உள்ளடக்கத்துக்குச் செல்

அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்/6. லெனினைப் பற்றிய புத்தகங்கள்

விக்கிமூலம் இலிருந்து

6
லெனினைப் பற்றிய புத்தகங்கள்

முப்பதாம் ஆண்டுகளில், முக்கியமாக அதன் பிற்பகுதியிலேயே, லெனினைப் பற்றிய நூல்கள் தமிழில் வெளிவரத் தொடங்கின எனலாம். 1933-ம் ஆண்டிலேயே திருசிரபுரம் அ. நடராஜன் எழுதிய “லெனின்: ருஷ்யாவின் விடுதலை வீரன்” என்ற நூல் வெளிவந்தது. 32 பக்கங் கொண்ட இந்தச் சிறுநூலை சென்னை தமிழரசுப் புத்தகாலயம் வெளியிட்டிருந்தது. சிறு நூலாயினும், தமிழில் புத்தக வடிவில் லெனினைப் பற்றி வெளிவந்த முதல் வாழ்க்கை வரலாறு இதுதான் என்ற சிறப்பு இதற்குண்டு. இதன்பின் முப்பதாம் ஆண்டுகளின் பிற்பாதியில் லெனினைப் பற்றி மேலும் சில நூல்கள் வெளிவந்தன. இவற்றில் முதலாவது புத்தகம் “காந்தியும் லெனினும்” என்ற தலைப்பில் முதுபெரும் அறிஞரும், எழுத்தாளரும், பத்திரிகையாளரும், அந்நாளில் ரங்கூனிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஜோதி என்ற மாசிகையின் ஆசிரியருமான வெ. சாமிநாத சர்மா எழுதிய ஒப்புநோக்கு நூலாகும். சுமார் 80 பக்கங்கள் கொண்ட இந்நூலை ரங்கூன் மின்னொளிப் பிரசுரம் 1937-ல் வெளியிட்டிருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ராணுவ வெறியர்கள் ரங்கூன் நகரின் மீது குண்டுகளை வீசி நாசம் செய்தபோது, பர்மாவிலிருந்து வெளியேறித் தமிழகத்துக்குத் திரும்பி வந்த சாமிநாத சர்மா பல குறிப்பிடத்தக்க நூல்களை எழுதுவதில் தமது நேரத்தையும் சக்தியையும் செலவிட்டு வந்தார். இதன் பயனாக, யுத்த காலத்தில் அவர் எழுதிய நூல்களில் சோவியத் ருஷ்யாவைப் பற்றியும், காரல் மார்க்ஸ் பற்றியும் எழுதப்பட்ட நூல்கள் இரண்டும் குறிப்பிடத்தக்கவையாகும். சோவியத் ருஷ்யா என்ற அவரது நூலே, தமிழில் சோவியத் யூனியனைப் பற்றி முதன்முதலில் வெளிவந்த முழுமையான வரலாறு என்று கூற வேண்டும். அதே போல் காரல் மார்க்ஸ் என்ற அவரது வரலாற்று நூலும், தமிழில் மார்க்சைப் பற்றியும் அவரது கொள்கை, பணி ஆகியவை பற்றியும் முதன்முதலாக வெளிவந்த விரிவான நூலாகவே திகழ்ந்தது. இவையிரண்டும் சக்தி காரியாலய வெளியீடுகளாக வெளிவந்தன.

லெனினது வாழ்க்கை வரலாறு பற்றித் தமிழில் வெளிவந்த இரண்டாவது நூல், வி. கிருஷ்ணசாமி எழுதிய “லெனின்” என்ற நூலாகும். இது 1939-ல் சென்னை நவயுகப் பிரசுராலய வெளியீடாக வெளிவந்தது. சுமார் 150 பக்கங் கொண்ட இந்நூலே தமிழில் முதன்முதலில் வெளிவந்த முழுமையான, விரிவான வாழ்க்கை வரலாறு எனலாம். இந்நூல் லெனினது வாழ்க்கை , பணி. போதனைகள், சாதனைகள் ஆகியவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு எடுத்துக் கூறியது. இதன்பின் 1940-ல் டாக்டர் பா. நடராஜன் எழுதிய “லெனினும் ரஷ்யப் புரட்சியும்” என்ற நூல் வெளிவந்தது.

மேலும், மேற்கூறிய நவயுகப் பிரசுராலயம் 1938-ல் சென்னையில் தொடங்கப்பட்ட போது, அந்தப் பிரசுராலயத்தின் முதல் வெளியீடாக, கம்யூனிஸத் தத்துவங்கள் பற்றிய “எல்லோரும் ஓர் குலம்” என்ற நூல் வெளிவந்தது. இதனை எழுதியவர் தமிழ் வாசகர்கள் எழுத்தாளர்கள் மத்தியில் “ப.ரா” என்று பிரபலமாகியிருந்த முதுபெரும் தேச பக்தரும் சிறந்த எழுத்தாளருமான ப. ராமசாமி. இந்நூல் அக்டோபர் புரட்சி, அதன் சாதனைகள், சோஷலிசக் கோட்பாடுகள் முதலியவற்றைக் கற்றாராய்ந்து எழுதிய சிறந்த நூலாக விளங்கியது. சோஷலிசத்தையும், அதனை அடைவதில் ரஷ்ய மக்கள் நடத்திய போராட்டத்தையும், பெற்ற வெற்றியையும் புரிந்து கொள்வதற்கு, இந்த நூல் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு அந்நாட்களில் ஒரு பாலபாடமாக விளங்கியது என்றே சொல்லலாம்.

யுத்த காலத்தில்...

இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் சோவியத்யூனியன் தன் மீது தொடுக்கப்பட்ட நாஜித் தாக்குதலை எதிர்த்து மாபெரும் தேசபக்தப் போரை நடத்திவந்த நாற்பதாம் ஆண்டுகளின் முற்பகுதியிலும், அதன்பின் போரில் சோவியத்யூனியன் வெற்றி பெற்ற காலத்திலும், தமது தாயகத்தைப் பாதுகாப்பதில் சோவியத் மக்களும் போர்வீரர்களும் புரிந்த வீரச் செயல்களைக் குறித்தும், அவர்கள் பாதுகாத்து நின்ற லட்சியங்களைக் குறித்தும், சோஷலிசத்தின் தனிச் சிறப்புமிக்க ஜீவசக்தியையும் வலிமையையும் குறித்தும், தமிழில் கட்டுரைகளும், சிறு பிரசுரங்களும், புத்தகங்களும் இடையறாது வெளிவருவது மிகவும் சகஜமாக இருந்தது. மேலும், இந்தக் காலகட்டத்தில் மார்க்சிய, லெனினிய நூல்களின் மீதும், சோவியத் நூல்களின் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடை அகற்றப்பட்டதன் பயனாக, இத்தகைய புத்தகங்களும் பெருமளவில் இங்கு வந்தன. இதனால் சோவியத் யூனியனையும் அக்டோபர் புரட்சியையும் பற்றிய நூல்களை மட்டுமல்லாமல், தலைசிறந்த சோவியத் நாட்டு இலக்கியப் படைப்புக்கள் பலவற்றையும் தாராளமாகப் படித்துப் பார்க்கக் கூடிய வாய்ப்பு எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கிட்டியது. இந்தக் கால கட்டத்தில் ‘சோவியத் நண்பர்கள் சங்கம்’ அமைக்கப்பட்டதும், அது தமிழ்நாடு முழுவதிலும் செயல்பட்டதும், இந்த வாய்ப்பினை மேலும் ஊக்குவித்தது.

இந்தக் காலத்தில்தான் தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் ஏனைய பல விஷயங்களோடு, மாக்சிம் கார்க்கி, மிகாயில் ஷோலகோவ், இலியா இரென்பர்க் முதலிய பிரபல சோவியத் எழுத்தாளர்களின் கதைகள் உட்பட, பல சோவியத் சிறு கதைகளின் மொழிபெயர்ப்புக்களும் இடம் பெற்று வந்தன. மேலும், யுத்த ஆண்டுகளின் போது மீ. லி. சபரிராஜன் மொழி பெயர்த்த சுமார் 20 ரஷ்ய, சோவியத் சிறுகதைகளின் தொகுதி ஒன்றும் “ருஷ்யச் சிறுகதைகள்” என்ற தலைப்பில் வெளி வந்தது. இவற்றோடு, முன்னர் குறிப்பிட்ட ப. ராமசாமி (ப.ரா.), மாக்சிம் கார்க்கியின் உலகப் புகழ் பெற்ற நாவலைச் சற்றே சுருக்கப்பட்ட வடிவில் தமிழாக்கி “அன்னை” என்ற தலைப்பில் 1946-ல் வெளியிட்டார். இந்த வெளியீடு அந்தக் காலத்தில் குறிப்பிடத்தக்கதோர் நிகழ்ச்சியாக விளங்கியது. இதன் பின்னர் அவர் “அன்னை” நாவலை நாடக வடிவிலும் தயாரித்தார்; நாற்பதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தயாரான இந்த நாடகம், திருநெல்வேலியில் மேடையில் அரங்கேற்றமாகிப் பலமுறை நடைபெறவும் செய்தது.


இந்திய சுதந்திரத்திற்குப் பின்னால்...

1947 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே ராஜீய உறவுகள் நிறுவப்பட்ட பிறகும், 1947 ஆகஸ்டு மாதத்தில் இந்தியா சுதந்திரமடைந்த பிறகும், சோவியத் யூனியனைப் பற்றிய புத்தகங்களும், சோவியத் எழுத்தாளர்களின் நூல்களும் தமிழில் வெளிவருவது மிகமிக அதிகரித்தது. மாக்சிம் கார்க்கியின் “தாய்” நாவலின் முழுமையான மொழிபெயர்ப்பும் மற்றும் நிக்கொலாய் ஆஸ்திரோவ்ஸ்கி, மிகாயில் ஷோலகோவ், இலியா இரென்பர்க், அலெக்சி டால்ஸ்டாய் முதலியோரின் நூல்களும், மற்றும் பல சோவியத் இலக்கியங்களும் ஐம்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தமிழில் வெளிவரத் தொடங்கின. இவற்றைப் பிரபல தமிழ் எழுத்தாளர்களான எஸ். ராமகிருஷ்ணன், கு. அழகிரிசாமி, எஸ். சங்கரன், வல்லிக்கண்ணன், அ.லெ. நடராஜன் முதலியோரும் மற்றும் பிறரும் தமிழாக்கியிருந்தனர். மாக்சிம் கார்க்கியின் முக்கியமான நூல்கள் யாவும் இந்தக் காலத்தில் தமிழில் வெளிவந்தன. மாக்சிம் கார்க்கியின் நூல்களும் நிக்கோலாய் ஆஸ்திரோவ்ஸ்கியின் “வீரம் விளைந்தது” என்ற நூலும் தமிழகத்தைச் சேர்ந்த பல படைப்பிலக்கிய கர்த்தாக்களைப் பெரிதும் கவர்ந்து அவர்களைத் தமது செல்வாக்குக்கு ஆட்படுத்தின என்றே சொல்லலாம். குறிப்பாக, கார்க்கியின் தாய் நவீனமும், ஆஸ்திரோவ்ஸ்கியின் நாவலும், உலகில் சர்வஜன நீதியும் நியாயமும் நிலைப்பதற்கான போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட எழுத்தாளர்களுக்கு ஓர் இலக்கியக் கொள்கைப் பிரகடனம் போலவே பயன்பட்டன. உண்மையான மனிதாபிமானம் என்றால் என்ன என்பதைப் பல தமிழ் எழுத்தாளர்களுக்கும் கற்றுக் கொடுத்ததும் மாக்சிம் கார்க்கியே எனலாம்.

சோவியத் இலக்கியங்களின் செல்வாக்கும், அக்டோபர் புரட்சியின் செல்வாக்கும், சோவியத் மக்களும் அரசும் சாதித்த சாதனைகளும், இளம் தலைமுறையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் மட்டும்தான் உணரப்பட்டன என்பதில்லை. முதுபெரும் எழுத்தாளர்கள் சிலர் மத்தியிலும் அதனை உணர முடிந்தது. உதாரணமாக, மகாகவி பாரதியின் சமகாலக் கவிஞராக விளங்கியவரும், முப்பதாம் ஆண்டுகளின் போது தமது மனிதாபிமானமும் தேசபக்தியும் மிக்க கவிதைகளின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான வருமான கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, ஐம்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில், தமது அந்திம காலத்தில், 77 ஆவது வயதில் சோவியத் யூனியனைப்பற்றி ஒரு வெண்பா எழுதினார். அது வருமாறு :

யாதும் என் ஊரே
எவரும் என் கேளிரே
பூதலம் யார்க்கும்
பொதுவே யென்-றோதிய நற்
போதனையை முற்றும்
புதிய ருஷியா மக்கள்
சாதனையிற் கொண்டார்
தமக்கு.

மேலும், நெல்லை சோ. சண்முகம் மொழி பெயர்த்து வெளியிட்ட டைசன் கார்ட்டரின் “ரஷ்யாவின் ரகசிய ஆயுதம்” என்ற நூலுக்குத் தாம் எழுதிய முன்னுரையில் கவிமணி பின்வருமாறு எழுதியிருந்தார் :

“இரஷ்ய ஆட்சி பொது மக்கள் ஆட்சி; பொதுவுடமை ஆட்சி. அதனைச் சர்வாதிகாரம் என்பது தவறு. இரஷ்யர்கள் கூட்டாக உழைக்கிறார்கள். உழைப்பின் பயனை அனுபவிக்கிறார்கள்; தம்மைத் தாமே ஆண்டு கொள்கிறார்கள். அதற்கேற்ற சமூக அமைப்பை அமைத்து அதன் வழியிலே செல்கின்றார்கள். அங்கே இரப்பாரும் இல்லை; புரப்பாரும் இல்லை; ஆண்டியும் இல்லை; ஆண்டையும் இல்லை; வயிற்றை எக்கித் திரிவோரையும் வயிற்றை உப்ப வைத்துத் திரிவோரையும் காண முடியாது. தன்னலம் பேணாமல் பொது நலம் பேணி உயர்கின்றது நாடு. இப்படி ஒரு நாடு இருந்தால் அதுவே ஒரு பூலோக சுவர்க்கம் என்பதற்கு ஐய மென்ன?”

இதே போல், பாரதியின் சமகாலக் கவிஞரும். பல நூல்களைக் எழுதிக் குவித்தவருமான யோகி சுத்தானந்த பாரதி பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் பல்லாண்டுக் காலத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டுவிட்டு, ஐம்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அந்த ஆசிரமத்தை விடுத்து வெளியேறி வந்த பின்னர், ஐம்பதாம் ஆண்டுகளின் மத்தியில், சோவியத் யூனியனுக்குச் சென்ற ஒரு கலாசாரப் பிரதிநிதிக் குழுவில் தாமும் ஒருவராகப் போய் வந்தார். இந்தப் பயணத்தின் போது அவர் அக்டோபர் புரட்சியின் சாதனைகளை நேரில் கண்ணாரக் காணும் வாய்ப்பினைப் பெற்றார். அந்தச் சாதனைகள் அவர் மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. இதன் பயனாக, அவர் சோவியத் யூனியனிலிருந்து திரும்பி வந்த பின்னர், சோவியத் யூனியனையும் அதன் சாதனைகளையும் பற்றிப் பல பாடல்கள் எழுதினார். இவை “சோவியத் கீதாஞ்சலி”, “லெனின்- காந்தி” என்ற தலைப்புக்களில் அவர் வெளியிட்ட இரு கவிதைத் தொகுப்புக்களாகப் பின்னர் வெளிவந்தன.

அக்டோபர் புரட்சியின், அதன் லட்சியங்களின் செல்வாக்கு, காலப்போக்கில் சோவியத் யூனியன் சாதித்துக் காட்டிய சாதனைகள், யுத்தப் பிற்கால ஆண்டுகளில் வளர்ந்தோங்கிய அதன் சர்வதேச கெளரவம், சர்வதேச ஸ்தானம், நட்புறவையும் சமாதானத்தையும் போற்றி வரும் அதன் உறுதியான கொள்கை, தேச விடுதலைப் போராட்டங்களுக்கு அது அளித்துவரும் தங்கு தடையற்ற ஆதரவு, இளம் சுதந்திர நாடுகளின்பால் அது கொண்டுள்ள தன்னலமற்ற நட்புறவு - ஆகிய இவையாவும், குறிப்பாக ஐம்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்திலிருந்தே பல தமிழ் எழுத்தாளர்களின் உள்ளங்களைக் கவர்ந்து அவர்களது படைப்புகளில் பிரதிபலித்து வரத்தொடங்கின. இது விஷயத்தில், அத்தகைய எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புக்களையும் அறிமுகப்படுத்துவதிலும், வளர்ப்பதிலும், பிரபலப்படுத்துவதிலும் சாந்தி, சரஸ்வதி, தாமரை ஆகிய கலை இலக்கிய சஞ்சிகைகள் பெரும்பங்கு வகித்து வந்தன.

இதன் பயனாக, நாவல் இலக்கியத் துறையில் ஏ.எஸ்.கே.யின் தங்கம்மா, ஆ. பழனியப்பனின் வெளியேறிய தெய்வம், பொன்னீலனின் கரிசல் மற்றும் சில நாவல்களும், சிறு கதைத் துறையில் கு. அழகிரிசாமி, ஜெயகாந்தன், காலஞ்சென்ற விந்தன் மற்றும் ஏராளமான இளம் எழுத்தாளர்களின் சிறு கதைகளும், கவிதைத் துறையில் காலஞ்சென்ற ‘தமிழ் ஒளி’, குயிலன், கே. சி. எஸ். அருணாசலம், சிற்பி பாலசுப்ரமணியன், மீ.ராஜேந்திரன் (மீரா) மற்றும் பலரது கவிதை நூல்களும், பாடல் துறையில் காலஞ்சென்ற பிரபல திரைப்படப் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், காலஞ்சென்ற வெ. நா, திருமூர்த்தி ஆகியோரும், மற்றும் சிலரும் படைத்த படைப்புக்களும், இலக்கிய விமர்சனத் துறையில் நா.வானமாமலை, ஆர். கே. கண்ணன் மற்றும் சிலரது விமர்சனப் படைப்புக்களும் ஆராய்ச்சி நூல்களும், இந்த எழுத்தாளர்களின் சிந்தனையில் அக்டோபர் புரட்சியின் லட்சியங்கள் செலுத்தியுள்ள செல்வாக்கையும், சோவியத் இலக்கியங்கள் இவர்களைக் கவர்ந்துள்ள வலிமையையும், சோவியத் இலக்கிய மேதைகளிடமிருந்து இவர்கள் சுவீகரித்துக் கொண்ட இலக்கியக் கண்ணோட்டத்தையும், அணுகல் முறையையும் நன்கு பிரதிபலிப்பவையாக விளங்குவதைக் காணலாம். இக்கட்டுரையாசிரியரின் கதை, கவிதை, நாவல், இலக்கிய விமர்சனம் முதலிய இலக்கியப் படைப்புகள் பலவும் இந்தச் செல்வாக்குக்கு ஆட்பட்டவையேயாகும்.

சொல்லப்போனால், கடந்த இருபது ஆண்டுகளில் அக்டோபர் புரட்சி லட்சியங்களின்பால் மேலும் மேலும் பல தமிழ் எழுத்தாளர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்றே சொல்லலாம். இந்தச் செல்வாக்கு இன்றைய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு “சோஷலிச அணியை” உருவாக்கியுள்ளது என்றே கூற முடியும். குறிப்பாக, இந்தச் செல்வாக்கு இன்று பெரும்பாலும் ‘வசன கவிதைகள்’ எழுதும் ஏராளமான இளங்கவிஞர்கள் மத்தியில் நன்கு புலப்படுகிறது. இவர்களிற் சிலர் “வானம்பாடிகள்” என்ற பெயரில் ஒரு கவிஞர் கோஷ்டியாகவே செயல்பட்டு வருகின்றனர். சமீப காலத்தில் இவர்கள் “சிநேக புஷ்பங்கள்” என்ற தலைப்பில், சோவியத் யூனியனது சாதனைகளையும், இந்திய சோவியத் நட்புறவையும் போற்றிப் புகழும், வாழ்த்தி வரவேற்கும் தமது படைப்புக்களின் தொகுதி ஒன்றை நூல் வடிவில் வெளிக்கொணர்ந்தும் உள்ளனர். இறுதியாக, மாபெரும் அக்டோபர் புரட்சியின் உன்னதமான லட்சியங்களின் செல்வாக்கு தமிழ் எழுத்தாளர்களை ஆட்கொண்டு வரும் வரவேற்கத்தக்க வளர்ச்சிப் போக்கு ஆண்டுதோறும் தொடந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றே சொல்லலாம். எனவே, அத்தகைய எழுத்தாளர்கள், அவர்களது படைப்புக்கள் முதலியவற்றையெல்லாம் பட்டியல் போட்டுத் தரும் முயற்சியும் கூட, இந்தக் கட்டுரையின் எல்லையைத் தாண்டிச் செல்லும் தனிக்கட்டுரையாகப் பரிணமித்து விடக்கூடும் என்றே கருதுகிறேன்.