உள்ளடக்கத்துக்குச் செல்

கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1/கிருபாகரன்

விக்கிமூலம் இலிருந்து

கிருபாகரன்

1

ந்தர் அலங்காரமே மிகப் பெரிய கோயிலைப் போன்றது. சொற்கோயில் அல்லவா? அதன் முகப்பில் விநாயகர் உட்கார்ந்திருக்கிறார். அந்தக் கோயிலை அணுகும்போதே அருணகிரிநாதருக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி உண்டாகிறது.

பலகாலம் வறுமையினால் அல்லற்பட்டுப் பணம் இல்லாமல் தவிக்கின்ற ஒருவனுக்குத் தன் உழைப்பினால் பணம் கிடைத்தால் மகிழ்ச்சி உண்டாகிறது. உழைப்பே இல்லாமல் திடீரென்று ஒருவர் இரண்டு லட்சம் ரூபாயை கொடுத்தார் என்றால், அவன் எவ்வளவு ஆனந்தம் அடைவான் அந்த நிதி கொடுத்தவரை எந்த எந்த வகையில் புகழ இயலுமோ அப்படியெல்லாம் புகழ முயல்வான் அல்லவா?

அருணகிரிநாதப் பெருமானும் கோயிலுக்குள் நுழையும் போதே, "கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே கண்டு கொண்டேன்ங என்று உள்ள மகிழ்ச்சியோடு துள்ளிக் கொண்டு போகிறார். "இளைய களிற்றைக் காண்பதில் உங்களுக்கு ஏன் அவ்வளவு ஆனந்தம்?" என்று கேட்டால், அவர் அதை அடுத்த பாட்டில் சொல்கிறார். "நான் பெரும் பாவியாக இருந்தேன். பற்பல பிறவிகள் எடுத்து உழன்று கொண்டிருந்தேன். எத்தனையோ பெரியார்கள் ஆண்டவனது திருவருளை அடைவதற்குப் பல்லூழி காலம் தவம் செய்திருக்கிறார்கள். நான் எந்தவிதமான தவமும் முன் பிறவிகளில் செய்யவில்லை. விட்ட குறை தொட்ட குறை என்பார்களே, அதைப் போல, எனக்கு இப்போது முருகன் அருளால், கிடைத்த இன்பம், நான் முன் பிறவிகளில் செய்த புண்ணியத்தின் பயன் என்று எண்ணக் கூடாது. முன் செய்ததன் பயனாகிய பேறு, பாக்கியம், சற்றும் இல்லாதவன் நான். சென்ற காலத்தில் தவம் செய்யாவிட்டாலும், இந்தப் பிறவியிலாவது செய்தேனா? அதுவும் இல்லை. முன்னே செய்த தவத்தின் விளைவான பேறும், பின்னே செய்த தவமும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவன் அந்த முருகன்" என்று பாடுகிறார்.

மூவகை வினை

நாம் பலவிதமான குற்றங்களைப் புரிந்து, பலவிதமான பாவ அழுக்குகளைச் சேர்த்துக் கொண்டு ஆண்டவன்பால் போகிறோம். அவன் மிக்க கருணையாளன். நம்மிடம் இருக்கும் பாவ அழுக்கு மூட்டைகளையெல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு, ஒரு வேட்டி, ஒரு துண்டு மாத்திரம் கொடுத்து, "அப்பா, உலகமாகிற ஆற்றுக்குப் போய் இவற்றையெல்லாம் நன்றாக வெளுத்துக் கொண்டு, சுத்தமாக வா" என்று நம்மை அனுப்புகிறான்.

உலகமென்னும் ஆற்றில் அநுபவமாகிற கல்லில் நம் வினைகளைத் துவைத்துத் தூய்மை செய்து கொண்டு அவன்பால் போவதற்குப் பதிலாக, ஆற்றிலுள்ள சேற்றையெல்லாம் பூசிக் கொள்ளுகிறோம். முன்பு இருந்த அழுக்குப் போதாது எனப் பின்னும் அழுக்காக்கிக் கொள்ளுகிறோம். உயிரிலே ஏறியிருக்கிற வினையாகிய அழுக்கை உலகமாகிற ஆற்றிலே போட்டுக் கழுவுவதற்குப் பதிலாக, வினைச் சேற்றைப் பின்னும் பூசிக் கொள்ளுகிறோம். இப்படி மூன்று விதமான சேறு, அழுக்கு நம்மேல் ஏறியிருக்கின்றன. புண்ணியம், பாவம் என்ற இரண்டுமே பிறப்புக்குக் காரணமாதலின் இரு வினையையும் அழுக்கென்று சொல்ல வேண்டும்.

பலகாலமாகச் சேர்த்து வைத்திருக்கிற அழுக்குக்கு சஞ்சிதம் என்று பெயர். அந்தச் சஞ்சிதம் நம்முடைய பெயர் போட்டு அப்படியே ஆண்டவனிடம் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டவன் நம்பாலுள்ள கருணையினால் "அத்தனை அழுக்கு மூட்டைகளையும் வெளுத்து வா" என்று சொல்லாமல், அவற்றையெல்லாம் தன்னிடம் மூட்டை கட்டி வைக்கச் சொல்லிவிட்டு, ஓர் அழுக்கு வேட்டி, ஒரு மேல் துண்டோடு நம்மை இந்த உலகமாகிய ஆற்றுக்குப் போய் வெளுத்துக் கொண்டு வா என்று அனுப்புகிறான். இந்தப் பிறவியில் போக்கிக் கொள்வதற்கென்று பங்கிட்டு அமைத்த வினைக்குப் பிராரப்தம் என்று பெயர். இங்கு நாம் வந்து புதியதாக பூசிக் கொள்ளுகிற சேற்றுக்கு ஆகாம்யம் என்று பெயர்.

இறைவனைப் போலக் கருணை மிக்கவர்கள் ஒருவரும் இல்லை. நாம் கொண்டு வந்த அழுக்குத் துணியை நன்றாகத் துவைத்துக் கொண்டு பரிசுத்தமாக அவன்பால் சென்றால் அதாவது முன்பு கொண்டு வந்த பிராரப்தமாகிற அழுக்கைப் போக்கிப் பின் ஆகாம்யமாகிற சேற்றைப் பூசிக் கொள்ளாமல் சென்றால், முன் பிறவிகளிலே சேர்த்து வைத்திருக்கிற சஞ்சிதமாகிற அழுக்கு மூட்டைகளைக் கொடுத்துத் துவைக்கச் சொல்வதில்லை. "அப்பா, அந்த அழுக்குத் துணிகளை எல்லாம் நான் பொசுக்கி விட்டேன். உனக்குப் புதுச்சட்டை தருகிறேன். இதை அணிந்து கொள்” என்று சொல்லுகிறான்.

இதைத்தான் வேறு வகையில் சாஸ்திரங்கள் சொல்கின்றன. "ஞானம் பெற்றவர்களுக்கு ஆகாம்யம் இல்லை. சஞ்சிதமும் கிடையாது’ என்று சொல்கின்றன.

"குளிக்க வந்தவன் சேற்றைப் பூசிக் கொள்வதுபோல நான் இந்தப் பிறவியிலும் பல பாவங்களைச் செய்து, பல குற்றங்களைச் செய்து ஆகாம்யத்தை அதிகப்படுத்திக் கொண்டு இருந்தேன். பிரபஞ்சம் என்னும் சேற்றைப் பூசிக் கொண்டிருந்தேன். அந்தச் சேற்றை முருகன் போக்கி விட்டான் என்ன ஆச்சரியம்" என்று பெருமிதத்தோடு பேசுகிறார் அருணகிரிநாதர்.


   பேற்றைத் தவம்சற்றும் இல்லாத என்னைப்
      பிரபஞ்சமென்னும்
   சேற்றைக் கழிய வழிவிட்டவா!

பிரபஞ்சம்

ந்தால் ஆனது பிரபஞ்சம். பஞ்ச பூதங்களின் சம்பந்தம் உடையது இந்த உலகம். சித் என்றும், ஜடம் என்றும் இரண்டு வகைப் பொருள்கள் உலகில் இருக்கின்றன. சித் என்பது உயிர்; மற்றவை ஜடம். உயிரும் உடம்பும் சேர்ந்திருக்கின்றன. சித்தும் ஜடமும் சேர்ந்து உலகம் நடைபெறுகிறது. சித்தாகிய உயிரோடு மனம் என்ற ஒன்று இணைந்திருக்கிறது. ஜடம் ஐந்து பொருள்களாலானது. மூன்று விதமான வர்ணங்களைக் கொண்டு பல வர்ணமுள்ள படங்களையும் போட முடியும் என்று ஓவியக்காரர்கள் சொல்வார்கள். மஞ்சள், சிவப்பு, நீலம் ஆகிய இந்த மூன்று வண்ணங்களின் சேர்க்கையினால் பல வண்ணங்கள் உண்டாகின்றன. அதைப் போலவே சத்துவம், ராஜஸம், தாமஸம் ஆகிய மூன்று குணங்களினால் மனம் அமைகிறது. எல்லாக் குணங்களையும் இந்த மூன்றில் அடக்கி விடலாம். ஜடப் பொருள்களும் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும் ஐந்து தத்துவங்களினால் ஆனவை. பிரபஞ்சம் ஐம்பூதச் சேர்க்கையாலானது. இந்த உண்மையை நம் நாட்டில் சாதாரணப் பழமொழியில் வைத்துக் காட்டுவார்கள்.

"அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறியாக்கும்' என்று ஒரு பழமொழி உண்டு. அஞ்சும் மூன்றும் எட்டு என்று சேர்த்து, எட்டு வயசானால் எந்தப் பெண்ணும் சமையல் செய்வாள் என்று இதற்கு பொருள் கொள்ளலாம். அது அவ்வளவு சிறப்பானது அன்று. அடுப்புக்கு வேண்டியது மூன்று கல். சமையலுக்கு வேண்டிய சாமான்களைப் போட்டு வைத்துக் கொள்வது அஞ்சறைப் பெட்டி. அடுப்புக்கல் மூன்றும் பண்டம் நிரம்பிய அஞ்சறைப் பெட்டியும் இருந்தால் அறியாத பெண்ணும் கறி சமைப்பாள் என்று பொருள் கொள்ளலாம். உலகியலுக்கு ஏற்ற பொருள் அது. அதற்குள்ளே மற்றொரு வேதாந்தக் கருத்தையும் வைத்திருக்கிறார்கள். நம் வாழ்க்கைப் போக்கிலேயே ஆத்மார்த்த உண்மைகளையும் நம் பெரியோர்கள் புலப்படுத்தினார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

உலகத்தைச் சித்து, ஜடம் ஆகிய இருவகைப் பொருள்களையும் கொண்டு பராசக்தி படைக்கிறாள். ஜடத்தை ஐந்து தத்துவங்களைக் கொண்டும், சித்தோடு இணைந்த மனத்தை மூன்று குணங்களைக் கொண்டும் படைக்கிறாள். வேதமும் முனிவரும் அறியாத பெண்ணாகிய பராசக்தி (அறியாப் பெண்) முக்குணத்தையும், ஐம்பூதத்தையும் கொண்டு உலகத்தைப் படைத்து நடத்துகிறாள். இந்த கருத்தை உள்ளடக்கியது அந்தப் பழமொழி. பஞ்சம் என்பது ஐந்து. ஐம்பூதங்களால் அமைந்ததாதலின் பிரபஞ்சம் என்ற பெயர் வந்தது. உலகம் முழுவதிலும் உள்ள ஜடப் பொருள் அத்தனையும் ஐந்து பூதங்களின் கலப்பு. உப்புமா, தோசை, இட்டிலி என்று பலவிதமான சுவையுள்ள பண்டங்களைப் பண்ணினாலும் அவை எல்லாம் சில பொருளின் மாறுபட்ட உருவங்கள். இப்படியே பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் உலகிலுள்ள பொருள்கள் எல்லாம் ஆகின்றன; உடல் ஆகிறது. உடலில் இருக்கிற பகுதிகளை எல்லாம் பிரித்தால் அவை இந்த ஐந்து தத்துவங்களில் அடங்கி விடும். இதற்குப் "பஞ்சீகரணம்" என்று பெயர்.

உலகம் ஐந்தாலானது என்பதைச் சுந்தரகாண்டத்தில் கம்பர் மிகவும் அழகாகச் சொல்லுகிறார். அக்காண்டத்தின் கடவுள் வணக்கப்பாட்டில் அதைச் சொல்கிறார்.

ராமன் ஒரு 'சர்ஜன்'. அவன் தன் கையில் உள்ள ஆயுதத்தால் கீறக்கூட வேண்டாம்; அதைத் தன் கையில் வைத்துக் கொண்டு நின்றாலே போதும். வீக்கம் வடிந்து விடும்; மாயையாகிற வீக்கம் வடிந்து விடுமாம்.

ஐந்து பூதங்கள் தனித்தனியே இராமல், கலந்து உலகமாக நிற்கின்றன. அந்தக் கலப்பினால் உண்டாகும் வேறுபாட்டினால் உண்மையை அறியாமல் நாம் மயங்குகிறோம். அந்த மயக்கமே மாயை. அது மேலும் மேலும் அதிகமாகிறது; வீங்குகிறது. அந்த வீக்கம் ராமனைக் கண்டால் கலங்குமாம்.

கல்யாணம் முதல் நாள் ஆனவுடன், வாடிப்போன மாலைகளை வாயிலில் போட்டு விட்டார்கள். இரவில் வீதி வழியே போனவன் அந்த வாடிப்போன மாலையைக் கண்டு பாம்பு என எண்ணி அலறுகிறான். பின்பு பார்த்தால் அது வாடிப்போன மாலை என்று தெரிகிறது. மாலையைப் பாம்பு என்று முதலில் மயங்கினான். பிறகு அந்த மயக்கம் தெளிந்தது. அப்படியே உலகிலுள்ள பலபல பொருள்களை எல்லாம் உண்மை என நினைத்து நாம் வாழ்கிறோம். உண்மையைத் தெரிந்து கொண்டால் அவையாவும் பஞ்ச பூதங்களின் வேறுபாடு, தோற்றம் என்று அறியலாம். அறியாமல் மாயையுட் சிக்கியிருக்கும் மக்களுக்கு, அந்த வேறுபாடுற்ற வீக்கத்தை ராமன் போக்குவான்.
   "அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
    அரவெனப் பூதம் ஐந்தும்
   விலங்கிய விகாரப் பாட்டின்
    வேறுபாடு உற்ற வீக்கம்
   கலங்குவது எவரைக் கண்டால்
    அவர்என்பர் கைவில் ஏந்தி
   இலங்கையில் பொருதார் அன்றே
    மறைகளுக்கு இறுதி ஆவார்.”

"மலர் மாலையில் அரவென்று அஞ்சும்படி பொய்யாக தோன்றுகிற தோற்றத்தைப் போல், ஐந்து பூதங்களும் மாறுபட்டுக் கலந்து காட்டுகிற விகாரத்தின் வீக்கம் ராமனுடைய தரிசனம் கிடைத்த மாத்திரத்தில் அகன்று விடுகிறது. கையிலே கோதண்டம் தாங்கி நிற்கின்ற அந்த ராமன் மறைகளுக்கு எல்லாம் இறுதியாக இருக்கும் ஆண்டவன்தான்".

இந்தப் பாட்டில் பிரபஞ்சம் என்ற பெயர் வந்ததற்கு எது காரணமோ அதைக் கம்பர் எடுத்துக் காட்டுகிறார்.

ஐந்து பொருள்களாலானது இந்தப் பிரபஞ்சம். பிரபஞ்சம் என்னும் சேற்றிலே நாம் எல்லோரும் உழன்று கொண்டிருக்கிறோம். ஆனால் அந்தச் சேற்றில்தான் அழகான தாமரை முளைக்கிறது. தாயுமான சுவாமிகள் "பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற" ஆண்டவனைக் கண்டார்; பிரபஞ்சச் சேற்றிலே தாமரையைக் கண்ட பெரியார் அவர். அவரைப் போன்றவர்கள் உலகத்திலுள்ள யாவும் இறைமயம் எனக் கண்டு மாயா விகாரத்தில் அகப்படாமல் தெளிவான காட்சி பெற்றவர்கள். "எல்லா உலகமும் ஆனாய் நீயே" என்று அப்பர் அநுபவிக்கிறார்.

அருணகிரிநாதர் சொல்லுகிறார் : "முன் பிறப்பிலும் அவன் கருணையை அடைவதற்கான முயற்சி செய்து புண்ணியத்தைச் சேர்க்கவில்லை. இந்தப் பிறவியிலும் அவன் அருளைப் பெறுவதற்கான தவம் ஒன்றும் செய்யவில்லை. பேறு சற்றும் இல்லாதவன்; தவம் சற்றும் இல்லாதவன். நான் இப்பிரபஞ்சச் சேற்றிலே விழுந்தேன். முருகனுடைய கருணையைப் பெறுவதற்கு எந்த விதமான தகுதியும் இல்லாத பாவி நான். அவனை நினைப்பதற்கேற்ற பக்குவம் என் மனத்தில் இல்லை. இப்படிப் பக்குவமற்ற நிலையிலே இருந்த என்னைப் பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டானே, என்ன அதிசயம்!" என்று ஆனந்த அதிசயத்தோடு பாடுகிறார். "வழிவிட்டவா!" என நீட்டும்போது அவர் பாடுகின்ற ஆச்சரியம் தெரிகிறது. "வழி விட்டவாறு என்னே" என்று பொருள் கொள்ள வேண்டும்.

அதிகமாக ஆனந்தப்படுபவனுக்கோ, துக்கப்படுபவனுக்கோ வார்த்தை எதுவும் முறையாகச் சொல்ல வருவதில்லை. மிக்க கூட்டமான இடத்திற்குப் போய் நமக்கு வேண்டிய ஒரு சாமானை வாங்கி வரும்படி ஒருவனிடம் சொல்கிறோம். அதை அவன் வாங்கி வந்துவிட்டானானால், அந்த மகிழ்ச்சியிலே அவன் நம்மிடம் வந்ததும் வராததுமாகத் தான் பட்ட சிரமத்தைச் சொல்ல ஆரம்பிப்பான். "வாங்கி வந்தாயா, இல்லையா?” என்று கேட்டாலுங்கூட, "'நான் போனேனா ஒரே கூட்டம். அடேயப்பா என்னை நெரித்து விட்டார்கள்" என்று சொல்ல ஆரம்பிப்பான்.

அதைப்போல, அருணகிரிநாதர் முருகன் கருணையைச் சொல்ல ஆரம்பித்தவர் முருகனை முதலில் சொல்லவில்லை. அவன் பேற்றைப் பெற்ற எல்லையில்லா ஆனந்தத்தில் தம் பழைய நிலையைப் பற்றிச் சொல்லுகிறார். 'பேற்றைத் தவம் சற்று மில்லாத பாவி’ என்று தம்மைச் சொல்லுகிறார். பக்குவம் இல்லாத என்னை அவன் ஆண்டு கொண்டான் என்று சொல்லும்போது அவரது நன்றி பொங்குகிறது. "வழிவிட்டவா" என்று ஆச்சரியத்தோடு சொன்னாரேயன்றி வழி விட்டவன் யார் என்பதை முன்னே சொல்லவில்லை. சற்று நின்றார்; பின்பு சொல்லத் தொடங்குகிறார்.

அவன் யார் தெரியுமா? கிருபாகரன் அவன் என்கிறார். அவன் கருணைக் கடலாம். அவனை இன்னார் பிள்ளையென்று அறிமுகப்படுத்துகிறார்.

2

பெரிய குடும்பம்

முதலில் உள்ள காப்பில், "விநாயகருக்குத் தம்பியைக் கண்டேன்" என்று சொல்ல வந்து, விநாயகரை நமக்கு அறிமுகப் படுத்திய அருணகிரிநாதர், அடுத்த பாட்டாகிய இதில், "நான் சிவபிரானுடைய குமாரனால் பிரபஞ்சச் சேற்றைப் போக்கிக் கொண்டேன்" என்று சொல்லுகிறார். அப்படிச் சொல்லும்போது சிவபெருமானை அறிமுகப்படுத்துகிறார்.

இறைவனுடைய குடும்பம் பெரிய குடும்பம். நம்முடைய குடும்பத்தைக் காட்டிலும் பெரியது. நம் குடும்பத்தில் நம் தாய், தகப்பனார், சகோதரர்கள், மனையாட்டி, நம் மக்கள் இருப்பது போலச் சிவபிரானுடைய குடும்பத்தில் அவன் மனைவி உமா தேவியார், அவன் பிள்ளைகள் விநாயகன், சுப்பிரமணியன், அவனுடைய மைத்துனன் திருமால், அவனுடைய பிள்ளை பிரம்மா ஆகியவர்களே இருக்கிறார்கள் என்று நினைக்கலாம். உலகில் உள்ள எல்லா உயிர்களும் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. ஒரு வீட்டில் எல்லாவிதமான உறவினர்களும் இருந்தாலும் அது நல்ல குடும்பம் என்று சொல்ல வேண்டுமானால் அந்த வீட்டில் ஒரு வகையினர் அவசியம் இருக்க வேண்டும். வீடு கட்டிக் கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழ்கின்ற வாழ்க்கை அந்த ஒரு வகையினரை அந்த வீட்டில் நிரப்புவதற்காகத்தான் என்று இந்த நாட்டிலுள்ள பெரியோர்கள் சொல்லுகிறார்கள். இல் வாழ்வது அறம் வளர்ப்பதற்காக. அறம் பல காலம் தொடர்ந்து நடை பெறுவதற்காக நல்ல மக்களைப் பெற்றுக் குடும்பத்தை வளர்க்க வேண்டும். பிள்ளைகளைப் பெறுவது பரம்பரையாகத் தர்மம் வளர வேண்டுமென்பதற்காக பிள்ளை இல்லாத குடும்பம் நல்ல குடும்பம் அன்று என்று நம்முடைய பெரியோர்கள் நினைத்தாாகள.

இறைவன் குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் அவனோடே இருப்பவர்கள். அவனுக்கும், அவர்களுக்கும் வேறுபாடு இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்தப் பிள்ளைகளோடு சரியா? இல்லை, இல்லை. இறைவன் குடும்பத்தில் நாமும் சேர்ந்தவர்கள். பெரும்பான்மைக் கட்சி நாம்தாம். ஆண்டவன் நம் அப்பன்; அவன் மனைவி நம் தாய். அந்த அம்மை அப்பனுக்கு உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் குழந்தைகள். இந்த உலகம் எல்லாம் அவன் வீடு.

உலகம் முழுவதும் ஆண்டவன் குடும்பமாக இருக்கிறது.அவன்.குழந்தைகளாகிய முருகனும்,கணபதியும் ஒரு வகையில் சிறுபான்மைக் கட்சியினர்; மைனாரிட்டி மெஜாரிட்டிக் குழந்தைகள் நாமே. ஆகவேதான் அவனுடைய குடும்பம் பெரிய குடும்பம் என்று சொன்னேன். பஹு குடும்பியாய் இருப்பவன் என்று பிரபந்த வியாக்கியானக்காரர்கள் கடவுளைப் பற்றிச் சொல்லுகிறார்கள்.

எல்லா உலகத்தையும் தன் வீடாகவும், எல்லா உயிர்களையும் தன் குழந்தைகளாகவும் கொண்டுள்ள ஆண்டவனுக்கு இரண்டு குழந்தைகள் பெரியவர்களாக இருக்கிறார்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் பிரதிநிதியாகவும், ஆண்டவனுக்கும் பிரதிநிதியாகவும் விளங்குகிறான் குழந்தை முருகன். அவனுக்கும் தந்தைக்கும் வேறுபாடு இல்லை.

முருகன் என்ற குழந்தை கலெக்டர் வீட்டுக் குழந்தையைப் போன்றவன். அக்குழந்தைக்குக் கலெக்டருக்குள்ள சுகம் எல்லாம் உண்டு. கலெக்டர் வீட்டில் பண்ணுகிற பட்சணங்கள் எல்லாம் கிடைக்கும். கலெக்டர் வீட்டுக்கு வருகின்ற எல்லோரும் அக்குழந்தைக்கு மரியாதை பண்ணுவார்கள். ஆனால் அக்குழந்தை அவர்கள் வீட்டுச் சேவகனுடைய குழந்தைகளோடும் விளையாடப் போவான். தகப்பனாருக்குச் சமமாக எல்லாவிதமான கௌரவத்தையும் அனுபவித்தாலும், தகப்பனாரிடம் கைகட்டி நிற்பவர்களோடும் எளியவனாகப் பழகுவான். முருகன் குழந்தைக் கோலத்தோடு இருப்பது இந்த எளிமையைக் குறிக்கிறது.

இறைவனுடைய குழந்தையாகிய முருகனுக்கு இறைவனுக்குரிய மரியாதையாவும் கிடைக்கும். ஆனால் சிவபெருமானைக் காட்டிலும் கருணை மிகுதியாகப் பொழிகின்ற திருவுருவம் அது. சிவபெருமானுடைய அவதாரமேயானாலும் அது மூலத்தைவிட உயிர்களுக்கு அருள் தருவதில் எளிதாயிருக்கிறது. முன் உள்ள வித்தைவிட அதிலிருந்து முளைத்த செடி நிழல் தருவதுபோல மிகவும் எளிமையாக இருக்கிற தன்மையினால் முருகனைக் கலியுக வரதன் என்று சொல்கிறோம்.

ஆற்றுத் தண்ணிரை மேடான பிரதேசத்திற்குக் கொண்டு போக வேண்டுமானால் 'பவர் ஸ்டேஷன்' ஏற்படுத்துவது போல, ஆண்டவனுடைய அருள் வெள்ளத்தைத் தேக்கி வைத்துக் கொள்ளக்கூடிய அளவு அன்புப் பள்ளம் விழாத மக்களுக்கு அருள் புரிய முருகன் கலியுக வரதனாக இருக்கிறான்; ஆறுமுகமுடையவனாக எழுந்தருளுகிறான்.

முருகன் எம்பெருமானுடைய பிள்ளை என்றால், அந்த உறவு நம்முடைய வாழ்க்கையில் நாம் கொண்டாடுகின்ற உறவு போன்றதாகக் கொள்ளக் கூடாது. அந்தப் பிள்ளை வேறு, அவனுடைய தந்தை வேறு என்று இல்லை. அவனுடைய தந்தையின் ஆற்றல் பல இடங்களுக்குச் செல்லாது; ஆனால் அவனுடைய ஆற்றல் பல இடங்களுக்குச் செல்லும்.

ஒரு சாதாரணக் குடும்பத்திலே இருக்கின்ற நாம் நாமே போக முடியாத இடங்களுக்கு நம் பிள்ளையை அனுப்பி, "கல்யாணம் விசாரித்து வந்து விடு" என்று சொல்கிறோம். இந்தச் சின்னச் சம்பிரதாயந்தான் தெய்வக் குடும்பத்திலும் இருக்கின்றது. சிவபெருமான் தானே நேரில் செல்ல முடியாத இடங்களுக்கு எல்லாம் தன் மகன் முருகனை அனுப்புகிறான்; அல்லது அந்த அவதாரத்திலே சென்று அருள் செய்து வருகிறான். முருகன் சிவபெருமான் குமாரன்; கிருபைக்கு இருப்பிடமாக இருக்கிறவன்.

“பெருமான் குமாரன் கிருபாகரனே!"


சிவபெருமான்

ந்தப் பெருமானாகிய சிவபிரானை அடையாளத்தோடு சுட்டுகிறார்.


   ... ... ... ... செஞ்ச டாடவிமேல்
   ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
   கீற்றைப் புனைந்த பெருமான்.

ஐந்து பூதங்களாலான பிரபஞ்சத்தைப் பற்றிச் சொன்னவர், ஐந்து அடையாளங்களைச் சொல்லிச் சிவபெருமானை முதலில் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

அந்த ஐந்து பொருள்களும் மிக உயர்ந்த பொருள்களா? அப்படிச் சொல்ல முடியாது. ஆண்டவனுடைய திருச் சந்நி தானத்தைச் சேர்ந்து விட்டால் உயர்ந்தது, தாழ்ந்தது என்ற பேதம் இல்லை. எல்லாமே உயர்ந்தவை ஆகிவிடுகின்றன. விலாச வேறுபாடு அங்கே கிடையாது. அவன் சந்நிதானத்திற்கு வந்த பிறகு எல்லாம் ஒரே விலாசந்தான். கங்கையில் யமுனை புகுந்தாலும் கங்கைதான்; சாக்கடை புகுந்தாலும் கங்கைதான். இரண்டிற்கும் அதில் வேறுபாடு இல்லை. அதைப்போல எம்பெருமானுடைய சம்பந்தம் பெற்ற பொருள்கள் யாவும் ஒன்றுதான்; ஒன்றுக்கொன்று வேறுபாடு கிடையாது.

சிவபெருமானைப் பற்றிச் சொல்லும்போது முதலில் அவனது திருக்கோலத்தைக் காலில் இருந்து வர்ணிப்பதா? தலையில் இருந்து வர்ணிப்பதா? எல்லாவற்றையும் வர்ணிக்கப் பாட்டுப் போதாது. ஒன்றை வர்ணித்தாலே முழுவதும் வர்ணித்ததாக ஆக வழி உண்டா? நமக்குத் தலையில்லாவிட்டால் உடல் எல்லா ஒரே மாதிரிதான் இருக்கும். தலையாகிற சின்னத்தைக் கொண்டுதானே அடையாளம் கண்டு கொள்ளுகிறோம்? உடம்புக்குள் தலை உத்தமமானது. அதற்கு 'உத்தமாங்கம்' எனப் பெயர். ஆகவே, சிவபிரான் சிவந்த சடைக் காட்டின்மேல் செஞ்சடாடவிமேல், என்ன இருக்கின்றன என்று சொல்கிறார்.

அவனது கருணையை காட்டுகிற பொருள்கள் அங்கே இருக்கின்றன. அப்படி உள்ளனவற்றுள் ஐந்து பொருள்களைச் சொல்கிறார். அவன் கங்கை ஆற்றை அணிந்த பெருமான்; பாம்பை அணிந்த பெருமான்; இதழியை அணிந்த பெருமான், தும்பை மலரை அணிந்த பெருமான்; அம்புலியின் கீற்றை அணிந்த பெருமான். அவனது ஜடா முடியில் கங்கை ஆறு, அரவாபரணம், கொன்றைப்பூ, தும்பைப்பூ, பிறைமதி ஆகிய ஐந்து பொருள்கள் இருக்கின்றன. ஒர் ஆறு, இரண்டு மலர்கள், ஒரு மதி ஆகிய கூட்டதிற்கிடையேயும் பாம்பும் இருக்கிறது. அதற்கு உணவாகிய மதி பக்கத்தில் இருந்தாலும் அது உண்ணுவது இல்லை.

கங்காதரன்

ம்பெருமானுடைய செஞ்சடை ஆகிய அடவியில் இருக்கிற பொருள்களைச் சொல்ல வந்தவர் முதலில் ஆற்றைச் சொன்னார். "பிரபஞ்சமென்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா" என்று சேற்றைச் சொன்னவர் உடனே ஆற்றைச் சொல்வது பொருத்தந்தானே? "நான் பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்ட கிருபாகரனுடைய தகப்பனார் கங்கையைத் தலையில் சுமந்து கொண்டிருக்கிறார்" என்று முதலில் அடையாளம் காட்டுகிறார்.

க.சொ.1-5 கங்கை எல்லோருடைய அசுத்தத்தையும் போக்கும் புனிதம் உடையது. ஆனால் அதற்கே ஒரு காலத்தில் அசுத்தம் வந்து விட்டது; குணபேதம் வந்தது. யாராவது கஷ்டப்பட்டால் அதனைக் கண்டு உடனே இரங்குபவர்கள் பெண்கள். கங்கை பாய்ந்தால் தன்னுடைய முன்னோர்களின் சாபம் தீருமென்று தெரிந்து கொண்டு பகீதரன் கங்கையை நோக்கித் தவம் செய்தான். அவன் செய்த தவத்தை நினைந்தால் எல்லோருடைய மனமும் இளகும். அத்தகைய பெருந்தவத்தை அவன் செய்தாலும் கங்கையின் மனம் இரங்கவில்லை. அவள் ஆணவத்தால் சீறி நின்றாள்.

இரக்கமற்றவனை நெஞ்சிலே ஈரம் அற்றவன் என்கிறோம். ஈரம் இரக்கத்தைக் காட்டுகிறது. நீருருவம் உடைய கங்கைக்கு இயற்கையிலேயே ஈரம் இருக்க வேண்டும். ஆனால் அவளிடம் ஈரமே இல்லை; பகீரதன் செய்த கடுந்தவத்தைக் கண்டும் இரக்கம் உண்டாகவில்லை. அவள் தண்மை இல்லாமல் செருக்கால் கொதிப்படைந்திருந்தாள். "நான் வருவேன். ஆனால் என்னைத் தாங்குவார் யார்?" என்று ஆணவத்தால் இறுமாந்திருந்தாள். "நான் தாங்குகிறேன்" என்று சிவபெருமான் சொல்லி அவள் ஆணவக் கொதிப்பை மாற்றத் தன் சடையில் ஏற்றான்.
   "விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
   மண்ணுக்கடங்காமல்..."
அவள் குபுகுபு என வந்தாலும் தன் சடாமகுடத்திலே அடக்கினான் சிவபெருமான். யாருக்கும் பயன்படாமல் இருந்த கங்கையை, தன் அகங்காரத்தால் அழுக்காகிக் கொதிப்படைந்திருந்த கங்கையை, தன் சடையில் தாங்கிப் புனிதமாக்கி, தண்மையைக் கொடுத்தான். அப்பால் அது யாவருக்கும் பயன்படும் திரிபதகை ஆயிற்று. எல்லாவற்றையும் புனிதம் ஆக்கும் கங்கை அழுக்கடைந்தபோது அதனைத் தன் சடையில் ஏற்றுப் புனிதமாக்கிய பெருங் கருணையாளன் சிவபெருமான் என்பதை நினைக்கச் செய்கிறது அந்த ஆறு.

திருநாவுக்கரசு சுவாமிகள் இறைவனைப் புனிதமானவன் என்று சொல்ல வந்தார். அவன் எல்லோருடைய அழுக்கையும் போக்குகின்ற தன்மை உடையவன். டாக்டர் நோயாளியினுடைய நோயைக் குணப்படுத்துவார். ஆனால் அந்த டாக்டருக்கு நோய் வந்தால் அவருடைய நோயைக் குணப்படுத்துபவர் மிகவும் கெட்டிக்காரராக இருக்க வேண்டும் அல்லவா?

அதைப்போலக் கங்கை எல்லோருடைய அழுக்கையும் போக்கிப் புனிதமாக்குகிறது. ஆனால் அந்தக் கங்கையே அழுக்கடைந்தபோது, புனிதம் நீங்கியிருந்தபோது அதனைத் தன் புரிந்த சடைமேல் ஏற்று மீட்டும் புனிதம் ஆக்கியன் இறைவன் என்று அப்பர் புலப்படுத்துகிறார்.

"புரிசடைமேல் புனல்ஏற்ற புனிதன் தான்காண்”

என்பது அவர் வாக்கு ஆண்டவனுடைய சந்நிதியில் ஆணவம் அடங்கும் என்பதற்கும் கலக்கம் தெளியும் என்பதற்கும் அடையாளம் ஆறு.

அரவாபரணன்

அவனது சிவந்த சடைமேல் இருக்கும் மற்றொரு பொருள் பணி (பாம்பு). அது எதைக் குறிக்கிறது? -

மெத்தப் படித்தவர்களுக்குத் தலை நிமிர்ந்து போய்விடும்.
   "ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
   கெழுமையும் ஏமாப் புடைத்து"
என்கிறார் வள்ளுவர். நல்ல முறையில் படித்திருந்தால், கல்வியால் பயன் என்ன என்பதை உணர்ந்து படித்திருந்தால், ஏழு பிறப்புக்கும் உதவுமாம்.

ஆனால், படித்தவனுக்கு செருக்கு வந்தாலோ யாரும் சமாளிக்க முடியாது. அதனால்தான்,
   "கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனிஅமையும்"
என்று மாணிக்கவாசகர் சொல்கிறார்.
   "கல்லாத பேர்களேநல்லவர்கள் நல்லவர்கள்
   கற்றும்அறி வில்லாதஎன் கர்மத்தை என்சொல்வேன்"
என்று தாயுமானவர் பாடுகிறார்.
   "கலையே பதறிக் கதறித் தலையூ
   டலையே படுமா றதுவாய் விடவோ?” என்று அருணகிரிநாதர் அநுபூதியில் பாடுகிறார். மெத்தப் படித்து விட்டது காரணமாக, கடவுளே இல்லை; நான்தான் உயர்ந்தவன் என்று பிதற்றி அலையும் நிலைக்கு வந்து விடலாமா? அத்தகையவர்கள் இந்தக் காலத்தில் மட்டும் இருக்கிறார்கள் என்பதில்லை. அந்தக் காலத்திலும் தாருகாவனத்தில் இருந்தார்கள். "ஆண்டவன் என்ன? நான்தான் பெரியவன்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் சிலர். அவர்கள் வேதம் படித்தவர்கள்; வேள்வி செய்தவர்கள். வேதம் படித்த பிராமணர்கள் என்றாலும் அவர்களுக்கு ஞானம் வரவில்லை. சாமான்ய தர்மங்களைக்கூட அவர்கள் அநுஷ்டிக்கவில்லை. விசேஷ தர்மங்கள் எல்லாம் சாமான்ய தர்மங்களைக் கடைப்பிடித்த பிறகே பயனைத் தரும். சாமான்ய தர்மங்களைக்கூடச் செய்யாதவர்களுக்கு விசேஷ தர்மங்களைச் செய்வதனால் தவறுதான் உண்டாகும்.

அடிப்படையான கடமைகளே சாமான்ய தர்மங்கள். உயிர்களிடத்தில் அன்பு, இறைவனிடத்தில் நம்பிக்கை இவை மிகவும் அடிப்படையானவை. இத்தகைய தர்மங்களைச் செய்யாத அவர்கள் விசேஷ தர்மமாகிய யாகங்களைச் செய்ய ஆரம்பித்தார்கள். அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் கீழே விழுந்து விடும். அதைப் போல அவர்கள், நாம் வேதம் படித்தோம் என்ற செருக்கால் இறைவனை நினையாமல் இருந்தார்கள். எம் பெருமான் அவர்கள் செருக்கை அடக்கினான். அப்போது அவர்கள் யாகம் செய்து பாம்பை வருவித்து இறைவன்மேல் படையாக விட்டார்கள். இறைவன் அதனைப் பற்றிச் சடையின் மேல் வைத்துக் கொண்டான்.

இறைவன் நஞ்சுக்கு நஞ்சாக இருப்பவன்; காலகாலன். அவன் திருமுன் கல்வித் தருக்கு உள்ளவர்களும், கர்மத் தருக்கு உள்ளவர்களும் கர்மத் தருக்கு அடங்கியவர்களாகப் போய் விடுவார்கள் என்பதற்கு அடையாளம் பாம்பு.

கொன்றை அணிந்தோன்

சிவபெருமான் சடையில் உள்ளவையாக அருணகிரிநாதர் காட்டும் பொருள்களில் மூன்றாவது இதழி; இதழி என்பது கொன்றை மலர். கார்காலத்தில் அது மலரும். அதனால் அதை, 'கார் நறுங் கொன்றை" என்று சங்கப் புலவர்கள் சொல்வார்கள்.

இறைவனைக் குறிப்பிடச் சில அடையாளங்கள் உண்டு. அவற்றில் மாலை ஒன்று. தலைவன் என்றால் அவனுக்கும் பத்து அங்கங்கள் உண்டு; அவற்றைத் தசாங்கம் என்பர். அந்த அங்கங்களில் ஒன்று கண்ணி; அடையாள மாலை. சிவபெருமானுக்குக் கண்ணி அல்லது அடையாள மாலை கொன்றை.

"கண்ணி கார்நறுங் கொன்றை"

என்பது புறநானூறு. சிவபெருமான் திருமுடியில் அணிந்திருப்பது கொன்றை மலர். கொன்றை மலர் பொன்னிறம் பெற்றது. அதன் கேசரம் வளைந்து இருக்கும். அதனைப் பிரணவ புஷ்பம் என்று சொல்வார்கள். ஒம் என்ற எழுத்தைப் போல் அது வளைந்திருக்கிறது. பிரணவத்தை இந்திய நாட்டில் இருக்கிற எல்லாச் சமயங்களும், புத்த ஜைன சமயங்களும்கூட ஒப்புக் கொள்கின்றன. ஓங்காரத்தை விளக்கப் பல பல உருவங்களை வைத்திருக்கிறார்கள். விநாயகரே பிரணவ உருவம் உடையவர்தாம். அவரது உருவத்தைத் தலையோடும், தும்பிக்கையோடும் பார்த்தால் பிரணவ உருவத்துக்கும், அந்தக் கோலத்துக்கும் உள்ள ஒப்புமை தெரியவரும்.

கொன்றை ஓங்காரத்தை நினைப்பூட்டும் மலர். அது சிவபெருமானுக்கு மிகவும் விருப்பமானது. அதனால் அதைத் தன் ஜடாபாரத்தில் வைத்திருக்கிறான். நல்ல மணமும் நிறமும் உடையது அந்த மலர்.

பிறக்கின்றபோது சிலர் நல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் சேர்க்கைக் கோளாற்றினால் தலை கொஞ்சம் திரும்பும். அவர்களுடைய தாய் தந்தையர்களின் பண்பாட்டினால் மறு படியும் நல்லவர்களாகவே மாறிவிடுவதும் உண்டு. சிலர் பிறக்கும் பொழுதே தீயவர்களாகப் பிறப்பார்கள்; ஆயுள் முழுவதும் தீயவர்களாகவே இருப்பார்கள். சிலர் பிறக்கும் பொழுது இயற்கையிலேயே நல்லவர்களாகப் பிறப்பார்கள்; ஆயுள் முழுவதும் நல்லவர்களாகவே இருப்பார்கள்.

இயற்கையிலேயே நல்லவர்களாகப் பிறந்து, நடுவில் தலை திரும்பிப் போய்ப் பின்பு இறைவனை அடைந்ததால் மறுபடியும் நல்லவர்களாக மாறி விடுகிறவர்களுடைய கூட்டத்திற்குப்

61

பிரதிநிதி கங்கை. இயற்கையிலேயே கெட்டவர்களாகப் பிறந்து, ஆயுள் முழுவதும் கெட்டவர்களாகவே இருப்பவர்களுங்கூட இறைவனை அடைந்த மாத்திரத்திலே தங்கள் கெட்ட குணத்தை விட்டவர்களாகிறார்கள். இப்படிப்பட்டவர்களுடைய கூட்டத்திற்கு பிரதிநிதி பாம்பு. இயற்கையிலேயே நல்லவர்களாக பிறந்து, ஆயுள் முழுவதும் நல்லவர்களாகவே இருக்கின்றவர்களும் இறைவனை அடைகிறார்கள். இத்தகையவர்களுடைய கூட்டத்தின் பிரதிநிதி கொன்றை மலர்.

ஆண்டவனுடைய சந்நிதிக்கு நல்லவர்கள் மாத்திரம் போக வேண்டும் என்பதில்லை. பிறக்கின்றபோதே நல்லவர்களாக இருந்தாலும் சரி, பிறக்கின்றபோதே கெட்டவர்களாக இருந்தாலும் சரி, பிறக்கின்ற போது நல்லவார்களாக இருந்து இடையில் ஏற்பட்ட சேர்க்கையினால் கெட்டவர்களாக மாறினாலும் சரி, ஆண்டவன் சந்நிதியை அடைந்து விட்டால் உய்வு பெற்று விடுவார்கள் என்பதை இந்த மூன்று பொருள்களும் காட்டுகின்றன.

தும்பை சூடினோன்

நான்காவது பொருள் தும்பை. அதுவும் இறைவனுடைய சிவந்த சடாடவியின்மேல் இருக்கின்றது. தும்பை மலர் ஒரே ஒர் இதழை உடையது. மலர் என்றால் மணம் இல்லாவிட்டாலும், நிறம் வேண்டும் என்பதை இன்றைய நாகரிகத்தில் பார்க்கிறோம். மணமேயில்லாத கனகாம்பரத்தை இன்று ரூபாய் போட்டு நிறுக்கிறார்கள்! நமது நாகரிகம் அப்படி வளர்ந்திருக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள மலர்களுக்குத்தான் சிறந்த மணம் உண்டு. குருடனும் மலரை அநுபவிக்கும்படி உள்ளது தமிழ்நாடு. இத்தகைய தமிழ்நாட்டில் மணமுள்ள மலரை விட்டு நிற மலரைச் சூடி அநுபவிக்கிற நாகரிகம் வந்துவிட்டால் என்னவென்று சொல்வது!

மலர் என்றால் மணம் வேண்டும்; இதழ்கள் இருக்க வேண்டும்; நிறம் வேண்டும். ஆனால் தும்பை மலரைப் பார்த்தால் அதற்கு நிறம் இல்லை; இதழ்களும் இல்லை; வாசனையும் இல்லை. அதுவும் இறைவன் சடையில் இருக்கிறது. நிறம், மணம், இதழ்கள் இல்லாத தும்பையை யார் சூடிக் கொள்வார்கள்? மணம் இல்லா விட்டாலும், நிறம் இருந்தால் சூடிக்கொள்வார்கள். நிறத்திற்காகக் காகிதப் பூவைச் சூடிக் கொள்ளுகிறார்கள் அல்லவா? ஏன் அதை அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால், "வாடா மலர்" என்கிறார்கள்! ஆனால் தும்பையை யாரும் சூடிக் கொள்வது இல்லை. அதை இறைவன் அணிந்திருக்கிறான்.

அந்த மலருக்கு மணம் இல்லாவிட்டாலும், நிறம் இல்லாவிட்டாலும், பல இதழ்கள் இல்லாவிட்டாலும் அதில் ஒன்றே ஒன்று மாத்திரம் இருக்கிறது; மென்மை.
   "மலரினும் மெல்லிது காமம்"
என்று வள்ளுவர் சொல்லுகிறார். மலருக்கு மென்மை ஓர் இயல்பு.

நிறம் இல்லாத வெள்ளைமலர் பல உண்டு. ஆனால் இவற்றுக்கு மிக்க வாசனையாவது இருக்கும். மல்லிகை, முல்லைப்பூ இல்லையா? தும்பை மலருக்கோ வாசனை இல்லை. வாசனை இல்லாவிட்டாலும் மலர் என்பதற்குரிய மென்மை இதனிடம் இருப்பதனாலேயே அதனை எம்பெருமான் ஏற்றுக் கொண்டான்.

"படாடோபம் வேண்டுவதில்லை. மந்திர ஜபம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெரிய கோயில்களுக்குப் போய்த் தவம் பண்ண வேண்டுவதும் இல்லை. அன்பு என்ற ஒன்று இருந்தால் போதும், ஆண்டவன் ஏற்றுக் கொள்வான்" என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்திக் கொண்டு சின்னப் பூவாகிய தும்பை ஆண்டவன் தலையில் இருக்கிறது; கொன்றை மலருக்கு அருகில் இருக்கிறது.

ஆண்டவனுடைய செஞ்சடையில் பெரிய, அழகான, மணமுள்ள கொன்றை மலருக்கு அருகிலேயே, நிறம் இல்லாத, வாசனையற்ற தும்பை மலரும் இருக்கிறது. இதிலிருந்து எவ்வளவு பெரியவனாக இருந்தாலும், எவ்வளவு சிறியவனாக இருந்தாலும் இறைவன் சந்நதிதானத்திற்கு வந்து விட்டால் ஒரே நிலையை உடையவர்கள் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சந்திரசேகரன்

ந்தாவது பொருளாக இறைவனுடைய சடையில் இருப்பது சந்திரன். சிவபெருமான் "அம்புலியின் கீற்றைப் புனைந்தவன்". அம்புலியின் கீற்று அவன் செஞ்சடாடவியின் மேல் ஏறிக் கொண்டு, அவனுடைய அளப்பருங் கருணையைக் காட்டுகிறது.

எம்பெருமான் பூமாலையை வைத்திருப்பது போல சந்திரனைத் தலையில் வைத்திருக்கிறான். அம்புலியைச் சூடிக் கொண்டிருப்பதால்தான் அவனுக்குச் சந்திரசேகரன் என்ற பெயர் வந்தது. இறைவன் பிறையை அணிந்திருப்பதன் உட்கருத்தை எண்ணிப் பலர் சந்திரசேகரனாக இறைவனைப் பார்க்கிறார்கள். ஞான சம்பந்தப் பெருமான் உமாதேவியார் ஊட்டிய சிவஞானப் பாலைக் குடித்த மாத்திரத்தில், "தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதி சூடி" என்று பாட ஆரம்பிக்கிறார். "பித்தா பிறைசூடீ" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடுகிறார்.

தனக்குப் பிரியமானவர்களையே ஆண்டவன் தலையில் சூடிக் கொண்டு ஆடுகிறான் என்பதில்லை; தனக்குத் தவறு எண்ணியவனையும் ஆண்டவன் ஆட்கொள்ளுகிறான் என்பதைச் சந்திரன் காட்டுகிறான்.

உலகத்தில் இரண்டு காரியம் எல்லாவற்றையும்விடத் தவறானவை. குருவுக்கு அபராதம் பண்ணுவது, இறைவனுக்கு அபராதம் பண்ணுவது ஆகிய இரண்டு காரியங்களும் மன்னிக்க முடியாத குற்றங்கள். தந்தை தாய்க்கு அபசாரம் பண்ணுவதும் குற்றந்தான். அதைவிட மிஞ்சிய குற்றம் குருவுக்கு அபசாரம் பண்ணுவது. சந்திரன் குருவுக்கு அபசாரம் பண்ணினவன்; அதோடு சிவபிரானுக்கும் இவன் தவறு இழைத்தான்.

தட்சன் ஒரு பெரிய யாகம் பண்ணினான். அந்த யாகத்துக்குச் சிறப்பான ஏற்பாடுகளைப் பண்ணியிருந்தான். எல்லோருக்கும் அழைப்பு அனுப்பியிருந்தான்; ஆனால் பரமேசுவரனுக்கு அனுப்பவில்லை.

பமமேசுவரன் யாகத்திற்குத் தலைவன்; அதனால் அவனுக்கு யக்ஞேசுவரன் என்று பெயர். எல்லா ஏற்பாடுகளும் கல்யாணத்திற்குச் செய்திருந்தாலும் மாப்பிள்ளை இல்லாவிட்டால் அது கல்யாணம் ஆகுமா? அதைப்போல யக்ஞத்திற்குத் தலைவனாகிய பரமேசுவரனை அழைக்காமல் மற்றவர்களை எல்லாம் அழைத்து யாகம் செய்தால் அது யாகம் ஆகாது.

தட்சன் வேள்விக்கு எல்லோரும் வந்திருந்தார்கள். சிவபெருமானுக்கு அழைப்பு இல்லையாதலால் அவன் வரவில்லை. அதனால் என்ன ஆயிற்று? மாணிக்க வாசகர் சொல்லுகிறார்:
   "சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று"
என்கிறார். தக்கன் வேள்வியில் அவியை நுகரவில்லை. புலாவைத்தான் உண்டார்கள். தேவர்கள் தாம் வாழ அவி பெறுவது வழக்கம். இங்கேயோ அவர்கள் தாம் சாகும்படி தகரைத் தின்றார்களாம்.

ஆண்டவன் தலைமை இருந்தால்தான் வேள்வி என்று சொல்லலாம். இல்லையானால் அதனை வேள்வி என்று சொல்ல முடியாது. சிவபெருமான் வீரபத்திர உருவத்தோடு யாகசாலை சென்றான். தேவர்களுக்குத் தண்டனை அளித்தான். ஒவ்வொரு தேவனுக்கும் ஒவ்வொரு தண்டனை கிடைத்தது. சூரியனுடைய கண்ணைப் பிடுங்கினான். சந்திரனைக் கீழே தள்ளிக் காலால் தேய்த்தான்.

தூங்கிக் கொண்டிருக்கிற ஒருவருடைய வாயில் தேன் சிந்தினால் அது இனிக்காதா? கோபத்தால் ஒருவன் மேலே தேனுள்ள பாத்திரத்தை எறிந்தால் அந்தப் பாத்திரத்திலுள்ள தேன் அவன் வாயிலே தெறிக்கும்போது அந்த தேன் இனிக்காதா? அதைப்போல, ஆண்டவனுடைய கோபத்தால் சந்திரனுக்குத் தண்டனை உருவத்தில் கிடைத்தது ஒரு பெரிய லாபம். சந்திரனைக் காலால் தேய்த்தான் அல்லவா இறைவன்? அதனால் அவனுடைய திருவடி சம்பந்தம் சந்திரனுக்குக் கிடைத்தது. இறைவனுடைய திருவடியைக் காணாமல் எத்தனையோ முனிவர்கள் தவம் கிடக்க, சந்திரனுக்கு அவனுடைய திருவடி சம்பந்தம் எளிதில் கிடைத்தது. தண்டனையாக இருந்தாலும் அடியின் தொடர்புக்குப் பயன் உண்டு அல்லவா?

"அமுதக் கடலுக்கு இருவர் போனார்கள். ஒருவன் அதன் கரையில் நின்று. கொண்டிருந்தான். மற்றொருவன் அமுதக் கடலுள் வீழ்ந்துவிட்டான். வீழ்ந்தவன் கதி என்ன ஆகும்" என்று தம் மாணவர்களை ஒரு ஞானி கேட்டாராம். "அமுதக் கடலுக்குள் விழுந்தவன் திக்குமுக்காடிச் செத்துப் போவான்" என்றார்கள் சிஷ்யர்கள்.

"இல்லை இல்லை; அமுதம் உண்டால் இறப்பில்லாத அமரத்துவந்தானே கிடைக்கும்? கரையில் இறக்கிறவனுக்கு அமுதத்தால் பயன் உண்டு என்றால் அதில் மூழ்கியவனுக்கு ஏது சாவு?" என்று அவர் கேட்டாராம்.

அதுபோலச் சந்திரனுக்குப் பரமேசுவரன் காலில் அகப்படும் தண்டனை கிடைத்தாலும் திருவடி சம்பந்தம் பெற்றமையால் இறைவனது தலையில் ஏறிக் கொள்ளும் பேறு அவனுக்குக் கிடைத்துவிட்டது. இறைவனுக்கு அபராதம் செய்தவனாக இருந்தாலும் அவன் திருவடியை அடைந்துவிட்டால், அவன் தன் தலையில் வைத்துக் கொள்வதற்குரிய உயர்ந்த பொருள் ஆகி விடலாம் என்பதைச் சந்திரன் காட்டுகிறான். இறைவன் அவ்வளவு கருணை உடையவன். இத்தகைய கருணைப் பெருமானுடைய பிள்ளை கருணைக் கடலாகத்தானே இருப்பான்? அதனால்தான்,
   ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
   கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே
என்றார் அருணகிரியார்.

3

றைவன் அருளைப் பெறத் தவம் செய்ய வேண்டும் என்கிறார்கள். எனக்கு முன்னைப் பேறு இல்லை. பின்னைத் தவமும் இல்லை. கருணையே வடிவான சிவபிரான் தன்னுடைய ஜடாபாரத்திலே தன் கருணையைப் புலப்படுத்தும் அடையாளமாக ஐந்து பொருள்களை வைத்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய திருக்குமரன் இரண்டும் கெட்ட எனக்கு அற்புதமான ஆனந்தத்தைத் தந்தான். அவன் அருளிய பேற்றை என்ன என்று சொல்வேன்' என்பது இந்தப் பாட்டின் திரண்ட பொருள்.


   பேற்றைத் தவம்சற்றும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும்
   சேற்றைக் கழிய வழிவிட்ட வாசெஞ்ச டாடவிமேல்
   ஆற்றைப்பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
   கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே.

மூன்று பகுதி

ந்தப் பாட்டு மூன்று பகுதிகளை உடையது. ஆன்மாவைப் பற்றிய பகுதி, பாசத்தைப் பற்றிய பகுதி. ஆண்டவனைப் பற்றிய பகுதி என்பன அவை.

"பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை" என்பது ஆன்மாவைப் பற்றிச் சொல்லியது. "பிரபஞ்சமென்னும் சேறு" என்பது மலம் அல்லது பாசத்தைப் பற்றிச் சொல்லியது. மற்றவை பதியைப் பற்றிச் சொல்லியவை. ஆன்மா மாயையாகிற சேற்றிலே இருந்தது. அங்கிருந்து அலசப் பெற்று ஆண்டவன் இருப்பிடத்தில் போய் சேர்ந்தது. இதையே உலகத்திலுள்ள எல்லாத் தத்துவ நூல்களும் வெவ்வேறு வகையில் சொல்கின்றன.

உலகம், உயிர், இறைவன் என்ற மூன்றைப் பற்றிய ஆராய்ச்சியை எல்லாச் சமயங்களும் திருப்பித் திருப்பி செய்து வருகின்றன. அந்த மூன்றுக்கும் உள்ள உறவு என்ன, இன்ப நிலை எது, அதை எப்படி அடைய வேண்டும் என்ற விவரங்களில் வேற்றுமை இருக்கலாமேயன்றி, இந்த மூன்று அடிப்படையான பொருள்கள் உண்டென்று சொல்வதில் வேறுபாடு இல்லை.

ஆன்மா ஆண்டவனை அடைவதற்குத் தடையாக இருப்பது ஒன்று. அதுதான் பிரபஞ்சச் சேறு. ஆன்மா இந்தப் பிரபஞ்சச் சேற்றிலே புதைந்து, செய்ய வேண்டிய தவங்களைச் செய்யாமல், பெறவேண்டிய பேறுகளைப் பெறாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. சேற்றைக் கழுவி இன்பம் அடைய வேண்டுமானால் புனிதமான ஆண்டவன் திருவருளைப் பெற வேண்டும்.

இந்த மூன்று பகுதியை உடைய பாடலைக் கந்தர் அலங்காரத்தின் முதற்பாட்டாக வைத்தார். மாளிகை கட்டினால் அதன் சிறப்பை எடுத்துக் காட்டும் வகையில் வாசல் பக்கத்தை அழகாகக் காட்டுவார்களேயன்றிக் குகை மாதிரியாகவா கட்டு வார்கள்? கந்தர் அலங்கார மாளிகைக்கு இந்த முதற்பாட்டு, தக்கபடி அமைந்த வாயிலாக இருக்கிறது.

தலைவாசல்

ந்தர் அலங்காரம் என்ற நூலின் தலைவாசலை இந்தப் பாட்டிலே திறக்கிறார் அருணகிரியார். அதனால் அந்த மாளி கைக்குள் என்ன என்ன பொருள்கள் இருக்கும் என்பதையும் குறிப்பாகத் தெரிந்து கொள்கிறோம்.

நம் வாழ்வில் ஏற்படுகின்ற அழுக்கு இன்னதென்று தெரிந்து கொண்டோம். அந்த அழுக்கைப் போக்குகின்ற ஆண்டவனைப் பற்றியும் தெரிந்தது. அழுக்குப் போகப் பெற்றதனால் ஏற்படுவது இன்பம் என்பதையும் அறிந்தோம். ஆனால் அந்த இன்பத்தை அருணகிரிநாதர் சொல்லவில்லை; சொல்லவும் முடியாது. அதை அடைவதற்கான வழியைச் சொல்ல முடியுமேயன்றி அதை அவரவர்களே அநுபவித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். "கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்" என்று சொல்வார்கள்.

கந்தர் அலங்காரத்தில் ஆன்மாவின் இலக்கணத்தைப் பார்க்கலாம். ஆன்மா பிரபஞ்சச் சேற்றிலே உழன்று அடைகின்ற துன்பத்தைப் பார்க்கலாம். பாசம் அகலும் போது ஆன்மா, ஆண்டவனைச் சார்ந்து இன்பம் அடைகிறது என்பதைப் பார்க்கலாம். இத்தனையையும் கந்தர் அலங்காரம் என்ற நூலுக்குத் தலைவாசல் போலிருக்கின்ற முதல் பாட்டிலேயே அருணகிரிநாதர் புலப்படுத்துகிறார்.
   பேற்றைத் தவம்சற்றும் இல்லாத
     என்னைப் பிரபஞ்சம்என்னும்
   சேற்றைக் கழிய வழிவிட்ட
     வா!செஞ்ச டாடவிமேல்
   ஆற்றைப் பணியை இதழியைத்
     தும்பையை அம்புலியின்
   கீற்றைப் புனைந்த பெருமான்
     குமாரன் கிருபாகரனே!

(முன் செய்த தவத்தின் பயனையும், இப்போது செய்த தவத்தையும் சிறிதேனும் பெற்றிலாத அடியேனை, சிவந்த சடைக் காட்டில் ஆற்றையும், பாம்பையும், கொன்றை மலரையும், தும்பை மலரையும், சந்திரனது கீற்றையும் அணிந்த சிவபெருமானுடைய குமாரனும் கருணைக்கு இருப்பிடமுமாகிய முருகன் பிரபஞ்சம் என்கின்ற சேற்றினின்றும் கழியும்படியாக வழிவிட்டவாறு என்ன வியப்பு!

பெருமான் குமாரனாகிய கிருபாகரன் என்னைச் சேற்றினின்றும் கழிய வழி விட்டவா என்று கூட்டுக. பேற்றைச் சற்றும் இல்லாத, தவம் சற்றும் இல்லாத என்று தனித்தனியே கூட்டுக, சேற்றை - சேற்றினின்றும். வழிவிட்டவா - வழி விட்டவாறு என்ன வியப்பு! செஞ்சடாடவி - செம்மையாகிய சடைக்காடு. இதழி - கொன்றை. மூன்றாம் பிறைச் சந்திரனை அம்புலியின் கீற்று என்றார். கிருபா ஆகரன் - கிருபைக்கு இருப்பிடமானவன்; கிருபாகரன் என்று பிரித்துக் கிருபையைச் செய்கிறவன் என்றும் பொருள் கொள்ளலாம்.)