சீனத்தின் குரல்/கன்பூஷியசுக்கு முன்
சீனர்கள் ஒரே இனத்தவரா என்பதைக் கண்டுபிடிப்பது மகாக் கடினமாக இருந்தது. டார்ட்டாரிகள், மங்கோலியர்கள், ஹன்ஸ் வகுப்பார், ஆகியவர்கள் சேர்ந்து உருவெடுத்ததுதான் சீன இனம். அதன் பிறகு பர்மியர்களும், ஜப்பானியரும், திபேத்தியர்களும் சீன இனத்தில் கலந்து விட்டார்கள்.
இப்படி, பல்வேறு பகுதியினர் சேர்ந்து வாழ்ந்துங்கூட அவர்களிடம் ஒரே விதமான நாகரிகம் காணப்பட்டது. இப்படி எல்லா மக்களும் ஒரே தன்மையதான நாகரிகமடைந்திருந்தும் சீன நாட்டை ஒரேநாடு என்று சொல்லமுடியாமல் வடக்கும் தெற்குமாகப் பிரிந்திருந்தது. எனினும் நாகரிகம் மட்டிலும் ஒன்றேதான்: கன்பூஷியஸ் காலத்தில் இவ்வகை நாகரிகம் பெற்ற மக்கள், பத்தாயிரம் சிறிய நாடுகளிலடங்கியவர்களாக இருந்தார்கள்.
இவற்றில் வாழ்ந்த செல்வர்கள், Dukes, Marquise, Earls, Counts, Barons என்று ஒரு வருக் கொருவர் தரம் குறைந்த பிரபுக்களாக இருந்தார்கள். அதாவது, பிரபு, கோடீஸ்வரன், லட்சாதிபதி, ஜமீன்தார், மிராஸ்தார், மிட்டாதார், நிலச்சுவான்தார் என்று நம்முடைய நாட்டிலிருப்பதைப் போல. இதன் காரணமாக ஒரு பக்கம் கலகங்களும், மற்றோர் பக்கம் கல்விச் சாலைகளும், மருத்துவமனைகளும் தோன்றிக் கொண்டிருந்தன. இப்படி இருந்த சீனர்கள் கன்பூஷியஸ் காலத்துக்கு. முன்பு, டாய்ஸ் மதத்தைத் தழுவினார்கள் என்று தோன்றுகிறது. கன்பூஷியஸ் காலத்துக்குப் பிறகு இவர் பெயராலேயே ஒரு மதம் தோன்றுகிறது.