விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/அதிர்ச்சி என்றால் அப்படி ஒரு அதிர்ச்சி

விக்கிமூலம் இலிருந்து

17. அதிர்ச்சி என்றால் அப்படி ஒரு அதிர்ச்சி

'கிரிக்கெட் ஆட்டம் என்றால், ஏதோ மேயப்போகும் மாடு மெதுவாக அசைந்தசைந்து செல்வதுபோல, மிக மெதுவாக நடைபெறும் ஆட்டம். ஒருவர் பந்தை எறிய, மற்றொருவர் அடிக்க, பந்து போகும் திசையில் உள்ளவர் மட்டும்பரபரப்புடன் பந்தைப் பிடித்து எறிய, இவ்வாறு நாள்முழுவதும் நடைபெறும் ஆட்டம்' என்று வர்ணிப்பவர்கள் பலர் உண்டு.

'மிகவும் டல்லான ஆட்டம்’ மசமசவென்று எருமைமாட்டு மேலே மழை பெய்வது போல என்று ஏளனப்படுத்திப் பேசுவோரும் உண்டு. ஆனால் ஆயிரக்கணக்கானோர் நாள் கணக்காக ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு, உற்சாகமாகப் பார்த்து மகிழ்கின்றார்கள் என்றால், அதில் ஏதோ அற்புதமான கட்டம். ஆச்சரியமான சூட்சமம் என்னவோ இருக்கின்றது என்றுதானே அர்த்தம்!

சில சமயங்களில் வேகமாக முடிவு பெற்று விடுகின்ற ஆட்டமாகவும் அமையும். மற்றும் சில நேரங்களில் திகில் உண்டாக்குகின்ற, திரில் (Thill) ஏற்படுத்துகின்ற வகையாலும் ஆட்டம் உச்சகட்டத்தை அடைவதுமுண்டு.

எப்பொழுதாவது ஏற்படுமா என்றால், எப்பொழுதும் ஏற்படலாம் என்ற அளவில் ஏராளமான சுவையான நிகழ்ச்சிகள் கிரிக்கெட் வரலாற்றிலே இடம் பெற்றிருக் கின்றன. அவற்றில், அதிர்ச்சிதந்த ஒரு ஆட்டம் பற்றி இங்கே காண்போம்.

1882 ஆம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டிலே ஓவல் மைதானத்திலே நடந்ததுதான் அந்த அதிர்ச்சி தரும் நிகழ்ச்சி. இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நடைபெற்ற போட்டிஅது. ஆஸ்திரேலியா ஆடிமுடித்துவிட்டு,பந்தெறியும் வாய்ப்பில் இருந்தது. இங்கிலாந்து 85 ஓட்டங்கள் எடுத்தால், வெற்றி பெறலாம் என்ற நிலையில் ஆட்டத்தை ஆடிக்கொண்டிருந்தது.

இங்கிலாந்தே வெற்றி பெறவேண்டும் என்றுவிரும்பாத இங்கிலாந்து ரசிகர்கள் இருப்பார்களோ? எல்லோருடைய நினைவிலும் தங்கள் தாயகமே வெற்றி பெறவேண்டும் என்று தணியாத ஆவலில், தணல் மேல் உட்கார்ந்திருப்பவர்கள் போல ரசிகர்கள் அமர்ந்திருந்தனர்.

அவர்கள் பிரார்த்தனையை ஆண்டவன் கேட்கவில்லையோ என்னவோ! 60 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 பேர் பலியாகி, ஆட்டமிழந்து மைதானத்தை விட்டு வெளியேறி வந்துவிட்டனர். இன்னும் 5 விக்கெட்டுகள்தான் மீதி இருக்கின்றன என்று கொஞ்சம் மனம் தளர்ந்த நிலையிலும் தைரியப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது, மடமடஎன்று மற்ற நான்கு விக்கெட்டுகளும் வீழ்ந்துபோயின.

இங்கிலாந்து குழுவில் இருப்பது ஒரே ஒரு விக்கெட்டுதான். வெற்றி பெறுவதற்காக ஓடி எடுக்க வேண்டிய ஓட்டங்களோ இன்னும் 10 இருந்தன. திக் திக் என்று இதயம் துரிதகதியில் அடித்துக்கொள்ள ஆயிரக்கணக்கானோர் என்னநடக்குமோ என்று எண்ணி மயங்கும்போது, ஒரு ரசிகர், இங்கிலாந்தே வெல்லவேண்டும் என்று எண்ணி எண்ணி மருகிய ரசிகர். பாவம் வேகமாக அடித்துக்கொண்டும் துடித்துகொண்டும் ஓடிய இதயத்தினை அதிர்ச்சிக்கு மேலும் ஆளாக்கிக் கொண்டார்.

அதனால் என்ன நடந்தது என்று எண்ணுகின்றீர்கள்! அதிர்ச்சிக்கு ஆளான அந்த ரசிகர் அதே இடத்தில் மாரடைப்பால் இறந்து போனார்!

ஆட்டத்தைப் பார்த்து ரசிக்க வந்த ரசிகரை, அப்படி என்ன அதிர்ச்சி அலைக்கழித்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்! அதையே உணர்ச்சிப் பிழம்பான உச்சநிலை (Tension) என்றனர். திகில் நிறைந்த நிலை (Thrill) என்றனர். ஆட்ட அதிர்ச்சியே அவரின் ஆவியைப்போக்கடித்துவிட்டது.

அப்புறம் என்ன? 10 ஓட்டங்கள் எடுத்தால்வெற்றி என்ற நிலையில் இருந்த இங்கிலாந்தின் கடைசி ஆட்டகாரர் ஆடினார். முதல் பந்தெறியில் (Ball) 2 ஓட்டங்கள் எடுத்து, ஆஸ்திரேலியர் வீசிய அடுத்த பந்தெறியில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தோற்றது, ஆஸ்திரேலியா அந்த ஆட்டத்தில் வென்றது.

என்றாலும், அப்படி ஒரு அதிர்ச்சியை உண்டு பண்ணி, ஆளையே மரணத்திற்குள்ளாக்கும் வேகமும் கிரிக்கெட் ஆட்டத்திற்கும் இருக்கிறது என்று எண்ணத்தானே தோன்றுகிறது.!