கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1/அருணகிரியார் செய்த அலங்காரம்

விக்கிமூலம் இலிருந்து













அலங்காரம்

அருணகிரியார் செய்த அலங்காரம்

1

றைவன் திருவருளினால் உலகத்தில் திரு அவதாரம் செய்த அருணகிரி நாதரைப் பற்றிப் பலர் பலவிதமான கதைகளைச் சொல்லுகிறார்கள். அந்தக் கதைகள் அனைத்துக்கும் சான்று உண்டு என்று சொல்ல இயலாது. திருப்புகழைக் கொண்டு பார்த்தால் அருணகிரி நாதப் பெருமானைப் பற்றிய செய்திகள் பல தெரியவரும். அவர் பலவிதமான கலைகளிலும் வல்லவர், சிறந்த நூற்பயிற்சி மிக்கவர், இறைவன் அருட் காதலில் மீதுர்ந்தவர், அவனருளாலே அவன் தாளைப் பணிந்து சிறந்தவர், ஆண்டவனது திருவடியை அடைந்து இன்புற்றவர் என்று தெரியவரும். திருப்புகழ், திருவகுப்பு, கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, கந்தர் அந்தாதி ஆகிய அழகான நூல்களிலிருந்து இவற்றை ஒருவாறு அறியலாம். அந்த நூல்களால் அவர் பல சாஸ்திரம் அறிந்தவரென்று தெரியவரும்; ஞானம் பெற்றவரென்று தெரியவரும். சரியை முதலிய மார்க்கம் அறிந்தவரென்பதும், தலங்களின் சிறப்பை உணர்ந்தவரென்பதும் அறிந்து கொள்ளலாம். பலவகையான செய்திகளை அவர் அறிவார். உலா, கோவை போன்ற பிரபந்தங்களிலும் அவருக்குப் பழக்கம் உண்டு. சங்ககால நூல்களிலும் பயிற்சி உண்டு. இவற்றை அறிந்து கொள்வதற்குரிய பல குறிப்புக்களை முன் சொன்ன அவர் நூல்களிற் காணலாம்.

அருணகிரிநாதப் பெருமானை இனி நாம் காண முடியாது. ஆனால் அப்பெருமான் திருவாய் மலர்ந்தருளிய நூல்கள் இன்றும் இருக்கின்றன. அவற்றினூடே புகுந்து பார்க்கும்போது அவர், திருவருட்பேற்றை அடைந்தவர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். தமிழ் நாட்டிலுள்ள நூல்களிற் பெரும் பாலானவை இறைவனைப் பற்றியவையே இறைவனைப் பற்றிய தொடர்புள்ள நூல்களையே இந்த நாட்டுப் பெரியோர்கள், 'நல்ல நூல்கள்' என்று போற்றினார்கள். அருணகிரியார் அருளிய நூல்கள் மிகவும் நல்ல நூல்கள்.


அநுபவப் புதையல்

ருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் முதலிய நூல்களைப் படிக்கும்போது, அவற்றினிடையே காணக் கிடைக்கும் தமிழ் இலக்கிய நயங்களை மட்டும் தெரிந்து கொண்டால் போதாது, அவற்றினிடையே வரும் சாஸ்திர உண்மைகளைத் தெரிந்து கொண்டாலும் போதாது. இலக்கிய நயத்தை மாத்திரம் உணர்ந்து கொள்ள இலக்கிய நூல்களைப் பார்க்கலாம். சாஸ்திர உண்மைகளை அறிந்து கொள்ளச் சாஸ்திர நூல்களைப் பார்க்கலாம். அருணகிரிநாதர் இயற்றிய நூல்களிலோ அநுபவம் புதைந்து கிடக்கின்றது. அவர் தம் வாழ்க்கையில் என்ன என்ன துன்பத்தை அடைந்தாரோ அந்த அந்தத் துன்பத்தின் நிழலையும், அவர் என்ன என்ன இன்பத்தை அடைந்தாரோ அந்த இன்பத்தின் ஒளியையும் ஒரு சேரப் பார்க்கலாம். நிழலும் ஒளியும் கலந்திருப்பதனால்தான் அவர் பாடல்கள் நமக்கு இனிக்கின்றன.

தாம் அடைந்த துன்பத்தை அவர் சொல்லும்போது அதைப் படிக்கிற நமக்கு அருணிகிரிநாதர் நம்மை ஒத்தவர் போலும் என்ற நினைப்பு வரும்; அந்த நிலையில் அவர் நமக்கு அண்மையில் இருப்பவராகத் தோன்றுகிறார். ஆனால் ஒளி மயமான இன்பங்களை அவர் கூறும்போது அவை நமக்கு விளங்குவதில்லை. 'நம்மைப்போல இருந்த ஒருவர், ஒளி மயமான திருவருளைப் பெற்று இன்பம் அடைந்தார்; நாமும் அந்த நிலையை முயன்றால் அடையலாம்' என்ற நம்பிக்கை மாத்திரம் உண்டாகிறது; திருவருளின் நினைப்பும் வருகிறது.

நம்மைப் போலவே இந்த உலகியல் வாழ்க்கையில் துன்பமுற்று, இன்னலுற்று அலைந்த தன்மையை அருணகிரி நாதர் தம் பாடல்களில் சொல்லும்போது நம்மை எண்ணித்தான் அவர் அவ்வாறு பாடியிருக்கின்றாரோ என்று தோன்றும். உண்மையும் அதுதான். அந்த நூல்களில் அவர் கூறியிருக்கிற பாவங்கள், குற்றங்கள் எல்லாவற்றையும் வரிசையாக எடுத்துச் சொன்னால் ஒரு மனிதன் ஒரு வாழ்க்கையில் அத்தனையையும் செய்யக்கூடு மென்று சொல்ல இயலாது. அவ்வளவு விரிவான குற்றங்களை அவர் சொல்லியிருக்கிறார். அவ்வளவையும் அருணகிரிநாதப் பெருமான் தம் வாழ்நாளில் புரிந்தார் என்றால் அதனை நம்ப முடியாது. அவை ஒரு வாழ்நாளில் செய்யக் கூடியவை அல்லவே! இருந்தாலும் அவற்றையெல்லாம் தம் வாழ்நாளில் தாமே புரிந்ததுபோல அவர் சொல்லியிருக்கிறாரே என்றால், அப்படிச் சொல்வது பெரியவர்களின் வழக்கம். இதை 'நைச்சி யானுசந்தானம்' என்று சொல்வார்கள்.

மகாத்மாக்கள்

ந்தப் பெரியவர்கள் தம்மை மாத்திரம் நினைந்து பாடுவதில்லை. உலகம் முழுவதிலும் இருக்கின்ற மக்கள் புரிகின்ற பாவங்களை, படுகின்ற துன்பங்களை, தாமே செய்தவை போலவும், தாமே அநுபவிப்பன போலவும் இறைவனிடத்தில் விண்ணப்பித்துக் கொள்வது அவர்களுடைய வழக்கம். ஒரு வக்கீல் தாம் செய்யாத குற்றத்தைப் பற்றிய சமாதானத்தைத் தம் கட்சிக்காரன் சார்பில் நின்று எடுத்துச் சொல்வது போலக் கருணை நிரம்பிய பெரியவர்கள் உலகத்தினர் படும் துன்பங்களையெல்லாம் தாம் ஏற்றுக்கொண்டு, அவர்களுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு, இறைவனிடத்தில் மன்றாடி நிற்கிறார்கள். "நான் பல பாவங்களை புரிந்திருக்கிறேன்; நான் பல துன்பங்களை அடைந்து துயருறுகிறேன்" என்று அவர்கள் சொல்லும்போது உலகத்திலுள்ள மக்கள் வேறு, தாம் வேறு என்ற நினைவும் அவர்களுக்கு இருப்பதில்லை. எவ்வுயிரும் தம் உயிர்போல நினைக்கின்ற இயல்பினால் அம்மகான்கள் அப்படிச் சொல்லுகிறார்கள். அவர்கள் மகாத்மாக்கள்; மற்றவர்கள் அல்பாத்மாக்கள்.

மகாத்மா என்றால் பெரிய உயிர் என்றும் அல்பாத்மா என்றால் சின்ன உயிர் என்றும் பொருள். சின்ன உயிர் பெரிய உயிர் என்று மக்கள் இப்போதும் சொல்வதைக் கேட்கிறோம். சின்ன உயிர் என்று கொஞ்ச நாள் இருந்துவிட்டு மறைகின்றவர்களையும், பெரிய உயிர் என்று அதிக நாள் உயிரோடு இருக்கின்ற வயது முதிர்ந்தவர்களையும் குறித்துச் சொல்லுகிறோம். மகாத்மாக்கள், அல்பாத்மாக்கள் என்பவற்றிற்கும் அத்தகைய பொருளைக் கொள்ளக்கூடாது.

க.சொ.l-2 உடம்பில் உயிர் இருக்கிறது; மூன்று கரணங்கள் இருக்கின்றன. மனம், வாக்கு, காயம் ஆகியவை கரணங்கள். இவற்றோடு இயைந்து உயிர் இயங்குகிறது. உயிர் உடம்பினுள் புகுந்து இருப்பதனால் கரணங்கள் பல விதமான தொழில்களைச் செய்கின்றன. அந்தத் தொழில்களின் வாயிலாகக் கிடைக்கும் இன்ப துன்பத்தை உயிர் அநுபவிக்கிறது.

பெரும்பாலும் மூன்று கரணங்களாலும் மனிதன் தனக்கு வேண்டியவற்றையே செய்து கொள்கிறான். தன்னைப் பற்றியே சிந்திக்கிறான். தன்னைப் பற்றியே பேசுகிறான். தன்னைப் பற்றிய காரியங்களையே செய்கிறான். தன்னைப் பற்றியே சிந்திக்கும் மனம் பிறரைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்; பிறர் துன்பங்களைப் பற்றியும் சிந்தித்து இரங்க வேண்டும். அதற்கு மனம் விரிய வேண்டும். தன் உடம்பை மாத்திரம் எண்ணும் நினைப்பை விட்டு, பிறர் உடம்புகளைப் பற்றியும் நினைக்க வேண்டுமானால், இப்போது தன்னலத்தை மட்டும் சிந்திக்கும் சுருக்கமான நிலையில் உள்ள மனத்தால் இயலாது. இந்த மனத்திலே அன்பு என்ற ஒன்று பிறந்துவிட்டால் அது விரிவு பெறும்.

அன்பின் விரிவு

ஒரு பிரமசாரி கடைக்குப் போய் ஒரு மாம்பழம் வாங்குகிறான். அதை நறுக்கித் தா என்று கடைக்காரனை கேட்டு, அவன் நறுக்கிக் கொடுக்க, கடை வாயிலிலேயே நின்று அந்த மாம்பழத்தைத் தின்று விட்டுப் போகிறான். கல்யாணம் ஆன பிறகு அதே கடைக்குப் போய் ஒரு மாம்பழம் வாங்குகிறான். வாங்குகிற மாம்பழத்தை, நறுக்கித் தரச் சொல்லி அவனே உண்பது வழக்கமாதலால் இன்றைக்கும் கடைக்காரன் அந்த மாம்பழத்தை நறுக்க முந்துகிறான். "அப்பா, அதை நறுக்காதே" என்று சொல்லி மாம்பழத்தை முழுதாகவே வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போகிறான் இளைஞன். ஏன் தெரியுமா? முன்பு அந்த மாம்பழத்தை வாங்கும்போது அவனுக்குத் தன்னைப் பற்றிய நினைவு மாத்திரம் இருந்தது. இன்றைக்கோ தன் மனைவிக்கும் அந்த மாம்பழத்தை நறுக்கிக் கொடுக்க வேண்டும்மென்ற அன்பு பிறந்துவிட்டது. முன்பு அவனுக்கு ஒரு வயிறுதான். இன்றைக்கு மனைவியின்மேல் அன்பு மனத்தினால் பிறந்ததனால், வயிறும் இரண்டாக விரிகிறது. ஒரு குழந்தையும் பிறந்து விட்டால், வயிறு மூன்று ஆகிறது. இப்படி அன்பு விரிய விரிய, மனமும் விரிவடைகிறது. தன்னலமும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போகிறது. எல்லா உயிரையும் தன்னுயிர்போலக் காண்கின்ற நிலை வருகிறது.

ஓர் உபமான வாயிலாக இதைத் தெரிந்து கொள்ளலாம். ஒர் ஆழாக்கு நல்ல பாலிலே இரண்டு ஆழாக்கு, மூன்று ஆழாக்குத் தண்ணீரை ஊற்றினால் அதைச் சுயப்பால் என்று சொல்ல முடியாது; இருந்தாலும் அது பாலாகத்தான் இருக்கும். ஐந்து ஆழாக்கு, ஆறு ஆழாக்குத் தண்ணிரை ஊற்றினால் அப்போது பாலின் வெண்மை நிறம் இருக்கும்; ஆனால் பாலாக இராது; பால்போலத் தோன்றும். 'வெளுத்ததெல்லாம் பால் அல்ல' என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறோம் அல்லவா? பின்னும் தண்ணீரை ஊற்றினால் அது தண்ணிராகவே ஆகிவிடும்; பாலின் நிறங்கூட இருக்காது.

அதைப் போலவே இல்லறத்தில் வாழ்கின்ற ஒருவன் அன்பு நீரை ஊற்றிக் கொண்டே இருந்தால் சுயநலம் என்பது வர வர மறைந்து கடைசியில் உள்ளமெல்லாம் அன்பு வெள்ளமாகும்; தன்னலமே அற்றவனாகப் போய்விடுவான். முதலில் மனைவியிடம் பிறந்த அன்பு விரிந்து குழந்தையிடமும் பின்பு வீட்டிலுள்ளவரிடமும் பரவுகிறது. வீட்டிலிருந்து வீதிக்கு விரிகிறது. கடைசியில் உலகமெல்லாம் விரிந்த அன்பாக ஆகிவிடுகின்றது. இப்படி அன்பு விரிந்துகொண்டே போகப் போக அவனது அகங்காரம் மங்கிவிடுகிறது. அவனைப் பற்றியிருந்த 'யான்', 'எனது' என்ற இரண்டு பற்றுக்களும் அன்புத் தண்ணீர் விட விட, இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்க் கடைசியில் அன்பு மாத்திரம் தெளிவாகப் பரந்து நிற்கின்றது.

பெரியவர்கள் இவ்வாறு அன்பு மயமாக இருந்தனர்; எல்லா உயிர்களையும் தம்முயிர் போலவே கருதினர்; எல்லா உடம்புக்குள்ளும் தாம் நின்று இன்ப துன்பங்களை அடைவதுபோல உணர்ந்தார்கள்; பிற உயிர்களுக்குச் சிறிய தீங்கு ஏற்பட்டாலும் தமக்கு ஏற்பட்ட தீங்கைப் போலவே எண்ணித் துடித்தார்கள்.

நம் வீட்டிலுள்ள சின்னஞ்சிறு குழந்தைக்கு நோய் வந்தால் நாம் தவிக்கிறோம். நம் மனைவிக்கு நோய் வந்து விட்டால் நாம் எவ்வளவு பாடுபடுகின்றோம்! அப்பொழுதெல்லாம் நம்முடைய உள்ளம் துடிக்கின்றது; துன்பமும் அடைகிறோம்.

"நம் உடம்பில் ஏதாவது நோய் வந்தால்தான் துன்பம் உண்டாகும்; அதை உணரலாம். பிறர் உடம்பில் வருவதை நாம் எப்படி உணர முடியும்?" என்று தோன்றலாம். "எவ்வளவு நெருங்கிய உறவானாலும் உடம்பும் உடம்பும் வேறுதானே?" என்று கேட்கலாம். துன்பம் என்பது மனத்தைப் பொறுத்தது. கையில் இருக்கும் ஒரு கட்டியை டாக்டர் அறுத்துச் சிகிச்சை செய்கிறார். கை துடிப்பதனால் துன்பம் உண்டாவதில்லை. கை துடிப்பதை மனம் அறிந்து கொள்வதால்தான் துன்பம் உண்டாகிறது. "இல்லை, கை துடிப்பதனால்தான் துன்பம்" என்றால் டாக்டர் நமக்கு மயக்க மருந்தை கொடுத்துவிட்டுக் கையை 'ஆபரேஷன்' செய்யும்போது ரத்தம் வருகிறதே, அப்போது துன்பம் தோன்றுகிறதா? இல்லை. காரணம், கையை வெட்டும் போது மனம் அங்கே இணையவில்லை. கையில் தோன்றிய புண்ணில் மனம் இணைந்தால்தான் துன்பம் உண்டாகிறது. ஆகவே, மனத்திலே இணைந்து தோன்றுகின்ற உணர்ச்சியையே இன்பம், துன்பம் என்று சொல்லுகிறோம்.

நம் கையிலே புண் ஏற்படுகிறதை மனம் உணர்கிறபோது துன்பம் உண்டாகிறது. அதாவது மனத்தைச் செலுத்திப் பார்க்கிற போதுதான் துன்பத்தை உணர்கிறோம். அன்பினால் மனம் விரிந்தவர்கள், தம்மைப் போலவே எல்லா உயிர்களையும் பார்க்கின்றவர்கள். எங்கோ ஒரு மூலையில் ஒரு பசுமாடு துன்புற்றாலும் தாம் துன்புறுவதுபோல உணர்ந்து வருகிறார்கள். ஒரு பசுவின் கன்று தன் மகனுடைய தேர்க்காலில் சிக்கி உயிர் விட, அதனால் அந்தப் பசுமாட்டிற்கு ஏற்பட்ட துன்பத்தைத் தன் துன்பம் போலவே எண்ணியதால் அன்றோ, மனுநீதிச் சோழன் தன் மகனையே தேர்க்காலில் வைத்து ஊர நினைந்தான்?
   "எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும்நின்
   தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே" என்று தாயுமானவர் சொல்லுகிறார். எவ்வுயிரையும் தன் உயிர் போல எண்ணுவதோடு மாத்திரம் அல்ல; எண்ணி இரங்க வேண்டும். இதைத்தான் சர்வுபூத தயை என்று சொல்வார்கள். தம் உயிரையே பெரிதாக எண்ணித் தம் நலம் பேணி வாழும் அல்பாத்மாக்களைப் போலன்றிப் பிற உயிரையும் தம் உயிராக எண்ணி அவ்வுயிர்களுக்கு வரும் துன்பங்களையும் தம்முடையனவாக உணரும் மகாத்மாக்கள் எல்லாச் சமயத்திலும் இருக்கிறார்கள்.

அருணகிரி நாதரும் உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் படும் துன்பங்களைத் தாம் படும் துன்பங்களாகவே மேற்கொண்டு கூறுகின்றார். நாமும் பிறர் படுகின்ற துன்பங்களை எல்லாம் எடுத்து மேடையில் பேசிக்கொண்டே போகலாம். ஆனால் அருணகிரிநாதர் அந்தத் துன்பங்களிலிருந்து விடுபட்டுத் தாம் பெற்ற இன்பத்தையும், அந்த இன்பத்திலே மீதுார்ந்து நிற்கும் நிலையையும் பற்றிப் பேசுகின்றார். அவற்றைப் பார்க்கும்போது அருணகிரிநாதப் பெருமான் துன்ப நிலையினின்றும் மாறி, இறைவன் திருவருளால் இன்ப நிலையை அடைந்தார் என்று தெரிந்து கொள்ளுகிறோம்.

கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் போன்ற நூல்களைப் பார்த்தால் அவற்றில் இறைவன் திருவருளைப் பற்றி, இன்பத்தைப் பற்றி, துன்பத்தைப் பற்றிப் பல செய்திகள் இருப்பதைக் காணலாம். துன்பங்களைப் பற்றிச் சொல்லும்போது நமக்குள்ள அனுபவங்களை அப்படி அப்படியே எடுத்துச் சொல்வதுபோலத் தோன்றும். திருவருட்பேற்றினால் கிடைத்த இன்பத்தைப் பற்றி அவர் சொல்லும்போதும் தம் அநுபவத்தையே சொல்கிறார். இருந்தாலும் அது நமக்கு அவ்வளவாக விளங்குவது இல்லை. துன்பங்கள் நமது அநுபவத்தோடு ஒட்டியிருப்பதனால் உண்மையென்றும், இன்ப நிலை நமக்குப் புலப்படாததனால் பொய்யென்றும் சொல்லலாமா? ஒன்று உண்மையானால் மற்றொன்றும் உண்மைதான். துன்பநிலையை நாம் அநுபவித்ததுபோல இன்ப நிலையையும் அடைய முயல வேண்டும். அதுதான் கந்தர் அலங்காரம் முதலிய நூல்களைப் படிப்பதன் பயன்.

வழிகாட்டி

றைவன் திருவடிகளை அடைந்ததனால் உண்டான இன்பத்தைப் பாட்டாகப் பாடுகிறார் அருணகிரிநாதர். அந்த இன்பத்தை நினைந்து வியப்பில் ஆழ்கிறார். உலகத்திலேயுள்ள உயிர்கள் எல்லாம் மலத்திலே அழுந்தியிருக்கின்றன. மலம் நீங்க வேண்டுமானால் ஆண்டவனைப் பற்றிக்கொள்ள வேண்டும். மலத்திலிருந்து விடுபட்ட ஒருவன் நான் இவ்வாறு விடுபட்டேன் என்று சொன்னால் அந்த இன்ப அநுபவம் நமக்கு வழிகாட்டியாக இருக்கும். இந்த வழிகாட்டி நிலையில் இருக்கின்றது அருணகிரிநாதப் பெருமானுடைய வாக்கு.

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்வதற்காக இறைவன் திருவருளைப் பெற வேண்டும் என்று நினைக்கிறோம். இந்த உலகத்தில் இருக்கும்போதே, இப்பிறவியிலேயே, இன்ப நிலை பெறலாம். "இத்தேகமொடு காண்பேனோ?" என்று தாயுமானவர் ஏங்குகிறார். இத்தேகத்தோடு வாழும்போதே இன்ப நலம் பெறலாம் என்பதை அருணகிரிநாதர் சொல்லுகின்றார். "நான் ஏதோ முற்பிறப்பில் நல்ல புண்ணியம் செய்ததனால்தான் இந்தப் பிறவியில் எனக்கு ஞான நிலை வந்தெய்தியது என்று எண்ண வேண்டாம். நான் பேறு சற்றும் இல்லாதவன்; தவம் சற்றும் இல்லாதவன்" என்கிறார். அப்படி இருந்தும் எனக்கு இப்பிறவியிலேயே, "இறைவன் அருளால் இன்பம் கிடைத்தது" என்று பெருமிதத்தோடு பாடுகின்றார்.

அத்தகைய பாடல்களைக் காணும்போது நாமும் நிச்சயமாக அந்த இன்ப நிலையை எய்த முடியும் என்ற நம்பிக்கை தோன்றும். தோன்றுவதோடு மாத்திரம் நிற்கக் கூடாது. 'நம்மைப் போலவே வாழ்ந்தவர், நம்மைப் போலவே உலகியல் துன்பங்களை அடைந்தவர் ஒருவர், நம்மிலும் சிறந்து நின்று, இன்ப வாரிதியில் மூழ்கித் திளைத்தார் என்றால், நாமும் அவர் காட்டிய நெறிப்படி வாழ்ந்து, அந்தப் பேரின்பத்தைத் துய்க்க வேண்டும்' என்ற ஆர்வம் உண்டாக வேண்டும்.

கருணைக்கு அருணகிரி

ருணகிரிநாதப் பெருமானைப் பற்றிப் பல பெரியார்கள் பலவகையாகப் பாடியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்,
   "காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி"

என்று பாடுகிறார்.

'கருணைக்கு அருணகிரி' என்று சொல்லியிருப்பதற்குக் காரணமாக ஒரு கதை சொல்வார்கள்.  வில்லிபுத்துாரரும், அருணகிரிநாதப் பெருமானும் ஒரு சமயம் வாதம் செய்தார்கள். யார் அந்த வாதத்திலே வெற்றி பெறுகிறாரோ அவர் தோற்றவருடைய காதை அறுப்பது என்பது நிபந்தனை. வில்லிபுத்துரர் இப்படிப் பல பேர்களைத் தோல்வியுறச் செய்து அவர்களுடைய காதை அறுத்துக் கொண்டே வந்தாராம். அவருடைய கர்வத்தை அடக்குவதற்காகவே அருணகிரிநாதர் அவரோடு வாதத்திற்குச் சென்றார். கடைசியில் அருணகிரிநாதரே வென்றார். வில்லிப்புத்தூரர்தம் காதை அருணகிரிநாதப் பெருமானிடம் நீட்டி, தாம் தோற்றுப் போய்விட்டதால் அறுக்கும்படியாகச் சொன்னாராம். அருணகிரிநாதப் பெருமான் அவர் காதை அறுக்காமல், "என் பாட்டுக்குக் காதை நீட்டினதே போதும்" என்று சொல்லிவிட்டாராம். அதனாலே கருணைக்கு அருணகிரி என்று பெயர் வந்ததாகச் சொல்வார்கள்.

இந்தச் சரித்திரம் பிற்காலத்தில் எழுந்தது. வில்லிபுத்துரரின் அற்புதமான பாடலைப் பார்த்தால் அவரை அவ்வளவு முரடர் என்று சொல்ல முடியாது. புலவரைப் பற்றிப் பல கற்பனைக் கதைகள் எழுந்திருக்கின்றன. அத்தகையை கதைகளுள் இது ஒன்று எனத்தான் எனக்குத் தோன்றுகிறது.

'கருணைக்கு அருணகிரி' என்பது வேறு காரணத்தால்தான் அவருக்கு வந்திருக்க வேண்டும். மகாத்மா காந்தி அவர்கள் சிறந்த நிலையிலேயே வாழத் தகுதி பெற்றவர். அவர் விரும்பியிருந்தால் பிர்லா போன்ற கோடீசுவரர்கள் பட்டு மெத்தையிலே அவரை உறங்க வைத்திருப்பார்கள். அவ்வளவு சிறந்த நிலையிலே வாழ்வதற்கு வசதியிருந்தாலும் சமுதாயத்தில் யார் மிகத் தாழ்ந்த நிலையிலே இருந்தார்களோ அவர்களுடைய மத்தியிலே வாழ்ந்தார். மிகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேண்டிய சேவைகளைப் புரிந்தார். அவர்களுக்கு வரும் துன்பங்களைத் தம்முடையனவாக ஏற்றுக் கொண்டார். அதற்கு காரணம் அவருடைய கருணை. பிறருடைய துன்பங்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் கருணைதான் எல்லாக் கருணையிலும் பெரியது.

பிறருடைய துன்பத்தைக் காணுவது ஒரு கருணை; கண்டு இரங்குவது ஒரு கருணை; அந்த துன்பத்தைத் தாம் ஏற்றுக் கொள்வது ஒரு கருணை; அவர்களுடைய துன்பத்தைத் தாம் ஏற்றுக்கொண்டு அதைத் துடைப்பது ஒரு கருணை. இப்படிக் கருணை கொஞ்சம் கொஞ்சமாக வளரும். பிறர் துன்பத்தைக் காண்பது என்ற கருணையே நமக்கு இல்லை. கண்ட பிறகு அல்லவா நம் உள்ளத்தில் கருணை வளர வேண்டும்? கண்டாலும், "அவன் துன்பத்தை அநுபவித்தால் அநுபவிக்கட்டுமே; அவன் விதி; அவன் அந்தத் துன்பத்தைப் படத்தான் வேண்டும்" என்று சொல்பவர்களைப்போல் அல்லாமல், "அவன் துன்பப்படுகிறானே" என்று இரங்க வேண்டும். இரங்குவதோடு மட்டுமல்லாமல் அவனது துன்பத்தை நாமே ஏற்றுக்கொண்டு அதை நீக்குவதற்கு முயல வேண்டும். இதுவே கருணையின் வடிவு.

அருணகிரிநாதப் பெருமான் பாமர மக்களைப்போலவே உயிர் வாழ்ந்து, பிறகு இறைவனின் திருவருளில் மூழ்கித் திளைத்து அன்பு உள்ளத்துடன் வாழ்ந்தார். அதோடு மாத்திரம் நிற்கவில்லை. அந்த மக்கள் படுகின்ற துன்பங்களை எல்லாம் கண்டு இரங்கினார். அதோடும் நிற்கவில்லை. அவர்கள் படும் துன்பங்களைத் தாமே படுவதாக நினைத்தார். "ஆண்டவனே, நான் படுகின்ற இந்தத் துன்பம் போதாதா? இதை நீக்கி இன்பம் அருள மாட்டாயா?" என்று பாடினார். பிறருக்காகப் பாடிய பாடல்கள் இவை. "நான் இந்தத் துன்பத்தை அடைந்தேன்" என்று அவர் சொல்வன எல்லாம் அவருடைய கருணைப் பிரவாகத்தைக் காட்டுகின்றன.

அருணகிரிநாதர் இப்படிப் பாடுகின்ற பாட்டை நினைந்து, 'கருணைக்கு அருணகிரி என்று அந்தப் புலவர் பாடியிருக்கிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது. 'கருணைக்கு அருணகிரி' என்றது அவர் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியை மாத்திரம் குறிப்பது அன்று. அவர் இயற்றிய திருப்புகழ், கந்தர் அலங்காரம் முதலிய நூல்கள் மக்கள் வாழ்கின்ற காலமெல்லாம் அவர்களுடைய குறைகளை இறைவனிடம் முறையிடுவதற்கு வாய்ப்பாக இருக்கின்றன. ஆகவே அருணகிரிநாதருடைய கருணை இன்று வரையில் பயன்படுகிறது; இனியும் பயன்படும்.

அன்பு வித்து

னிதன் தன் உள்ளத்தில் தோன்றுகின்ற தீய உணர்ச்சிகளை எல்லாம் காட்ட வார்த்தைகளை நிரம்பக் கற்றுக் கொண்டிருக்கிறான். அதுவும் இந்தக் காலத்தில் பிரசங்க மேடைகளிலும், பத்திரிகைகளிலும் கொள்ளை, கொலை, தீ, பகிஷ்காரம், வெறி' போன்ற வார்த்தைகள் கொப்புளிப்பதைப் பார்க்கிறோம். அன்புக்கு வார்த்தை பஞ்சமாகப் போய்விட்டது. தீய உணர்ச்சிகளின் விளைவுகளைச் சொல்லும் வார்த்தைகளே அளவுக்கு மிஞ்சி வளர்ந்து விட்டன. ஆனால் இறைவன் எல்லோருடைய மனத்திலும் நல்லுணர்ச்சிகள் உண்டாவதற்கும் வாய்ப்பு அளித்திருக்கிறான். மனத்தில் தீய உணர்ச்சி மாத்திரம் இடம் பெறும் என்பது இல்லை; நல்லுணர்ச்சியும் இடம் பெறும். தீய உணர்ச்சிகள் மனத்திற்குத் தெரிவது போலவே அன்பு உணர்ச்சியும் தெரியத்தான் தெரியும். தன் மனையாட்டியிடத்தில் காதல் கொள்ளத் தெரிந்தவன் மனத்தில் காதல் உணர்ச்சி நிச்சயமாக இருக்கிறது. ஆனால் அந்த அன்பைப் பரவலாக விடுவது இல்லை. தன்னைச் சேர்ந்தோரிடத்தில் அன்பு செய்யத் தெரிந்த மனம் உலகத்து மக்கள் எல்லாரிடமும் அன்புகாட்டும்படி விரிவது இல்லை. தன் தாயிடத்தில் அன்பு பூண்ட ஒருவன் சமூகத்திலுள்ள எல்லாப் பெண்களையும் தாயாகப் பார்க்க முடியும்; அது இயல்போடு ஒட்டியதுதான். இறைவன் எல்லோருடைய மனத்திலும் அன்பை வித்தாக வைத்திருக்கிறான். புதியதாக அன்பு அவனுக்கு வர வேண்டியதில்லை. பிறந்தவுடனேயே தாயிடத்தில் அன்பு உண்டாகிறது. அந்த அன்பு மனத்திலே வித்தாக இருக்கிறது. ஆனால் அந்த வித்தானது முளைத்துக் கப்பும் கிளையுமாகப் படர்வது இல்லை. காரணம் அதற்கு ஏற்ற முயற்சி இல்லை.

வித்து இடாத மண்ணிலே என்னதான் எருப்போட்டு, நீர் ஊற்றினாலும் ஒன்றும் முளைக்காது. மனம் அத்தகையது அன்று. இறைவன் இயற்கையிலேயே மனிதன் மன்த்திலே ஒரு வித்தை நட்டிருக்கிறான். அந்த அன்பாகிய வித்தை முயற்சி நீர் ஊற்றி வளர்த்தால் கருணைக் கனி பழுக்கும்; அந்த உள்ளத்திலே அருள் சுரக்கும்.

அருள் நிலைக்கு உயர்தல்

பிறரிடத்திலுள்ள எல்லாப் பொருள்களையும் தானே பறித்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு தன்மை. தன் பொருளைத் தானே அனுபவிக்க வேண்டும் என்று பற்றிக் கொண்டிருப்பது ஓர் இயல்பு. தன்னைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் கொடுப்பது ஒரு வகை இயல்பு. தனக்குச் சம்பந்தம் இல்லாதவர்களுக்கும் கொடுப்பது மற்றோர் இயல்பு. இப்படி நான்கு விதமான இயல்புகள் உண்டு.

இந்த நான்கு விதமான தன்மைகளில் தானே மற்றவர்களுடையவற்றையும் பெற்று வாழ வேண்டும் என்று இருப்பவன் மனிதர்களுள் மிகவும் மட்டமானவன். தன்னுடைய பொருளைத் தானே அநுபவிக்க வேண்டுமென்று இருப்பவன் அவனைவிடச் சிறிது உயர்ந்தவன். தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் கொடுக்க வேண்டுமென்று விரும்புபவன் நல்லவர்களில் கொஞ்சம் மட்டம். எல்லோருக்கும் கொடுக்க வேண்டுமென்று விரும்புபவன் நல்லவர்களில் உத்தமமானவன்.

பிறரிடத்திலுள்ள பொருள்கள் எல்லாம் தனக்கு வேண்டுமென்று கை நீட்டுகிறானே, அவனுடைய குணத்திற்கு அவா என்று பெயர். தன்னுடைய பொருளைத் தானே அனுபவிக்க வேண்டுமென்று விரும்புபவன் பற்று உள்ளவன். தன்னுடைய பொருளைத் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் கொடுக்க வேண்டுமென்று விரும்புபவன் அன்பு உள்ளவன். தன்னிடமுள்ள பொருளை எல்லோருக்கும் கொடுக்க வேண்டுமென்று விரும்புபவன் அருள் உள்ளவன். அவா முதல் அருள் வரையில் உள்ள நான்கு இயல்புகளும் மனத்தில் எழுவனவே. அவா உள்ளவன் கடுமையான இருள் உலகத்தில் இருக்கிறான். பற்று உள்ளவன் மங்கிய இருள் உலகத்திற்குள் வருகிறான். அன்பு உள்ளவன் மங்கிய ஒளி உலகத்திற்கு வருகிறான். அருள் உள்ளவன் நல்ல ஒளி உலகத்தில் மிளிர்கிறான்.

ஒளி உலகக் கோடு அன்பிலே தோன்றுகிறது. இருள் உலகக் கோடு பற்றிலே தோன்றுகிறது. அவா நிலையிலிருந்து பற்று நிலைக்கு உயர வேண்டும்; பற்றிலிருந்து அன்பு நிலைக்கு உயர வேண்டும்; அன்பு நிலையிலிருந்து அருள் நிலைக்கு உயர வேண்டும்.

அருணகிரி நாதர் அருள் நிலைக்கு உயர்ந்தவர். நம்மைப் போலவே அவர் அவா நிலையிலே வாழ்ந்தவர் என்றாலும், அவா நிலையிலிருந்து பற்று நிலையிலே வாழ்ந்து, பற்று நிலையிலிருந்து அன்பு நிலையிலே வாழ்ந்து, அன்பிலேயிருந்து அருள் நிலைக்கு உயர்ந்தவர்.

நாம் எல்லோரும் இருள் உலகத்தில் கிடக்கிறோம். அவா நம்மைப் பற்றியிருப்பதால் துன்பங்களும் பற்றியிருக்கின்றன. துன்பத்தை நீக்க வேண்டுமானால் ஆசையை அறுக்க வேண்டும்.
   "ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
    ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்;
    ஆசைப் படப்பட ஆய்வருந் துன்பம்
    ஆசை விடவிட ஆனந்த மாமே"
என்றார் திருமூலர்.

ஒருவனுக்கு ஒரு வீசை ஆசை நீங்கிற்று என்றால் அவனுக்கு ஒரு வீசைத் துக்கம் இல்லை. ஒரு மணு நீங்கிற்று என்றால் அவனுக்கு ஒரு மணுத் துக்கம் இல்லை. ஒருவனுக்கு எந்த அளவுக்கு ஆசை நீங்குகிறதோ அந்த அளவுக்குத் துக்கம் இல்லை.
   "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்"
என்கிறார் திருவள்ளுவர். ஆசை அதிகப்படத் துன்பமும் அதிக மாகும். பிறவித் துன்பத்திற்கு மூலம் ஆசைதான்.
   "அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றும்
    தவாஅப் பிறப்பினும் வித்து"
என்பது திருக்குறள். அந்த ஆசை வித்தைப் பற்றாக்கி, பற்று நிலை மாறி அன்பைப் பெற்று, அதைப் பெருக்கினால் அருள் ஆகிவிடும்.

அருணகிரிநாதர் இந்த நிலையில் இருந்து உலகத்திலே மக்கள் எல்லாம் படுகின்ற இன்பதுன்பத்தைக் கண்டு, துன்பம் மிகுதியாக இருப்பதையும் பார்த்து, அந்தத் துன்பங்களை எல்லாம் தாமே படுவதாக நினைத்து, அவற்றிற்குக் காரணமான பாவச் செய்கைகளைத் தம்மேலேயே ஏறிட்டுக்கொண்டு பேசினார். இந்தப் பெருங்கருணையை அவரிடத்தில் பார்த்த பெரியோர்கள், 'கருணைக்கு அருணகிரி' என்று சொன்னார்கள்.

திருப்புகழ்

ருணகிரிநாத சுவாமிகள் பதினாயிரம் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடினார். இன்றைக்கு 1330 திருப்புகழ்ப் பாட்டுக்களே கிடைத்திருக்கின்றன. திரு.வ.த. சுப்பிரமணிய பிள்ளை என்பவர் மிகவும் முயன்று ஆங்காங்குச் சென்று சுவடிகளைத் தேடித் தொகுத்து 1330 திருப்புகழை வெளியிட்டார். அதற்கப்புறம் அவர் குமாரராகிய தணிகைமணி திரு.வ.சு. செங்கல்வராயப் பிள்ளை அவர்கள், புதியதாகக் கிடைத்த பாட்டுகளையும், முந்தினவற்றோடு சேர்த்து நன்கு சீர்திருத்தி மூன்று புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார். திருப்புகழ் படிக்கின்ற எல்லோரும் அந்தக் குடும்பத்தை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

திருப்புகழ்ப் பாடில்கள் மிக அற்புதமானவை. உலகம் எல்லாம் அற்புதம் என்று ஒதப் பாடும்படி இறைவன் அருளினானென்று அவரே சொல்கிறார்.
   "பூர்வ பச்சிம தட்சிண உத்தர
      திக்குள பக்தர்கள் அற்புதம் எனஒதும்
   சித்ர கவித்துவ சத்தமி குத்ததி
      ருப்புகழைச்சிறி தடியேனும்
   செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
      சித்தஅ நுக்ரகம் மறவேனே"
என்கிறார்.

திருப்புகழ் பாடல்களில் ஓசை நயமும் சந்த நயமும் அதிகம். சந்தப் பாடல்கள் பாடுவது அருமை. எந்தப் பாடலைப் பாட முடிந்தாலும் சந்தப் பாடலைப் பாடுவது எளிதன்று. தத்த, தந்த, தைய, தான, தனன முதலிய சந்தங்கள் வரும். வல்லினத்துக்கு வல்லினம், மெல்லினத்துக்கு மெல்லினம், நெடிலுக்கு நெடில், குறிலுக்குக் குறில், இப்படியாக மாறாமல் அமையும்படி பாட வேண்டும். அத்தகைய பாடல்களை முருகன் திருவருளால் அருணகிரிநாதர் வெள்ளம் போலப் பாடினார். பெரும்பான்மையான பாடல்கள் எளிதில் பொருள் விளங்கும் நிலையில் இருக்கின்றன.

அவற்றில் ராமாயணக் கதை வரும்; பாரதம் வரும். விநாயகர் புகழ் வரும்; அம்பிகையின் பெருமை வரும். சிவ பிரான் திருவிளையாடல்களையும் பாடியிருப்பார்; கண்ணன் விளையாடல்களையும் பாடியிருப்பார். எல்லாவற்றையும் கடைசியில் முருகனோடு இணைத்துவிடுவார். திருமாலைப் பற்றி விரிவாகச் சொல்லிக் கடைசியில் இத்தகையவனுக்கு மருகோனே என்று பாடுவார். உமாதேவியாரின் பெருமைகளைக் கூறி அப்பெருமாட்டியின் புதல்வோனே என்று முடிப்பார். அவர் பாடல்களில் சமரசநெறி விரவியிருக்கும்.

அவைமட்டும் அன்று. வேதாந்த சித்தாந்தக் கருத்துக்களையும் திருப்புகழில் காணலாம். யோகசாஸ்திரத்தில் உள்ள செய்திகளும் வரும். வருணனைகளோ அபாரம். எதைச் சொன்னாலும் கடைசியில் முருகனிடத்திலேதான் வந்து முடியும்.

சில ரெயில் வண்டிகளில் சில சாமான் வண்டிகள் இருக்கும். பிறகு பிரயாணிகள் ஏறிய வண்டிகள் இருக்கும். எல்லாவற்றையும் சேர்த்து இழுத்துச் செல்ல எஞ்சின் முன்னாலே இருக்கும். அதுபோலவே அருணகிரிநாதர் உபதேசங்களாகிய பண்டங்களை ஒரு வண்டியில் ஏற்றுவார்; திருமால் புகழாகிய மக்களை ஒரு வண்டியில் ஏற்றுவார். முருகன் என்னும் எஞ்சினை மாட்டி விட்டு விடுவார். வண்டித் தொடரில் பலவகையான பண்டங்களும் மக்களும் ஏறியிருந்தாலும் எஞ்சின் மட்டும் மாறுவதில்லை; எஞ்சின் இல்லாமல் ஓடுவதும் இல்லை.

2

கந்தன்

முருகன் என்பது தமிழில் அமைந்த அழகிய பெயர். பெரும்பாலும் வடமொழி தென்மொழி இரண்டிலும் பொதுவாக வழங்கும் நாமம் ஸ்கந்தன் அல்லது கந்தன். கந்தப் பெருமானுடைய வரலாற்றைச் சொல்லும் நூல் கந்தபுராணம். சுப்பிரமணியன் என்ற பெயர் இருந்தாலும் வடமொழியில் கந்தன் என்ற பெயரையே பெரும்பாலும் வழங்குவர். ஸ்கந்தோபநிஷத், ஸ்காந்தபுராணம் என்ற நூற்பெயர்களைப் பார்த்தால் இது விளங்கும். அருணகிரிநாதரும் கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, கந்தர் அந்தாதி என்று இந்த நாமத்தோடு இணைந்த மூன்று நூல்களைப் பாடியிருக்கிறார். நான் இங்கு விரிவுரையாற்றப் போகின்ற நூலின் பெயர் 'கந்தர் அலங்காரம்' என்பது. கந்தருக்குரிய அலங்காரம் என்பது அதற்குப் பொருள். 'கந்தர் என்பது 'ஸ்கந்த' என்ற வடச் சொல்லின் திரிபு. ஸ்கந்தமாக இருப்பவன் எவனோ அவனே ஸ்கந்தன். ஸ்கந்தம் என்றதற்குப் பற்றுக்கோடு, கம்பம், இணைப்பு முதலிய பொருள் உண்டு. முருகன் பற்றுக்கோடாக இருப்பதனால் கந்தன் என்ற பெயர் பெற்றான். கம்பம்போல இருப்பதனால் கந்தன் ஆனான். இணைந்த பொருளாக இருப்பதனால் கந்தன் என்ற திருநாமத்தை ஏற்றான்.

பற்றுக்கோடு

றைவன்தான் நமக்குப் பற்றுக்கோடாக இருப்பவன். யார் தளர்ந்து கீழே விழுகிறார்களோ, யார் தள்ளாடித் தடுக்கிக் கீழே விழுகிறார்களோ அவர்களுக்குப் பற்றுக்கோடு அவசியம் வேண்டும். அறுபது வயசுக்கு மேற்பட்டவர்கள் கைத்தடி ஊன்றி நடப்பதைப் பார்க்கிறோம். சிலர் தாம் கைத்தடி ஊன்றி நடப்பதாகப் பிறர் எள்ளி நகையர்டக்கூடாதே என்ற நினைவால் கையில் நாகரிகத் தடியைச் சுற்றிக்கொண்டே போவார்கள். இருந்தாலும் தளர்ந்து விழும்போது அதை ஊன்றிக் கொள்ளலாம் என்பதே நோக்கம். தங்க்ளுக்கு தளர்ச்சி ஏற்பட்டு விட்டது என்பதை அவர்கள் உணர்ந்தே அதனை எடுத்துச் செல்லுகிறார்கள். 'இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல்’ என்று வள்ளுவர் அந்தக் கோலைச் சொல்கிறார்.

இவ்வுலகிலுள்ள உயிர்கள் பற்றுக்கோடு இல்லாமல் தளர்கின்ற நிலையில் இருக்கின்றன. அவற்றிற்கு ஏற்ற பற்றுக் கோடு இறைவன். நான் ஓர் இடத்தைச் சார்ந்து இருக்கிறேன்; எனக்கு அவ்விடம் ஒரு பற்றுத்தான். ஒரு மனிதரைச் சார்ந்து வாழ்கிறேன்; அவரும் ஒரு பற்றுத்தான். ஆனால் இறைவனைப் பற்றிக் கொள்ளும் பற்று வேறு. இறைவனாகிய பற்றுக்கொண்டவர்களுக்குப் பிறப்பு, இறப்பு ஆகிய இரு துன்பங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது.

பிறப்பு, இறப்பு ஆகிய துன்பங்களிலிருந்து விடுபட இறைவனைப் பற்ற வேண்டும். இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டுமானால் நமக்குள்ள பிற பற்றுக்களை எல்லாம் அறுக்க வேண்டும். இந்தப் பற்றுக்கள் அறுபட்ட பின்பு இறைவனைப் பற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தால், "அலை ஒய்ந்த பின் சமுத்திரத்தில் நீராடலாம்' என்று நினைப்பவன் கதியாகத்தான் முடியும். சமுத்திரத்தில் என்றும் அலை ஒயப்போவதில்லை. உலகப்பற்று அலை அலையாக நம்மைத் தாக்கிக் கொண்டே இருக்கிறது. அதை ஒழித்து விட்டு பின்பு இறைவனைப் பற்றலாம் என்றால் அது நடக்கிற காரியம் அன்று. பற்று அறுவதற்கே இறைவன் திருவருளைப் பற்றிக் கொள்ள வேண்டும்.

உலகத்திலுள்ள உயிர்கள் எல்லாம் பல பொருள்களின் மீது வைத்திருக்கின்ற பாசந்தான் பெரிய பற்று. இந்தப் பற்றே இன்ப துன்பத்திற்குக் காரணமாக இருக்கிறது. இந்தப் பற்றை நழுவச் செய்ய மற்றொரு பற்றைப் போட வேண்டும்.
   "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
   பற்றுக பற்று விடற்கு”
என்பார் திருவள்ளுவர்.

ஒரு பற்றும் இல்லாதவன் இறைவன். உயிர்கள் துன்பம் அடைவதற்கு மூல காரணமாக இருக்கின்ற உலகப் பற்றுக்களை விடுவதற்கு பற்று அற்றானாகிய இறைவனது பற்றைப் பற்றிக் கொள்ள வேண்டும்.

ஒருவன் சேற்றில் இருகாலும் புதைந்து வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான். அவன் அந்தச் சேற்றிலிருந்து விடுபட்டு வெளியே வர வேண்டுமானால் காலைப் பிடுங்கிப் பிடுங்கி மறுபடியும் சேற்றிலேயே ஊன்றி மிதித்து வெளிவர முடியுமா? அது முடியாத காரியம். மறுபடியும் அவன் சேற்றுக்குள் தான் புதைந்து போவான். அந்தச் சேற்றிலேயே கிடக்கும் ஒரு கல்லையோ, மரத்துண்டையோ பற்றிக்கொண்டு வெளிவரலாம் என்று நினைத்து அவற்றை பிடித்துக் கொண்டு முயற்சி செய்தாலும், அந்தக் கல்லும் கட்டையும் சேற்றுக்குள் புதைந்து. போகுமே தவிர அவனால் சேற்றிலிருந்து வெளி வர முடியாது. ஆனால் சேற்றுக்கு அப்பால் ஒரடி, இரண்டடி தள்ளியிருக்கிற ஒரு மரத்தின் கொம்பையோ ஒரு மனிதனின் கையையோ பிடித்துக் கொண்டு வெளிவர முயற்சி செய்தால் முயற்சி பலிக்கும்; சேற்றிலிருந்து வெளி வரலாம். அதைப் போலவே, பற்றில் அழுந்திப் புதைந்து கிடக்கும் நம்மைப் பற்றுக்களிலேயே அழுந்திக் கிடக்கும் வேறு எந்த மனிதராலும் காப்பாற்ற முடியாது. பற்றுக்கு அப்பால் இருக்கிற, பற்று அற்ற, ஒரு பொருளை பற்றிக் கொண்டால், இந்தப் பற்றுக்களிலிருந்து நாம் விடுபட முடியும். அந்தப் பற்றுக்கோடு யார்? அவனே இறைவன். "நான் பற்றுக்கோடாக இருக்கிறேன்" என்பதை அவன் திருநாமமாகிய ஸ்கந்தன் என்பது காட்டுகிறது. பாசமாகிய சேற்றில் அழுந்திக் கிடக்கிற உயிர்கள் அதிலிருந்து விடுபட்டு வெளிவருவதற்குப் பற்றுக்கோடாக இருக்கின்ற தன் நிலையை அறிவிப்பதற்குக் கந்தன் என்ற பெயரோடு காட்சி கொடுக்கிறான் இறைவன். பெயர் விலாசத்தாலேயே அவன் தன்மையை உணர்ந்து கொண்டு நாம் அவனைப் பற்றிக் கொள்ள வேண்டும். ஸ்கந்தன் என்பதற்குரிய வேறு ஒரு பொருள் தூண் என்பது. சிவபெருமானுக்கு ஸ்தாணு என்று ஒரு பெயர். ஸ்தாணு என்பது கம்பத்துக்குப் பெயர்; கம்பம்போல் அசைவின்றி இருப்பவன் என்பது பொருள். சிவபெருமானுக்கும் முருகனுக்கும் வேறுபாடு இல்லை; இருவருக்கும் இந்த இயல்பு பொருத்தமானது.

ஸ்கந்தன் என்பதற்கு இணைப்பை உடையவன் என்பது மற்றொரு பொருள். ஆறு வேறு தனிக் குழந்தைகளாக இருந்த முருகனை உமாதேவி தன் திருக்கரங்களால் ஒருசேர அணைத்து எடுத்தாள். அந்த அணைப்பிலே இணைப்பும் உண்டாயிற்று. ஆறு குழந்தைகளும் ஒன்றாயின; ஆறு முகமும் பன்னிரண்டு கரங்களும் உடையவனாக முருகன் தோன்றினான்.

கடவுளின் திருவுருவம்

"ருவம் இல்லாத கடவுளுக்கு உருவம் அமைப்பது தவறு அல்லவா?" என்று கேட்கத் தோன்றும். கடவுளுக்கு உருவம் இல்லையானாலும் அவன் உருவத்தோடு இருக்க மாட்டான் என்பது இல்லை. அவன் தன் உருவத்தை அருள் பெற்ற பெரியோர்களுக்குக் காட்டுகிறான். மனம் கிடைத்த மனிதனுக்கு அந்த மனத்தை அடக்கினால்தான் திறமை உண்டாகும். மனத்துக்கு எட்டாதவன் இறைவன். மனமோ உருவத்தைத்தான் பற்றும். இறைவனது உருவத்தைத் தியானம் பண்ணும்படியாகப் பழக்கினால் மனம் அமைதி பெறும். அந்தத் தியானத்துக்காகவே இறைவனுடைய உருவங்கள் இருக்கின்றன.

மனத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். நல்ல மனம் ஒரு பகுதி. நடுநிலைமையாக இருப்பது அது. அதுவே சத்துவ குணமணம். ரஜோ குணமனம், தாமச குணமனம் என்று வேறு இரண்டு பகுதிகள் உண்டு. சத்துவம் ராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களும் சேர்ந்து மனம் அமைந்திருக்கிறது. இந்த மூன்று குணங்களும் கலந்து நின்றே நாம் நினைக்கிறோம். நமது மனத்திலே சத்துவகுணம் அதிகமாக மற்றவை தாழ்ந்து விடும். கடைசியில் சத்துவ குணமும் அடங்கி மனம் இயக்கமின்றி ஒழியும்.

சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும்போது, அதனை எரிப்பவன் என்ன செய்கிறான்? பெரிய மூங்கில் கழி ஒன்றை எடுத்துக் கொண்டு பிணத்தைப் புரட்டி நெருப்பிலே தள்ளிச் சாம்பலாக்கும் படி பொசுக்குகிறான். பிணம் பொசுங்கிய பிறகு அந்த மூங்கில் கழியையும் நெருப்பிலேயே போட்டுக் கொளுத்தி விடுகிறான். பிணத்தை எரிப்பதற்கு உதவிய அந்த மூங்கில் கழி கடைசியில் அந்த அக்கினியில் தன்னையும் எரித்துக் கொள்கிறது. இதைப் போன்றதுதான் சத்துவகுண மனமும். சத்துவகுணத்தைக் கொண்டு ராஜச தாமச குணங்களை முதலில் இருந்த இடம் தெரியாமல் பொசுக்க வேண்டும். சத்துவகுணம் மிகுதி ஆக ஆக மற்ற மனங்கள் எல்லாம் மறைந்து விடும். கடைசியில் சத்துவகுண மனமும் ஞானாக்கினியால் நீறாகி விடும்.

தியானம் செய்வதனால் சத்துவகுண மனத்தின் ஆற்றல் மிகுதியாகிறது. இறைவன் திருவுருவத்தை மனத்தில் நிறுத்திப் பழகுவதே தியானம். பழக்கம் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. நாம் இப்போது கண்ணை மூடிக் கொண்டால் இருட்டுத்தான் தெரிகிறது. நமக்குப் பிரியமானவர்களை நினைத்தாலும் அவர்கள் உருவம் தெளிவாகத் தெரிகிறதில்லை. ஆனால் கனவிலே தோன்றும் உருவங்கள் தெளிவாகத் தெரிகின்றன. இந்த மனந்தான் அப்போதும் அந்த உருவங்களைக் காண்கின்றது. இப்போது கண்ணை மூடிக் கொண்டால் தெளிவாகத் தோன்றாமல் அப்போது மாத்திரம் ஏன் தெளிவாகத் தெரிகிறது? இப்போது நாம் ஜாக்கிரத்தில் இருக்கிறோம். கண்ணை மூடிக்

க.சொ.1-3 கொண்டாலும் காது திறந்து இருக்கிறது; உடம்பில் பரிச உணர்ச்சி இருக்கிறது; மற்றப் புலன்களும் உணர்வுடையனவாக இருக்கின்றன. கனவிலே எல்லாம் அடைத்துப் போகின்றன. அது சொப்பனாவஸ்தை. நனவில் காது முதலியவை அடைத்துப் போகும்படியான நிலை வந்தால் தியானம் பண்ணும் பொருள் தெளிவாகத் தெரியும்; பொறிகள் அடங்கி நிற்க, உள்ளே கனவிலே தெளிவாகக் காண்பதுபோல ஒன்றைக் காண முடியும்; அதை ஜாக்கிரத்தில் சொப்பனம் என்று சொல்லுவார்கள்.

ஜாக்கிரத்திலும் கண்ணை மூடிக்கொள்ளும் போது முழு உருவம் நமக்குத் தோன்ற வேண்டுமானால், முதலில் இந்த உடம்பினுள் உள்ள ஜன்னல்களை எல்லாம் அடைக்கப் பழக வேண்டும். உடலில் உள்ள புறக் கதவுகளை எல்லாம் அடைப்பதற்கு மனத்தில் சத்துவகுணம் அதிகப்பட வேண்டும்.

கோயிலுக்குப் போகிறோம். ஆண்டவன் அலங்காரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு வந்து விடுவது போதாது. சில நல்ல பக்தர்கள் கண்ணை மூடிக் கொள்வார்கள். வெளியிலே நன்றாக அலங்காரம் பண்ணி வைத்திருக்கின்ற கடவுளைப் பார்க்காமல் எதற்காக அவர்கள் கண்ணை மூடிக் கொள்ளுகிறார்கள் என்று நமக்குத் தோன்றும். இறைவனைப் புறக்கண்ணால் பார்த்தவுடன் அவனுடைய அழகிய திருவுருவத்தை உடனே உள்ளே பார்க்க வேண்டும்; கண்ணை மூடிக் கொண்டு உள்ளே பார்க்க வேண்டும். பிறகு வீட்டுக்குப் போய்த் தியானம் பண்ண வேண்டும். எதற்காகக் கர்ப்பூர தீபாராதனை செய்ய வேண்டும்? கர்ப்பூரம் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து அதன் ஜ்வாலை தணிகிறது. இறைவன் திருவுருவத்தை அந்த ஒளியில் பார்த்துப் பார்த்து, கர்ப்பூர ஒளி மங்கிய பின் அந்த ஒளியை மனத்தில் கொண்டு இறைவனைக் காண வேண்டும். இதற்காகத்தான் கர்ப்பூர தீபம் காட்டுகிறார்கள். அந்தத் திருவுருவம் மனத்திலே பதியச் சிறிது நேரம் ஆகும். கர்ப்பூரம் மெல்ல மெல்ல எரிந்து குறையும். அப்போது மனத்துக்குள் அவ்வுருவத்தைப் பார்த்துப் பழக வேண்டும்.

தினந்தோறும் தியானம் பண்ணிப் பண்ணித்தான் இறைவனுடைய உருவம் நமது உள்ளத்திலே பதியும். அப்படிப் பதி வதைத் 'தாரணை' என்று சொல்வார்கள். வெளியில் காணும் மூர்த்தியை நமது உள்ளத்திலே காணப் பழக வேண்டும். முன்பு தம் உள்ளத்திலே கண்டு பழகியவர்கள்தாம் கடவுளுக்குப் புறத்தே திருவுருவம் அமைத்திருக்கிறார்கள்.

பொறியை வசமாக்குதல்

டவுளுக்கு அலங்காரம் பண்ணுவதே நம் கண்கள் அந்தத் திருவுருவத்திலே கவிய வேண்டும் என்பதற்காகத்தான். அழகாக அலங்காரம் பண்ணாமல் பார்த்தால் அந்தத் திருவுருவத்தில் நமது மனமும் கண்களும் கவிவது இல்லை.

நம் வயிற்றுக்குள் போகின்றது ஜிலேபி, அந்த ஜிலேபிக்கு நல்ல நிறத்தை ஊட்டிப் பண்ணுகிறார்கள். வயிற்றுக்குள் போவதுதானே என்று ஒரே உருண்டையாக உருட்டி வைத்தால் நமக்கு அதனைத் தின்பதற்குத் தோன்றுகிறதா? அதனை வாங்கித் தின்னும்போது அது சுவைக்கிறது. வாங்குவதற்கு முன்னால் அதனை வாங்கித் தின்ன வேண்டும் என்ற விருப்பத்தை உண்டாக்குவன அதன் நிறம் வடிவு முதலியவை. அவற்றைக் கண்ணுக்கு அழகாகப் பலவிதமான வர்ணங்களை ஊட்டி வைக்கிறார்கள். அதோடு காதுக்கு இன்பம் அளிக்க ரேடியோ வைத்திருக்கிறார்கள். உடம்புக்கு இன்பம் அளிக்க விசிறிக் காற்று இருக்கிறது. நல்ல மேஜை போட்டிருக்கிறார்கள். நாற்காலியில் உட்கார்ந்துகொண்ட பிறகு ஜிலேபியை நாக்குக்கு இனிமையாக அளிக்கிறார்கள். ஹோட்டல்காரர்களுக்குத் தெரியும் இந்த விளம்பர யுக்திகூட நம் பெரியோர்களுக்குத் தெரியாதா?

கடவுளுக்கு உருவம் அமைத்ததுகூடப் போதாது எனக் கருதி, அந்த உருவத்துக்குப் பலவிதமான அலங்காரங்களைச் செய்தார்கள். நாசிக்கு இனிமையான பல நறுமணப் புகைகளை எழுப்பினார்கள். காதுக்கு இனிமையான சங்கீதம் வைத்தார்கள். உடம்புக்கு இனிமையான பூங்காற்றைக் கொடுக்க அழகான நந்தவனங்களை ஏற்படுத்தினார்கள். நாவுக்கு இனிக்கும் பிரசாதங்களை வழங்கச் செய்தார்கள்.

உடம்பிலுள்ள இந்திரியங்களின் மூலமாகப் பலவிதமான இன்பங்களை அநுபவிக்க மனிதர்கள் விரும்புவதால் ஆலயங்க ளிலும் அந்த இந்திரியங்களுக்கு இன்பம் அளிக்கப் பலவிதமான ஏற்பாடுகளைச் செய்தார்கள். நம்முடைய நாட்டிலுள்ள ஆலயத்தில் கொடுக்கும் பிரசாதம் வேறு எந்த நாட்டு ஆலயத்திலும் கிடையாது. ஐந்து இந்திரியங்களின் வாயிலாக உலகத்திலே உள்ள பொருள்களை அநுபவிக்கின்ற மனிதனை, இறைவன்பால் அழைத்துச் செல்ல அவனுடைய இந்திரியங்களை எல்லாம் வசப்படுத்துவதற்கு, இத்தகைய பல காரியங்களை ஆலயத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் நம் பெரியவர்கள்.

அலங்காரம்

ஆகவே, கண்ணுக்கு இன்பம் அளிக்க ஆண்டவனது திருவுருவங்களுக்கு அலங்காரம் பண்ணினார்கள்.

இறைவனுக்கு மாத்திரம் அலங்காரம் பண்ணவில்லை. இறைவன் வீற்றிருக்கிற ரதத்திற்கும் அலங்காரம் பண்ணினார்கள். ரதத்தின் கீழே இருக்கிற சக்கரம் முதற்கொண்டு தேர் அச்சு வரையில் உள்ள எல்லாவற்றுக்கும் அலங்காரம் பண்ணினார்கள். இறைவன் திருவுருவத்திற்கு அலங்காரம் திருவுருவம் வைக்கப்பட்டிருக்கிற சப்பரத்திற்கு அலங்காரம்; சப்பரம் இருக்கிற தேருக்கு அலங்காரம்; தேர் ஓடுகிற சக்கரத்திற்கு அலங்காரம்; சக்கரம் ஒடுகிற வீதிக்கு அலங்காரம்; வீதியிலுள்ள வீடுகளுக்கு எல்லாம் அலங்காரம் - இவ்வளவு விதமான அலங்காரத்தினாலும் கவரப் பெற்ற மனம், இவ்வளவுக்கும் நடுநாயகமாக விளங்குகின்ற இறைவன் திருவுருவத்தின்பால் கவிகிறது. மனம் நேராக இறைவனிடத்தில் போய்ப் பாயாது. அங்கங்கேயுள்ள அலங்கரிக்கப்பட்ட பொருள்களின் மீது பாய்ந்து, ஒன்றை விட்டு ஒன்றாகத் தாவிக் கடைசியில் இறைவன் திருவுருவத்தின்பால் சென்று நிற்கிறது.

சாப்பிடும்போது எல்லாம் வயிற்றுக்குள்தானே போகிறது என்று ஒரேயடியாக உருட்டித் திரட்டிச் சாப்பிடுகிறோமா? குருடன்தான் அப்படிச் சாப்பிடுவான். தலைவாழை போட்டு அதில் பலவிதமான வர்ணமுடைய பதார்த்தங்களைச் சுற்றி வைத்து வெள்ளை வெளேர் என்று இருக்கும் அன்னத்தை நடுவிலே வைத்தால் அதைச் சாப்பிட நம் மனம் விரையும்; நாக்கிலே நீர் சுரக்கும். அது போலத்தான் இறைவனுடைய திருவுருவத்தைத் தரிசிக்கும் முன் பலவகையான அலங்காரங்களைக் கண்டு மனம் ஈடுபட்டுச் செல்கிறது.

இப்படிப் புலன்களின் வழியே நின்று இன்பத்தைச் சுவைக்கின்ற மனிதர்களுடைய உள்ளங்களைக் கவர்வதற்காக இறைவன் சப்பரத்திலே வருகிறான்; தேரிலே வருகிறான். யானையின் மேல் வருகிறான்; சிங்கத்திலே வருகிறான்; ஆண்டவனுக்கு அலங்காரம் செய்வது எதற்கு? நம் கண்ணை இழுப்பதற்கு. ஆண்டவனுக்கு அதனால் லாபம் ஒன்றும் இல்லை. பிறந்த குழந்தையின் காலுக்குக் காப்புப் போடுகிறோம். காது குத்தி ஜிமிக்கி போடுகிறோம். காதைக் குத்தும்போது வலி பொறுக்க மாட்டாமல் அது வீரிட்டு அலறுகிறது. குழந்தைக்காக அலங்காரம் என்றால், "எனக்கு அலங்காரமே வேண்டாம்" என்று அந்தக் குழந்தை அலறுகிறதே! உண்மையில் குழந்தைக்கு அலங்காரம் பண்ணி நாம் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். அந்தக் குழந்தையின் காலுக்கு அலங்காரம் செய்கிறோம். அதன் காலுக்காக அல்ல; நம் கண்ணுக்காகத்தான். ஆண்டவனுக்கு அற்புதமாகச் சிங்காரம் பண்ணுவதும் அவனுக்காகப் பண்ணும் சிங்காரமல்ல. நமது கண் அவனருகே கவிய வேண்டுமென்பதற்காகப் பண்ணும் சிங்காரம் அது. பாலோடு பொங்கல் பண்ணி நைவேதனம் செய்வது அவனுக்காக அன்று. சாமி சாப்பிடாது; ஆசாமி சாப்பிடுவதற்காகத்தான். அந்தச் சாப்பாட்டை நினைத்தாவது அவன் இறைவன் ஆலயத்திற்கு வர வேண்டும் என்பது ஆன்றோர் எண்ணம்.

நாம் அலங்காரம் பண்ணிக் கொள்வது நாமே பார்த்து மகிழ அன்று. பிறர் கண்களில் நாம் நன்றாகப் பட வேண்டும் என்பதற் காகத்தான்.
   "உன்னைச் சிங்காரித்து உன்அழகைப் பாராமல்
   என்னைச் சிங்காரித்து இருந்தேன் பராபரமே"
என்கிறார் தாயுமானவர். "மேலான பொருளுக்கும் மேலான பொருளே, உன்னைச் சிங்காரித்து உன் அழகைப் பாராமல், இந்தப் பாழும் உடம்பைச் சிங்காரித்து வாழ்வை வீணாக்கினேன்" என்கிறார். அவனுக்குச் சிங்காரம் செய்வது அவன் அழகை நாம் பார்ப்பதற்காக. பார்ப்பதனால் மனம் ஒன்றி இன்புறுபவர்களும் நாமே. அன்புடைய தாய் தன் குழந்தையைச் சிங்காரிப்பது போல, இறைவன்பால் அன்புடைய பக்தர்கள் இறைவனைச் சிங்காரித்தார்கள்.

அருணகிரிநாதர் கந்தபிரானுக்கு அலங்காரம் செய்தார், நம் மனம் அவனிடத்திலே கவிய வேண்டும் என்பதற்காக. ரோஜாப்பூத் தோட்டம் போட்டிருப்பவன் தன் பெண்ணின் கல்யாணத்துக்கு ரோஜாப் பூவினாலேயே பெரிய பந்தல் போட்டு விடுவான். அதைப்போல அருணகிரிநாதப் பெருமான் தம்மிடம் உள்ள சிறந்த மலர் போன்ற தமிழ்ச் சொற்களால் கந்தருக்கு அலங்காரம் பண்ண வேண்டுமென்று பார்த்தார்.

சொல் அலங்காரம்

லங்காரம் பண்ணுகிறவர்களுக்கு வேண்டிய பொருள்கள் ஆடை, அணி, மாலை முதலியன அல்லவா? நல்ல நறுமணமுள்ள மலர்களைக் கொண்டு அலங்காரம் பண்ணலாம்; ஆனால் அம்மலர்கள் மறுநாள் வாடிவிடும். நல்ல ஆடைகளால் அலங்காரம் பண்ணிப் பார்க்கலாம்; அந்த ஆடையும் நாளடைவில் கிழிந்து விடும். தங்க ஆபரணங்களால் அலங்காரம் பண்ணிப் பார்க்கலாம்; அந்த ஆபரணங்களும் சில ஆண்டுகளில் தேய்ந்து போகும். இவையெல்லாம் என்றோ ஒரு நாளைக்கு அழிவன. அருணகிரிநாதர் பார்த்தார். தங்க வியாபாரிகள் தங்கள் பேட்டையிலுள்ள முருகனுக்குத் தங்கத்தினாலேயே அலங்காரம் பண்ணுவதும், வைர வியாபாரிகள் தங்கள் பேட்டையிலுள்ள முருகனுக்கு வைரத்தாலேயே ஜோடனை செய்வதும் வழக்கமல்லவா? அருணகிரிநாதர் பல காலத்துக்கு மறையாத, கிழியாத, தேயாத ஒரு பொருளினாலே, நெடுங்காலம் உலகத்தில் செலாவணி ஆகக் கூடிய ஒரு பொருளாலே, அலங்காரம் பண்ண வேண்டுமென்று விரும்பினார். சொல்லாலேயே அலங்காரம் பண்ணினார்.

கல் எல்லாம் மாணிக்கக் கல் ஆவதில்லை. சொல் எல்லாம் நல்ல சொல் ஆவதில்லை. நாமும் சொல்லை வைத்திருக்கிறோம். அவை எல்லாம் வெறும் சொல். ரோடு போடுகிற கல்லுக்கும் கல் என்றுதான் பெயர். நகை பண்ணுகிற கல்லுக்கும் கல் என்றுதான் பெயர். அதுவும் கல்தானே என்று எண்ணிக் கொண்டு எவனாவது ஒருவன் ரோட்டிலே இருக்கும் கல்லை ஆபரணமாகப் பண்ண நினைப்பானா? இரண்டுக்கும் கல் என்ற பெயர் இருந்தாலும் அது வைரக் கல்; இது சாதாரணக் கல்.

கங்தர் அலங்காரம்

நாமும் சொல்லை வைத்திருக்கிறோம். நாம் சொல்வன எல்லாம் உத்தமமான சொல் ஆவதில்லை. உத்தமமான சொல்லைக் கொண்டு, கந்தருக்கு அலங்காரம் பண்ணினார் அருணகிரிநாதர். நம்முடைய அன்புப் பொருளுக்கு அலங்காரம் பண்ணிப் பார்ப்பது இயல்பல்லவா? தூண் போலத் தம்முடைய மனத்திலே இருக்கிற ஆண்டவனைப் பிறரும் பற்றிக் கொண்டு இன்பம் அடைய, அந்த இறைவன்பால் அவர்களுடைய மனங்களும் ஈடுபடச் செய்ய, அருணகிரிநாதர், தம்மிடமுள்ள மிகச் சிறந்த பொருளாகிய சொற்களின் குவியலினாலே அலங்ங்காரம் பண்ணுகிறார். அந்த அலங்காரந்தான் கந்தர் அலங்காரம்.

"பல இடங்களில் தாம் படும் துக்கத்தைச் சொல்லுகிறாரே, துக்கம் எப்படி அலங்காரம் ஆகும்?" என்பது ஒரு கேள்வி. “கந்தப் பெருமானுடைய அழகைச் சொல்லட்டும்; அவன் கருணா விலாசத்தைச் சொல்லட்டும்; அவன் திருமேனியை வர்ணிக்கட்டும். இவை எல்லாம் அலங்காரம் ஆகும். ஆனால் தாம் படுகிற துன்பத்தை, தம் குறைகளை எடுத்துச் சொல்லி, நான் பாவி என்று சொல்லிக் கொள்வது எப்படிக் கந்தனுக்கு அலங்காரம் ஆகும்?" என்று கேட்கலாம். அதற்கும் விடை உண்டு.

இறைவனுக்குப் பெரிய மாலை சாத்த விரும்புகிறோம். நல்ல நறுமண மலர்களைக் கொண்டு மாலை கட்டச் சொல்லியிருக்கிறோம். மாலை கட்டுகிறவர்கள் என்ன செய்கிறார்கள்? அந்த மாலையின் இடையே ஐந்து அங்குலம் ஆறு அங்குலத்துக்கு ஒரு தடவை ஆடுகூடத் தொடாத இலையைப் பறித்து வைத்துக் கட்டுகிறார்கள். அந்த இலைக்கு வாசனை உண்டா? இல்லை. இருந்தாலும் அந்தக் கதம்ப மாலையின் அழகை, இடையிடையே வைக்கின்ற அந்தப் பச்சிலை அதிகப்படுத்திக் காட்டுகிறது. மலர்களின் வண்ணத்தையும், மணத்தையும் அவை இல்லாத அந்தப் பச்சிலைகள் பின்னும் எடுத்துக் காட்டுகின்றன. அதுபோல இறைவனுடைய குணநலங்களைச் சொல்லுகிற பாட்டுக்கு இடையே குணநலங்கள் அற்ற மக்கள் புரிகின்ற குற்றங்களையும் எடுத்துச் சொல்கிறார் அருணகிரியார். ஆண்டவனுக்கு உகந்த அழகு மலர் மாலை அல்லவா? துன்புறுகிறவர்களைக் காப்பாற்றுகிறவன் என்பதை அறிவித்து, ஆண்டவனது கருணையை அதிகமாக எடுத்துக்காட்ட உதவுவன அவை.

ஆண்டவனது பெருமையையே சொல்லிக் கொண்டிருந்தால் ஆண்டவன்பால் மனம் குவியாது. "நான் பாவி; நான் இன்ன இன்ன குற்றங்களைப் புரிகிறேன்” என்று சொன்னால் மனம் உருகுகிறது; இறைவன் கருணையை நினைக்கிறது. அதனால் தான் இறைவனது குணங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டே போகும்போது இடையிடையே தம்முடைய குற்றங்களையும் எடுத்துச் சொல்கிறார் அருணகிரிநாதர்.

கந்தர் அலங்காரம் என்ற தொடருக்குப் பொருள் கந்தருக்கு உரிய அலங்காரம் ஆகிய நூல் என்பது; தேவாரம் என்பதற்கும் அப்படி ஒரு பொருள் இருக்கிறது. தே என்றால் தெய்வம்; ஆரம் என்றால் மாலை; தேவாரம் என்பதற்கு, தெய்வத்துக்குப் போடுகிற மாலை என்று பொருள் செய்யலாம்; சொற்களால் தொடுக்கப்பட்ட மாலை என்பது பொருள்.

அருணகிரிநாதப் பெருமான் 100 பாடல்களினால் கந்தனுக்கு அலங்காரம் செய்கிறார்; 100 அழகான பாடல்களை உடைய மாலையை முருகப்பெருமானுக்குச் சமர்ப்பிக்கிறார்.