கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/யாருக்கு யார்?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

35. யாருக்கு யார்?

அமைப்பு:

முன் ஆட்டம் போலவே, ஆட வந்திருப்பவர்களை 5 பேர் கொண்ட குழுவாகப் பிரித்திருக்க வேண்டும்.


முதல் ஐவரை அழைத்து ஒவ்வொருவருக்கும் 1,2,3,4,5 என்று ஒரு எண்ணைக் கொடுத்துவிட வேண்டும்.

மற்றக் குழுக்கள் எல்லாம், குறிப்பிட்டிருக்கும் எல்லைக்கு வெளியிலே அமர்ந்து கொண்டு, வேடிக்கை பார்த்து உற்சாகப் படுத்துகின்றவர்களாக இருக்க வேண்டும்.

ஆடும் முறை:

தங்களுக்கென்று ஒரு எண்ணைப் பெற்ற அந்த ஐவரும் ஆடுகளத்தினுள் நிற்க வேண்டும்.

ஆட்டத்தைத் துவக்குவதற்குரிய சைகைக் கிடைத்தவுடன், 1வது ஆட்டக்காரரை 2-ம் எண்ணுள்ள ஆட்டக்காரரும் 2வது ஆட்டக்காரரை மூன்றாம் எண்ணுள்ள ஆட்டக்காரரும், 3வது ஆட்டக்காரரை 4-ம் எண்ணுள்ள ஆட்டக்காரரும், 4வது ஆட்டக்காரரை 5-ம் எண்ணுள்ள ஆட்டக்காரரும், 5-ம் ஆட்டக்காரரை 1வது எண்ணுள்ள ஆட்டக்காரரும் விடாது விரட்டிப் பிடிக்க முயல வேண்டும்.

தனக்குரிய ஆளைத் தேடி விரட்டிப் பிடிக்கும் முயற்சியில் அவரவர் ஈடுபட்டிருக்கும் பொழுது, தன்னைப் பிடிக்க பின்னால் வருபவரிடமிருந்தும் தப்பித்துக் கொள்ள வேண்டும்.

யார் யாரை முதலில் தொடுகின்றாரோ, அவரே அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவராவார்.

பிறகு, வேறு ஒரு குழுவை (ஐவரை) அழைத்து அதேபோல் எண்களைத் தந்து ஆடச் செய்ய வேண்டும்.

குறிப்பு:

ஆடுகள எல்லைக்கு அப்பால் ஓடக் கூடாது என்று விதியமைத்துக் கொள்வது அந்தந்த ஆடுகள இடத்தின் அமைப்பையும், அமைப்பாளரின் நோக்கத்தையும் பொறுத்ததாகும்.

இதே ஆட்டத்தை ஏழு அல்லது எட்டு பேர்களை வைத்துக் கூட, எளிதாக ஆடலாம். ஆனால் ஆர்வத்துடன் ஆடி மகிழவேண்டும்.