கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1/சேவற் பதாகை

விக்கிமூலம் இலிருந்து

சேவற் பதாகை

1

இயல்புக்கு ஏற்ற கற்பனை

ரு கரிக்கடைக்காரனுக்குக் கொஞ்சம் ஒய்வு நேர்ந்தது. அன்றைக்குக்கடை இல்லாத நாள். தன்னுடைய வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். மெல்ல மெல்லச் சிந்தனை ஒடியது. "நம் கடையில் நூறு கரி மூட்டை வைத்திருக்கிறோம். மழைக்காலம் வரப் போகிறது. அப்போது கிராக்கி அதிகமாக இருக்கும். நூறு மூட்டையும் நல்ல விலைக்குப் போகும். மேலும் அதிகமான மூட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டால் அப்போது நல்ல விலைக்கு அவற்றை விற்கலாம். கரி மூட்டைகளை நாம் வாங்குவதற்குப் பதிலாக ஒரு சவுக்குத் தோப்பிையே ஏலம் எடுத்துக் கரி சுட்டால் இரண்டு வகையான லாபமும் நமக்கு வராதா?" எனச் சிந்தித்தான். கரி மூட்டைக்காரனுக்குச் சிந்தனை அப்படித்தான் போகும். ஒருவனுடைய தொழில் எதுவோ, அவனுக்கு நாட்டம் எதில் அதிகமாக இருக்கிறதோ, அதுவே அவனது சிந்தனைக்கும் கற்பனைக்கும் ஆதாரம், வேறு வகையான கற்பனை சும்மா இருக்கும்போது எழாது. இது மனித இயல்பு.

ஆனால், குழந்தை இருக்கிறது. அதற்குக் குறிப்பிட்ட ஒரு தொழிலும் இல்லை; வியாபாரம், பணம் சம்பாதித்தல் ஆகியவற்றில் நாட்டம் இல்லை. சும்மா இருக்கும்போது அது எதைப் பற்றி நினைக்கும்? குழந்தைக்கு எதன் மேலும் நாட்டம் இல்லை என்று சொல்ல முடியாது.

குழந்தை பிறந்து அறிவு தோன்ற ஆரம்பித்தவுடன் அதற்கு முழு உருவமாக முதலில் தோன்றுபவள் தாய்தான். பிறகு தகப்பனாரை அறிகிறது. தாய் தந்தையை அறிந்த குழந்தை அவர்களைக் கருவியாகக் கொண்டே உலகிலுள்ளவற்றை அளக்கும். ஒரு போலீஸ்காரன் தன் குழந்தைக்கு, "ஒர் ஊரில் ஒரு ராஜா இருந்தான்" என்று கதை சொல்ல ஆரம்பித்தால், அந்த ராஜா தன் அப்பாவைப் போலவே தொப்பி போட்டிருப்பான், சொக்காய் அணிந்திருப்பான் என்று நினைக்கும். அதற்குத் தாய் தகப்பனையன்றி உலகமே இல்லை.

அருணகிரிநாதக் குழந்தை

றைவன் சந்நிதானத்தில் அருணகிரியார் குழந்தையாகி விட்டார். தன்னுடையது என்பது எதுவும் இல்லாமல், தன் செயல் அற்று, எல்லாவற்றையும் தாயின் கையில் ஒப்படைத்துவிட்டு இன்ப துன்பம் எல்லாவற்றையும் தாய் வழியே பெறுவது குழந்தை. அம்மா வீதிப் பக்கம் சென்றால் குழந்தையும் தாயுடனே ஒடுகிறது; உள்ளே வந்தால் உள்ளே வருகிறது; படுத்துக் கொண்டால் படுத்துக் கொள்கிறது. இத்தகைய குழந்தையாக அருணகிரியார் ஆகிவிட்டார். அவருக்கு உலகம் எங்கும் வேறு ஒன்றும் தெரியவில்லை. அவர் நினைவு, கற்பனை எல்லாம் இறைவனைப் பற்றியும் அவனோடு தொடர்புடைய பொருள்களைப் பற்றியுமே எழுகின்றன.

உலகிலுள்ள மற்றக் குழந்தைகளுக்கும், அருணகிரிநாதக் குழந்தைக்கும் ஒரு வேறுபாடு. அந்தக் குழந்தைகள் உலகத்தை இன்னும் அறிந்து கொள்ளவில்லை. இந்தக் குழந்தையோ அறிந்து கொண்டதை மறந்துவிட்டது. நான்கு ரூபாயை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்தது குழந்தை; திரும்பவும் அந்த நான்கு ரூபாயை எடுத்து செலவழித்துவிட்டது. மற்றொரு குழந்தை பாத்திரத்தில் ஒரு ரூபாய்கூடப் போடவில்லை. எப்படி இருந்தாலும் கடைசியில் இரு பாத்திரமும் காலியாகத்தான் இருக்கும். அதுபோல, உலகிலுள்ள குழந்தைகள் எதையும் அறிந்து கொள்ளாத உள்ளம் உடையன; அருணகிரிநாதக் குழந்தை நன்றாக வளர்ந்து தன் அறிவினால் அறிந்து கொண்டவை அனைத்தையும் மறந்து விட்ட உள்ளம் உடையது. குழந்தைகளின் உள்ளம் மாசு ஏறாத உள்ளம்; முன்பு மாசு ஏறியிருந்தாலும் அவற்றை எல்லாம் துடைத்துவிட்ட உள்ளம் அருணகிரிநாதக் குழந்தையுடைய உள்ளம். எப்படியாயினும் இரண்டும் ஒரேவிதமாகவே இருக்கும்.

நாம் பார்க்கிற இயற்கைக் குழந்தைகள் தம் தாய் தந்தையர்களையே மிகப் பெரியவர்களாக நினைப்பார்கள். யாரை நினைத் தாலும் தம் தாய் தந்தையர்களின் அளவைக் கொண்டு நினைக்கின்ற தன்மை உடையது அவர்களின் உள்ளம். அருணகிரிநாதக் குழந்தை என்ன செய்கிறது? அதுவும் ஒரு தந்தையினிடத்தில் அன்பு வைக்கிறது. உயிருக்குத் தந்தையாகிய முருகனை நினைத்து, தன் இன்ப துன்பம், உயர்வு, தாழ்வு ஆகிய எல்லாவற்றையும் அந்த இறைவனைச் சார்த்தியே நினைக்கிறது. கந்தர் அலங்காரம் பாடுகிற அந்த அருணகிரிநாதக் குழந்தை தன் மனம் என்னும் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு, அதன் வேகத்தில் தன் தந்தையாகிய இறைவனை நினைத்துப் பாடுகிறது. அப்பெருமானிடத்தில் உள்ள பொருள்களை வருணிக்கிறது.

புகழ் விரிக்கும் மரபு

ருவருடைய சிறப்பைப் புலப்படுத்த வேண்டுமானால் நேரே அவர் பெருமையைத்தான் சொல்ல வேண்டும் என்பது இல்லை. அவரைச் சார்ந்தவர்களுடைய பெருமையைச் சொல்வதும் மறைமுகமாக அவருடைய பெருமையைப் புலப்படுத்துவதேயாகும். ஒரு பணக்காரர் புகழைச் சொல்லும்போது, "அவர் வீட்டுக் கணக்கர் கார் வைத்திருக்கிறார்" என்று சொன்னால், அவர் பெருமை பின்னும் அதிகமானது என்று புலனாகும். கணக்கரின் பெருமையை நேர் முகமாகச் சொல்வதுதான் இது; ஆயினும் மறைமுகமாக அவருடைய எசமானது பெருமையையும் அது புலப்படுத்துகிறது.

விறகு சுமந்த சொக்கன்

ரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தில் ஒரு கதை. மதுரை நகரில் பாணபத்திரன் என்ற இசைப் புலவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அரசாங்கத்தில் உத்தியோகம். அவன் சிவபக்தன். மதுரையில் சோமசுந்தரக் கடவுள் சந்நிதானத்தில் இசை இசைத்துத் தொண்டு செய்வதிலேயே நாட்டம் உடையவனாக இருந்தான். ஒருநாள் வடநாட்டிலிருந்து ஏமநாதன் என்ற வீணை வித்துவான் ஒருவன் மதுரைக்கு வந்தான். அரசனிடம் தன் பெருமையைச் சொல்லிக் கொண்டதோடு, தன்னை யாழ் வாசிப்பதில் தோல்வியுறச் செய்பவர் யார் இந்த நாட்டில் இருக்கிறார் எனவும் செருக்கோடு கூறினான். அரசன் தன் ஆஸ்தானத்தில் உள்ள பாணபத்திரனுக்கு அவனோடு வாசிக்க வேண்டுமென்று கட்டளையிட்டான். பாணபத்திரனுக்கு இந்த இசைவாதத்தில் ஈடுபட விருப்பம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சோமசுந்தரக் கடவுளின் சந்நிதானத்துக்குச் சென்று, "இறைவனே, ஏமநாதனை நான் யாழ் வாசிப்பதில் தோல்வியுறச் செய்ய முடியுமென்று தோன்றவில்லையே! அவனை வெல்ல வேண்டுமென்ற ஆசை எனக்கு இல்லை. அவனிடம் நான் தோற்றுப்போய் விட்டேன் என்றால் அரசன் என்னை வேலையை விட்டுத் தள்ளிவிடுவானே! ஊரை விட்டுப் போக வேண்டி நேர்ந்தாலும் நேருமே! அப்புறம் உன் சந்நிதானத்திற்கு நான் எப்படி வர முடியும்? உனக்குத் திருத்தொண்டு எப்படிச்செய்ய முடியும்?" என்று கண்ணிர்விட்டுக் கதறினான்.

அன்று மாலை நல்ல மழை வந்துவிட்டது. இறைவன் ஒரு கிழ விறகுவெட்டிக் கோலத்தை எடுத்துக்கொண்டு தன் தலையில் ஒரு விறகுக் கட்டும் அதில் செருகப்பட்டிருக்கும் ஒரு பழைய யாழும் கொண்டு தெருவோடு வந்தான். மழைக்கு ஒதுங்குகிறவனைப் போல, ஏமநாதன் தங்கியிருந்த வீட்டின் வாசலுக்குச் சென்று உட்கார்ந்து கொண்டு, யாழை எடுத்து மெல்ல வாசிக்க ஆரம்பித்தான். அந்த இனிய நாதம் ஏமநாதன் செவியில் பட்டது. யார் பாடுகிறார் என்று பார்த்தான். பார்த்தால் அவனுக்கே நம்பிக்கை இல்லை. ஒரு கிழ விறகுவெட்டி; விறகுக் கட்டும் அவன் அருகில் இருக்கிறது; விறகு போலவே ஒரு யாழ். அந்த யாழிலிருந்தா அவன் இத்தகைய இனிமையான இசையை எழுப்புகிறான்! எழுந்திருந்து அவனிடம் சென்றான். "அப்பா, நீ யார்? இந்த இனிமையான சங்கீதத்தை யாரிடம் கற்றுக் கொண்டாய்?" எனக் கேட்டான்.

அதை ஏன் கேட்கிறீர்? என் தலைவிதி இப்படி இருக்கும்படி ஆகிவிட்டது! நான் பாடுவது என்ன, அவ்வளவு உயர்ந்ததா? என் குருநாதரிடம் இருக்கிற மற்ற மாணாக்கர்கள் வாசிப்பதைக் கேட்டால் அப்புறம் நீர் என்ன சொல்வீரோ எனக்குத் தெரியாது; நானும் யாழ் கற்றுக் கொள்ள வேண்டுமென்றுதான் குருநாதரிடம் சென்றேன். அவர் எனக்கு மிகவும் சிரமப்பட்டே சொல்லிக் கொடுத்தார். கடைசியில் என் தலை நரையோடிக் கிழவன் ஆகிவிட்டேன். 'போ, இனி உனக்கு வீணை வரவே வராது' என்று சொல்லி என் ஆசிரியர் என்னைத் துரத்திவிட்டார். எனக்கு வேறு வழி இல்லாமல்விறகு வெட்டிப் பிழைக்க ஆரம்பித்தேன்' என்றான். 'வீணையே வராது எனச் சொல்லி கழித்து விடப்பட்ட இவனே இவ்வளவு நன்றாக வாசிப்பான் என்றால், இவன் குருநாதர் எப்படி வாசிப்பாரோ?' என்று வியந்த ஏமநாதன், "உன் குருநாதர் யார் அப்பா?” என்றான்.

"அவரை உமக்குத் தெரியாதா? அவர்தான் பாணபத்திரர்; பாண்டியன் அவைக்களத்துப் பாணர்" எனச் சொல்லக் கேட்டான் ஏமநாதன். அவ்வளவுதான். அன்றைக்கே இரவோடு இரவாக அந்த ஊரை விட்டே ஒடிப் போய்விட்டான். பாணபத்திரனது பெருமையை இறைவன் நேர்முகமாகச் சொல்லவில்லை. "அவனால் கழித்து விடப்பட்டவன் நான்" என்று சொன்னான். 'நானே இவ்வளவு நன்றாக வாசிக்கிறேன் என்று நீர் சொன்னீரானால், என் குருநாதர் எப்படி வாசிப்பார் என்பதை நீரே ஊகித்துக் கொள்ளலாம்' எனச் சொல்வதுபோலச் சொன்னார்.

2

சேவலின் பெருமை

தைப்போலவே இந்தப்பாட்டில் தன் தந்தையின் பெருமையை அருணகிரிநாதக் குழந்தை நேரே சொல்லவில்லை. அவனுடைய கொடியின் பெருமையைச் சொல்வதன் வாயிலாக அவன் பெருமையைப் புலப்படுத்துகிறது.

பெரிய வெற்றியை உடைய மன்னர்களின் அரண்மனையிலும், கோட்டைகளிலும் கொடி பறக்கும். நெடுந்துரத்தில் வருகிறபோதே காற்றில் ஆடுகிற அந்த வெற்றிக் கொடியைப் பார்த்துவிட்டு எத்தனையோ பேர்கள் அஞ்சி ஒடுவார்கள்.

கடவுளரின் திருக்கோயிலின் வாசலிலும் கொடி பறக்கிறது. ஆடுகின்ற அக்கொடி அத்திருமாளிகையின் பெருமையையும், அதில் இருக்கிற தெய்வத்தின் வெற்றிச் சிறப்பையும் விளக்குகிறது. முருகனுடைய திருக்கோயிலில் பறப்பது சேவற்கொடி, அவன் திருக்கரத்தில் இருப்பதும் அதுவே. அதை நினைக்கும் போது அருணகிரியாருக்குக் கற்பனை விரிகிறது. மயிலின் பிரதாபத்தைப் போன பாட்டிலே நினைத்தவர், தொடர்ந்து சேவலின் பெருமையை இப்போது நினைக்கிறார். கோழி எவ்வளவு பெருமையுடையது! தேவர்கள் பாராட்டும் கோழி அது; தேவ மகளிர் வாழ்த்தும் கோழி.

"கோழி ஓங்கிய வென்றுஅடு விறற்கொடி
வாழிய பெரிது

என சூரர மகளிர் வாழ்த்துவார்களாம். திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் அவ்வாறு சொல்கிறார். அருணகிரிநாதக் குழந்தை இந்த சேவலைப் பற்றிக் கற்பனை செய்ய ஆரம்பித்தது. அந்தக் கற்பனையில் இயற்கையோடு ஒட்டிய பொருத்தம் இருக்க வேண்டுமென்பது அவசியம் அன்று. இது நடக்கும், இது நடக்காது என்று ஆராய்ந்து சொல்வதற்கு அங்கே வேலை இல்லை. இந்த நினைப்பினால் உள்ளம் இன்புறுவதுதான் பயன்.

இப்போது சேவற்கொடியைப் பாராட்டுகிறார் அருணகிரியார்.

வாகனமும் கொடியும்

டவுளர்களுக்கு பெரும்பாலும் எது வாகனமோ அதுவே கொடியாக இருக்கும். சிவபிரானுக்கு வாகனம் இடபம்; கொடியும் இடபந்தான். திருமாலுக்கு வாகனம் கருடன்; கொடியும் கருடன் தான். முருகப்பெருமானுக்கு அப்படி அல்ல. வாகனம் மயில்; கொடி கோழி. மயிலும் கொடியாக இருப்பதுண்டு. கொடி வேறாக இருந்தாலும் வாகனத்துக்கும் கொடிக்கும் ஒரு தொடர்பு உண்டு. சூரபன்மனது பாதி அம்சம் வாகனமாகிய மயிலாகவும், மற்றொரு பாதி சேவல் கொடியாகவும் இருக்கின்றன.

நாத தத்துவம்

யில் வாகனத்தில் மூன்று வகை உண்டென்று பார்த்தோம். கோழிக் கொடியிலும் இரண்டு வகை உண்டு. முதற் கோழி நாதம் என்ற தத்துவம். உலகம் தோன்றுகின்றபோது கடைசியில் வந்து முடியும் தத்துவம் பூமி, பஞ்ச பூதங்களுள் கடைசித் தத்துவம் பிருதிவி. இயங்காமல் இருக்கும் பரமசிவத்தின் உள்ளத்தில் அருள் என்ற இயக்கம் உண்டாகிறது. இயக்கத்தை ஃபோர்ஸ் (Force) என்றும், அதற்குரிய ஆற்றலை எனர்ஜி (Energy) என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். பொருளை மாட்டர் (Matter) என்பர். முன்காலத்தில் இருந்த விஞ்ஞானிகள் பொருள் வேறு, சக்தி வேறு என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்பொழுது பொருள் என்பதும், சக்தி என்பதும் ஒன்றுதான் எனக் கண்டுபிடித்து விட்டார்கள். இயங்காமல் இருந்தால் பொருள்; இயங்கினால் சக்தி. பொருள் சிவம்; இயக்கம் சக்தி.

சிவத்திலிருந்து சக்தி தோன்றியது. சக்திக்குப் பின் ஒன்றன்பின் ஒன்றாகத் தத்துவங்கள் தோன்றின. அப்படித் தோன்றியவைகளில் முதல் தத்துவம் நாதம். இந்த நாத தத்துவத்தைக் குறிப்பிக்கிறது கோழி.

பிரளயகாலத்தில் உயிரினங்கள் எல்லாம் அடங்கிக் கிடக்கின்றன. ஒரு நாள் ராத்திரி என்பது பிரளயத்திற்குச் சமானம். எப்படி எல்லா உயிர்களும் இரவில் அடங்கி இருக்கின்றனவோ, அப்படியே எல்லாத் தத்துவங்களும் ஒன்றில் ஒன்று அடங்கிப் பிரளயகாலத்தில் இருக்கும். தினந்தோறும் தூங்கும் தூக்கத்தை நித்தசங்காரம் என்றும், பிரளயத்தை மகாசங்காரம் என்றும் திருமூலம் குறிப்பிடுவார். மறுபடியும் உயிர்கள் விழிப்படைவது ஜனனம். இரவு விடியப் போகிறது என்பதற்கு அடையாளமாக முதலில் கூவுவது கோழி. பிரளயத்திற்குப் பிறகு உலகம் விரியப் போகிறது என்பதற்கு முதல் அடையாளமாகத் தோன்றுவது நாத தத்துவம். இந்தத் தத்துவத்திற்கு அறிகுறியாக இருப்பது கோழி.

சேவலான சூரபன்மன்

டுத்த கோழி சூரபன்மனது சங்கார காலத்தில் எழுந்தது. சூரபன்மனது உடலில் முருகப் பெருமனின் வேல் பாய்வதற்கு முன் அவன் மாமரமாக நின்றான். வேல் அவன் உடலில் பாய்ந்த போது அவனது அகங்காரம், மமகாரம் இரண்டும் பிளக்கப்பட்டு இரு பகுதியாயின. ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவலாகவும் மாறின. அந்தச் சேவலைத் தன் கொடியாகக் கொண்டான் ஆண்டவன். அது மேலிருந்து கூவுகிறது.

'கொக்கறு கோ'

சேவலைப் பற்றி மிகப் பழங்காலத்து நூலாகிய குறுந்தொகையில் உள்ள கடவுள் வாழ்த்துச் சொல்கிறது.

க.சொ.1-22

“சேவலங் கொடியோன் காப்ப
ஏழ வைகல் எய்தின்றால் உலகே"

என்ற அடிகளில் முருகன் ஏந்திய சேவற் கொடியைப் பற்றிய செய்தி வருகிறது. கையில் கோழியைக் கொடியாகப் பிடித்தவன் பாதுகாப்பதால் உலகம் இன்பமான நாளை அடைந்தது என்பது பொருள்.

உலகிலுள்ள எந்தக் கோழி கூவினாலும் வாழ்வு விடிவது இல்லை. ஆனால் எம்பெருமான் திருக்கரத்திலுள்ள கோழி கூவினால் விடிந்துவிடும். கோழி எப்படிக் கூவுகிறது? "கொக்கறு கோ" என்று கூவுகிறது. தமிழ் நாட்டுக் கோழியானாலும் வேறு எந்த நாட்டுக் கோழியானாலும் இப்படித்தான் கூவுகிறது. இந்தக் குரலுக்குத் தமிழில் ஒரு பொருள் இருக்கிறது. கொக்கு என்பதற்கு மாமரம் என்பது ஒரு பொருள். அறு-அறுத்த; கோ-தலைவன் அல்லது கடவுள். ஆகவே “கொக்கறுகோ" என்பது மாமரத்தை அறுத்த தலைவன் எனப் பொருள்படும். மாமரத்தை அறுத்த தலைவன் யார்? சூரபன்மன் ஆகிய மாமரத்தைப் பிளந்த தலைவன் முருகன். இயற்கையாகவே கோழி கூவுகிறது என்றாலும், தமிழர் அந்தக் குரலுக்குப் பொருள் காண்பதன் மூலம் முருகனை நினைக்கிறார்கள். இப்படி நினைத்துக் கோழி கூவுகிறது எனச் சொல்லவில்லை. அக்குரலைக் கேட்கிற பக்தர்களின் உள்ளம் அப்படி நினைக்கிறது. காலையில் நாம் துங்கிக் கொண்டிருக்கும்போது கோழியைப் பார்ப்பதில்லை; அதன் குரலையே கேட்கிறோம். அந்தக் குரல் நமக்கு மாமரத்தை அறுத்த தலைவன நினைக்கச் செய்கிறது.

அன்பும் நினைப்பும்

முருகனிடத்தில் முறுகிய அன்பு ஏற்பட ஏற்பட இப்படி எல்லாம் நினைக்கத் தோன்றும். ஒரு ஜவுளிக் கடையில் ஒரு பையன் வேலையாக இருக்கிறான். பட்டுப் பட்டாடைகள் அந்தக் கடையில் குவிந்து கிடக்கும் போதெல்லாம் அவன் அவற்றை ஏறெடுத்தும் பார்ப்பது கிடிையாது. அவன் ஏதாவது கணக்கைப் போட்டுக் கொண்டே இருப்பான். அவனுக்குக் கல்யாணம் ஆயிற்று. அப்பால் கடைக்குச் சென்றபோது கணக்குப் புத்த்கத்தைத் திறப்பதற்கு முன்பு அங்கே கிடந்த் அழகான புடைவைகளைப் புரட்டிப் பார்க்கிறான். இன்றைக்கு அவனது உள்ளத்தில் புடைவை கட்டிக் கொள்ளும் பெண்ணிடம் அன்பு மீதுர்ந்து நிற்பதனால் அவனது நாட்டம் புடைவைகளின்மேல் செல்கிறது. அதை வாங்கிக் கொடுத்து, அவள் உடுத்துக் கொண்டால் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்க்கிறான். இத்தனை நாளும் அவன் அந்தப் புடைவைகளைப் பார்த்தது இல்லையே என்றால், இத்தனை நாளும் அவன் புடைவை கட்டிக் கொள்பவளுடன் பழகவில்லை. அவன் அன்பு அவள்பால் சென்றது முதல் அவன் பார்வையும் அவளைச் சுற்றிச் சூழ இருக்கிற பொருள்களிடத்தில் செல்கிறது. அது மனித இயல்பு.

முருகப்பெருமானை நினைக்காதவர்களுக்குக் கோழி கூவுவதில் பொருள் ஒன்றும் இல்லை என்றே தோன்றும். ஆனால் அவன்மீது அன்பு சுரக்க ஆரம்பித்தவுடன் கோழி கொக்கறு கோ என்று கூவினால் முருகன் திருநாமத்தையே சொல்வதாகத் தோன்றும். ஒவ்வொருவரும் தம் தம் மன இயல்புக்கு ஏற்ற வகையிலே எல்லாப் பொருள்களையும் உணர்ந்து கொள்கிறார்கள். இதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம்.

ஹரதத்தர் மனப்பண்பு

ஹரதத்த சிவாசாரியார் என்ற சிவபக்தர் கஞ்சனூர் என்ற ஊரில் இருந்தார். அவர் பெரும் புலவர்; மிகப்பெரியவர். அவர் ஒரு நாள் கோயிலுக்குத் தம் சீடர்களுடன் போனார். அங்கே கோயில் தாசியைக் கம்பத்தில் கட்டி வைத்துத் தர்மகர்த்தர் அடித்துக் கொண்டிருந்தார். அவள் அடி தாங்க முடியாமல் அழுதாள். "ஐயோ! பாவம் இவளை ஏன் இப்படி அடிக்கிறீர்கள்?" என்று ஹரதத்தர் கேட்டார். அதற்கு அந்தத் தர்மகர்த்தர், "இவள் இரண்டு மூன்று நாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊருக்குப் போய் விட்டாள். கடவுளுக்கு யார் சேவை செய்வது? சொல்லிக் கொள்ளாமல் இவள் போகலாமா? அதற்காகத்தான் அடிக்கிறோம்" என்றார். அதைக் கேட்டவுடன் ஹரதத்தர் விசித்து விசித்து அழுதார். உடன் இருந்தவர்களுக்கு இவர் ஏன் இப்படி அழுகிறார் என்று தெரியவில்லை. வீட்டிற்கு வந்த பின் அவருடைய மாணர்க்கார்கள், "சுவாமி, நீங்கள் ஏன் அப்பொழுது அழுதீர்கள்?"என்று கேட்டார்கள். அதற்கு அவர், "கடவுளுக்குச் சேவை செய்யவில்லை என்று தர்மகர்த்தர் அவளை அடித்தாரே, அதுமாதிரி என்னை யாராவது சிறு வயசிலிருந்தே அடித்திருப்பார்களானால் நான் எப்பொழுதோ உயர்ந்திருப்பேனே" என்றார். அவர் சிவபக்தராதலின் அப்படி எண்ணினார். நல்லவற்றையே நினைப்பதற்கும் தனிமனப்பக்குவம் வேண்டும்.

ஆஞ்சநேயர் பண்பு

ம்பராமாயணத்திலே ஓர் இடம். ஆஞ்சநேயர் சீதையைத் தேடிக் கொண்டு இலங்கை போகிறார். இலங்கையிலே சீதையை எங்கும் காணவில்லை. அவர் மனம் துடியாய்த் துடிக்கிறது. "ராமபிரான் சீதையைக் கண்டு வருவேன் எனக் காத்திருப்பாரே; அவருக்கு என்ன சொல்கிறது? சீதையைக் காணோமே! அந்தப் பாவி ராவணன் சீதையை என்ன செய்திருப்பானோ?

"கொன்றானோ கற்பழியாக் குலமகளைக் கோளரக்கன்
தின்றானோ"

என்று நினைத்து வேதனைப்படுகிறார். வேறு சிலர், "அவன் சீதையைக் கெடுத்திருப்பானோ? அதனால் அவள் தற்கொலை செய்து கொண்டிருப்பாளோ?" என்று எண்ணலாம். மனத்தாலும் அவன் அவளைக் கெடுத்திருப்பானோ என்ற ஐய நினைப்பு ஆஞ்சநேயருக்கு உண்டாகவில்லை. இது அவருடையது தூய உள்ளப் பண்பைக் காட்டுகிறது.

இப்படித்தான் நல்ல குணம் படைத்தவர்கள் உலகிலுள்ளவற்றையெல்லாம் நல்லனவாகவே நினைக்கிறார்கள். இறைவன் இடத்தில் அன்பு மீதுார்ந்துவிட்டால் எல்லாப் பொருள்களிடத்திலும் இறைவனுடைய தொடர்பையே காண்கிறார்கள்.

முருகனுடைய பக்தர்களுக்குக் கோழி கூவுவதைக் கேட்டவுடனே விழிப்பு ஏற்பட்டுவிடுகிறது. கொக்கறுகோ என்ற ஒலி முருகனுடைய நினைவை உண்டாக்குகிறது.

உலகத்துக் கோழி

லகத்தில் உள்ளவர்கள் இருள் நிரம்பிய இரவில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். கோழியின் குரலைக் கேட்ட மாத்திரத்தில் இருள் நீங்கி ஒளி வரப்போகிறது என்பதை உணர்ந்து கொண்டு எழுந்துவிடுகிறார்கள். எழுந்தவுடன் இருள் நீங்குவதில்லை என் றாலும், நிச்சயமாக இன்னும் சிறிது நேரத்தில் பொழுது விடிந்து விடும் என எண்ணி ஒளியை எதிர்நோக்கி விழித்துக் கொண்டு விடுகிறார்கள். சூரியன் எழப் போகிறான்; அவனை எதிர்நோக்கி இப்பொழுதே எழுந்துவிடுங்கள் என்று எச்சரிக்கை செய்வது போலக் கூவுகிறது கோழி. இது உலகத்துக் கோழியின் செயல்.

அகவிருள்

புறத்தே கப்பியிருக்கும் இருளைப் போல மக்களுடைய அகத்திலும் இருள் உண்டு. அந்த இருளுக்கு அறியாமை என்று பெயர். புறத்தே இருளில் எந்தப் பொருளின் உண்மை உருவமும் தோன்றாததுபோல, அகத்துள்ள இருளினால் பொருள்களின் உண்மையான இயல்பு தோன்றுவதில்லை. எது நிலைக்கும் தன்மையை உடையது, எது நிலையாதது என்று பகுத்துப் பார்க்கும் திறமை இருப்பதில்லை. அறியாமையாகிய மருளால் பொருள் அல்லாதவற்றைப் பொருளாக எண்ணி மயங்கி, மேலும் மேலும் பிறவிக்கு வழிதேடிக் கொள்கிறோம்.

கோழி கூவியும் எழுந்திருக்காத மக்கள் இருக்கிறார்கள். சூரியன் உதயமாகியும் தூங்கும் கும்பகர்ணர்களும் இருக்கிறார்கள். கோழி கூவுவதைப் பயன்படுத்திக் கொள்கிறவர்கள், சூரியன் ஒளியையும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

முருகன் ஞானமே வடிவானவன்; ஞானபண்டித சாமி. அவன் அருளால் அறியாமை இருள் ஒழிய வேண்டும். அது ஒழிவதற்கு முன்னால் நம்முடைய தூக்க மயக்கம் போக வேண்டும்; தாமத குணம் தொலைய வேண்டும். அதைப் போகச் செய்வது எது? அதுவும் இறைவன் திருவருள்தான்.

சாதன அருள்

றைவனுடைய திருவருளில் இரண்டு வகை உண்டு. ஒன்று சாதன அருள்; அவனுடைய பேரருளைப் பெறுவதற்கு ஏற்ற முயற்சிகளைச் செய்யும் ஆற்றலை அளிப்பது.

"அவன்அரு ளாலே அவன்தாள் வணங்கி"

என்று மணிவாசகர் குறிப்பிடும் அருள் அது. அவன் தாளை வணங்கிப் பக்குவம் அடைந்தபோது கிடைக்கும் அருள் சாத்திய அருள். ஒன்று கருவி; மற்றொன்று பேறு. ஒன்று வழி; மற்றொன்று திருமாளிகை.

எல்லோரும் சனாதனங்களைப் பயிலுவதில்லை. அதற்குரிய பாக்கியம் அவர்களுக்கில்லை என்றே சொல்லவேண்டும். தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பும் கோழியைப் போல, அவனை வணங்கிச் சாதனை செய்ய இறைவனுடைய அருளே, சாதன அருளே வேண்டும். அந்த அருளுக்கு அடையாளமாக நிற்பது கோழி. அது தூங்குகிறவர்களை எழுப்பி கதிரவனது வருகைக்குக் காத்திருக்கச் செய்கிறது. அவன் அருளைக் கொண்டேதான் உலகிலுள்ளவற்றில் நித்தியம் எது, அநித்தியம் எது என்று சிந்தித்து அறிவும் விவேக உணர்ச்சி உண்டாகும்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் நாம் இறந்து போகப் போகிறோம் என்ற உண்மை தெரியாதது அல்ல. ஆறு ஏழு வயசுக் குழந்தைக்கே சாவைப் பற்றித் தெரியும். அதைத் தெரிந்து கொண்ட பிறகும் நல்ல நெறியில் செல்ல முயல்வதில்லை. நமக்குச் சாவு வருவது உறுதியென உணர்ந்து, பிறந்து பிறந்து சாகாமல் இருக்கும் நிலையை நாம் அடைய வேண்டுமென்ற உணர்ச்சி உடையவர்களுக்கு, உலகிலுள்ள இருளில் அகப்பட்டு மயங்கித் தூங்கிப் போகாமல் இருக்க எம்பெருமான் திருக்கரத்திலுள்ள கோழி கூவுகிறது. அதைக் கேட்டு முயற்சி உடைய மனிதர்கள் எல்லோரும் அந்தக்கோழியைக் கொடியாக உடைய எம்பெருமானை வணங்கத் தலைப்படவேண்டும்.

"கோழிக் கொடியன் அடிபணி யாமல் குவலயத்தே
"வாழக் கருதும் மதியிலிகாள்

என்று வேறு ஒரு பாட்டில் பாடுகிறார் அருணகிரியார். அந்தச் சேவலின் செயலை அவர் சொல்வதைக் கவனிக்கலாம்.

3

வேலவன்

படைபட்ட வேலவன் பால்வந்த
வாகைப் பதாகை என்னும்
தடைபட்ட சேவல் சிறகடிக்
கொள்ள. யிலைப் பற்றிப் போன பாடலிலே சொன்னபோது "வெற்றி வேலோன் வாகனம்" என்றார். இங்கேயும் அந்த வேலை முதலில் எண்ணி, 'படைபட்ட வேலவன்' என்றார். படைபட்ட வேலவன் - படையாக அமைந்த வேலையுடைய முருகன். அவனிடம் வந்த கொடி சேவல். பதாகை என்பது கொடி. வாகை என்பது ஒரு மலர். அது வெற்றி அடைந்தவர்கள் சூடுகிற பூ போருக்குக் கிளம்பும்போது ஒரு மலர், போர் நிகழும்போது ஒரு மலர், வெற்றி அடைந்தால் ஒரு மலர் எனச் சூடுவது மரபு. வெற்றி பெற்றவர்கள் வாகை மலர் சூடுவது வழக்கம். மலரைச் சூட்டிக் கொண்டாலும், சூட்டிக்கொள்ள விட்டாலும் வாகை சூடினான் என்றாலே வெற்றி அடைந்தான் என்று பொருள்படும். வாகைப் பதாகை - வெற்றியையுடைய கொடி. கோழிக் கொடி முருகன் வெற்றியை உடையவன் என்பதற்கு அடையாளமாக இருப்பது மாத்திரம் அன்று. பக்தர்களுக்கு எப்போதும் வெற்றியை உண்டாக்கும் இயல்பையும் உடையது.

வேலைத் தன் திருக்கரத்தில் உடையவன் ஆதலால் எல்லோரும் அவனை வேலவன், வேலாயுதன், வெற்றிவேற் பெருமான் என்று பலவகையாக அழைக்கிறார்கள். உலகில் போர் நிகழும் காலத்தில் தான் அவன் கையில் வேல் பிடிக்கிறான் என்பது அல்ல. மக்கள் உள்ளத்தில் நாள்தோறும் போர் நடந்து கொண்டிருக்கிறது. சத்துவ குணத்துக்கும், தாமச குணத்துக்கும் நடக்கும் யுத்தத்தில் சத்துவ குணம் வெற்றிபெற வேண்டி ஞான சக்தியாகிய வேலை அவன் திருக்கரத்தில் வைத்திருக்கிறான். அதைப் போலவே வாகைப் பதாகையும் அவன் திருக்கரத்தில் உள்ளது. ஆன்மாக்கள் தூங்கித் தூங்கி விழிப்பது போல, இறந்து பிறந்து அல்லலுற்று அறியாமையில் சிக்கி இருப்பதைக் கண்டு, அவர்களுக்கு ஞான ஒளிபரப்ப முருகன் வருவான் என்ற நம்பிக்கையை ஊட்ட அது கூவுகிறது. அறியாமை இருளில் தூங்கிக் கிடக்கிற அவர்களை எழுப்புவதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டு கூவுகிறது.

தடையற்ற சேவல்

டைப்பட்ட சேவல் என்பதற்குத் தடை உண்டாகிய சேவல் என்று பொருள் கொள்வது சரியன்று. இறைவன் கரத்தில் ஏறுவதற்கு முன்னால்தான் அந்தச் சேவல் தடையிற்பட்டு இருந்தது. எம்பெருமான் வெற்றி கொடியில் வந்த பிற்பாடு அதற்குத் தடையே இல்லை. சூரசங்காரம் ஆன பிறகு அதன் தடை நீங்கிற்று. இன்றைக்குத் தடைகள் பட்டுப் போன, ஒழிந்த, சேவலாகச் சர்வ சுதந்தரத்துடன் எம்பெருமானது வாகைப் பதாகையில் இருந்து கூவுகிறது.

சிறகடிக்கும் சேவல்

சேவல் எழுந்து சிறகை அடித்துக் கொண்டு எழும்புவது பறப்பதற்காக அல்ல. மற்றப் பறவைகள் சிறகை அடிக்கும்போது எழுந்து பறக்கும். ஆனால் சேவலோ சிறகை அடித்துக் கொண்டு கூவும். பொழுது புலர்வதற்கு முன்னாலே கோழி கூவும். கோழி கூவிவிட்டால் நிச்சயம் பொழுது புலர்ந்துவிடும் என்று நமக்குத் தெரியும். அது கூவுவதற்கு முன்னால் சிறகை அடிக்கிறது.

எம்பெருமான் திருக்கரத்திலுள்ள கோழியும் சிறகை அடிக்கிறது. அதனை வருணிக்கிறார். சாதாரணமான கோழி சிறகை அடித்தாலேயே கீழே உள்ள தூசிகள் பறக்கும். எம்பெருமான் திருக்கரத்திலுள்ள கோழி சிறகை அடித்துக் கொள்கிறபோது என்ன ஆகிறது? உலகமே கிடுகிடாய்க்கிறது.

சலதிகிழிந்து
உடைபட்டது அண்ட கடாகம்;
உதிர்ந்தது உடுபடலம்;
இடைபட்ட குன்றமும் மாமேரு
வெற்பும் இடிபட்டவே.

இது எந்தப் புராணத்தில் இருக்கிறது? எந்தப் புராணத்திலும் இல்லை. தத்துவப் பொருளை உள் அடக்கிய கற்பனை விரிகிறது அருணகிரியாருக்கு. அந்தத் தத்துவத்தை இனிப் பார்ப்போம்.

வெற்றிக் கொடியிலே நின்று சேவல் சிறகை அடித்துக் கொள்ள, முதலில் என்ன ஆயிற்று? சலதி கிழிந்தது; கடல் கிழிந்து போயிற்றாம். அதற்குப் பிறகு என்ன ஆயிற்று? உடைபட்டது அண்ட கடாகம். பூலோகம் வட்டவடிவமானது எனப் பெரியோர்கள் கற்பனை செய்து சொல்கிறார்கள். கோழி முட்டையைப் போல ஒரு கோளவடிவமாக இருக்கிறது என்பதை வான சாஸ்திரிகளும் சொல்கிறார்கள். சின்னச் சின்ன முட்டை வடிவமான கோளங் களை உடைய பெரிய முட்டையைப் போலப் பிரபஞ்சம் இருக்கிறது. இதைத்தான் அண்டம் என்று சொல்வர். அண்டம் என்பது முட்டைக்கே ஒரு பெயர்; பிரபஞ்சத்திற்கும் பெயர். அந்தப் பிரபஞ்சத்தைச் சுற்றி மண்ணால் ஒரு சுவர் எடுத்தாற்போல அதன் எல்லை இருக்கிறது. அது கண்ணுக்குத் தெரிவது அன்று. ஆனாலும் அந்த எல்லை இருக்கிறது. அந்தப் பிரபஞ்ச எல்லையாகிய சுவர் உடைபட்டது; தூள்தூளாக விழுந்தது.

பிறவிக்கடல்

வற்றின் உட்கருத்து என்ன? பிறவியைப் பெருங்கடல் என்று சொல்வது வழக்கம். ஒரு கடலுக்கும் மற்றொரு கடலுக்கும் வேறுபாடு இல்லாவிட்டாலும் அந்த அந்தப் பிராந்தியத்திலுள்ள நீர் பரப்புக்கு இந்துமகா சமுத்திரம் என்றும், பசிபிக் மகாசமுத்திரம் என்றும் வேறு பெயரிட்டு அழைக்கவில்லையா? அதைப் போலப் பிறவிப் பெருங்கடலுக்குக் கரை இல்லாவிட்டாலும் அந்த அந்தப் பிறவியைத் தனியாகப் பார்க்கிறோம். முருகப் பெருமானது கையிலுள்ள கோழி சிறகை அடித்த மாத்திரத்தில் பிறவிப் பெருங்கடல் கிழிந்துவிட்டது; பிறவித் துன்பம் இல்லையாகி விட்டது.

பிரபஞ்ச வாசனை

னி வரும் பிறவி இல்லை; இப்பொழுது வந்த பிறவி என்ன ஆயிற்று? இந்தப் பிறவியில் பிரபஞ்ச சம்பந்தமே இல்லாமல் போய்விட்டது. "பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா" என்று ஆச்சரியப்பட்டவர் அல்லவா அருணகிரியார்? இந்தப் பிறவியில் இருந்த பற்றுக்கள் யாவும் உடைபட்டுவிட்டன.

இறைவன் திருவருளினால் உலகம் தோன்றியது. எங்கும் இறைவன் மயமாகவே இருந்தும் அவனை நம்மால் காண முடியவில்லை; அதற்குக் காரணம் மாயை இருள்.

"பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்"

என்பர் திருமூலர். இறைவனிடம் நாட்டம் இல்லாதவர்களுக்கு உலகம் பெரிய முட்டையாக வட்டமாக இருக்கும். ஆனால் ஞானம் பெற்ற ஆன்மாக்களுக்கு இறைவன் மயமாக இருக்கும். அப்பொழுது பிரபஞ்சம் என்பதன் எல்லை உடை பட்டுப் போகும்; பிரபஞ்சமே இல்லையாகும். அண்ட கடாகம் உடைபட்டது என்பது அதையே குறிக்கிறது.

இறைவன் திருவருள் அநுபவம் உண்டாவதற்கு முன்னாலே மனப் பக்குவமடைந்து வருகின்றது என்பதற்கான அடையாளங்களாக இவை இருக்கின்றன. இறைவன் திருக்கரத்திலுள்ள கோழி சிறகை அடித்துக் கொண்டாலோ போதும்; பிறவிக் கடல் கிழிந்து போய்விடும்; இனி வருகின்ற பிறவிகள் இல்லை. அது மாத்திரமா? எடுத்த பிறவியிலும் பிரபஞ்ச திருஷ்டி போய்விடும். அதற்கப்பால் என்ன நிகழும்?

தேவலோக இன்பம்

உதிர்ந்தது உடுபடலம்

டு என்பது நட்சத்திரம். படலம்-பரப்பு. நட்சத்திரப் பரப்பு முழுவதும் உதிர்ந்ததாம். வரப்போகின்ற பிறவிகள் எல்லாம் கிழிந்துவிட்டன; இந்தப் பிறவியிலும் பிரபஞ்ச வாசனை உடைபட்டுப் போய்விட்டது என்ற கருத்தை முன் நிகழ்ச்சிகள் காட்டின. மேலே இருக்கிற நட்சத்திரப் படலங்கள் உதிர்ந்தன என்பதன் மூலம், தேவலோக வாழ்க்கையாகிய சொர்க்க இன்பம் இந்தப் பிறவியில் நான் செய்கின்ற புண்ணியங்களின் விளைவாக ஏற்படும் என்ற ஆசையும் உதிர்ந்தது என்னும் கருத்துக் குறிப்பாகப் பெறப்படும். புண்ணியம் செய்வதனாலே தேவலோகம் கிடைக்கும் எனச் சாதாரண மக்கள் அதனை விரும்பலாம். ஞானிகளுக்கு அதனால் ஒன்றும் பயன் இல்லை. அந்த நிலையையும் விட மேலான ஒரு நிலை இருக்கிறது. அதுவே வீடு.

"வானோர்க்கு உயர்ந்த உலகம்"

என்று இதனை வள்ளுவர் சொல்கிறார். உண்மையான அருள் இன்பம் பெற்ற ஜீவன் முக்தர்களுக்குக் கிடைக்கின்ற நிலை இது. ஆகவே ஞானிகளுக்குத் தேவலோகத்தினால் பயன் இல்லை. உதிர்ந்தது உடுபடலம் என்பது; இந்தத் தேவலோக இன்பங்களும் பயனின்றி உதிர்ந்தன என்பதை உணர்த்துகிறது. கோழி இறக்கையை அடித்துக் கொண்ட மாத்திரத்தில் பிறவிக் கடல் கிழிந்து போய்விட்டது; இந்தப் பிறவியில் உண்டான பிரபஞ்ச வாசனையும் உடைந்து போய்விட்டது, இனி இறந்தபின் கிடைக்குமென்ற தேவலோக இன்ப வாழ்க்கையும் உதிர்ந்து போய்விட்டது. இனி அடுத்தது என்ன?

அகங்கார மமகாரங்கள்

இடைபட்ட குன்றமும் மாமேரு
வெற்பும் இடிபட்டவே.

ஒரு பெரிய மலை; அந்த மலையைச் சுற்றிப் பல குன்றுகள் இருக்கின்றன. இவ்வளவு மலைகள் இருப்பதனாலே இவற்றுக்கு நடுவில் தம்பமாக இருக்கிற மலை மிக வலிவு உள்ளதாகத்தானே இருக்கும்? மிக வலியைப் படைத்த ஒன்றுதான் கடைசியில் அழிந்து போகும். மகா மேரு மலை கிடு கிடுப்பதற்கு முன்னால் இடையிலுள்ள குன்றங்கள் எல்லாம் இடிபட்டன. கடைசியில் மாமேரு வெற்பும் இடிபட்டது. இதன் பொருளையும் சற்றே பார்க்கலாம்.

அகங்காரமானது, மமகாரத்தைச் சுற்றிலும் பெற்று, மிக்க வலிவுடையதாக, தம்பமாக, நிற்கிறது; மேருவைப் போல நிற்கிறது. இந்த அகங்காரம் என்ற ஒன்று, நான், நான் என்ற குரலை எழுப்பி இந்த உலகத்தில் பிறவிப் பிணியில் சிக்க வைக்கிறது. நான் என்ற ஒன்றைச் சுற்றி எனது என்ற மமகாரம் விரிந்து கொண்டே போகிறது. நான் என்பது அகப்பற்று. எனது என்பது புறப்பற்று. நான் என்பது மனிதன். எனது என்பது மனிதனோடு சம்பந்தப்பட்ட, பிணைக்கப்பட்ட, மற்ற எல்லாம். நான் என்ற தம்பம் ஒன்று. எனது என்ற குன்றுகள் பல. நான் என்ற புள்ளியை மையமாகக் கொண்டு எனது என்ற வட்டம் விரிந்து கொண்டே போகிறது. இவை எல்லாம் நாம் போக வேண்டிய மார்க்கத்தில் தடையாக இருக்கின்றன.

நாம் இறைவனை நோக்கிய நெறியில் செல்லவேண்டும். அதற்குத் தடையாக இருப்பவை பிறவிக் கடல், இந்தப் பிரபஞ்ச வாசனை, தேவலோக இன்பம். இவை மூன்றும் முதலில் அற்றுப் போக வேண்டும். இவற்றுக்கும் மேலாக மமகாரம், அகங்காரம் என்பவை இருக்கின்றன. ஒரு பெரிய காற்று அடிக்கும்போது முதலில் ஆலிலைப் பழுப்புக்கள் உதிர்கின்றன. அப்புறம் வீட்டின் கூரைகள் பறக்கின்றன. கடைசியில் வீடே இடிந்து விழுகிறது.

அதுபோல இறைவன் திருக்கரத்திலுள்ள கோழி சிறகை அடித்துக் கொண்ட மாத்திரத்தில் பிறவிக் கடல் கிழிகிறது; பிரபஞ்ச வாசனை அற்றுப் போகிறது; தேவலோக இன்பப் பற்று உதிர்ந்து போகிறது. எனது எனது என்ற மமகாரங்களாகிய குன்றுகள் இடிபடுகின்றன. பிறகு, எனது என்ற மமகாரக் குன்றுகளுக்கு எல்லாம் மையமாக இருக்கிற நான் என்ற அகங்கார மேருவும் இடிபடுகிறது. அதுவே கடைசியில் இடிகிறது.

ஞான உதயம்

ம்மை நல்ல வழிக்குக் கொண்டு வர வேண்டுமென்பதற்காகச் சேவற் கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறான் எம்பெருமான். அது நமக்குச் சாதன அருளாக நிற்கின்றது. அறியாமை இருளில் தூங்கிக் கொண்டிருக்கிற ஆன்மாக்களுக்கு, ஞான சூரியனது உதயத்தை அறிவிப்பதற்காக அந்தக் கொடியிலுள்ள கோழிக் கூவுகிறது. அது கூவுவதற்கு முன்னே சிறகை அடித்துக் கொள்கிறது. சிறகை அடித்துக் கொள்ளும்போதே ஆன்மாக்களுக்கு மனப் பக்குவம் ஏற்பட்டுவிடுகிறது. கூவினால் இன்பம் பொங்கும். அது சிறகை அடித்துக்கொள்ளும் போது ஆன்மாக்களுடைய பிறவி ஒழிய, பிரபஞ்ச வாசனை போக, தேவலோக இன்பம் என்ற பற்று நீங்க, மமகாரம், அகங்காரம் எல்லாம் அழிந்து போகின்றன. அவை போகும் போது ஞானம் தோன்றுகிறது; இன்பம் உண்டாகிறது.

எம்பெருமான் திருவருளைப் பெற்று இன்பநலங்களைத் துய்க்க வேண்டுமானால் அதற்கு எற்ற மனப்பக்குவம் முதலில் நமக்கு வர வேண்டும். அந்தப் பக்குவம் சாதன அருளால் வரும்; அதனை ஏற்படுத்துவதற்காக அவன் திருக்கரத்தில் சேவல் கொடி இருக்கிறது. முதலில் அந்தக் கொடிக்கு ஒரு கும்பிடு போட வேண்டும்.

படைபட்ட வேலவன் பால்வந்த
வாகைப் பதாகைஎன்னும்
தடைபட்ட சேவல் சிறகடிக்
கொள்ளச் சலதிகிழிந்து
உடைபட்டது அண்ட கடாகம்;
உதிர்ந்தது உடுபடலம்;
இடைபட்ட குன்றமும் மாமேரு
வெற்பும் இடிபட்டவே.

(ஆயுதமாக அமைந்த வேலையுடைய முருகனிடம் வந்த வெற்றியையுடைய கொடி என்று பலரும் பாராட்டும், தடை அழிந்த சேவலானது, தன் சிறகை அடித்துக் கொள்ள, அதனால் கடல் கிழிய, அண்டச் சுவர் உடைபட்டது; நட்சத்திரப் படலம் உதிர்ந்தது; நடுவில் உள்ள மலைகளும் மகாமேரு கிரியும் இடிபட்டன.

படைபட்ட - ஆயுதமாக உண்டான, படையாக அமைந்த. சூர சங்காரத்துக்குப் பின் அவன் கையில் வந்து அமர்ந்தமையின் 'வந்த' என்றார். வாகை - வெற்றி; ஆகுபெயர். பதாகை - கொடி. தடைபட்ட - தடைகள் அழிந்த, அடிக் கொள்ள - அடிக்க. சலதி - கடல். அண்டகடாகம் - பிரபஞ்சப் பரப்பு. உடுபடலம் - நட்சத்திரப் பரப்பு. இடைபட்ட - நடுவிலே உள்ள.)

முன் பாட்டில் மயிலின் வேகத்தினால் மேரு அசைய எண்திசை வரைகளும் தூள்பட்டனவென்று பாடினார். இந்தப் பாட்டிலும் அந்த இரண்டும் பட்ட பாட்டைச் சொன்னார்.