அந்தமான் கைதி/3
இடம்: திவான் பகதூர் மாளிகை.
பாத்திரங்கள்: திவான் பகதூர், ஜம்பு.
[ஜம்பு, தபால்களை உடைத்து ஒவ்வொரு படமாக எடுத்துக் காட்டுகிறான். திவான்பகதூர் பார்வையிடுகிறார்]
ஜம்பு: ஜானகி, வயது 17. இதைப் பார்த்தீர்களா?
பொன்: எங்கே! சேச்சே. இதென்ன மூஞ்சுறு மாதிரியிருக்கு.
ஜம்பு: இதைப் பாருங்கள்!
பொன்: அடே அப்பா! இதென்ன வைக்கோல் போர் போல் இளைத்துப்போய் இருக்கிறது! இதை யார் கட்டிக்கொண்டு மாரடிப்பது? சேச்சே, ஒன்றாவது உருப்படியா யில்லையே.
ஜம்பு: இந்தப் படம் கொஞ்சம் சுமாரா......
பொன்: வயசென்ன? பதிமூனா! சேச்சே. மொகறையைப்பாரு, கிழட்டுக்களை அப்படியே தாண்டவமாடுதே.
(சமையல் கணபதி ஐயர் வருகிறார்)
கணபதி: மணி 13 ஆச்சு, சாப்பாட்டை முடிச்சுண்டு சாவகாசமாய்ப் பார்க்கலாமே தபாலே.
பொன்: அட இரைய்யா, சாப்பாடுதானா பெரிசு...
ஜம்பு: ஒய் கணபதி ஐயர், உமக்கு சமய சந்தர்ப்பம் ஒன்றுமே தெரிவதில்லை. கணபதி: மன்னிக்கணும். நான் ஏதாவது ஒன்று செலைக்ட்டு ஆயிருக்கும்னு நெனச்சேன்.
பொன்: என்னத்தை செலைக்ட்டு ஆகிறது. எல்லாம்தான் தாடகையும் சூர்ப்பநகையுமா இருக்கே.
ஜம்பு: எனக்கு அப்பொழுதே தெரியும். நாலாந்தாரம் என்று விளம்பரம் செய்தால் இப்படிக் கழுசடை விண்ணப்பங்கள்தான் வருமென்று.
பொன்: இந்த யோசனையை நீ ஏன் முன்பே சொல்லக்கூடாது?
ஜம்பு: சொன்னால்...நீங்க ஏதாவது......
பொன்: ஆமாம், நீங்க; நீங்க என்ன? விஷயத்தை விவரமாகச் சொன்னால் சரிதான் என்று சொல்லிவிட்டுப்போகிறேன்...... உம் அது போகட்டும்; விளம்பரத்தில் எப்படிப் போட்டிருக்கிறது? அதைப் படி பார்ப்போம்.
(ஜம்பு பத்திரிகையை எடுத்துப் படிக்கிறான்)
சுமார் 20 லக்ஷ ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்தும், செல்வாக்கும், அந்தஸ்தும் உள்ள ஒரு பிரபுவுக்கு நாலாந்தாரமாக ஒரு மணமகள் தேவை. பெண் அழகும், சொத்துக்களைக் காப்பாற்றும் ஆற்றலும், கல்வியறிவும் உள்ளவளாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட விலாசத்திற்குப் புகைப்படத்துடன் எழுதவும்.
பொன்: நாலாந்தாரம் என்பதைக் குறிப்பிடா விட்டால், பிறகு ஏதாவது குற்றம் வருமே என்றுதான் பார்த்தேன்.
(மற்றொரு படத்தைப் பார்த்து)
ஜம்பு: சுலோசனாவா?......
கணபதி: அப்படி ஒரு ஸ்டாரே இல்லையே......? ஏதாவது எக்ஸ்ட்ராவா வந்திருக்கலாம்.
பொன்: பாதகமில்லே, சுமாரா இருக்கா. ஆள் கருப்பா செகப்பாங்கிறது தெரியலையே.
ஜம்பு: கலர் போட்டோவா இருந்தாத் தெரியும். புடிச்சிருந்தா நேரிலேயே பார்த்துடலாமே?
கணபதி: சிகப்பைவிட கருப்புதான் அழகு. மன்மதன் கருப்புத்தானே. மகாவிஷ்ணு, கிருஷ்ணன், ராமர் இவர்களெல்லாம் கருப்போ இல்லையோ..?
(முனியாண்டி பொடி உறிஞ்சியபடி வருகிறான்)
முனி: மகமாயி!...... நமஸ்காரம் வருதுங்க.
பொன்: ஓ, பூசாரியா! வாய்யா, வா, முனியாண்டி, இங்கே பார்; இந்தப் பெண் புடிச்சிருக்கா பார்.
முனி: யாருக்கு?
பொன்: அட நமக்குத்தானையா பார்.
முனி: பொண்ணா இது?
பொன்: ஏன்?
முனி: (ஐயரையும் போட்டோவையும் பார்த்து) ஒஹோ நம்ம கணபதி ஐயர் சாமி பொம்பளே வேஷம் போட்ருக்காபோலிருக்கு! பொன்: ஆமாம், கொஞ்சம் ஸ்டௌட்டாத்தான் இருக்கு.
ஜம்பு: உங்களுக்கு ஏன் இவ்வளவு கவலை? வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதைப்போல இருக்கிறதே! கையிலேயே தங்க விக்ரகம் போன்ற பெண்ணை வைத்துக்கொண்டு ஏன் இவ்வளவு தூரம் யோசிக்கவேண்டும்?
பொன்: கையிலேயே பெண் இருக்கிறதா?......... உம், அது யாரு?
ஜம்பு: உங்கள் தங்கை மகள் லீலாவைத்தான் சொல்லுகிறேன். லீலாவுக்கு மேல் அழகான பெண் இந்த உலகத்திலேயே கிடைக்காதே.
பொன்: யார் நடராஜன் தங்கையையா சொல்லுகிறாய்? சேச்சே! குடிக்கக் கூழுக்கும் வழியில்லாத அந்தப் பொறுக்கி நாய் வீட்டிலா நான் சம்மந்தம் செய்வது? ஊஹூம். அந்த அயோக்கியக் கழுதையின் உறவே வேண்டாமென்று தள்ளி வருஷம் இரண்டுக்கு மேலாகிறதே. இனிமேல் இறந்தாலும் அவன் முகத்தில் விழிக்கலாமா? (பல்லைக் கடித்துக்கொண்டு) என்ன மமதை அவனுக்கு, கிழட்டுப் பிணமாம். நான் கிழட்டுப் பிணம்? அவன் என்னைப் பார்த்துக் கிழட்டுப் பிணமென்று சொல்வது? இருக்கட்டும்.
முனி: என்ன உங்களைப் பார்த்தா அவன் கிழவனென்று சொன்னான்? முட்டாள், அப்போது நான் இல்லாமற் போய்விட்டேனே! உம்......அவன் ஏன் ஏஜமான், உங்களைப் பார்த்துக் கிழட்டுப் பிணம்னு சொன்னான்?
பொன்: ஒன்றுமில்லை; முன்பு இங்கே பூச்செடிகளுக்குத் தண்ணீர் எடுத்து ஊற்றிக்கொண்டிருந்தாள் ஒரு குட்டி; சின்ன வயது. முனி: கடைந்தெடுத்தமாதிரி. பொடிசு.
பொன் : ஆமா, மிகவும் ஜோராக இருப்பாள். ஒருநாள் என்னமோ தோட்டத்துப் பக்கம் போனபோது, (கணபதி ஐயரைப் பார்த்து, "அட போயேய்யா, போய் எலையெப் போடும். இதோ வருகிறேன். வாயைப் பிளந்துகொண்டு நிற்கிறீரே”. ஐயர் போகிறார்.) அங்கே வேறு ஒருவருமே இல்லை. ரொம்ப ஏழை. சரிதான் ஏதோ கால் அரை கொடுப்போம் கழுதை பிழைத்துப் போகட்டும் என்று நினைத்துக் கூப்பிட்டேன். அவளும் வந்தாள். உம் , வந்தாளா?
முனி: ஹும் வத்திருப்பாள், வந்திருப்பாள்; வந்துதானே ஆகவேனும் சமுகத்திலே விரும்பிக் கூப்பிடும் போது அந்தக் கழுதை எப்படி மறுக்க முடியும்?
பொன்: உம் அப்படிச் சொல்லு! அது தானே நியாயம்?
முனி: ஆமாம்! ஆமாம்! அதுதானே நியாயம், நியாயம். இங்கே இல்லாமல் வேறே எங்கே இருக்க முடியும்?
பொன்: வந்தாளா? வந்தவள், ரொம்ப நாணிகோணிக் கொண்டு கொஞ்ச தூரத்திலேயே நின்றாள்.
முனி: சரிதான் ரொம்பப் புதுசுபோலே இருக்கு.
பொன் : எல்லாம் நாம் தான் சரி பண்ணிக்கொள்ள வேண்டும் என்று நினைத்து மெள்ளக் கையைப் பிடித்தேன். பிடித்தேனா? அவ்வளவுதான் அவள் ஒரே சத்தம் போட ஆரம்பித்துவிட்டாள். இதற்கு நானா பயப்படுகிறவன்?
முனி: அவ பயந்துட்டாளோ?
பொன்: உம், ஆமா ரொம்பப் பயந்துட்டா; இருந்தாலும் நானா விடுறவன்? முனி : சபாஷ் அதுதான் சரி. எஜமான் புடிதான் உடுப்புப் புடியாச்சே 'ம்' அப்புறம்?
பொன் : அப்புறம் என்ன? அதே சமயத்திலே அந்தத் தோட்டத்து ரோட்டுப் பக்கமாக அந்த அயோக்கியப் பயல் போய்க் கொண்டிருந்திருக்கிறான்.
ஜம்பு : யாரு அந்தக் குட்டியினுடைய புருஷனா?
பொன் : அட இல்லையப்பா! நீ ஒரு பக்கம் அவசரப்படுகிறாயே!
முனி : கணக்குப் பிள்ளை ஐயாவுக்கு வயிறு பசி வந்துட்டாப் போலேருக்கு.
பொன் : அந்தப் பக்கமாக இந்த நடராஜன் போயிருக்கிறான். தெருவோடு போகிறவன் இவன் பாட்டுக்குத்தானே போகவேண்டும்?
முனி : ஆமாம், போகாமல் என்ன செய்தான்?
பொன் : ஊஹூம், அந்தப் பரதேசிப் பயல் என்னை என்ன செய்ய முடியும்? புலிமாதிரி ஒரே தாவாகத் தாவி சுவரைத் தாண்டித் தோட்டத்துக்குள்ளே வந்தான். என்னைப் பார்த்தானோ இல்லையோ, அப்படியே அசந்து நின்றுவிட்டான். என்மேல் விரலைப் போட முடியுமா என்ன?
முனி : நல்லாருக்கு, உங்க பார்வைதான் ராஜ பார்வையாச்சே முடியுமா? இது என்ன விளையாட்டா இருக்கிறது? எனக்குத் தெரியாதா என்ன தங்கள் பராக்கிரமம்?
பொன் : என்னைக் கண்ட உடனே கையை நீட்ட முடியவில்லையா? கையாலே ஆகாத கழுதை என்ன செய்தான் தெரியுமா? முனி : என்ன செய்தான்?
பொன் : என்ன செய்யிறது? என்னமோ எனக்கு முன்னே பிறந்தவன் மாதிரி நியாயமும் நீதியும் பேச ஆரம்பித்து விட்டான் பேச்சோடு பேச்சாக “பாவி, சண்டாளா, காமப் பிசாசே, கிளட்டுப் பிணமே” என்று என்னென்னவோ பேசிவிட்டான். வேலைக்காரப் பயல்களைக் கூப்பிட்டு அவனைக் கட்டிவைத்து உரித்துவிடலாமென்று நினைத்தேன். ஆனால் அதற்குள்ளே அந்தக் குட்டியையும் கூட்டிக்கொண்டு ஓடிப்போய் விட்டான். அயோக்கியப்பயல்.
முனி : சரிதான் அவங்களுக்குள்ளே அதுக்கு முன்னே தொடர்பு இருந்துருக்கும் போலிருக்கு.
ஜம்பு : அவனைச் சும்மாவா விட்டீர்கள்? மடப்பயல்! அந்தக் காலமெல்லாம் மலையேறிப்போய் விட்டது. அப்பொழுது கொஞ்சம் பசை இருந்தது. அதுதான் அப்படி பேசி இருக்கிருன். இப்பொழுது ஏக வரஷை. வீட்டைக்கூட நம் ராமசாமி சேர்வையிடம்தான் ஈடு வைத்திருக்கிருன். இனிமேல் உங்கள் தயவை நாடித்தான் ஆக வேண்டும்.
முனி : யாரு நம்ம குண்டோதரன் சேர்வை கிட்டையா? அப்ப இனிமே ஒங்க தயவே நாடித்தான் ஆகணும்.
பொன் : யார்? அவனா! பிச்சையெடுத்தால் கூட அவன் விரைப்பு அவனே விட்டுப் போகாது. அது கிடக்கப்பா விடு; அவள் என்ன பெரிய ரதியோ? அவளை விட்டால் உலகத்திலே வேறு பெண்ணே கிடைக்காதா என்ன! காசை விட்டெறிந்தால் எத்தனையோ கழுதை.
முனி : கழுதை மட்டுமென்ன, குதிரை, ஆடு, மாடு, காய், பன்னியெல்லாங் கிடைக்கும்.
ஜம்பு : நீங்கள் லீலாவைச் சிறு பிள்ளையில் பார்த்தது தான் போலிருக்கிறது! அதனால்தான் இவ்வளவு அலட்சியமாய்ப் பேசுகிறீர்கள், இப்பொழுது லீலாவைப் பார்த்தால், ஆஹா.... உயிரையே கொடுத்து விடமாட்டீர்களா! இதோ பாருங்கள் இந்தப் படத்தை ரொம்பக் கஷ்டப்பட்டு உங்களுக்காக இதை ஒரு இடத்திலிருந்து வாங்கிக்கொண்டு வந்தேன்.
[படத்தைக் கொடுக்கிறான். திவான் பகதூர் பார்த்துப் பிரமிக்கிறார்.]
பொன் : யார், இது? என் தங்கை மகள் லீலாவின் படமா? உம் உண்மையாகவே? அடடே என்ன ரம்பை மாதிரியல்லவா இருக்கிறாள்! நான் ரொம்பச் சின்னப் பிள்ளையாக இருக்கும்போது பார்த்தது. பெரிய மனுஷி ஆனபிறகு பார்த்ததே இல்லை. உம்... ஜம்பு! இவளை நான் எப்படியும் கல்யாணம் செய்துதான் ஆகவேண்டும். இவ்வளவு நாளாக எனக்கு இந்தத் தகவல் தெரியாமல் போய்விட்டதே! பூசாரி, பாரையா, எப்படி?
முனி : ஆஹா! வெகு பொருத்தம். அநியாயமா அமைஞ்சிருக்கு.
பொன் : ஒய் கணபதி ஐயர்!
கணபதி : இதோ வந்துட்டேன். (வருகிறார்)
ஜம்பு : இதென்னயா கரண்டியோட......!
கணபதி : பால் அடுப்பிலே இருக்கு.
பொன் : இந்தப் படத்தைப் பாரும்! எப்படி?
கணபதி : எங்கேயோ பார்த்தாப்போல......ஓ, நம்ம பாலுக்கார முத்தம்மா மகளோ? ஜம்பு : ஓய்! நம்ம எஜமான் தங்கை மகளாய்யா.
கணபதி : அப்படியா பேஷ் நன்னாயிருக்கு.
பொன் : நமக்குப் பொருத்தமா இருக்குமா?
கணபதி : ஆஹா! இட்டலியும் சாம்பாரும் போலே, பூரியும் மசாலாவும் போலே, பாலும் ஜலமும் போலே, வெகு பொருத்தம்.
ஜம்பு : பார்த்தீர்களா! நீங்கள் அந்தப் பெண்ணை பார்த்தால் விடமாட்டீர்களென்று நான் முன்பே சொல்லவில்லையா, சரி, பிறகென்ன யோசனை? எப்படியாவது நடராஜனே சரிக்கட்டிக் காரியத்தை முடிக்க வேண்டியதுதான்.
பொன் : காரியத்தை முடிக்க வேண்டியதுதான். ஆனால் அந்தப் பயல் விஷயம்.....!
ஜம்பு : நீங்க என்ன எஜமான், இப்படி யோசிக்கிறீர்கள்; அவன் ஏக லாட்ரி என்று சொல்லுகிறேனே!
பொன் : உம்; இன்னைக்கு என்ன கிழமை?
முனி : வெள்ளியோட வெள்ளி அஞ்சு-சனி......
ஜம்பு : அட என்னையா ஒளர்றே. செவ்வாய்க்கிழமை.
முனி : ஆமா ஆமா!
பொன் : சேச்சே! நாள் நல்ல நாளா இல்லையே! ஓய் கணபதி ஐயரே! பஞ்சாங்கம் எடுத்தாய்யா.
கணபதி : பஞ்சாமிர்தமா?
பொன் : இல்லை. பால் பாயாசம்.
கணபதி : இன்னைக்குப் பால் பாயாசம் செய்யலேயே!
பொன் : உம்மத் தலைமண்டை, பஞ்சாங்கத்தை எடுத்தாய் யான்னா.... கணபதி : ஓ! பஞ்சாங்கமா (உள்ளே ஓடுகிறான்)
முனி : பஞ்சாமிர்தம் இருந்தாலும் கொஞ்சம் கொண்டாருமே! சாப்பிடலாம்.
பொன் : ஆமாம், ஆமாம். சரி நாளைக்குக் காலையில் அவசியம் போக வேண்டியதுதான். ஜம்பு! நீ மகா புத்திசாலியாக இருக்கிறாயே! நீ மட்டும் இந்தப் படத்தைக் காட்டாமல் இருந்திருந்தால் அநியாயமாய் நான் இந்த அழகு ராணியை இழந்திருக்க வேண்டியதுதானே?
ஜம்பு : (தலையைச் சொரிந்த வண்ணம் நெளிந்துகொண்டு) ஆமாம், ஆமாம், இந்தப்படத்தை அந்தப் போட்டோக்கிறாப்பர் சாமான்யமாகவா கொடுத்தான்?
பொன் : பிறகெப்படி வாங்கி வந்தாய்?
ஜம்பு : பிறகு என்ன? எஜமானிடம் சொல்லி ஏதாவது ‘சம்திங்’ வாங்கித் தருவதாகச் சொல்லித்தான் வாங்கினே. நமக்குக் காரியம் அவசியம் பாருங்கோ!
பொன் : பேஷ்! அதுதான் சரி. இந்த மாதிரிக் காரியங்களிலெல்லாம் பணத்தைப் பொருட்படுத்தலாமா? (சட்டைப் பையிலிருந்து மூன்று பத்து போய் கோட்டுகளை எடுத்துக் கொடுக்கிறார்) இந்தா இதை அவனிடம் கொடு. இதை நீ செலவுக்கு வைத்துக் கொள்.
ஜம்பு : பரவாயில்லே! எனக்கெதற்கு இப்பொழுது..... (ஜம்பு மரியாதையோடு வாங்கிக்கொள்கிறான்)
பொன் : பரவாயில்லை. சும்மா செலவுக்கு வைத்துக்கொள். நாளை காலை புறப்பட வேண்டும். பழங்கள் மிட்டாய் வகைகள் எல்லாம் வாங்கி வைக்க ஏற்பாடு செய். ட்ரைவரிடமும் சொல்லித் தயாராய் இருக்கச் சொல். (மறுபடியும் இரண்டு கோட்டுகளைக் கொடுத்து) இந்தா இதையும் வைத்துக்கொள். எதற்கும் உன் கையில் பணம் இருப்பது நல்ல தல்லவா?
முனி : ஆமாம், ஆமாம். ரொம்ப அவசியம்! கணக்கப் பிள்ளை ஐயா கிட்டேப் பணம் இருக்க வேண்டியது ரொம்ப அவசியம்.
பொன் : சரி, நான் வரட்டுமா, நான் சொன்னதெல்லாம்...
ஜம்பு : ஆஹா அதைவிட எனக்கென்ன வேலை?
முனி : அப்போ! நானும் போயிட்டு வரட்டுங்களா?
பொன் : சரி. போயிட்டு வா.
முனி : சில்லரை யேதாவது......
(ஒரு நோட்டைக் கொடுக்கிறார்)
முனி : (வாங்கிக்கொண்டு) மகமாயி...... நான் வருகிறேன்.
பொன் : ம்-ம், போயிட்டு வா...ம். ஜம்பு! நான் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கட்டும்.
ஜம்பு : அதுக்கு நானாச்சிங்க.(பொன் போகிறார்)
ஜம்பு தனிமொழி : லீலா! நீ பாலசுந்தரத்துடன் நடத்தும் காதல் நாடகம் எத்தனை நாளைக்கென்று பார்ப்போம். அவனுடன் சேர்ந்துகொண்டு பள்ளியில் பலர் முன் என்னை அவமதித்தாயல்லவா? இருக்கட்டும்! எப்படியும், என்றைக்காவது ஒரு நாளைக்கு இந்தக் கைகள் உன்னைத் தழுவாமலா போகும்?