திருவிளையாடற் புராணம்/48

விக்கிமூலம் இலிருந்து

48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம்

பாண்டிய நாட்டிலே தென் திசையில் ஓர் ஊரில் ஒரு தாமரைக் குளம் இருந்தது. அதில் உள்ள மீன்களைத் தின்று வாழ்ந்து வந்த நாரை குளம் வற்றிப்போக அதை விட்டுப் பறந்து நீண்ட தூரம் சென்று காட்டிலே ஒரு வாவியை அடைந்தது. அங்கே அளவற்ற மீன்கள் அக்குளத்தின் வளத்தைக் காட்டின. அங்குமுழுகிக் குளித்துத் தவம் செய்து வந்த முனிவர்களின் மேனியில் பட்டு அவை புனிதம் பெற்றன. பட்டினி கிடந்தாலும் அவற்றைத் தொட்டு உண்பதற்கு அந்நாரை விரும்ப வில்லை.

அம்முனிவர்கள் அத்தீர்த்தத்தில் முழுகிக் கரை ஏறி மதுரைப் புராதனம் குறித்து மதுரமாகப் பேசி அதன் தீர்த்தம் தலம் மூர்த்தி இவற்றைச் சிறப்பித்துப் பேசினார். அதைக் கேட்டு அந்த நாரை தானும் அங்குச் சென்று பயன் அடைய விரும்பியது.

மதுரை பொற்றாமரைக் குளத்துக்குச் சென்று அதில் முழுகி ஈசனை வழிபட்டது. அதில் துள்ளி எழுந்த மீன்களை அள்ளித் தின்ன ஆசைப்பட்டது. பசி எடுத்தும் அதன் சுவை தன்னை ஈர்த்தும் அங்கே மீன் பிடிக்க விரும்பவில்லை.

அக்குளத்து மீனை உண்பது அதன் புனிதத்தைப் பாழ்படுத்துவதாகும் என்று நினைத்தது; மீன் உண்ணாமலேயே பட்டினி கிடந்தது. ஒட்டிய வயிற்றோடு இறைவனை வழிபட்டுக்கொண்டு வந்தது.

நாரை வடிவத்திலேயே இறைவன் அதற்குக் காட்சி அளித்து, நீ, வேண்டும் வரம் யாது?’ என்று கேட்க அதற்கு அந்தநாரை தனக்கு என்ன வேண்டும் என்பதை விடுத்து அக்குளத்துப் புனிதத் தன்மையைப்போற்ற வேண்டிய தேவையை வற்புறுத்தியது.

அக்குளத்தில் மீன்களே இருக்கக்கூடாது என்று நாரை கேட்டுக் கொண்டது. மீன் இருந்தால்தானே அவற்றைப் பறவைகள் தின்ன வேண்டி வரும்; தின்றால் அவை பாவத்துக்கு ஆளாக வேண்டிவரும்; அதனால் குளத்தில் மீன்கள் எந்தக்காலத்திலும் தோன்றக்கூடாது என்று வேண்டிக்கொண்டது. நாரையின் பக்தியையும் தூய உள்ளத்தையும் மதித்து இறைவன் அதற்கு முத்தி அளித்துச் சிவலோகம் சேர்த்துக் கொண்டார். நந்தி கணத்துள் அது ஒன்றாகச் சேர்க்கப்பட்டது. 

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவிளையாடற்_புராணம்/48&oldid=1113240" இலிருந்து மீள்விக்கப்பட்டது