கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/வாலைப்பிடி

விக்கிமூலம் இலிருந்து

34. வாலைப்பிடி

அமைப்பு:

ஆட வந்திருக்கும் ஆட்டக்காரர்களையெல்லாம் ஐந்து ஐந்து பேர்கள் கொண்ட குழுவாகப் பிரித்து, பல குழுக்களாக்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவைச் சேர்ந்த ஐவரும், சங்கில் கோர்த்தது போல, முன்னவர் இடுப்பைப் பிடித்துக் கொண்டவாறு நிற்க ஐந்தாவது ஆளாகக் கடைசியாக நிற்பவரின் முதுகுப்புற பகுதியின் கீழ்ப்புறம், ஒரு கைக்குட்டையை செருகிவிட, அது வால்போல் தொங்கிக் கொண்டிருக்கும்.

ஆடும் முறை:

ஆடுங்கள் என்று சைகைக் கிடைத்தவுடன் அந்தந்த ஐவரடங்கிய குழு ஒவ்வொன்றும், வளைந்து, நெளிந்து ஆடி, அடுத்த குழுவிலிருக்கும் கடைசி ஆளின் வாலைப் பிடிக்க முனைய வேண்டும்.

அதே சமயத்தில், தமது குழுவின் வாலையும் மற்றவர் பிடித்து இழுத்து விடாதபடி காப்பாற்றிக் கொள்ளவும் வேண்டும்.

குழுவில் இருக்கும் (தலைமை) முதல் ஆட்டக்காரர்தான் அடுத்த குழுவினரின் வாலைப் பிடித்து இழுக்கும் உரிமையைப் பெறுகின்றார். மற்ற ஆட்டக்காரர்கள் அவருக்கு உதவியாகத்தான் இருக்க வேண்டுமேயொழிய, தாங்களே யாரும் முந்திக் கொண்டு வாலைப் பிடிக்கக் கூடாது. அவ்வாறு மற்றவர்கள் பிடித்தால், பிடிபட்டு வாலை இழந்த குழு, ஆட்டத்தை விட்டு வெளியேறாது.

எந்தக் குழுவின் வால் தொடப்பட்டு இழுக்கப்படுகிறதோ, அந்தக் குழு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படும். எந்தக் குழு சங்கிலி போன்ற தன் இணைப்பை அறுத்துக் கொள்கின்றதோ, அந்தக் குழுவும் ஆட்டத்தில் தொடர்ந்து பங்குபெறுகின்ற வாய்ப்பினை இழந்துவிடும்.

இறுதிவரை தன் வாலைக் காத்துக் கொள்கின்ற குழுவே விளையாட்டில் வெற்றி பெற்றக் குழுவாகும்.