மழலை அமுதம்/அணிற்பிள்ளை
கொறித்துக் கொறித்துத் தின்னுமாம்
குதித்துக் குதித்து ஆடுமாம்
பறித்துப் பறித்துப் பழங்களை
பாங்காய் உண்ணும் அழகைப் பார் !
இரண்டு கைகளால் எடுத்துமே
இங்கும் அங்கும் பார்க்குமாம்
பருந்து வந்தால் பாய்ந்தோடும்
பக்க மரங்களில் பதுங்கிடும்
வாயிலின் முன்னால் ஓடிடும்
வாலைத் தூக்கியே ஆடிடும்
ஆயிரம் அழகு அணிலைப் பார் !
அன்பாய் என்னுளம் கவர்ந்திடும்
முன்னுள் சேதுவை மேடு செய்ய
முயன்றான் இராகவன் அந்நாளில்
கல்லும் மலைகளும் கொணர்ந்தங்கே
கட்டும் முயற்சியில் பங்கு பெற
கடமை அணிலும் தான் புரிய
கல்லும் மணலையும் போட்டதுவாம்
கண்டான் இராமன் மகிழ்ந்தெடுத்து
கையால் அன்புடன் தடவினனே
கைவிரல் பட்ட இடத்தினிலே
கம்பிகள் தங்கமாய்த் தோன்றினவே.