பக்கம்:தமிழ் நூல்களில் பௌத்தம்.djvu/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை
5

வுறுத்திப் போந்தார். கடவுளை வேதமெனும் நூலாகவும், யாகமெனுங் கொலைக்குழியாகவும், சாதியெனுஞ் சாக்கடையாகவும் மன்பதை கொண்டதை மாற்றப் போந்த அறவோர் புத்தர் பெருமானாதலால், அவர் கடவுளை அறமென்றும், அதற்குரிய வழியைச் சீலமென்றும் அறிவுறுத்தினார்.
வேதம் யாகம் முதலியவற்றைத் திரித்துக் கேடு சூழ்ந்த பொல்லாத உலகம், புத்தருக்குப் பின்னைப் பௌத்த தர்மத்துக்குங் கேடு சூழ்ந்தது. பிற்றை ஞான்று பௌத்தம் பலப்பல வழியில் மாறுதலடைந்தது. ஜப்பானிலுள்ள பௌத்தத்துக்கும் இலங்கையிலுள்ள பௌத்தத்துக்கும் பெரும் வேற்றுமை உண்டு. புத்தர் பெருமான் போதனை இப்பொழுது பௌத்தரென்று சொல்லிக்கொள்ளும் பலரிடஞ் சாதனையில் இல்லை என்று சொல்லலாம். புத்தர் பெருமான் போதனை மட்டுமன்று, மற்றும் பல சமய குரவர் போதனைகளும் சாதனையிலில்லை என்றுங் கூறலாம்.
சமய குரவர்கள் சொல்வழி எப்பொழுதும் உலகம் நிற்பதில்லை. சமய குரவர் உருவங்கட்கு மட்டும் வந்தனை வழிபாடுகள் நிகழ்த்தி, அவர்கள் அறவுரைகளைக் குழி வெட்டிப் புதைப்பது உலகின் இயல்பாகிவிட்டது. சமயத்தவர் என்று சொல்லிக்கொள்ளும் பலரிடத்தும் இக்குறைபா டிருக்கிறது. இதற்குச் சமய குரவர்கள் என் செய்வார்கள்? சமயம் என் செய்யும்?
அறத்தில் பெரிதும் ஒற்றுமை வாய்ந்த சமண பௌத்தங்களே பின்னாளில் ஒன்றோடொன்று மலைந்து போரிடலாயின. பிற்காலத்திய சமண பௌத்தர்கள் போரைத் தங்கள் அளவிலாதல் நிறுத்திக்கொண்டார்களா? இல்லையே. அவர்கள் தங்களுக்குரிய அறவொழுக்கங்களையும் முற்றும் மறந்து, கடவுள் இன்மை என்பதில் மட்டும் கருத்துச் செலுத்தி, மன்னர்களைத் தங்கள் வயப்படுத்தி, கடவுளுண்மையில் உறுதியுடையாரைப் பல்லாற்றானுந் துன்புறுத்தினார்கள். "கண்டு முட்டு ; கேட்டு முட்டு" என்பது போன்ற கொடிய வழக்கங்கள் அவர்கள் வாழ்வில் நுழைந்த ஒன்றை ஈண்டுக் குறித்தல் சாலும். சமண