கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/வேட்டை முயல்

விக்கிமூலம் இலிருந்து

36. வேட்டை முயல்

அமைப்பு:

எல்லோரும் 3 அடி இடைவெளி இருக்குமாறு உட்புறம் ஒருவர்முகம் பார்த்து ஒருவர் பார்த்து நிற்பது போல திரும்பி வட்டமாக நிற்க வேண்டும். விரட்டுபவர், ஓடுபவர் என்ற இருவர்மட்டும் வட்டத்திற்கு வெளியே நின்றுகொண்டிருக்க வேண்டும்.

ஆடும் முறை:

ஆடுங்கள் என்று அனுமதி அளித்தவுடன் விரட்டுபவர் ஓடுபவரை விரட்டித் தொட முயற்சிப்பார். விரட்டப்படுபவர். வட்டத்தைச் சுற்றியே தப்பி ஓடிக் கொண்டிருப்பார்.

தான் ஒட முடியாத நிலையில், பக்கத்திலே உள்ள வட்டத்தில் நிற்பவரைத் தொட்டுவிட்டு, அவரிடத்திலே நிற்க, தொடப்பட்டவரோ, தன் இடத்தை அவருக்கு நிற்பதற்காகக் கொடுத்துவிட்டு, தான் விரட்டுபவராக மாற, இதுவரை விரட்டி வந்தவர், இப்போது விரட்டப்பட்டு, வட்டத்தைச் சுற்றி ஒடித் தப்பிக்க முயல்வதாக ஆட்டம் தொடரும்.

குறிப்பு:

வேட்டை நாய்க்குப் பயந்து ஓடிய முயல், பக்கத்து முயலை அழைத்தவுடன், முயல் நாயை விரட்ட, நாய் பயந்து ஓடிய கதை போல, விரட்டப்படுபவர் பயந்து, இன்னொருவரை அழைக்க, அவர் விரட்டுபவராக மாறி ஆட இவ்வாறே ஒருவரை ஒருவர் தொட்டு ஆட்டத்தைத் தொடர வேண்டும்.