உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராண மதங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாதுரை

35

சிவபெருமானிருக்கிறாரே, அவர் தமது தர்ம பத்தினியுடன் பேசிக்கொண்டிருக்கக் கண்டேன். அவருக்கும் அம்மைக்கும் ஆயிரக்கணக்கிலே நாமதேயம் உண்டல்லவா! ஆலயத்துக்கு ஆலயம், வேறுவேறு பெயரல்லவா! ஆகவேதான் அவர் காமாட்சி! மீனாட்சி! நீலாயதாட்சி! அம்பிகே! திரிபுரசுந்தரி! என்று அநேகவிதமான பெயர் கூறி அழைத்தார். அம்மையாரோ, வாயை அசைக்கவில்லை என்று கூறினான் வீரன். "போதுமப்பா உன் புதுப்புரளி நிறுத்து. எனக்கு வேறு வேலை இருக்கிறது. உன் கதையைக் கேட்க நேரமில்லை" என்று நான் சொன்னேன். வீரனா விடுபவன்! "என் கதையைக் கேட்க மனமிருக்குமா உனக்கு. நான் என்ன "சர்" பட்டம் பெற்றவனா, மிட்டாமிராசு உடையவனா, பட்டம் தரித்த புலவனா, பாவாணனா புராணிகனா, என்னிடம் உனக்கு அலட்சியந்தான் இருக்கும்" என்று கோபித்துக்கொண்டான். கோபப்படாதே வீரா! நீ சொல்ல விரும்புவதோ ஏதோ ஒரு புதுப் புராணம்! நாட்டிலே, நானாவிதமான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பலருடைய அபிப்பிராயங்கள் வெளியிடப்படுகின்றன. சர்க்காரின்போக்கும் அதனைச்சாருவோரின்போக்கும். காங்கிரசின் நிலையும், லீகின் நிலையும், திராவிடர் கிளர்ச்சியும் மாணவர் எழுச்சியும் கலை வளர்ச்சியும் ரசிகர்களின் உள்ள நெகிழ்ச்சியுமெனப் பல்வேறு விஷயங்களிருக்க, நீ எதையோ இழுக்கிறாயே" என்று நான் சமாதானங் கூறிவிட்டுச் சாந்தமோ திருப்தியோ அடையாத வீரனுக்கு உண்மை நிகழ்ச்சியை உரைத்தால் உளம் மகிழுமெனக் கருதி, "கேள் வீரா, உண்மையாக நடைபெறும் சம்பவங்களைக் கவனிக்க மாட்டேனென்கிறாயே. இத்தாலியிலே போர் நடக்கிறதல்லவா, அங்கே காசினோ என்ற களத்திலே நடந்த ஒரு அற்புதமான வீர சம்பவத்தைக் கேள், தமிழரின் புகழ் சுடர்விட்டு விளங்குவதைப் பார், பீரங்கிகள் முழக்கமிடும் களம், துப்பாக்கிக் குண்டுகள் நெஞ்சைப் பிளக்கும் இடம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/36&oldid=1697482" இலிருந்து மீள்விக்கப்பட்டது