உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

முதற் குலோத்துங்க சோழன்

முரசங்கள் மொகுமொகென்றொலித்தன ; இடைவெளி யரிதென ஒருவருடலினில் ஒருவர் தம் உடல்புக நெருங்கிச் சென்று, கலிங்கப்படைகள் கருணாகரன் படைகளின் முன்னுற்றன.

பின்னர் இருதிறத்தார்க்கும் போர் தொடங்கலாயிற்று ; ‘படை எடும் எடும்' என்ற ஓசையும், 'விடும் விடும்' என்ற ஓசையும், கடலொலி போன்றிருந்தன ; சிலை நாண்தெறிக்கும் ஓசை திசைமுகம் வெடிப்பதொக்கும். இருதிறப்படைகளும் எதிர்நிற்றல், இருபெருங் கடல்கள் எதிர்நின்றாற்போன்றிருந்தது. பரியொடுபரி மலைவது கடற்றிரைகள் தம்முள் இகலி மலைந்தாற் போன்றிருந்தது. யானையொடு யானை பொருவது வரையொடு வரை பொருதாற்போன்றிருந்தது ; முகிலொடு முகில் எதிர்த்ததுபோல் இரதமும் இரதமும் எதிர்த்தன. புலியொடு புலி யெதிர்த்தாற்போல் வீரரொடு வீரரும் அரி யொடு அரி எதிர்த்தாற்போல் அரசரொடு அரசரும் எதிர்த்துப் பொருவாராயினர் ; வீரர்களின் விழிகளிலே சினக்கனல் தோன்றிற்று. அக்கனல் மின்னொளி வீசின ; அன்னார் கையிற் கொண்ட சிலைகள் உருமென இடித்துக் கணைமழை பொழிந்தன ; அதனாற் குருதியாறு பெருகலாயிற்று. அவ்வாற்றில் அரசர்களது நித்திலக்குடைகள் நுரையென மிதக்கலுற்றன ; போரில் துணி பட்ட களிற்றினங்களின் உடல்கள் அவ்யாற்றின் இருகரையென இருமருங்குங்கிடந்தன.

குருதிவெள்ளத்திற் பிளிற்றிவீழுங் களிற்றினங்கள் வேலைநீருண்ணப்படிந்த மேகங்கள் போன்றிருந்தன ; அவ்யானைகளின் கரங்களை வாளாற்றுணித்துத் தம் புயத் திட்ட வீரர்கள் தோற்பைகளைத் தோளின் கண்ணே கொண்டு நீர்விடுந் துருத்தியாளரைப் போன்றிருந்தனர் ;