இங்கிலாந்தில் சில மாதங்கள்/இங்கிலாந்தோடு நெருங்கிய தொடர்பு
இங்கிலாந்தோடு நெருங்கிய தொடர்பு
பாரத அன்னையின் விடுதலைக்கு முன் நின்ற காந்தி அடிகள் சட்டப் படிப்புப் படித்த தேசம் அது; நேரு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உலகை அறிந்த இடம்; ‘உவக வரலாறு’ என்ற அரிய நூலை நேரு நமக்கு அளித்திருக்கிறார். அவரைத் தலைமையாகக் கொண்டதால்தான் பாரத நாடு வெளியுலகத் தாக்குதலுக்கு இடம் கொடுக்க முடிந்தது. அன்னை இந்திரா உலகக் குடிமகளாக ஆக்கிக் கொள்ள அறிவு பெற்ற இடம் இது; இன்று பாரதப் பிரதமர் நாற்பதாவது வயதிலேயே மக்கள் தலைவராக இயங்கி உலகம் மதிக்கத்தக்க முற்போக்குச் சிந்தனை கொள்ளக் காரணமாகப் பயிற்சி பெற்ற தேசம் அது. பாரத நாட்டுப் பண்புக்கும் மேலை நாட்டு வளர்ச்சிக்கும் மதிப்புத் தரும் தலைமையில் பழைய மதிப்புகளை இழக்காமல் புதுமையை ஏற்று வளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது, அந்தத் தெளிந்த ஞானம் அவருக்குக் கிடைத்தது. அவர் பிறந்த மண் இது; வளர்த்துக்கொண்ட தேசம் அது, இரண்டின் கலப்பே பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி.
வள்ளுவர், இளங்கோ, கம்பர், பாரதி, பாரதிதாசன் இந்த நாட்டு மகாகவிகள்; அவர்கள் காட்டிய வாழ்வியல் சுதந்திரக் கோட்பாடுகளையே தமிழகம் பின்பற்றுகிறது. கலைவளமும் பண்பாடும் இந்த அடிப்படையில் அமைந்துள்ளன. அதேபோல அந்த நாட்டில் ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி போன்ற கவிஞர்கள் பெர்நாட்ஷா போன்ற நாடக ஆசிரியர்களும் டிக்கன்ஸ் போன்ற கதாசிரியர்களும் அந்த நாட்டின் சிந்தனைச் சிற்பிகளாக விளங்கினர். நம்முடைய கலாச்சாரமும் இந்த எழுத்தாளர்களின் சிந்தனைப் போக்கால் தெளிவும் மாற்றமும் அடைந்துள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை. இன்று நம் கலாச்சாரம் தனித்தன்மை உடையது என்று முழுவதும் கூறமுடியாது. மேலை நாட்டுத் தாக்கம் தேவையான அளவிற்கு ஏற்பட்டுள்ளது. அப்படியே பின்பற்றாமல் நல்லது ஏற்று அல்லது தள்ளி நாம் வாழ்ந்து வருகிறோம். ஆப்பிரிக்கர் போன்ற நாடுகளில் பழைய பண்பாட்டு இலக்கியங்கள் இல்லாமையால் நேரே மேல் நாட்டுக் கலை, மொழி பழக்க வழக்கங்கள் மிகுதியாகப் பின்பற்றப்பட்டு விட்டன. இன்று நீக்ரோக்கள் ஆங்கிலேயரின் நடையுடை பாவனைகள் நடனம் இசை முதலியவற்றை அவர்களைவிட மேம்பட்ட நிலையில் கற்றுப் புகழ் மிக்கவர்களாக விளங்குகின்றனர். மைக்கேல் ஜாக்சன் இன்று உலகம் பாராட்டும் இசைக்கலைஞர் என்று பாராட்டப்படுகிறார். அரேபிய நாடுகளில் இஸ்லாம் பின்னணி வலுவாக இருந்தபோதும் எண்ணெய் ஊற்றுகளால் பொன் கொழிக்கும் நாடாக மாறுவதால் மேலை நாட்டு வசதிகளை வளர்த்துக்கொண்டு வருகின்றன. அமெரிக்கா தேசம் பல தேசங்களின் குடியிருப்பு நாடாக இருப்பதால் அதற்குப் பழைமை என்பதன் அடிச்சுவடே இல்லாமல் ஐரோப்பியப் பண்பாட்டில் வளர்ந்து வருகிறது. அமெரிக்கர்களும் ஆங்கிலமே பேசுவதால் ஐரோப்பிய கலாச்சாரத்தின் அடிப்படையில் அந்த நாட்டு மக்கள் வாழ்வியல் அமைந்துள்ளது அவர்கள் உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அறிவும் ஆற்றலும் மிக்க இளைஞர்களை அங்குக் குடிபுக அனுமதிக்கின்றனர். கலை விளையாட்டு இவற்றில் முதன்மையானவர்களைக் குடியேறச் செய்ய இடம் தருகிறது, அதனால் அவர்கள் உலக நாடுகளில் எல்லாவகையிலும் முற்போக்கும் வளர்ச்சியும் கண்டுள்ளனர். அங்கே தனி மனிதன் முயற்சிக்கு அதிக வாய்ப்புத் தரப்படுகிறது. விஞ்ஞானமும் ஆராய்ச்சியும் தொழில் வளமும் மிக்கு உள்ளதால் இன்று அமெரிக்கா தனித்து விளங்குகிறது.
சீனாவும் ஜப்பானும் தத்தம் கலாச்சாரங்களை விட்டுக் கொடுக்காமல் தேவையான அளவிற்குப் பாரதத்தைப் போல் நல்லவற்றை மட்டும் பின்பற்றுகின்றன.
ஆங்கில மொழிக் கல்வி மொழியாக அமையுமானால் அதனோடு அவர்கள் கலாச்சாரமும் புகுந்துவிடுகிறது. ஜப்பான், சீனா, ரஷியா இவை ஆங்கில மொழியின் ஆதிக்கத்தைப் பெறாததால் அவை வேறுபட்டுத் தம் இயல்பில் வளர்ந்தும் மாறியும் வருகின்றன. பாரதம் பழம் பெருமை உடையது; ஆங்கிலம் கல்வி மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளதே யல்லாமல் கலாச்சார மொழியாக ஏற்கவில்லை. அதனால் மேலை நாட்டுக் கலப்புத் தேவையான அளவே ஏற்பட்டு வந்திருக்கிறது. மண்வாசனை மணம் மாறாமல் இருக்கப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நம்முடைய கதைகள் திரைப்படங்கள் பழைய பண்பாட்டைக் காக்கப் பெரிதும் பாடுபட்டு வருகின்றன என்பதை மறுக்க முடியாது. மேலை நாட்டுத் தாக்கம் அதிகம் ஏற்பட ஏற்படப் பழைமையை நிலைநாட்ட ஆட்டம் கொடுக்காமல் கருத்துப் பிரச்சாரங்கள் அதிகம் செய்யப்படுகின்றன. இந்த நுட்பமான போராட்டத்தை நம் சிந்தனைகளிலும் எழுத்திலும் திரைப்படங்களிலும் காணமுடிகிறது. மேலை நாட்டு நடனங்களும் சண்டைக் காட்சிகளும் திரைப்படங்களில் புகுந்தபோதிலும் கதையின் அடிப்படைகளை மாற்ற முனைவதில்லை; மாற்றினால் படம் ஓடாது; மக்கள் மனோநிலையை ஒட்டித்தான் கதைகள் இயங்கவேண்டும் என்ற வியாபாரக் கண்ணோட்டம் பிடித்து இழுக்கிறது. புறமாற்றங்கள் புகுகின்றன; வரவேற்கப்படுகின்றன. மன மாற்றங்களுக்கு இடம் தரப்படுவதில்லை.