உள்ளடக்கத்துக்குச் செல்

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை/காலுறையும் கையுறையும்

விக்கிமூலம் இலிருந்து

4. காலுறையும் கையுறையும்(Pads & Gloves)

கிரிக்கெட் ஆட்டத்தில் பந்தடி ஆட்டக்காராகப் (Batsman) பந்தாடும் இடம் நோக்கிப் (Pitch) போகின்ற ஒரு ஆட்டக்காரரைப் பார்த்தால், 'அலங்கார புருஷராக' அவர் இருப்பதை நாம் காணலாம். தலையிலே தொப்பி, உள்ளே மார்புக் கவசம், இன்னும் சற்றுக் கீழே இறங்கி வந்தால் அடிவயிற்றுக் காப்பான் (Abdominal Guard) கைகளை மூடிய கையுறை, அதற்குள்ளே மெல்லுறை, தொடை காக்கும் மெத்தை, முன்கால் காக்கும் காலுறை, தடித்த காலணிகள் இப்படியாக ஆடச் செல்லும் பாதுகாப்பு முறைகளும் ஒரே நாளில் கிரிக்கெட் ஆட்டத்தில் உருவாகி வந்து விடவில்லை. சரித்திர ஆசிரியர் விவரிப்பது போல், 'கிரிக்கெட் ஆட்டம் பிறக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வளர்ந்தது'. என்பதுதான் வரலாறு கூறும் உண்மையாகும். அதே தன்மையில்தான் கையுறைகளும், காலுறைகளும் ஆட்டத்தில் இடம் பெற்று, மெருகேறி இவ்வாறு உருப்பெற்று இருக்கின்றன. பந்தெறியும் (Bowling) வேகத்தை 1933-ம் ஆண்டில் இங்கிலாந்தில் கணக்கெடுத்தபோது, நாட்டிங்காம்ஷயர் என்னும் பகுதியைச் சேர்ந்த ஹரால்டு லார்வுட் (Harold larwood) என்னும் பந்தெறி வீச்சாளர், மணிக்கு 148.8 கிலோ மீட்டர் வேகத்தில் எறிந்தார் என்ற வரலாற்றுச் சாதனையை ஜே.எம்.ஜோடி (J.M. Jodey) என்பவர் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். - அவ்வளவு கடுமையான வேகவீச்சுப் பந்தை வெறுங்காலால் யாரால் பயமில்லாமல் தடுத்து ஆடுவதற்கு எதிரே நிற்க முடியும்? இம்மாதிரிப் பந்தினை வேகமாக . எறிவார்கள் என்று எதிர்பார்த்துத்தானோ என்னவோ, இதற்கு முன்னேயே இப்படித் தற்காத்துக் கொண்டாடும் உறைகளை கண்டுபிடித்திருப்பார்களோ என்று தான் இன்று எண்ண வேண்டியிருக்கிறது? ஆரம்ப காலத்தில் பந்தெறியாளர்கள் (Bowler) இப்பொழுது போல் கைசுழற்றி எறியாமல், கீழே உருட்டித்தான் எறிந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது பந்தை எளிதாகத் தடுத்தாடிக் கொண்டிருந்தார்கள் ஆட்டக்காரர்கள். நாளாக நாளாக பந்தெறியும் வேகத்தில் விரைவு கூடி விடவே, அதனை தடுத்தாட ஒரு வழியைக் கண்டுபிடிக்க ஒரு சிலர் முனைந்தனர். 1880ம் ஆண்டில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. சர்ரே மாகாணத்தைச் சேர்ந்த ஃபார்ன்காம் எனும் பகுதியில் வாழ்ந்த ராபர்ட் ராபின்சன் என்பவர், தனது ஒரு காலில் மெல்லிய பலகைத் துண்டுகளை வைத்து, தோல்பட்டையால் கட்டிக் கொண்டு விளையாட வந்து சேர்ந்தார். கூடி நின்றவர்கள் கைகொட்டி நகைத்தனர். இப்படி ஒரு கண்டுபிடிப்பா என்று ராபின்சனின் நண்பர்கள் சிரித்தனர். கண்டவர்கள் அனைவரும் கேலிசெய்தார்களே தவிர, அவர் காலில் கட்டிக்கொண்டு பாதுகாப்புடன் ஆடிய காட்சியானது அவர்கள் மனதைவிட்டு மாறவோ மறையவோ இல்லை. நீங்காத நினைவாக அந்த நிகழ்ச்சி கிரிக்கெட் ஆட்ட உலகில் கொடிகட்டிப் பறந்ததன் விளைவு, 1841ம் ஆண்டு, ஒரு புதிய அமைப்பில் காலுறையைக் கொண்டு வந்திது. நாட்டிங்காம்ஷயரைச் சேர்ந்த தாமஸ் நிக்சன் என்பவர், கார்க்கால் ஆன புதிய காலுறைகளை தயார் செய்து கொண்டு வந்து ஆடினார். இருந்தாலும் முந்தைய உறைகளை விட இது திருந்திய வடிவம் பெற்றிருந்ததே தவிர திருப்திகரமானதாக அமையவில்லை. என்றாலும், ஆட்டத்தில் இம்முறை இதமாக இடம்பெற்றுக்கொண்டது. ஆக்ஸ்போர்டைச் சேர்ந்த H. டாபினி (H. Daubeny) என்பவர் நல்ல முறையான காலுறைகளைக் கண்டுபிடித்தார் என்ற புகழை சூடிக்கொண்டார், என்று 'விஸ்டன்' என்ற பத்திரிக்கை புகழாரம் சூட்டுகிறது. அதன் பிறகே, நல்ல முறையில் இலேசாக இருப்பது போலவும், மெத்தை நிறைந்ததாகவும், பல அளவுகளில் உள்ளது போலவும் அமைக்கப்பட்டு. இன்றைய ஆட்டத்தில் முக்கியமான ஒன்றாக காலுறைகள் கோலோச்சி வருகின்றன. கையுறைகள் : காலுறைகள் போலவே, கையுறைகளும் ஆட்டத்தில் இடம்பெறக் காரணமாயிருந்தது, கை சுற்றி வேகமாகப் போடும் பந்து வீச்சுதான். 1835ம் ஆண்டு பெலிக்ஸ் வானோ ஸ்டார்ட் (Felix Wanostrocht) என்பவர்தான் முதன் முதலாக கையுறைகள் (Gloves) தயாரித்துப் பயன்படுத்தினார் என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். டேனியல் டே (Daniel Day) என்பவர்தான் விரைவுப் பந்து வீச்சின் வேகத்திற்கு ஈடாக, ரப்பர் குழாய்களால் ஆனக் கையுறைகளைத் தயார் செய்தார் என்று பலர் கூறினாலும், ஃபெலிக்ஸ் தான் முதலில் பயன்படுத்தினார் என்றே வரலாறு கூறுகிறது. ஃபெலிக்ஸ், குழந்தைகள் போட்டுக்கொள்கின்ற கையுறைகளில் சிறுசிறு ரப்பர்த் துண்டுகளை பதித்து 1835ம் ஆண்டு நடந்த கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்தினார் என்பதே அந்த வரலாற்றுக் குறிப்பு. அதன் பிறகு புதிய கையுறைகள் கனத்த மெத்தை அமைப்புடன், பந்தாட்டக்காரரின் விரல்களுக்குப் பாதுகாப்பாக தடித்த அளவில் செய்யப்பட்ட அமைப்புடன் உருவாக்கப்பட்டன. அஃதேபோல், விக்கெட் காப்பாளருக்கும், கையுறைகள் தேவை என்பதன் முடிவாக, 1848ம் ஆண்டு, டியூக்ஸ் கம்பெனியரால் தயாரித்தளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1850 ம் ஆண்டு, விக்கெட் காப்பாளருக்கு உட்கவசம் வேறு தயாரித்துத் தரப்பட்டது. அதுவே மெல்லிய பருத்தி நூலாலான உட்கையுைறைகளாக (Inner Gloves) மாறியது. ஆட்டத்தின் போது, அடிக்கடி நீரில் நனைக்கப்பட்டு ஈரமாகவே பயன்படுத்தப்படுகிறது.

அதற்குப் பிறகு, அடிவயிற்றுக் காப்பானும் காலப்போக்கில் ஆடுவோருக்கு அபயம் அளிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. இவ்வாறாக ஒருபுறம் பந்துவீச்சில் வேகமும் விறுவிறுப்பும் ஏற்பட்டு, எதிராட்டக்காரர் காக்கின்ற விக்கெட்டை வீழ்த்த முயற்சிகள் தொடர்ந்தபோது, மறுபுறம் விக்கெட்டைக் காத்து நிற்கவும், வேகமாக ஓடிவரும் பந்தை அடித்து விரட்டி ஒட்டமெடுக்கவும் மேற்கொண்ட முயற்சியில் தன் தேகத்தின் பாதுகாப்பிற்காகவும், தேவையான இடங்களுக்கெல்லாம் உறைகள் மாட்டி 'காப்பான்களாக' (Guards) மாற்றிக்கொண்டு ஆடினர்.

பார்ப்பதற்கு அழகாகக் காட்சி தருகின்ற காலுறைகள் கையுறைகள் வருவதற்குக் காரணமாயிருந்த பந்து வீச்சின் வளர்ச்சி பற்றி இனி காண்போம்.