கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/நினைவாற்றல்

விக்கிமூலம் இலிருந்து

57. நினைவாற்றல்

மாணவர்களை நான்கு சம எண்ணிக்கையுள்ள குழுக்களாகப் பிரிக்கவேண்டும். பிரித்த பிறகு, அவர்களை குழு வாரியாக, உட்காரச் செய்ய வேண்டும்.

ஆசிரியர் அவர்களை முன்னே வந்து நின்று, தான் முன்னரே தயாரித்துக் கொண்டு வந்திருக்கும் இருபத்தி ஐந்து (25) சொற்களை, நிறுத்தி, நிதானமாக, இருமுறை வாசிக்கவேண்டும்.

உதாரணமாக, அன்பு, அறிவு, ஆசை, அச்சம், அடக்கம், ஆண்மை, ஆற்றல், ஆண்டவன், ஆத்திரம், ஆனந்தம், அற்புதம், அதிசயம், அறிவியல், அறிஞன், அகிலம் என்பவை போன்று சிறுசிறு சொற்களாக இருப்பது நல்லது.

சொற்களைக் கேட்டுத் தங்கள் நினைவில் பதித்துக் கொண்ட குழுக்கள், தங்களுக்குள்ளேயே அமர்ந்து, சொற்களை நினைவுபடுத்திக் கொண்டு, தங்களுக்கெனக் கொடுத்திருக்கும் தாளில் எழுதிக் காட்ட வேண்டும்.

ஒவ்வொரு சரியான சொல்லுக்கும், ஒவ்வொரு மதிப்பெண் உண்டு. அதிக மதிப்பெண் பெற்ற குழுவே வெற்றி பெற்றதாகும்.