பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூன்றாம் அதிகாரம்
வேங்கி நாட்டில் குலோத்துங்கன் முடிசூடுதல்

ம் இராசேந்திரன் பல கலைகளிலும் வல்லவனாய்ப் பல்லோரும் புகழுமாறு கங்கைகொண்ட சோழபுரத்தில் வாழ்ந்துவரும் நாட்களில், வேங்கி நாட்டில் ஆட்சி புரிந்துகொண்டிருந்த தன் தந்தையாகிய இராசராச நரேந்திரன் நோயுற்று வருந்திக்கொண்டிருக்கின்றனன் என்று ஒரு திருமுகம் வரப்பெற்றனன். இதனைக் கண்டதும் அவன் பெருங்கவலையுற்றுத் தன் மாமன்மாரிடம் விடை பெற்றுக்கொண்டு விரைவில் வேங்கி நாட்டையடைந்தான்; அங்குப் பிணியுற்றுக்கிடந்த தன் தந்தையின் நிலைமையைக்கண்டு பெரிதும் மனமுடைந்து, அவனை விட்டகலாது அணுக்கத்தொண் டனாயமர்ந்து, வேண்டியன புரிந்துவந்தான். அந்நாளில் சளுக்கிய இராசராசனும் தனக்குக் கடவுள் அமைத்த வாழ்நாள் முடிவுற்றமையின் கி. பி. 1062-ஆம் ஆண்டில் வானுலகஞ் சென்றனன்.[1] தந்தையின் பெரும் பிரிவிற்காற்றாது வருந்திய இராசேந்திரனும் மகன் தந்தைக்கு ஆற்றவேண்டிய தீக்கடன் நீர்க்கடன் முதலியவற்றை முடித்து, அம்மான்மாரும் ஆன்றோரும் ஆறுதல் கூற, ஒருவாறு அத் துன்பத்தினின்று நீங்கினான். பின்னர், அமைச்சரும் சுற்றத்தினரும் அவனுக்கு முடி சூட்டுவிழா நடத்தற்குத் தக்க ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர்.


  1. 1. S. I.T.Vol. I. No.9.