நவகாளி யாத்திரை/அன்றாட அலுவல்கள்
மகாத்மாஜியின் அன்றாட அலுவல்கள் என்னவென்பதைத் தெரிந்துகொள்வது தர்மாபூரில் சாத்தியமாயிற்று.
காலையில் மகாத்மாஜி யாத்திரை முடிந்து மற்றொரு கிராமத்துக்குச் சென்றதும் ஸ்நானத்துக்குத் தயாராகி விடுகிறார். கிராமங்களில் ஸ்நான அறை என்று பிரத்தியேகமாக ஏதும் கிடையாதாகையால் போகுமிடங்களிலெல்லாம் திரைகள் கட்டி ஸ்நான அறை தயார் செய்துவிடுகிறார்கள். மகாத்மாஜி அந்த விடுதிக்குள் சாவதானமாக ஸ்நானம் செய்கிறார். பின்னர், சற்று நேரம் பத்திரிகைகளைப் படிக்கச்சொல்லிக் கேட்டுக்கொண்டே தூங்கிப் போய்விடுகிறார். ஓய்வு கிடைக்கும் நேரங்களில் நூல் நூற்கிறார்.
பகலில் சுமார் இரண்டு மணிக்குக் கிராம ஸ்திரீகள் கூட்டத்தில் ராமாயணம், பாரதம் முதலிய புராணங்களைச் சொல்லி அந்தப் புண்ணிய கதைகளிலுள்ள நீதிகளைப் போதிக்கிறார்.
பிறகு ஒவ்வொரு கிராமத்திலும் நடந்த அட்டுழியங்களையும், அக்கிரமங்களையும்பற்றி நேரில் கண்டும், கேட்டும் அறியும் பொருட்டு வெளியே கிளம்பிச் செல்கிறார். அங்கங்கே கிராமவாசிகள் தாங்கள் பட்ட துன்பங்களைக் காந்தி மகானிடம் கதை கதையாகச் சொல்லிக் கண்ணீர் வடிக்கிறார்கள். எரிந்துபோன குடிசைகளைக் காண்பித்துக் கதறுகிறார்கள். மற்றும் எழுத்தால் வர்ணிக்க இயலாத கொடுமைச் செயல்கள் பலவற்றைக் குறித்து மகாத்மாவிடம் மனம் விட்டுப் பதறுகிறார்கள்.
ஒவ்வொரு கிராமத்திலுள்ள கூன் குருடர்கள், ஏழை எளியவர்கள், சக்தியற்ற வயோதிகர்கள் அனைவரும் மகாத்மா வந்திருக்கும் செய்தியைக் கேட்டு அவரை நேரில் தரிசிக்கவும், ஸ்பரிசித்து மகிழவும் ஆவலுடன் விரைந்து வருகின்றனர். மகாத்மாஜி அவர்கள் அனைவரையும் அன்புடன் தடவிக் கொடுத்து ஆசீர்வாதம் செய்கிறார்.
இதைக் கண்டபோது, "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஏசுநாதர் ஊர் ஊராக விஜயம் செய்த சமயம் இப்படித்தான் குருடர்களும், செவிடர்களும் ஏசு பகவானுடைய ஸ்பரிசம் பெற்று ஜன்ம சாபல்யமடைந்தார்கள்" என்று சரித்திரத்தில் படித்த விஷயம் என் நினைவுக்கு வந்தது.