கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1/கடதட கும்பக் களிறு
கடதட கும்பக் களிறு
1
மரபு
ஒருவர் ஒரு காரியத்தைச் செய்வதற்குப் பல வழிகளிலே முயன்று கடைசியில் எந்த வழியாக வெற்றி பெற்றாரோ அந்த வழியைப் பின்னால் வருகின்றவர்களுக்கும் சொல்வதைச் சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள். 'கல்' என்றும், 'மண்' என்றும் சிலவற்றுக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். "இதற்கு கல் என்று பெயர் வைப்பானேன்? இதை மண் என்றும், அதைக் கல் என்றும் ஏன் சொல்லக்கூடாது?" என்று கேட்கலாம். அப்படியும் சொல்லலாம். ஆனால், கல்லைக் கல் என்று சொல்கிறவர்கள் எல்லோரும் அதை மண் என்று மாற்றிச் சொல்ல வேண்டுமானால் பல காலம் ஆகும். ஆகவே, முன்னே நம் பெரியோர்கள் எந்த வழியில் சென்றார்களோ அதே வழியில் நாமும் செல்வது நல்லது. அதனை மரபு, சம்பிரதாயம் என்று சொல்வார்கள். அந்தச் சம்பிரதாயப்படி, ஒரு நூலைத் தொடங்க வேண்டுமானால் அந்த நூலின் ஆரம்பத்தில் விநாயகரைத் துதிப்பது வழக்கம். சிவாலயத்துக்குப் போகும்போது முதலில் விநாயகரை வணங்குவது மரபு.
திருவண்ணாமலை ஆலயத்தின் கோபுரம் கிழக்கு நோக்கி இருக்கிறது. அந்தக் கோபுரத்தின் வழியே உள் வாசலுக்குச் சென்றால் அந்த வாசலின் ஒரு பக்கம் விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார். மற்றொரு பக்கம் குமாரக் கடவுள் எழுந்தருளியிருக்கிறார்.
அருணகிரி நாதப் பெருமான் திருவண்ணாமலைக்குச் செல்கிறார். நம்மையும் உடன் அழைத்துப் போகிறார். கோபுர வாசலுக்கு வலப்பக்கம் விநாயகர் இருக்கிறார். இடப்பக்கம் முருகப் பெருமான் இருக்கிறான். விநாயகருக்கு அவர் தனியாகத் துதி சொல்லவில்லை. விநாயகரை நினைக்கிறார். 'ஒரு பாட்டிலே விநாயகரையும் சொல்ல வேண்டும்; முருகனையும் சொல்ல வேண்டும் என்று எண்ணுகிறார். அதை எப்படிச் சொல்வது? நம் தாய்மார்கள் தம்முடைய மாப்பிள்ளையைச் சொல்லும்போது தம் பெண்ணைச் சொல்லி அவரைக் குறிப்பிடுவார்கள்; "நம் லட்சுமி புருஷன்" என்று குறிப்பிப்பார்கள். இதைப் போலவே அருணகிரிநாதர் பாடுகிறார். "நான் திருவண்ணாமலைக்குப் போனேன். கோபுர வாசலுக்குப் போனேன். உள் வாசலில் உள்ள களிற்றுக்கு இளைய களிற்றைத் தரிசித்தேன்" என்று பாடுகிறார்.
அடலரு ணைத்திருக் கோபுரத் தேஅந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டு கொண்டேன்...
முருகனைக் கண்டுகொண்டேன் என்று சொல்ல வந்தவர். களிறாகிய விநாயகருக்குத் தம்பியாகிய களிற்றைக் கண்டேன் என்கிறார். அண்ணாவாகிய களிறு எத்தகையது?
வருவார் தலையில்
தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிறு.
"அதோ விநாயகர் வீற்றிருக்கிறார். அவரைப் பார். அந்தக் களிற்றுக்கு இளைய களிறாகிய முருகனை நான் கண்டு கொண்டேன்" என்று அவர் குறிப்பிடுகிறார்.
இந்த பாடலில் ஐந்து பகுதிகள் இருக்கின்றன. திருவண்ணாமலை, திருவண்ணாமலையிலுள்ள கோபுரம், அதிலேயுள்ள உள்வாயில், அந்த வாயிலுக்குத் தெற்கே இருக்கிற விநாயகர், வடக்குப் பக்கத்தில் இருக்கிற குமாரசுவாமி ஆகிய ஐந்து பொருள்களையும் இந்தப் பாடலில் காணலாம்.
அடல் அருணை
புராணங்களிலும், காவியங்களிலும் நகரச் சிறப்பைச் சொல்லும் படலம் ஒன்று முன்னே இருக்கும். இங்கே நகரப் படலத்தைச் சுருக்கமாகக் கூறிக்கொண்டு பாட்டை ஆரம்பிக்கிறார் அருணகிரிநாதர். "வீரர்கள் மிக்க திருவண்ணாமலைக்கு வாருங்கள். ஆலயத்தின் கோபுரத்தைப் பாருங்கள். உள் வாசலுக்கு வாருங்கள். அந்த வாசலுக்கு இடப்பக்கம் இருப்பது யார் தெரியுமா? அந்த வாசலின் வலப்பக்கம் கும்பக் களிறு இருக்கிறதே, அதனுடைய இளைய களிறுதான் இடப்பக்கம் இருக்கிறது. மூத்த களிறு விநாயகர் என்றால் இளைய களிறு முருகன். இளைய களிறாகிய முருகனை நான் கண்டுகொண்டேன்" என்று சொல்லுகிறார். இளைய களிற்றைக் கண்டுகொண்டதாகச் சொன்னாலும் அவரைப் பற்றிப் பின்னே விரிவாகச் சொல்லப் போகிறார். இங்கே மூத்த களிற்றைப் பற்றிச் சற்று விரிவாகப் பேசுகிறார்.
அந்தப் பாட்டைப் பார்ப்போம்.
அடலரு ணைத்திருக் கோபுரத் தேஅந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையில்
தடய டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.
அடல் என்றால் அடுதல் என்று பொருள் உண்டு. வீரம் என்று மற்றொரு பொருளும் உண்டு. அடுதல் - அழித்தல் அல்லது சங்காரம் செய்தல். அழித்தல் என்ற பொருளை ஆரம்பத்தில் வைத்து நூல் தொடங்கலாமா? ஆகவே அடல் என்பதற்கு இங்கே வீரம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
'அடல் அருணை' என்பதற்கு வீரத்தையுடைய அருணை என்று பொருள். அருணைக்கு வீரம் எது? "சென்னை பணம் பெருத்த ஊர்' என்றால் சென்னையில் உள்ளவர்கள் பணக்காரர்கள் என்பது பொருள் அல்லவா? "தஞ்சை ஜில்லா சங்கீதம் பெருத்த ஊர் தஞ்சாவூர் மண்ணுக்கே சங்கீதம் சொந்தம்" என்றால், தஞ்சை ஜில்லாவிலுள்ள மக்களுக்குச் சங்கீத ஞானம் மிகுதி என்றுதானே பொருள். அதைப் போலவே அடல் அருணை என்றால், அந்த ஊரில் வாழ்கிறவர்கள் வீரர்கள் என்பது பொருள். அவ்வூரிலுள்ளவர்கள் பெரிய படை வீரராகவோ, படைத் தலைவராகவோ இருக்க வேண்டுமென்பது இல்லை.
வீரத்தில் சிறந்தவன் முருகன். தேவ சேனாபதி என்று அவனுக்கு ஒரு பெய்ர் உண்டு; அமரர்கள் படைக்குத் தலைவன் அவன். வீரம் பொருந்திய அவன் எழுந்தருளியிருக்கும் இடம் திருவண்ணாமலை. அதுவும் வீரம் நிறைந்த இடம்; அடல் அருணை என்ன வீரம்? ஞான வீரம் படைத்த இடம் அது. அந்த ஊரில் பல ஞானப் பெரியார்கள் வாழ்ந்திருக்கிறார்கள். நம் கண்ணுக்கு முன்னாலேயே ரமண மகரிஷி அங்கே இருந்தார்.
அவர்கள் தங்கள் பொறிகளை வென்றவர்கள். உடம்பிலே சக்தி உடையவர்கள் எல்லோரையும் வீரம் உடையவர்கள் என்று சொல்ல முடியாது. உள்ளத்திலே தோன்றுகிற காமம் முதலிய ஆறு குணங்களையும் வென்றவர்களே ஞான வீரம் படைத்தவர்கள். ஐம்புலன்களையும் வென்றவர்கள் வீரர்கள். "புலனைந்தும் வென்றான்றன் வீரமே வீரம்" என்று ஔவையார் சொல்லுகிறார்.
திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு சேதி நாட்டை மெய்ப்பொருள் நாயனார் என்ற அரசர் ஆண்டு வந்தார். சிவனடியார்களின் வேடத்தையே மெய்ப்பொருள் என்று அவர் கருதி வந்ததால், அவரை மெய்ப்பொருள் நாயனார் என்று மக்கள் அழைத்தார்கள்.
முத்திநாதன் என்ற அரசன் அவர்பால் பகைமை கொண்டிருந்தான். அவன் பலமுறை முயன்றும் மெய்ப்பொருள் நாயனாரைச் சண்டையில் வெல்ல முடியாது போகவே வஞ்சனையால் அவரைக் கொன்றுவிட எண்ணினான். சிவனடியார் போல உடம்பெல்லாம் திருநீறு பூசி, ருத்திராட்சம் அணிந்து மெய்ப்பொருள் நாயனாரின் அரண்மனையை அடைந்தான்.
சிவ வேடம் தாங்கி வருபவர்களை யாரும் தடுக்கக் கூடாது என்று மெய்ப்பொருள் நாயனார் ஆணையிட்டிருந்ததால், அவன் அவருடைய அரண்மனை அந்தப்புரம் வரை சென்று விட்டான். தத்தன் என்ற காவலாளி அரசன் உறங்குகிறான் என்று சொல்லியும் கேளாமல் அந்தப்புரத்திற்குள் நுழைந்தான். மெய்ப் பொருள் நாயனார் படுத்திருந்தார். அவர் மனைவி அருகிலே உட்கார்ந்திருந்தாள். சிவவேடம் தாங்கிய முத்திநாதன் உள்ளே நுழைந்தவுடன் மெய்ப்பொருள் நாயனார் எழுந்து பணிந்து நின்றார்.
"சிவபெருமானால் நேரே எனக்குக் கொடுக்கப்பட்ட ஆகமநூல் ஒன்று என்னிடம் இருக்கிறது. அதை உனக்கு மாத்திரம் தனிமையில் உபதேசிப்பதற்காக நான் வந்திருக்கிறேன்" என்று அவன் சொல்ல, மெய்ப்பொருள் நாயனார் தம் மனைவியை அப்பால் போகச் சொல்லிவிட்டு, தம் கையைக் கூப்பிக் கும்பிட்டு வணங்கி, "தங்கள் திருவுள்ளப்படியே அடியேனுக்கு உபதேசிக்க வேண்டும்" என்று கூறினார்.
முத்திநாதன் தன் வஞ்சகக் கருத்தை நிறைவேற்றிக் கொண்டான். புத்தகத்தை எடுப்பவனைப் போல மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து மெய்ப்பொருள் நாயனாரை குத்திவிட்டான். இங்கே வென்றவர் யார்? முத்திநாதனா? மெய்ப்பொருள் நாயனாரா? மெய்ப்பொருள் நாயனாரை கொல்ல வேண்டும் என்பது முத்திநாதனின் கருத்து. அதை நிறைவேற்றி விட்டதால் முத்திநாதனுக்குத்தானே வெற்றி? தோற்றுப் போனவர் மெய்ப்பொருள் நாயனார்தாமே? அப்படி இல்லை என்கிறார் சேக்கிழார். மெய்ப்பொருள் நாயனாரே வென்றாராம். ஏன்? அவரது கொள்கை என்ன? சிவவேடத்தை மெய்ப்பொருள் என்று வணங்குவதுதானே? கத்தியை எடுத்துக் குத்த வந்த போதும் அவர் தொழுத கையை மாற்றவில்லை. முத்திநாதன் தரித்திருந்த சிவவேடம் மாறவில்லையே! ஆகவே உயிர் போகின்ற காலத்தும் தம் உயிரின்மேல் ஆசை கொண்டு தாம் கொண்ட கொள்கையை அவர் மாற்றவில்லை. உயிரைக் கொடுத்து கொள்கையை அவர் காப்பாற்றினார். ஆகவே தம் கொள்கையைக் கடைப்பிடித்து உயிருக்கு எதிரே நின்று வென்றார், மெய்ப் பொருள் நாயனார். இதைச் சொல்லுகிறார் சேக்கிழார் பெருமான்.
"கைத்தலத் திருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று
புரிந்தவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப்
பொருளெனத் தொழுது வென்றார்."
திருக்கோபுரம்
ஊரின் சிறப்பை ஒரு சொல்லிலே சொல்லிவிட்டு அங்குள்ள கோயிலைப் பற்றிச் சொல்ல வருகிறார். கோயிலுக்கு அடையாளம் எது? நெடுந்துாரத்திலே இருந்து பார்த்தாலும் இங்கே ஆலயம் இருக்கிறதென்று காட்டுவது கோபுரம். அதை ஸ்தூல லிங்கம் என்று சொல்வார்கள். லட்சுமீகரம் பொருந்திய ஊர் என்று காட்டுவதற்குக் கோபுரத்தைக் கட்டினார்கள். "கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது அந்தக் காலத்திய உபதேச மொழி.
"மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்”
அழகு என்று இலக்கண நூல் சொல்லுகிறது.கோபுரம் இறைவன் திருக்கோயில்களின் புறச்சின்னம்.
ஆனால் இன்றைக்கு மனிதன் வசிக்கும் மாளிகைக்குக் கோபுரம் வைக்கிறார்கள். சாமிக்குக் கோபுரம் போய் விட்டது; ஆசாமிக்கு வந்துவிட்டது.
ஒர் ஊரிலேயுள்ள கோயிலுக்குக் கோபுரம் கட்டுவது அந்த ஊரில் லட்சுமீகரம் இருக்கிறதென்பதைக் காட்டும் அடையாளம். அந்த ஊர் மக்களுடைய உழைப்பு இறைவனைச் சார்ந்து பயன் பெற்றது என்பதைக் கோயில் காட்டுகிறது.
இப்போது மக்களுடைய சொந்தத் தேவைகள் மிக அதிகமாகப் போய்க் கொண்டிருக்கின்றன. மக்களுக்கு வேண்டிய பலபல பொருள்களை உற்பத்தி செய்யக் கூடிய தொழில்களும், தொழிற்சாலைகளும் வளர்ந்துகொண்டே போகின்றன. முன்பெல்லாம் மக்களுடைய தேவை மிகக் குறைவு. ஆனால் அவர்களுடைய பலம் இப்போது இருப்பவர்களுடைய பலத்தைப் போல் பத்து மடங்கு, இருபது மடங்கு அதிகமாக இருந்தது. எல்லோரும் சுறுசுறுப்பாய் இருந்தார்கள். அவர்களுடைய சக்தி எல்லாம் என்ன ஆயின? அவை வீணாகவில்லை. அவை ஒன்றாகச் சேர்ந்தமையால் பெரிய பெரிய ஆலயங்கள் வானளாவ எழுந்தன. அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு சாகவில்லை. யாவரும் கூட்டாக வேலை செய்து இறைவனுக்குரிய கோயில்களையும், கோபுரங்களையும் எழுப்பினார்கள். ஊரில் கோயில் இருந்தால் அங்கே திருமகள் விலாசம் இருக்கும். இல்லையானால் திரு இருக்கமாட்டாள். "திருக்கோயில் இல்லாத திருஇல் ஊரும்" என்பது அப்பர் வாக்கு. கோபுரம் இல்லாத ஊர், அதாவது திருக்கோயில் இல்லாத ஊர், மூதேவி உறைகின்ற ஊர் என்பது அவர் குறிப்பு. இறைவன் திருக்கோயில் இல்லாத ஊரை ஊர் என்று சொல்லக்கூடாது. "அவையெல்லாம் ஊர் அல்ல; அடவி காடே" என்பர் அப்பர்.
இதனை உடம்பு என்று சொல்லுகிறோம். கை, கால், மூக்கு, கண், காது என்பவற்றைத் தனித்தனியாக உடம்பு என்று சொல்லுகிறதில்லை. உயிர் இருந்தால்தான் அதற்கு விலாசம். உயிர் இருந்தால்தான் ராமசாமி ஐயர், ராமசாமி நாயுடு, ராமசாமி முதலியார் என்பன போன்ற விலாசங்கள் அமையும். உயிர் இல்லாவிட்டால், கை, கால், கண், மூக்கு, காது இருந்தாலும் 'பிணம்' என்றுதான் பெயர். அவ்வாறே ஆண்டவன் திருக்கோயில் இல்லாத ஊரில் வீடுகள், பார்க்குகள், தொழிற்சாலைகள் முதலியன இருந்தாலும் அது காட்டுக்கு ஒப்பானதே.
ஊர் என்று சொல்வதற்கு ஏற்றபடி இருக்க வேண்டுமானால் அங்கே லட்சுமீகரம் பொருந்திய திருக்கோயில் இருக்க வேண்டும். கோயிலுக்கு அடையாளம் கோபுரம். வீரம் பொருந்திய திருவண்ணாமலையில் திருமகளின் விலாசம் நிறைய உண்டு. திருக்கோபுரம் இருக்கிறது. திருவின் விலாசம் உள்ள கோபுரம், திருக்கோபுரம்.
அந்த வாயில்
அடலரு ணைத்திருக் கோபுரத்தேஅந்த வாயிலுக்கு.
அந்த வாயிலுக்கு என்றால் உள் வாயிலுக்கு என்பது பொருள். உள்ளேயிருப்பது அந்தப்புரம்; உள்ளே உள்ள கரணம் அந்தக்கரணம்.
"ஞான வீரர்கள் நடமாடிய ஊர் திருவண்ணாமலை; திருமகள் தாண்டவமாடும் ஊர். அதற்கு அடையாளமாக விளங்கும் இந்தத் திருக்கோபுரத்தைப் பாருங்கள். உள்வாசலுக்கு வாருங்கள்" என்று நம்மை அழைத்துக் கொண்டு போய் நிறுத்துகிறார். கோபுரம் கிழக்குப் பார்த்திருக்கிறது. வலப்பக்கம் தென்புறம். இடப்பக்கம் வடபுறம்.
..............அந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண்டேன்...
இப்படிச் சொல்லும்போதே, "யாரைக் கண்டு கொண்டீர்கள் என்ற கேள்வி பிறக்கிறது. "முருகனைக் கண்டு கொண்டேன்' என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம். அப்படிச் சொல்லவில்லை. அவர் பழைய சம்பிரதாயத்தை விட்டுவிடவில்லை. முன்னாலே விநாயகரைச் சொல்வது மரபு அல்லவா? ஆகவே இரண்டடியில் விநாயகக் கடவுளைப் பற்றிச் சொல்கிறார்.
2
விநாயகர்
யார் யார் தம்மை அணுகவில்லையோ அவர்களுக்கு விக்கினத்தை உண்டாக்கி, தம்மைப் பணிந்தவர்களுடைய விக்கினத்தை எல்லாம் நீக்குபவர் விநாயகர்.
நல்ல போலீஸ்காரன் தவறு பண்ணுகிறவர்களைத் துன்புறுத்துகிறான். தவறு பண்ணாதவர்களுக்கு நன்மையும் செய்கிறான். அப்படியே விநாயகரும் இருக்கிறார்.
கூட்டம் கூடுகிற இடங்களிலெல்லாம் போலீஸ்காரன் இருப்பதைப்போல, விநாயகரும் இருக்கிறார். நாற்சந்தியிலும் இருக்கிறார்; நகருக்குள்ளும் இருக்கிறார். அரச மரத்தடியிலும் இருக்கிறார்; ஆற்றங்கரையிலும் இருக்கிறார்; கணங்களுக்குப் பதி அவர்; 'கணபதி' என்ற பெயர் படைத்தவர் பூதங்களுடைய கூட்டத்திற்குத் தலைவர்.
சிவபெருமானே அவருக்குப் போலீஸ் உத்தியோகம் தந்தார். சட்டத்தை உண்டுபண்ணினவனே சட்டத்தை மீறினால் அந்தச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக அவனைப் போலீசார் கைது செய்து விடுவார்கள். கணபதியாகிய போலீஸ்காரனை நியமித்தது சிவபெருமான்தான் என்றாலும், சட்டத்தை மீறினால் விநாயகர் அவனிடமும் தம் கடமையைச் செய்வார் என்கிற தத்துவம் உலகத்திற்கு விளக்கப்படுவதுபோல, விநாயகர் சிவபெருமானது தேரின் அச்சை ஒரு சமயம் முறித்துவிட்டார். அச்சிறுப்பாக்கம் என்று ஒர் ஊர் இருக்கிறது. திரிபுர சங்காரம் செய்வதற்காகச் சிவபெருமான் புறப்பட்டபோது தம்மை வணங்காமற் சென்றமையால் அவரது தேரின் அச்சை முறித்து விட்டார் விநாயகர். அச்சு இற்ற பாக்கமே அச்சிறுபாக்கம். சட்டத்தை உண்டுபண்ணினவனாலும் சட்டத்தை மீறினால் தண்டனை உண்டு என்பது தர்மம். அந்தத் தர்மத்தைச் சிவனே இத்திருவிளையாடலால் காட்டினான்.
தடபடெனப் படு குட்டு
விநாயகரைக் களிறு என்று சொன்னார். அந்த களிறு எத்தகையது? "வருவார் தலையில் தடபடெனப்படு குட்டுடன், சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக் களிறு" என்று மூன்று இலக்கணங்கள் கூறுகிறார். தடபடெனப்படு குட்டை ஏற்றுக் கொள்ளும் களிறு அது, சர்க்கரை மொக்கிய கையை உடைய களிறு, கடதட கும்பக் களிறு. .
முதல் இரண்டும் விநாயகர் செய்கின்ற காரியத்தைச் சொல்வது. குட்டைப் பெற்றுக் கொண்டு சர்க்கரையை ஏந்தியிருக்கிறார். இறைவன் சந்நிதானத்திற்குப் போகும்போது மக்கள் பணிவாகப் போக வேண்டும். நம்மிலும் உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்று சில சமயங்களில் இறுமாந்து இருக்கிறோம். அப்படித் தலைநிமிர்ந்து நடக்கும்போது தலையில் குட்டு விழுகிறது. நாம் உயர்ந்தோம் என்று எண்ணித் தலை நிமிர்ந்து போகும்போது யாராவது நம் தலையில் குட்டி உட்கார வைத்து விடுகிறார்கள். நாமே தலை குனிந்து போய்விட்டால் நம்மைப் பிறர் குட்ட வேண்டிய அவசியம் இருக்காது.
"எல்லார்க்கும் நன்றாம் பணிதல்"
என்று திருவள்ளுர் சொல்லுகிறார். "ஏழைகளே பிறருக்குப் பணிந்து போக வேண்டும். பணக்காரர்களாகிய நாங்களுமா, அறிவுடையவர்களாகிய நாங்களுமா, பிறருக்குப் பணிந்து போக வேண்டும்?" என்று சிலர் கேட்கலாம். "எல்லார்க்கும் நன்றாம் பணிதல் என்பதிலுள்ள எல்லார்க்கும் என்ற வார்த்தை எங்களையுமா
க.சொ.1-4 உட்படுத்தும்?" என்று பணக்காரர்கள் கேட்கலாம். புத்தி படைத்தவர்கள் கேட்கலாம். பணம் படைத்தவர்களுக்கும், பதவியில் உள்ளவர்களுக்கும் பயந்து, "நீங்கள் பணிய வேண்டாம்" என்று வள்ளுவர் சொல்லுவாரா? பொய்யாமொழிப் புலவர் அவர். பணக்காரர்களுக்காக உண்மையை மறைக்க மாட்டார்.
ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு சாதி, ஒர் இனம், ஒரு சமயம் என்கின்ற பாகுபாடு இல்லாமலே, உலகத்திலுள்ள மக்கள் எல்லாரும் லட்சிய வாழ்க்கை வாழ்வதற்கு உரிய இலக்கணத்தைச் சொல்கிறவர் அவர் "செல்வர்க்கே செல்வம் தகைத்து" என்கிறார். "செல்வர்க்கே" என்று ஏகாரம் போட்டுச் சொல்வது, "எல்லோரும் வாழ்க்கையில் பணிவாக இருக்க வேண்டும். அவர்களிலும் செல்வம் படைத்தவர்கள் நிச்சயமாகப் பணிவாக இருக்க வேண்டும்" என்று வலியுறுத்துகிறது.
நம்மிடம் பணிவு இல்லாவிட்டால் யாராவது நம்மைக் குட்டி உட்கார வைத்து விடுவார்கள். அம்மாதிரியாகப் பணிவது அவமானம். நாமாகப் பணிவதுதான் புகழ்; வெகுமானம். இதனை நமக்கு விநாயகப் பெருமான் அறிவுறுத்துகிறார். "ஆண்டவன் திருக்கோயிலுக்குப் போகும்போது தலை நிமிர்ந்து கொண்டு போகாதே. நான் வாசலிலேயே உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன். என் எதிரில் நின்று தலையில் குட்டிக் கொண்டு போ" என்று அறிவுறுத்துகிறார். "வருவார் தலையில் தடப டெனப் படுகுட்டுடன்" அவர் உட்கார்ந்திருக்கிறார். அவரைப் பார்க்கின்ற நாம் எல்லோரும் முதலில் குட்டிக் கொண்டு பணிவுடன் போக வேண்டும்.
ஆத்ம சோதனை
தம்மைத் தாமே குட்டிக் கொள்ளுவது, தம்மைத் தாமே சீர்திருத்திக் கொள்ளுவதற்கு அடையாளம். அத்தகையவர்களுக்கு அவர் அநுக்கிரகம் செய்பவர். அதனை அவருடைய சர்க்கரை மொக்கிய கை காட்டுகிறது. சர்க்கரையை மொக்குகிறவர், உண்ணுகிறவர் அவர். அவர் கையில் அது இருக்கிறது. தாம் உண்ணுவதை அடியார்களுக்கும் கொடுப்பார். அதுதானே பிரசாதம்? தன்னைத்தானே சோதித்துக் கொள்வதும், தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்வதும் உயர்ந்த குணங்கள். மகாத்மா காந்தி அவர்கள் தம்முடைய சரித்திரத்தை எழுதினார். அதற்குச் சத்திய சோதனை" என்று பெயர் கொடுத்தார். சத்தியத்தை அவர் சோதித்தார் என்றோ, சத்தியம் அவரைச் சோதனை பண்ணியது என்றோ கொள்ளலாம். அந்தச் சோதனையில் அவர் வென்றார். தம்மைத்தாமே சோதித்துக் கொண்டவர் அவர் தம்மைத்தாமே சோதித்துக் கொள்பவர்கள், ஆத்ம சோதனை பண்ணுகிறவர்கள், பிறரிடத்தில் தோல்வி உறமாட்டார்கள். நமக்கு நாமே வைத்துக் கொள்ளுகிற பரீட்சையில் நாம் தோல்வியுற்றால் அவமானம் உண்டாகாது. இன்னும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை மாத்திரம் தெரிந்து கொண்டு முன்னேறுகிறோம். பிறர் வைக்கும் பரீட்சையில் தோல்வியுற்றாலோ அவமானம் உண்டாகிறது.
தம்மைத் தாம் சோதித்துக் கொள்வது மகான்களுடைய குணம். ஆண்டவனுடைய சந்நிதானத்திலே குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டால் மகான்களுடைய குணத்தில் எள்ளளவாவது நம்மிடம் படியும். தன்னைத் தானே சோதித்துக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதற்கு அது தொடக்கமாக நிற்கும்.
"ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு"
என்கிறார் வள்ளுவர்.
நமக்கு இரண்டு விதமாக பார்வைகள் இருக்கின்றன. குற்றத்தைப் பார்க்கும் பார்வை, குணத்தைப் பார்க்கும் பார்வை என்று இருவகை. அந்த இரண்டையும் எப்படிப் பார்க்கிறோம்? அதில் உள்ள வேறுபாட்டினால் நம் பண்பின் உயர்வும் தாழ்வும் அமைகின்றன.
நாம் எதையும் பெரிதாகவே பார்க்கிறோம். பெரியவர்களும் அப்படித்தான் பார்க்கிறார்கள். நாம் பிறருடைய சிறிய குற்றத்தைப் பெரிதாகப் பார்க்கிறோம்; நம்முடைய சிறிய குணத்தையும் பெரிதாகப் பார்க்கிறோம். பெரியவர்களோ பிறருடைய சிறிய குணத்தைப் பெரிதாகப் பார்க்கிறார்கள்; தம்முடைய சிறிய குற்றத்தைப் பெரிதாகப் பார்க்கிறார்கள். இரண்டு பேருக்கும் சின்னதைப் பெரிதாகப் பார்க்கிற தன்மை பொதுவாக இருக்கிறது. ஆனால் அப்பார்வை அமையும் முறைதான் நமக்குத் தெரியவில்லை. யார் குற்றத்தைப் பெரிதாகப் பார்க்க வேண்டும், யாருடைய குணத்தைப் பெரிதாகப் பார்க்க வேண்டும் என்ற வரையறை நம்மிடையே இல்லாததுதான் உலகில் ஏற்படுகிற எல்லாக் கோளாறுகளுக்கும் காரணமாக இருக்கிறது.
பெரியவர்களைப் போல நாமும் ஆத்மசோதனை செய்ய ஆரம்பித்தால் நம்மிடையே உள்ள குற்றங்களை நாமே பார்த்துத் திருத்திக் கொள்ள முடியும். நம்மை நாமே வென்று கொண்டு விட்டால், இந்த உலகம் முழுவதும் நம் வசப்பட்டுப் போகும்.
சர்க்கரை மொக்கிய கை
அந்த வகையில் வாழ்ந்த மக்கள் இந்த நாட்டுப் பெரியோர்கள். அவர்கள் நமக்குப் பலவிதமான பழக்கங்களைச் செய்து காட்டியிருக்கிறார்கள். விநாயக வணக்கமும் அந்த மரபில் வந்ததுதான். கோயிலுக்கு வந்தால் முதலில் பணிவாகக் குட்டிக் கொண்டு வணங்க வேண்டும்; வணங்கினால் ஆண்டவனுடைய பிரசாதம் கிடைக்கும் என்பதை, "வருவார் தலையில் தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கையை உடைய விநாயகர் நமக்கு உணர்த்துகிறார். எம்பெருமானுடைய சந்நிதியிலே வணங்கி நின்றால் அவர்களுக்குச் சர்க்கரை கிடைக்கும்; அவர் வாழ்க்கை சர்க்கரை போல இனிக்கும் என்பதை அது குறிப்பிக்கிறது.
3
"கடதட கும்பக் களிறு" என்று விநாயகரைச் சொல்லுகிறார் அருணகிரிநாதர். கடம் என்பது மதம். தடம் என்பது அது பிறக்கின்ற சுவடு. கும்பம் என்பது தலை; மஸ்தகம். மதம் வழிந்தோடுகின்ற சுவட்டோடு கூடிய தலையைப் பெற்ற யானை என்பது பொருள்.
கருணை மதம்
உலகத்தில் நாம் பார்க்கிற யானைக்கு மதம் உண்டு. அந்த யானைக்கு வெறி உண்டானால், மற்றப் பிராணிகளுக்குத் துன் பத்தை அளிக்கிறது. ஆனால் விநாயகருக்கு உண்டாகிற மதம், பிறருக்குத் தீங்கை விளைப்பதில்லை; அருளாக அது வெளிப்படுகிறது.
அரண்மனையின் வாசலில் யானையைக் கட்டி வைக்கி றார்கள். அதுபோல அரனுக்கு மனையாகிய திருக்கோயிலின் வாசலில் விநாயகராகிய களிறு இருக்கிறது. கருணையென்னும் மதம் பொழிய, அது இருக்கிறது.
"உள்ளமெனும் கூடத்துள் ஊக்கமெனும்
தறிநிறுவி உறுதி யாகத்
தள்ளரிய அன்பென்னும் தொடர்பூட்டி
யிடைப்படுத்தித் தறுகட் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக்
களித்துண்டு கருணை யென்னும்
வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை
நினைந்துவரு வினைகள் தீர்ப்பாம்"
என்று பரஞ்சோதி முனிவர் அந்தக் கடதடகும்பக் களிற்றைப் பாடுகிறார். அந்த யானை தன்னை அண்டிய பக்தர்களுடைய காரியங்களை எல்லாம் நிறைவேற்றி வைக்கின்ற கருணை உடையது. உள்ளம் என்னும் கூடத்தில், ஊக்கமென்னும் தறியை ஊன்றி, தள்ளரிய அன்பு என்னும் சங்கிலியை உறுதியாகப் பூட்டி அந்த யானையைக் கட்ட வேண்டும். ஆன்மா தன்னிடம் உள்ள அறியாமையை அதற்குக் கவளமாகக் கொடுத்தால் போதும். அதனை மிகக் களிப்புடன் உண்ணுமாம். பிறகு அது கருணையாகிற மதத்தைப் பொழியும்.
காப்பு
இந்த மூத்த களிறு அந்தத் திருக்கோயிலின் தெற்குப் பக்கத்தில் கருணையாகிற மதம் பொழியவிட்டுக் கொண்டு வீற்றிருக்கிறது. வட பக்கத்திலே இந்தக் களிற்றின் இளைய களிறாகிய முருகன் உட்கார்ந்திருக்கிறான். இந்த முருகப் பெருமானை நான் கண்டு கொண்டேன் என்று முதல் பாட்டிலே அருணகிரிநாதர் சொல்கிறார். விநாயகரை நேர்முகமாகச் சொல்லாமல் முருகனோடு சார்த்திச் சொன்னாலும் இப்பாட்டில் விநாயகருடைய பெருமையே சிறப்பாக நிற்கிறது. ஆகையால், தனியே விநாயகருக்குக் காப்புச் செய்யுள் இல்லாவிட்டாலும் இச்செய்யுளே காப்பைப் போல அமைந்திருக்கிறது.
அடலரு ணைத்திருக் கோபுரத்
தேஅந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண்
டேன்வரு வார்தலையில்
தடய டெனப்படு குட்டுடன்
சர்க்கரை மொக்கிய்கைக்
கடதட கும்பக் களிற்றுக்
கிளைய களிற்றினையே.
(வீரம் செறிந்த திருவண்ணாமலையில் உள்ள கோயிலில் இருக்கும் திருமகள் விலாசமுள்ள கோபுரத்துக்கு உள் வாசலுக்கு வடபக்கத்திற் சென்று, வருபவர்கள் தலையில் தடபட என்று விழுகின்ற குட்டை ஏற்றுக் கொள்வதோடு சர்க்கரையை உண்ட கைகளுடன் வீற்றிருக்கும், மதம் பிறக்கும் சுவடுகளை உடைய மத்தகத்தைப் பெற்ற யானையாகிய விநாயகருக்கு இளைய யானை போன்ற முருகனைத் தரிசித்துக் கொண்டேன்.
அடல்-வீரம். திரு-திருமகள் விலாசம். அந்த வாயில்-உள்வாயில். அருகு-பக்கம். தடபட என என்றது தடபடென என்று ஆயிற்று: தொகுத்தல் விகாரம். குட்டுடன்-குட்டைப் பெறுவதோடு. மொக்கிய உண்ட. கடம்-மதம். தடம்-மதம் பிறக்கும் இடம். கும்பம்-யானையின் மத்தகம். சென்று களிற்றினைக் கண்டு கொண்டேன் என்று கூட்டுக.)