தன் மனைவியுடன் அந்த வீட்டிற்குக் குடி புகுந்தான்.

ஒவ்வொரு நாளும் அவன் தனக்குச் சங்கீதம் சொல்லி வைத்த சங்கீத வித்துவாளையும் தனக்குத் திருமணம் செய்து வைத்த பெரிய வரையும், மனமார வாழ்த்தினான். அவர்களை அடிக்கடிப் போய்ப் பார்த்து நமஸ்காரம் செய்து விட்டு வந்தான்.

ஆரம்பத்தில் ஏழையாக இருந்தாலும் இடை விடாத முயற்சியினால் முன்னுக்கு வந்த கோபால னைக் கண்டு எல்லோரும் பாராட்டினர்.

“முயற்சி திருவினையாக்கும்'” என்ற பழமொழி அவன் வாழ்க்கையில் பலித்தது.