பஞ்ச தந்திரக் கதைகள்/மந்திரத்தால் அழிந்தமதிகேடர்

விக்கிமூலம் இலிருந்து

6. மந்திரத்தால் அழிந்தமதிகேடர்

ஓர் ஊரில் நான்கு பேர் ஒன்றாகக் கல்வி பயின்றார்கள். அவர்கள் நால்வரில் மூவர் மந்திர வித்தை யில் மிகத் தேர்ச்சியடைந்தார்கள். நான்காமவன் சரியாகக் கல்வி பயிலவில்லை. மற்ற மூவரும் அரசனிடம் தங்கள் திறமையைக் காட்டிப் பொருள் பெறுவதற்காகச் சென்றார்கள் அப்போதுகல்வித்நோச்சியில்லாதவனாக இருந்தரலும், தங்களுடன் படித்தான்என்பதற்காக நான்காமவனையும் தங்க ளுடன் அழைத்துச் சென்றார்கள். தங்கள் வருவாயில் ஒரு பங்கு தருவதாகப் பேசிக் கொண்டு கூட்டிச் சென்றார்கள்.

அவர்கள் போகும் வழியில் ஒரு சிங்கம் செத்துப் பிணமாகிக் கிடந்தது. 'நாம் கற்ற வித்தையைப் பரிசோதித்துப் பார்க்க இது ஓர் அரிய வாய்ப்பு, நாம் மந்திரவித்தையால் இந்தச் சிங்கத்தைப் பிழைத் தெழச் செய்வோம்’ என்றான் ஒருவன். அப்போது கல்லாதவன், 'சிங்கத்தை எழுப்பினால் அது நம்மைக் கொன்று விடும்!’ என்று கூறினான். மற்றவர்கள்,

கோபத்தோடு அவனை ‘அப்பால் போ’ என்று பிடித்துத் தள்ளினார்கள். அவன் பேசாமல் போய் ஒரு மரத்தின் மேல் ஏறியிருந்து கொண்டான்.

மற்றவர்கள் மூவரும் தங்கள் மந்திர சக்தியைக் கொண்டு அந்தச் சிங்கத்திற்கு உயிரூட்டினார்கள். உயிர் பெற்றெழுந்த சிங்கம், அவர்கள் மூவர் மீதும் பாய்ந்து அவர்களைக் கொன்றுவிட்டது.

'கல்வியைக் காட்டிலும், அறிவுதான் பெரிது' என்பது இக்கதையினின்றும் தெரிகிறது.