அந்தமான் கைதி/5
இடம்: நடராஜன் வீடு
காலம்: காலை
லீலா-காமாட்சி-நடராஜன்-திவான்பகதூர்.
[லீலா பின்னல் வேலை செய்துகொண்டே ஒரு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருக்கிறாள். காமாட்சி வருகிறாள்.]
காமா : ஏண்டி ஒங்க அண்ணென் வச்ச வரிசைக்கு, உனக்குப் பாட்டுவேறையா வருது, பாட்டு. முகரையைப் பாரு சீ! கழுதை! போய் வேலையைப் பாருடி. அவன்தான் கெட்டுத் தொலைஞ்சுப் போனன்னு இருந்தா நீ வேறையா பாட்டையும் கதையையும் படிக்க ஆரம்பிச்சுட்டே, ரொம்ப நல்லாருக்கு! இது என்ன தேவடியா வீடா? ஒரு வயசுப் பொண்ணு லெக்ஷணமாப் பசுமாதிரி அடுத்த வீட்டுக்குத் தெரியாமே இருப்பியா, கொஞ்சங்கூட அடக்கமில்லாமே இப்படி பொழுதனைக்குங் கூத்தடிக்கிறீயே இது ஒனக்குத் தேவலாமா? இல்லே ஒனக்குத் தேவலமான்னு கேட்கிறேன்
லீலா : இதென்னம்மா நீ பேசுறது வேடிக்கையாய் இருக்கு. சங்கீதம் பழகிக் கொள்வதால் எங்காவது கெட்டுப் போவார்களா? பெரிய மனிதர்கள் வீட்டிலெல்லாம் ஆயிரம் ரெண்டாயிரமென்று செலவழித்துப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறார்களே; அவர்களெல்லாம் தங்கள் குழந்தையைக் கெடுத்துவிடுவதற்கா அப்படிச் செய்கிறார்கள்?
காமா : அது என்னமோ, இந்த சினிமாவையும் ட்ராமாவையும் பார்த்துட்டு எடுத்ததுக்கெல்லாம் எதுத்து எதுத்துப் பேசுற இந்தக் காலத்துக் குட்டிகளோட பேச யாராலே முடியும்.
- (வாசலில் ஹாரன் சப்தம் கேட்க இருவரும் திரும்பிப் பார்க்கிறார்கள். பொன்னம்பலம் பிள்ளை கனைத்துக்கொண்டே ஆடம்பரத்துடன் வருகிறார். ட்ரைவர் பழக்கூடைகளையும் மற்றும் பல தின்பண்டங்களையும் கொண்டு வந்து வைக்கிறான். காமாட்சி பரபரப்போடும் மலர்ந்த முகத்தோடும் பேச ஆரம்பிக்கிறாள்)
காமா : வாங்கண்ணா வாங்க வாங்க, இப்படி உட்காருங்கள்.
பொன் : என்ன காமு எல்லோரும் செளக்கியந்தானே?
காமா : என்னமோ ஒங்க புண்ணியத்திலே இருக்கிறோம். செத்தோமா பொளேச்சோமான்னு பாக்க இப்பவாவது ஒங்களுக்கு மனசு வந்திச்சே,
பொன் : அடடே! அப்படி யெல்லாம் ஒன்றுமில்லை...... அன்றைக்கு அவன் பேசியதை நினைத்தால் (நீண்ட பெருமூச்சு விட்டு) ஊம் - என்னமோ. பேசிவிட்டுப் போகிறான், சிறுபிள்ளைத்தனம்; அதுகூடப் பிரமாதம் இல்லை. அடிக்கடி உங்களே வந்து பார்க்க வேணும் என்ற ஆசைதான். எனக்கு எங்கே ஒழிகிறது. ஊரில் ஒரு பெரியமனிதன் என்று இருந்தால், அப்பாடா எவ்வளவு தொந்திரவு தெரியுமா? அங்கே டீ பார்ட்டி, இங்கே மீட்டிங், அங்கே அது இங்கே இது என்று ஏதாவது வேலை வந்துவிடுகிறது. ஊருக்கு ஒரு கலக்டரோ கவர்னரோ வந்தால் முதலில் நாம் இருக்கவேண்டியதாய் இருக்கிறது. பெரிய மனிதர் வீடுகளில் ஏதாவது விசேஷமென்றால் திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளைக்குத்தான் முதல் அழைப்பு. இதோடு தொலைகிறதா? நிலபுல விஷயமாக இந்தப் பண்ணைக்காரப் பயல்களோடு வேறே மாரடிக்க வேண்டியதாயிருக்கிறது. இவ்வளவு இடைஞ்சல்களுக்கு இடையிலே உங்களை வந்து பார்க்க எனக்கு எங்கே நேரம் கிடைக்கிறது?
காமா : சரி சரி. நேரமாச்சு, லீலா! நீ போய் சமயலுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய். முதலில் வெந்நீர் போடு.
(லீலா போகிறாள்)
பொன் : ஏன் காமு! லீலாவை ஏன் இப்படி ஒரு மூக்குப் பொட்டுக் கூட இல்லாமல் வைத்திருக்கிறாய் ஒரு வயதுப் பெண்ணை இப்படி வைத்திருக்கலாமா?
காமா : நான் என்ன அண்ணா பண்ணுவேன்! அவளையும் ஒரு காலத்தில் உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் தங்கத்தாலேயே எழைச்சுத்தான் வச்சிருந்தேன். அப்போ அவள் ஒரு லக்ஷாதிபதியின் மகளாயிருந்தாள். (துக்கம் தொண்டையை அடைக்கத் துணியால் கண்ணைத் துடைத்துக்கொள்ளுகிறாள்) அந்தப் பாவி மனுஷன், இப்படி இதுகளை யெல்லாம் என் தலையிலே கட்டீட்டு இவ்வளவு சீக்கிரமாப் போயிடுவாருன்னா நெனச்சேன்?
பொன் : ஊம். என்ன செய்யலாம்! நானும்தான் ஆதியிலேயே இந்தக் கப்பல் வியாபாரம் வேண்டாம் வேண்டாமென்று அந்த மனிதருக்கு எவ்வளவோ சொன்னேன். கேட்டாரா! என்னமோ. அந்தக் கப்பலும் கவிழவேண்டும்; அதே கவலையால் அவரும் சாகவேனும்; உங்கள் குடும்பமும் இப்படி ஆக வேண்டும் என்று இருக்கே இனிமேல் இதற்காக அழுது என்ன பண்ண முடியும்? காமா : இருந்தாலும் நீங்களும் இப்படிக் கவனிக்காம இருக்கப்படாது. கெட்டுப்போயிட்டோம். இன்னமே நம்ம தனியா இந்தப் பட்டணக்கரையிலே இருக்க வேண்டாம். நீங்க இருக்கிங்கோ, ஆயிரமா இருந்தாலும் கூடப் பொறந்த பொறப்பு; நம்மளெ விட்டுடமாட்டிங்க இன்னு நினைச்சுதானே அறுத்த கழுத்துத் தழும்புகூட மாறாமே இந்த சின்னஞ் சிறுசுகளையும் கையிலே புடிச்சிக்கிட்டு வந்தேன். (மறுபடியும் கண்ணைக் கசக்கிக்கொள்ளுகிறாள்)....ஊம் ஒங்களெச் சொல்லி என்ன? எல்லாம் என் தலைவிதி.
பொன் : என்னை நம்பி வந்ததற்கு இப்பொழுது என்ன மோசம் வந்துவிட்டது? உன் மகன் ஒழுங்காய் நடந்து கொண்டிருந்தால் எல்லாம்தான் நடந்திருக்கும்.
காமா : அவன் என்னண்ணா! நேற்றுப் பிறந்த சிறுபிள்ளை தானே? அவன் ஒரு எதிரின்னு சொல்லிட்டு நீங்க எங்களெ இப்படி அடியோட மறக்கலாமா?
பொன் : ஏன் அவன் எங்கேயாவது ஒரு வேலையைப் பார்த்து இருந்தால் என்ன?
காமா : அவனுந்தான் எங்கெங்கேயோ அலைஞ்சுபாத்தான்; வேலை ஒன்னும் கிடைக்கல்லே.
பொன் : சரி, இனிமேல் ஒன்றுக்கும் கவலைப்படவேண்டாம். உங்களை இன்றைக்கு இந்த நிலையிலே பார்க்க எனக்கு அதிக வருத்தமாயிருக்கிறது. கூடப்பிறந்த பாசம் விடுகிறதா? இதோ பார் காமு! இனிமேல் உங்களுக்கு வேண்டிய செளகர்யமெல்லாம் நானே செய்கிறேன். இந்த வீடு ஈடு இருப்பதாகக் கூட யாரோ சொன்னதாக ஞாபகம். அந்தக் கடனையெல்லாம் கூட நானே கட்டிவிடுகிறேன். வேண்டுமானால் உங்களுக்காக ஒரு பத்தாயிரம் ரூபாய் பேங்கிலே போட்டு வைக்கிறேன். அந்தக் கீழக்குறிச்சியில் உள்ள நிலமெல்லாம் உன் பேருக்கே சாசனமாக எழுதிவைத்து விடுகிறேன்; போதுமா?
காமா : (அளவற்ற மகிழ்ச்சியோடு) என்ன! நிஜமாகவா? நிஜமாகவா? இவ்வளவும் எங்களுக்கு.........
பொன் : பின்பு என்ன, விளையாட்டுக்குச் சொல்வதாகவா நினைக்கிறாய்? உண்மையாகவேதான். எனக்கு வேறு யாரிருக்கிறார்கள்? எனக்குப் பிறகு என் சொத்தை யெல்லாம் லீலாவும் அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளும் தானே அனுபவிக்க வேண்டும்!......
(அசட்டுச் சிரிப்பு)
காமா : அப்படியானால் நீங்க சொல்றதுக்கு....அர்த்தம்....?
பொன் : அர்த்தமென்ன அர்த்தம், லீலாவை நான்தான் கலியாணம் செய்துகொள்ளப் போகிறேன். ஏன்? என்ன யோசனை செய்கிறாய்? நாலாந் தாரமாச்சே யென்றா? இல்லை வயதாகிவிட்டதா? உன்னைவிட இரண்டு மூன்று வருஷத்துக்கு மூத்தவன்தானே? அதிலும் இப்போது உன்னைப் பார்த்தால் அக்கா என்றும், என்னைப் பார்த்தால் தம்பி என்றும்தானே சொல்லுவார்கள்?
காமா : அதுக்கு இல்லை அண்ணா! இதுக்கு நடராஜனும் லீலாவும் சம்மதிக்கனுமேன்னு தான்.
பொன் : அவர்கள் சம்மதத்தை என்ன காமு கேட்பது?... திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளைக்குப் பெண் கொடுக்கவா யோசனை? நான் நினைத்தால் எத்தனையோ பேர் பெண் கொடுக்க நான் நீ யென்று ஓடி வருவார்கள். இருந்தாலும் உன்னைவிட அவர்கள் ளெல்லாம் எனக்குப் பெரிதா? என்னமோ தங்கை மகளாச்சே, சொந்தம் விட்டுப் போகக் கூடாதே; இந்தச் சொத்தெல்லாம் அனியாயமாகப் பிறத்தியானுக்குப் போய்விடக் கூடாதே என்று தான் பார்க்கிறேன்.
காமா: ஏண்டா தம்பி. இங்கே வந்திருக்கிறது யாருன்னு பாத்தியா?
நடராஜன் : யாரது?
காமா : மாமா வந்திருக்காருடா! இங்கே வந்து பாரு!
நட : யார்? மாமாவா வாங்க வாங்க. ஏது இந்த ஏழைகள் மேலே இவ்வளவு தயவு வந்தது!
பொன் : அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நீங்கள் தான் என்னமோ நினைத்துக் கொண்டு ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள். நான் வீட்டை விட்டு ஒரு நாளைக்கு வெளியே புறப்பட வேண்டுமானால் சாமான்யமாக இருக்கிறதா, என்ன?
காமா : அதெல்லாமிருக்கட்டும். இப்போது மாமா எதுக்காக வந்திருக்கார் தெரியுமோ!
நட : தெரியாமலென்ன? உன்னைப் பார்க்க வந்திருப்பார்.
காமா : உனக்கு ஒரு வேலை பார்த்துத் தர்ராறாம்.
நட : அதுதான் சொன்னேன். இப்போதுதான் தயவு பிறந்திருக்கிறதென்று.
காமா : அதோடு மட்டுமா, நம்ம வீட்டுக் கடனை யெல்லாம் தீர்த்துடறேன்னுட்டாரு! நட : ரொம்ப சரி, அப்புறம்?
காமா : லீலா பேராலேயே பத்தாயிரம் ரூபாய் பாங்கிலே போடுறாராம்.
நட : அடடே ஏது லீலாவின் மேல் அவ்வளவு கருணை?
காமா : வேறே ஒன்னுமில்லை. லீலாவை அவரே கலியாணம் செய்துக்கிறேன்னு......
நட : அட போம்மா! சும்மா விளையாடுகிறாயே. அவருடைய அந்தஸ்து என்ன! நிலைமை என்ன! அவர் வந்து நம் வீட்டுப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வாரென்றால், இது நடக்கிற காரியமா என்ன?
பொன் : பார்த்தாயா! பார்த்தாயா காமு! மாப்பிள்ளை இதற்கு ஒன்றும் தடை சொல்லவே மாட்டார் என்று நான் அப்பொழுதே சொல்லவில்லையா?
நட : தடையாவது, பெரிய பிரபு, அதிலும் ஒரு திவான்பகதூர். அப்படியுள்ள தங்களே மைத்துனராக அடைய எந்த மடையனாவது ஆட்சேபிக்க முடியுமா?
காமா : கடவுள் கிருபையினாலே அப்படியே முடிஞ்சுட்டா எல்லாப் பெருமையும் ஒனக்குத்தான்.
நட : ஆமாம். எல்லாப் பெருமையும் எனக்குத்தான். அடடா இனிமேல் எனக்கென்ன குறைவு! இந்திர போகமே இங்கேதான்!
பொன் : சரி மாப்பிள்ளை. இனிமேல் வீணாக நாளைக் கடத்தக் கூடாது முகூர்த்தத்திற்கு ஆகவேண்டிய ஏற்பாடுகளைச் சீக்கிரம் செய்யவேண்டியதுதான்.
நட : ஆஹா அதிலென்ன தடை..... உம். அது சரி இப்பொழுது யார் யார் வந்திருக்கிறீர்கள். நீங்கள் மட்டும்தானா? அல்லது...... பொன் : ஏன்? கூட வேலைக்காரனும் ட்ரைவரும் வந்திருக்கிறார்கள். ஏன் என்ன செய்ய வேண்டும்?
நட : ஒன்றும் செய்ய வேண்டாம். நீங்களெல்லோரும் உடனே இதை விட்டுப் புறப்பட வேண்டும்.
காமா : அதுக்குள்ளே என்னடா அவசரம்? இத்தனை நாளைக்கப்புறம் வந்தார்; இன்னும் சாப்பிடக்கூடவில்லை......
நட : அடடே அவருக்குச் சாப்பாடு இப்படி யெல்லாமா செய்வது? வேறு விதமாக வல்லவா செய்ய வேண்டும். அவர் லட்சாதிப் பிரபு. அவர் வீட்டில் இல்லாத சாப்பாடா என்ன? சரி! நீங்கள் புறப்படுங்கள்.
காமா : என்னடா அவசரம்? வந்தவங்களே இப்படி வெரட்றியே!
நட : விரட்டுவதற்கு மாமா கழுதையா என்ன?
பொன் : (திடுக்கிட்டு) என்ன என்னையா கழுதை என்று...
நட : இல்லை, இல்லை, கழுதையில்லை-குதிரை!
பொன் : பார்த்தாயா இன்னும் இந்தச் சின்னப் பிள்ளைப் புத்தியும், முரட்டுத்தனமும் உன்னே விட்டுப் போகவில்லையே!
நட : ஆமாம், நீ மகாப் பெரிய மனுஷன்தான். தெரியும். புறப்படு.
காமா : தம்பி, மாமா......
நட : (கடுங் கோபத்தோடு உரத்த குரலில்) ஆமாம் எல்லாம் எனக்குத் தெரியும். ஆல் ரைட்-திவான் பகதூர், கிளம்பலாம். பொன் : டேய்! நீ யாரிடம் பேசுகிறாய் என்பது தெரிகிறதா?
நட : ஆஹா நன்றாகத் தெரிகிறது. மண்டை வறண்ட ஒரு மடையனிடம் பேசுறேனென்று.
பொன் : யார் நானா? என்னையா மடையனென்றாய்?
நட : இல்லை! மகா புத்திசாலிதான். இல்லாவிட்டால் கட்டையிலே போகிற காலத்திலே. கன்னியர்கள் மேலே காதலும், கலியாண நினைப்பும் வருமா?
பொன் : என்ன என்னையா கிழவனென்று சொல்லுகிறாய்?
நட : ஊஹூம்! யார் அப்படிச் சொன்னது? குழந்தையல்லவா! பல்கூட இனிமேல்தான் முளைக்க வேண்டும்; கல்யாண மாப்பிள்ளை முகரையைப் பாருங்களேன்!
பொன் : உன் குணம் உன்னைவிட்டுப் போகுமா?
நட : அது எப்படிப் போகும்?
பொன் : அடே நான் நன்மைக்குத்தான் சொல்லுகிறேன்; அது.....
நட : எது நல்லது எது கெட்டதென்று எனக்குத் தெரியும். உன் பணத்தைக் கண்டு பல்லைக் காட்டுபவன் நானல்ல. நீ லக்ஷாதிபதியாய் இருக்கலாம். ஆனால் உன் பிச்சைக்காரக் காசுக்காக என் தங்கையை நான் விற்றுவிடத் தயாராயில்லை. இந்த உயிர் இந்த உடலை விட்டு நீங்கும்வரை நீ நினைப்பதொன்றும் நடக்காது.
காமா : அடே! ஏண்டா உனக்கு இந்தத் துர்ப்புத்தி? இந்த நிலைமையிலே நம்மளே வேறே யாருடா வச்சுத் தாங்கப் போறா? நட : மற்றவன் தன்னைத் தாங்குவான் என்று நினைப்பவன் மனிதனாகவே இருக்க முடியாது.
பொன் : அடே வேண்டாம், வீணாகக் கெட்டுப்போகாதே. உன்னையும் உன் நிலைமையையும் உணராமல் பேசுகிறாய். அதனால் நீ அதிகக் கஷ்டப்படுவாய்; நான் சொல்வதைக்கேள்.
நட : (பொறுமையை இழந்து) நீ சொல்வதை நான் கேட்கத் தயாராயில்லை. நான் சொல்வதை நீ கேள். ஆல்ரைட் திவான் பகதூர், கெட் அவுட்.
பொன் : என்ன திமிர்! ஏழைக் குறும்பு என்பது சரியாய்த்தான் இருக்கிறது...... உம்! மயிலே மயிலே என்றால் இறகு போடுமா? இருக்கட்டும், அடே யாருடா அங்கே?
வேலை ஆள் : எஜமான்!
பொன் : ட்ரைவரைக் கார் எடுக்கச் சொல். (கிளம்புகிறார்).
(வேலையாள் போகிறான்)
காமா : என்னண்ணா-அவனுக்காகவா இப்படிக் கோபித்துக் கொள்வது? அவன் சிறு பையன் தானே. அவன் போறான் எனக்காகவாவது நீங்க சாப்பிட்டுட்டுத் தான் போகணும்.
பொன் : இந்தப் பிச்சைக்காரப்பயல் வீட்டிலா? (பெருமூச்சு விட்டு) இருக்கட்டும் பார்த்துக்கொள்ளுகிறேன். (டிரைவர் வருகிறான்) என்னப்பா கார் எடுக்கல்லையா?
ட்ரைவர் : எஜமான் பெட்ரோல் அடைச்சிக்கிட்டு கார் ஸெல்ப் எடுக்க மாட்டேங்குது. தள்ளி ஸ்டாட் எடுக்கறதுக்கு நாலு ஆள் வேணும். நட : ஆமாமா, மாமாவைப் பாடையிலே வைக்கிறதுக்கு நாலு ஆள் வேண்டியதுதான்.
காமா : அடே! ஏண்டா உனக்கு இந்தத் துர்ப்புத்தி?
நட : போதுமம்மா. போதும் உன் ஞானோபதேசம் எல்லாம் எனக்குத் தெரியும். அவன் பட்டம், பதவி எல்லாம் உனக்குத்தான் பெரிது......... அந்த மடை யனின் தங்கைதானே நீ.
காமா : ஆமாம், அந்த மடையனில்லாமே வேறே எந்த புத்திசாலிதான் உன் தங்கையை வந்து கட்டிக்கப் போறான்னு பார்ப்போமே! சேச்சே, இனிமை அரை நாழிகூட இந்த வீட்டிலே இருக்க யோக்கியதை இல்லே.
நட : ஆமாம், ஆமாம், பெரிய திவான்பகதூரின் தங்கையல்லவா நீ? இந்த ஏழைக் குடிசையிலே இருக்கக் கூடாதுதான். நன்றாக மேள தாளத்தோடு இப்பொழுதே வேண்டுமானலும் போகலாம்.
காமா : இல்லை. அவன் இல்லாமே நீதான் என்னெ வச்சுத் தாங்கப் போறே.
நட : இல்லே! இதுவரை அவன்தான் உனக்கு மாதா மாதம் படியளந்துகொண்டு வந்தான். கிழட்டு. அயோக்கியப் பயல் (போகிறான்.)