நோக்கம்
இந்த நாட்டு மக்களின் அறிவை வளர விடாமல் தடுத்து வரும் சிலவற்றில் புராண — மதங்களும் சேர்ந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது. புராணம் — புண்ணியக் கதை - மதம் - மனிதனின் உயிர்நாடி என்று கூறிக்கொண்டு அதனையே கட்டியழும் ஒரு சில வைதிகர்களுக்கும், புராண — மதங்களில் இருப்பது என்ன என்று, தெரிந்துகொள்ள விழையும் சீர்திருத்த நோக்கம் படைத்த ஆராய்ச்சியாளருக்கும் இந்நூல் பெரிதும் துணை புரியும், என்பதே இதைத் திரட்டியதின் நோக்கமாகும்.
மதம்- மக்களுக்கு அபின்; புராணம் — போதை தரும் லேகியம் என்று கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம்; படித்திருக்கிறோம். இருந்தபோதிலும்; திராவிடரின் தனிப் பெருந்தலைவர் - சொல் அரசர், பேனா வீரர்—பகுத்தறிவு போதகர் —அறிஞர் அண்ணாதுரை அவர்கள் புராண மதங்களைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை தமிழ் மக்களுக்கு விளக்கவே இதை அவர் எழுதிய, பேசியவைகளில் இருந்து தொகுத்து நூலாக்கப்படுகிறது. இதை அறிவுக் கண்ணாடி போட்டு படிப்பவர்களுடைய, மத - மயக்கம் நீங்கும், புராணப் போதை தெளியும் என்பது என் துணிவான எண்ணம்.
புராண மதங்களைப்பற்றி அவர் என்ன கூறுகிறார் என்பதை அடுத்த பக்கத்திலிருந்து விளக்கப்பட்டுள்ளது. ஆகவே படியுங்கள் - தெளியுங்கள் - பிறருக்கு - தெளிவு படுத்துங்கள் நீங்கள் விரும்பினால்!
வணக்கம்
ஊடுருவி