உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்தியா காண்ட ஆழ்கடல்/திருக்குறள் ஆட்சி

விக்கிமூலம் இலிருந்து



8. திருக்குறள் ஆட்சி


திருக்குறளை எடுத்தாளாத புலவர்கள் இல்லை எனலாம். ஒரு நூல் திருக்குறள்களை எடுத்தாளுவதால் பெருமை பெறுகிறது. கம்பரும் இந்தக் கலையைத் தம் நூலில் கையாண்டுள்ளார். அவற்றுள், அயோத்தியா கண்டாத்தில் வந்துள்ள சில காண்பாம்:

மந்திரப் படலம்

கவரிமா அனைய நீரார்

தயரதனின் அமைச்சர்களின் சிறப்பைக் கூற வந்த கம்பர்,

கற்றவர் மானம் நோக்கின் கவரிமா அனைய நீரார் (6)

என்று கூறியுள்ளார். இது, உடலிலிருந்து ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாப் போன்றவ்ர், உயிர் விடுவதால் மானம் நிலைக்குமென்றால் உயிரை விட்டு விடுவர்- என்னும் கருத்தமைந்த

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
(969)

என்னும் திருக்குறளை அடியொற்றி அறிவிக்கப்பட்டு உள்ளது.

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 155

பிறப்பெனும் பெருங்கடல்

தயரதன் அமைச்சர்களிடம் சொல்கிறான். யான் அரசைத் துறக்கப் போகிறேன். இந்தத் துறப்பு என்னும் தெப்பம் துணை செய்யாவிடின், பிறப்பு என்னும் பெருங்கடலை நீந்த முடியாது- என்கிறான். வள்ளுவர் பிறப்பைப் பெருங்கடலாகக் கூறி அதை நீந்திக் கடக்கும் வழிமுறையும் கூறியுள்ளார்.


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்

(10)

என்பது குறள். இதை அடியொற்றி, பிறப்பைக் கடலாகக் கம்பர் உருவகித்து, கடக்கும் முறையும் அறிவித்திருப்பது ஒரளவு ஒப்பு நோக்கத் தக்கது.

பிறந்திலென்

தயரதன் அமைச்சர்களிடம் அறிவிக்கின்றான். யான் போர்க்களத்தில் இறக்கவும் இல்லை. அது கிடக்க-யான் மூப்பு வந்த பின்னும் அரசைத் துறக்கவில்லை எனில், யான் பிறந்ததனால் என்ன பயன் உள்ளது?- என்று வினவுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் என்கிறான்.

இறந்திலன் செருக் களத்து இராமன் தாதை தான் அறந்தலை நிரம்ப முப்பு அடைந்த பின்னரும் துறந்திலன் என்பதோர் சொல் உண்டானபின் பிறந்திலென் என்பதின் பிறிது உண்டாகுமோ?

(27)


என்பது பாடல். இந்தப் பாடலில்,

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று

(236)


என்னும் குறள் கருத்து இழையோடுகிறதல்லவா? 156 - சுந்தர சண்முகனார்

பெற்ற அன்றினும்

தயரதன் முடி துறக்கவும் இராமனுக்குப் பட்டம் கட்டவும் வசிட்டன் ஒத்துக் கொண்டபின், தயரதன் மிகவும் பெரு மகிழ்வு பெற்றானாம். அதாவதுமகனைப் பெற்ற நாளினும்- சீதையை மணக்க வில்லை ஒடித்த நாளினும், தம் குல எதிரியாகிய பரசுராமனை இராமன் வென்ற நாளினும்- இந்நாளில் பெரிதும் உவகை உற்றானாம்:

மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும் மகனைப் பெற்ற அன்றினும், பிஞ்ஞகன் பிடித்த அப் பெருவில் இற்ற அன்றினும், எறி மழுவாளவன் இழுக்கம்
உற்ற அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான்

(41)

என்பது பாடல். இதில் உள்ள மகனைப் பெற்ற அன்றினும்' என்னும் பகுதி,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் (69)

என்னும் குறளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஊருணி-பயன் மரம்

தயரதன் இராமனுக்கு முடிசூட்டுதல் பற்றி அவை யோரின் கருத்தைக் கேட்டான். அவையோர் அனைவரும் உடன்பட்டுக் கூறியதாவது: ஊருணி நீர் நிறை தலையும், பயன் மரம் பழுத்தலையும், மழை பொழிதலையும், வயலுக்கு நீர் தரும் ஆறு நீர் பெருகுதலையும் மறுப்பவர்கள் யார்? ஒருவரும் இலர். இராமனுக்கு முடி சூட்டுதல் இவை போல் பயனுள்ள செயலாகும். எனவே மறுப்பு இல்லை- என்பதாகும். பாடல்:

ஊருணி நிறையவும் உதவும் மாடுஉயர்
பார்கெழு பயன்மரம் பழுத்தற் றாகவும்
கார்மழை பொழியவும் கழனி பாய்நதி
வார்புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார்?

(81) என்பது பாடல். இப்பாடலின் முதல் இரண்டடிகளில், அயோத்தியா காண்ட ஆழ் கடல் 157


ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு (215)
பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின் (216)

என்னும் குறள்கள் இரண்டும் மறைந்திருப்பதைக் காணலாம்.

மந்தரை சூழ்ச்சிப் படலம்

இன்சொல்லும் ஈகையும் உடைய மன்னனுக்கு அழிவு இல்லை என வசிட்டன் இராமனுக்கு அறிவுறுத்துகிறான்:

இனிய சொல்லினன் ஈகையன் எண்ணினன்...... அனைய மன்னற்கு அழிவும் உண்டாங் கொலோ?

(26)


என்பது பாடல் பகுதி. இது, இன்சொல்லுடன் வேண்டியதைக் கொடுத்துக் காக்கும் மன்னனுக்கு உலகம் ஒத்து வரும் என்னும் கருத்துடைய

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு

(387)

என்னும் குறள் கருத்தைத் தன்னுள் கொண்டுள்ளது.

படைக்கலம்

வசிட்டன் இராமனுக்கு மேலும் அறிவுரை தருகிறான் சான்றோரின் ஆர்வமே (அன்பே- ஆசியே) அரசனுக்குப் படைக்கலமாகும்- என்கிறான்.

தீர்வில் அன்பு செலுத்தலின் செவ்வியோர்
ஆர்வம் மன்னவற்கு ஆயுதம் ஆவதே

(28),

என்பது பாடல் பகுதி. இது,

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை (985)

என்னும் குறள் கருத்தோடு ஒப்பு நோக்கத் தக்கது.

நகர் நீங்கு படலம்

குழலும் யாழும்

தயரதனின் இளைய மனைவிமார்களின் சொற்கள் இதற்கு முன், அமிழ்தினும் இனியவாகிக் குழலையும் யாழையும் வென்றன. இராமன் பிரிந்த போதோ, அழுது புலம்பியதால், அவர்தம் சொற்கள் குழலுக்கும் யாழுக்கும் தோற்றனவாம்:

கிளையினும் நரம்பினும் நிரம்பும் கேழன
அளவிறந் துயிர்க்கவிட் டரற்றும் தன்மையால்
தொளைபடு குழலினோடு யாழ்க்குத் தோற்றன
இளையவர் அமுதினும் இனிய சொற்களே

(176)

என்னும் பாடலில் வெற்றி பெற்ற குழலும் யாழும்,

குழலினிது யாழினிது என்ப தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

(66)

என்னும் குறளில் அடைந்த தோல்விக்கு ஈடுகொடுக் கின்றன. மக்களின் மழலைச் சொல்லுக்குத் தோற்றவை யல்லவா இவை?

சுமந்திரன் மீட்சிப் படலம்

இன்பமும் துன்பமும்

திரும்ப அயோத்திக்கு வரமுடியாது என்று இராமன் அறிவித்து விட்டதால் சோர்ந்து வருந்தும் சுமந்திரனுக்கு இராமன் ஆறுதல் கூறுகிறான்: இன்பம் வந்தபோது இன் புறுபவர்கள், துன்பம் வந்தபோது துவளுவது பொருந்தாது என்கிறான்.

இன்பம் வந்துறும் எனின் இனியதாய் இடைத்
துன்பம் வந்துறும் எனின் துறக்கல் ஆகுமோ? (28)

என்பது பாடல் பகுதி. இது, நன்மை வருங்கால் இன்பமாய் நுகர்பவர், தீமை வருங்கால் துன்புறுவது ஏன்? (இரண்டிற்கும் ஈடு கொடுக்கத்தானே வேண்டும்?) என்னும் கருத்துடைய

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லல் படுவ தெவன் (379)

என்னும் திருக்குறளின் மறு பதிப்புபோல் உள்ளதல்லவா?

தயரதன் மோட்சப் படலம்

என்பு இலா உயிர்

கணவன் இறந்ததை அறிந்த கோசலை, கோடைக் காலத்தில் வெயில் சுடுகின்ற வேளையில் வந்து அகப்பட்டுக் கொண்ட எலும்பு இல்லாத புழு- பூச்சி முதலிய உயிர்கள் வெந்து விடுவதைப்போல், தன் உடலும் உள்ளமும் வெப்பம் அடைந்தாளாம்.

அயிர்த்தனள் நோக்கி மன்னற்கு ஆருயிர் இன்மை தேறி...
வெயில் சுடுகோடை தன்னில் என்பிலா உயிரின் வேவாள் (14)

என்பது பாடல் பகுதி. இது,

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம் (77)

என்னும் திருக்குறளை நினைவுபடுத்துகிறது அன்றோ!

சித்திர கூடப் படலம்

இனிய சொல்

இராமன் சீதைக்குச் சித்திர கூடத்தின் சிறப்பைக் காண்பித்துக் கொண்டு செல்கிறான். துளைகள் பொருந்திய குழலினும், நரப்பு எறிந்து மீட்டும் தமிழ் யாழினும் இனிய சொல் பேசும் கிளியே- எனச் சீதையை விளிக்கின்றான்:

குழுவு நுண்தொளை வேயினும் குறிநரம்பு எறிவுற்று
எழுவு தண்தமிழ் யாழினும் இனியசொல் கிளியே

(28)

என்பது பாடல் பகுதி. தண் தமிழ்யாழ் என்பதற்குக் குளிர்ந்த இனிய யாழ் என்பது பொருள். தமிழ் என்றால் இனிமை என்ற பொருள் இருக்க மற்றும் ஒரு கருத்து இதில் மறைந்து கிடக்கிறது. அதாவது:- இப்போது தமிழகத்தில் வீணைதான் ஆட்சி புரிகிறது. யாழைக் காணோம். பண்டு தமிழகத்தில் வீணையின் இடத்தில் யாழே விளங்கிற்று. வடக்கேயிருந்து வீணை வந்ததும் யாழ் மறையலாயிற்று. யாழ் தமிழ் இசைக் கருவி' என்னும் கருத்துதான் 'தமிழ் யாழ்' என்பதில் மறைந்திருப்பது.

திருவடி சூட்டு படலம்

உயிரும் ஒழுக்கமும்

பரதன் படைகளுடன் சித்திர கூடத்தை அடைந்தான். இந்தப் படைகள் தயரதன் அமைத்த படைகளே அல்லவா? இவற்றைத் தயரதனின் படைகள் என்கிறார் கம்பர். தயரதன், சொன்ன சொல் தவறாத ஒழுக்கத்திற்காக உயிரைவிட்டவன். அதை இங்கே குறிப்பிட்டுள்ளார். படைகள் பாலை நிலத்தையும் மருதம் போல் எண்ணிக் கடந்து சித்திர கூடம் சேர்ந்தனவாம்:

வன்தெறு பாலையை மருதம் ஆமெனச்
சென்றது சித்திர கூடம் சேர்ந்ததால்
ஒன்று உரைத்து உயிரினும் ஒழுக்கம் நன்றெனப் பொன்றிய புரவலன் பொருவில் சேனையே

(24)

என்பது பாடல். இதிலுள்ள உயிரினும் ஒழுக்கம் நன்று' என்னும் தொடர்,

ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

(131)

என்னும் திருக்குறளிலிருந்து பெறப்பட்டதன்றோ?

நிறையும் பொறையும்

நாடு திரும்பும்படி இராமனை வற்புறுத்தும் பரதன் பின் வருமாறு ஒரு கருத்து மொழிகிறான்: நிறை (கற்பு) நீங்கிய பெண்மையும், பொறுக்கும் ஆற்றல் இல்லாத தவமும், உண்மையான அருள் உள்ளம் இன்றிக் கடமைக்காகச் செய்யும் அறமும், மூத்தவனுக்கே பட்டம் என்னும் தொல்லோரின் முறையினின்றும் நீங்கிய அரசும் சிறப்புற மாட்டா என்று கூறுகிறான்:

நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும்
பொறையின் நீங்கிய தவமும், பொங்கு அருள் துறையின் நீங்கிய அறமும், தொல்லையோர் முறையின் நீங்கிய அரசின் முந்துமோ?

(100)

என்பது பாடல். மகளிர் நீர்மை = பெண் தன்மை = பெண்மை. இந்தப் பாடலின் முதல் அடியில், மகளிரைச் சிறையிட்டுக் காக்கும் காப்பு உண்மைக் காப்பாகாது; அவர்கள் தம் நிறையைத் (கற்பைத்) தாமே காத்துக் கொள்ளும் காவலே தலைமையான காவலாகும் என்னும் கருத்துடைய

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை

(57)

என்னும் குறளின் நீரோட்டத்தைக் காணலாம். அடுத்த இரண்டாம் அடியில், தமக்கு நேர்ந்த துன்பைப் பொறுத்துக் கொள்ளுதலும் எவ்வுயிர்க்கும் துன்பம் இழைக்காதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும் என்னும் கருத்துடைய

உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு

(261), என்னும் குறளின் நிழலோட்டத்தைக் காணலாம்.

வாய்மையும் தூய்மையும்

நாடு திரும்ப மறுக்கும் இராமன் பரதனிடம் வினவு கின்றான்: நாம் வாய்மைக்கு மதிப்பு அளித்தல் வேண்டும்; வாய்மை தவறிய வேறு யாதொன்றையும் உலகம் தூய்மையான உண்மையென ஒத்துக் கொள்ளுமோ?-- என வினவுகிறான்.

வாய்மை என்னும் ஈதன்றி வையகம்
தூய்மை என்றும் ஒன்று உண்மை சொல்லுமோ?

(115)

என்பது பாடல் பகுதி. ஈண்டு, தண்ணீரால் வெளி உடம்பைத் தூய்மை செய்யலாம்; ஆனால் உள்ளே உள்ள உள்ளத்தின் தூய்மையோ வாய்மையினால்தான் பெறப்படும் என்னும் கருத்துடைய

புறந்துய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்

(298)

என்னும் குறள் எண்ணத்தக்கது. இவ்வாறெல்லாம். கம்பர் திருக்குறளை முத்தே போல் போற்றித் தம் நூலில் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.