அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/002

விக்கிமூலம் இலிருந்து

‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல’
கஸ்துரிபாய்!

குஜராத் மாநிலத்தில் போர் பந்தர் என்பது ஒரு சிறுநகர். அங்கே வாழ்ந்தவர் கோகுல்தாஸ் மாகன்ஜீ. அவருடைய மனைவியின் பெயர் விரஜகும் பா. இவர்களின் மூத்தமகள் தான் கஸ்தூரி பாய். இவர் 1869-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலே அந்த நகரிலே பிறந்தார்! காந்தி அடிகளாரை விட வயதில் ஆறுமாதம் மூத்தவர் அன்னை கஸ்தூரி பாய்.

சிறுவயதில் பெற்றோருக்கு இவர் செல்லக் குழந்தை. பள்ளிக் கூடத்துக்கு அனுப்பப்பட்டாரா என்றால் அதுவுமில்லை; செல்லக் குழந்தை அல்லவா? அதனால் ஆனால், குடும்ப வேலைகளை எல்லாம் அக்கறையாகவும், அழகாகவும் செய்யும் திறமை மட்டும் அவருக்கு இருந்தது.

கஸ்தூரிபாய் பிறந்து வளர்ந்த போர் பந்தர் சிறுநகரிலேயே கரம்சந்த் காந்தி என்ற வைசியர் ஒருவரும் வாழ்ந்து வந்தார். அவருக்கு மனைவிகள் நான்கு. நான்காவது மனைவி பெயர் புத்லிபாய். இவர்கள் இருவருக்கும் 1869-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள், இரண்டாவது மகனாகப் பிறந்தவர் தான் மகாத்மா காந்தி அடிகள் என்ற மோகன்தாஸ் காந்தி.

காந்தியின் தந்தையாரும், கஸ்தூரிபாய் தந்தையாரும் ஒரே நகரைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, மிகவும் நெருங்கிய நண்பர்களும் கூட. அதனால் இருவரும் கலந்து பேசி காந்திக்கும் - கஸ்தூரிக்கும் திருமணம் செய்து வைத்தார்கள். திருமணமானதும் மனைவிமீது மிகுந்த பற்றும் அன்பும் கொண்டு இல்லற சுகத்தில் கவனம் செலுத்தியதால் கஸ்தூரி பாய்க்கு கல்விப் பயிற்சி கொடுக்கத் தவறிவிட்டார் காந்தி.

தனக்கொரு மனைவி சிறுவயதிலேயே கிடைத்துவிட்டதால் அதிகாரம் புரியும் மனமும், தனக்கு மனைவி எல்லா வகையிலும் கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடக்கத்தான் வேண்டும் என்ற ஆதிக்கமும் காந்தியடிகளுக்கு இருந்தது.

இந்தப் போக்கு இருவரையுமே சில நாட்கள் பகல் நேர ஊமைகளாக்கி விட்டது. ஆனால் இரவு நேரங்களில் இருவருமே ஊமை களைந்து ஒரே ஓட்டிற்குள் ஆமைகள் புகுவது போல் வாழ்ந்து வந்தார்கள்.

இந்த நிலையில் தான் காந்தியை சில சமயங்களில் கட்டுப் பாட்டுடன் நெறிப்படுத்திய பெருமையும் பெற்றிருந்தார், கஸ்துரி பாய்.

உயர்நிலைப் பள்ளியில் காந்தி படித்துக் கொண்டிருந்தார். அப்போது தீய குணங்களையுடைய நண்பன் ஒருவன் அவரிடம் நட்புக் கொண்டு பல கெட்ட பழக்கங்களை காந்திக்குக் கற்பித்து வந்தான்.

பிறரிடம் கேள்விப்பட்ட அவனது தீச் செயல்களைக் கேட்டு, காந்தியின், அன்னை அவரை எச்சரித்தார்; அவரது தமையனும் கண்டித்தார்; இறுதியாக மனைவி கஸ்தூரிபாயும் கடுமையாக அறிவுரை கூறினார்:

இம் மூவரின் புத்திமதியைக் காந்தி கேட்காமல், 'நான் நல்லவனாக நடந்தால் என்னை யாரும் கெடுக்க முடியாது. என் மனம் மற்றவரை உணரும் திறன் பெற்றது', என்று கூறியபடியே அவனிடம் நெருங்கிப் பழகினார்!  இதைக் கண்ட கஸ்தூரிபாயும், சற்றுக் கடுமையாகவே கணவனைக் கண்டித்து அறிவுரை கூறினார். இதைப் பார்த்த காந்தி, கணவனுக்கே புத்திமதி கூறிடும் தகுதி மனைவிக்கு உண்டா? யார் கொடுத்த அதிகாரம் உனக்கு? அந்தத் தகுதி எப்படி வந்தது? என்றெல்லாம் ஆணாதிக்கத் தொனியில் கஸ்தூரி பாயைக் கேட்டார். இருந்தும், மனைவி கணவனை அடிக்கடி எச்சரித்தவாறே இருந்தார்.

இறுதியாக அந்தத் தீயவன் கஸ்தூரிபாயின் கற்பொழுக்கம் மீதே சந்தேகத்தை உருவாக்கிவிட்டான் காந்திக்கு! அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் அல்லவா? அதனை நம்பி, மனைவி கஸ்தூரி பாய் நடத்தையிலேயே ஐயம் கொண்டு துன்புறுத்தினார் காந்தி.

கஸ்தூரி பாய்க்கு, அந்த நேரத்தில் நண்பனின் வார்த்தைகளை நம்பிச் செய்த கொடுமைகளை காந்தியடிகள் தனது சுயசரிதையில் கீழ்க் கண்டவாறு எழுதியுள்ளார். உண்மையை உணர்பவன் தானே உத்தமமான மனிதன்? காந்தி அடிகள் எழுதுவதைப் படியுங்கள்:

"நான் நண்பன் கூறிய சந்தேகத்தை நம்பியதால் என் மனைவிக்குச் செய்த கொடுமைகளை இப்போது எண்ணும் போதும், என்னை நானே மன்னிக்க முடியவில்லை.

"இத்தகைய கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ளப் பாரதப் பெண்களைத் தவிர வேறு யாரால் முடியும்? இந்தியப் பெண்கள் பொறுமையின் வடிவம் என்று நான் கூறுகிறேன்.

"ஏனென்றால், குற்றம் செய்யாத ஒரு வேலைக்காரனைக் கண்டித்தால் அவன் வேலையைத் துறக்க முடியும். மகனும் அவ்வாறே தனது தந்தையைப் பிரிய முடியும்; மனைவிக்கு கணவன் மீது சந்தேகம் உண்டானால் மெளனமாகப் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆனால், கணவனுக்கு மனைவி மீது சந்தேகம் வந்து விட்டாலோ அவள் வாழ்க்கை அடியோடு நாசம்தான். அவளுக்கு வாழ்க்கை வேறு ஏது?. எங்கே போவாள்?

மனைவி விடுதலை கேட்டுச் சட்டத்தின் துணைகொண்டு நீதி மன்றம் செல்வாள்! அந்தச் சட்டங்களல் அவளுக்குரிய வாழ்வு கிடைத்துவிடுமா என்ன?

"நான், அன்று என் மனைவி கஸ்துரி பாயை இத்தகைய ஒரு கொடுமைக்கு ஆளாக்கி விட்டதை எண்ணி இன்றும் சொல்லொணா வேதனையால் வருத்தப்படுகிறேன். எனக்கு மன்னிப்பு ஏது? என்று காந்தியடிகள் கஸ்தூரி பாயின் அன்றைய நிலையை உணர்ந்து கண்ணீர் வடித்து வருத்தப்பட்டு எழுதியுள்ளார்.

ஆனால், அன்னை கஸ்தூரி பாய், இந்த அக்ரமங்களை எல்லாம் வள்ளுவர் பெருமான் கூறியபடி ’அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல’ பொறுத்துக் கொண்டார்! அதனால் காந்தியடிகளுக்கு மனைவி மீது ஒரு கருணை ஏற்பட்டது. தீ நட்பால் கெட்டு விடாதே என்று தந்தை எச்சரித்த போதும், தாய் கண்டித்தபோதும், தமையன் கண்டனம் செய்த போதும் கேளாத காந்தியடிகள், இறுதியில் தனது மனைவி கஸ்தூரி பாய் கண்டித்ததற்காக அவருக்கு அக்கிரமமாக தண்டனை வழங்கி’,’பிறகு தன்னையே தான் உணர்பவந்தான் மனிதன்’ என்ற தத்துவ வாதியாக மாறினார்!

மனைவி சொல்வதைக் கேளாத காரணத்தையும், அதனால் ஏற்பட்ட இன்னல்களை எல்லாம் ஒரு தாளில் எழுதி, தனது தந்தையிடம் கொடுத்து, தீய நட்பால் உருவாகிய துன்பங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் காந்தியடிகள்!

xxx