திருவிளையாடற் புராணம்/15

விக்கிமூலம் இலிருந்து

பயன்படாத அம்மேங்களை விடுவதில்லை என்று உறுதியாக இருந்தான்; மழை தருவதாக வாக்குறுதி தந்தால் அவற்றை விடுவிப்பதாகக் கூறினான். தேவர் தலைவனுக்குப் பிணையாக வார்த்தை தவறாத வேளாளன் ஒருவன் குறுக்கே நின்றான்; தாம் மழை தராவிட்டால் தக்க தண்டனை அடைவதாக இந்திரன் உறுதி தந்ததால் மேகங்களை அவிழ்த்துவிட்டான்; அவை மழையைக் கவிழ்த்துக் கொட்டின. அதுமுதல் மாதம் மும்மாரி பெய்து நாடு வளம் பெற அவை செய்தன. 

15. மேருவைச் செண்டால் அடித்த படலம்

அகத்திய முனிவர் அறிவித்தபடி திங்கள் நாள் விரதத்தை விடாமல் தொடர்ந்து அனுஷ்டித்து வந்தமையால் மங்காத செல்வம் பெற்று உக்கிர பாண்டியன் வாழ்ந்து வந்தான்; காந்திமதியின் காதல் வாழ்க்கையில் வீரபாண்டியன் என்ற நன்மகனைப் பெற்றான். அவன் வளர்பிறை போல வளர்ந்து கலைகள் பலவும் கற்றுப் பூரண நிலவு போல முகப்பொலிவோடு விளங்கினான். இவ்வாறு வாழும் நாளில் நிலை திரிந்து பருவ மழை பெய்யாது நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது; கோள்கள் சூரியனை நோக்கி நிற்பதால் ஓர் ஆண்டுக்கு மழை பெய்யாது என்று சோதிடர்கள் தாள்கள் கொண்டு அவனுக்கு அறிவித்து வேதனை உண்டாக்கினர்.

சோதனை தந்த வேதத் தலைவனைத் தன் ஏதங்களை நீக்குமாறு வேண்டினான். காது கொடுத்துக் கேட்ட கடவுள் அவன் கண்குளிரச் சித்தராய்க் கனவில் வந்து விரும்பியதைப் பெற வழி காட்டினார்.

மழை வளம் குறைந்ததால் தானியங்கள் அருகி விட்டன; பொன்னையும் மணிகளையும் உயர் பண்டங்களையும் விற்று நாட்டு மக்கள் ஓடும் கையுமாக இருக்கும் நிலை அடைந்தனர்; குன்று போல் குவிந்திருந்த செல்வம் மணல்போல் கரைந்துவிட்டதால் இழந்த செல்வம் ஈட்ட வழியில்லாமல் வகையில்லாமல் விழித்தனர்.

மழை பெய்தால் அவர்கள் பசியற்று வாழ முடியுமேயன்றி வசியும் வளமும் பெற்று வாழ முடியாது. அதனால் வட புலத்தில் மேருமலையில் பொதிந்து கிடக்கும் பொன்னையும் உயர் மணிகளையும் மற்றும் வேண்டும் பொருள்களையும் வேண்டிய அளவு எடுத்து வரும்படி சித்தர் கனவில் கூறினார்.

அடியாத மாடு படியாது; அதனால் செண்டு கொண்டு அதன் சிகரத்தை அடித்தால்தான் கரம்குவித்துவேண்டியன நல்கும் என்று சொல்லி மறைந்தார். "உன் ஆணைக்கு அடி பணியும் மேருமலையில் தேவையானவற்றை எடுத்து வருக! மறுபடியும் அதை மூடி வைத்து உன் பொறியும் குறியும் பொறித்து விடுக” என்றும் கூறினார்.

உடனே உக்கிர பாண்டியன் உறக்கத்திலிருந்து விழித்து எழுந்து நித்திய கருமங்களை முடித்துக் கொண்டு நிமலனாகிய சோம சுந்தரக் கடவுளை வழிபட்டு நால்வகைச் சேனையோடு நான்கு வேதம் கற்ற வேதியர் வாழ்த்தி அனுப்பத் தேர் ஏறி வடநாடு புறப்பட்டான். பாண்டிய நாட்டையும் சோழ நாட்டையும் வேங்கடத்தையும் கருநாடகம், மாளவம், விராடம், மத்தியதேசம் கடந்து காசியை அடைந்தான். கங்கையில் முழுகிக் காசி விசுவநாதனை வழிபட்டுப் பின் குமரிக்கண்டத்தையும் பாரத கண்டத்தையும் கடந்து இமயத்தை அடைந்தான்; கிம்புருடம் ஏமகூடம், அரிவருடம், நிடதமலை, இளாவிருது வருடம் முதலிய இடங்களைக் கடந்து மேருமலையை அடைந்தான்.

படைகளை ஒரு புறம் நிறுத்தி விட்டுத் தான் மட்டும் தனியனாய் நின்று மேருமலைத் தலைவனை நேரில்வரும்படி அழைத்தான். உச்சி நிமிர்ந்த தலைவணங்காத அக்காவலன் இவன் ஏவலை மதிக்கவில்லை. சிவன் அனுப்பிய சிறுவன் என்று சொல்லியும் அவன் புறக்கணித்தான். வேறு வழியில்லை; தான் கொண்டு வந்த செண்டைக் கொண்டு அவன் சிண்டை அடித்தான். அந்த மண்டு வெகுண்டு எழாமல் வேண்டுவது யாது என்றான். அடி அடித்தால் அம்மியும் நகரும் என்னும் பழமொழி உண்மையாயிற்று. இம்மியும் நகராத அவன் இமைப்பொழுதில் வந்து ஏவல் கேட்டான்.

பொற்குவியல் இருக்கும் இடத்தைக் காட்டு என்றான்: "மாமர நிழலில் உள்ள பாறையின் கீழ் புதையல் இருக்கிறது." என்று மேருமலைத் தலைவன் சொல்ல அவன் கூறியபடியே பாறையைத் தள்ளி வேண்டிய அளவு வாரி எடுத்துக் கொண்டு மறுபடியும் பாறை கொண்டு அவ்வழியை மறைத்து தன் பெயரையும் பெருமையையும் பொறித்து வந்தான்.

பொற்சுமையைத் தன் தோளிலும் மற்றுமுள்ள வாகனங்களிலும் வைத்துக் காவலர் சூழப் பாண்டிய நாடு கொண்டு வந்து சேர்த்தான். சோம சுந்தரக் கடவுளை வணங்கி நன்றி நவின்று, கொண்டு வந்த பொருளைச் சேர்த்துப் பொதித்து வைக்காமல் அறங்களுக்கும் பொருள் அற்றவர்களுக்கும் வாரி வழங்கினான். நகையில்லாத முகத்தைக் காணமுடிந்தது; ஆனால் நகை அணியாத பெண்களைக்காண முடியாமல் அணிகலன்கள் அணிந்திருந்தனர்

கோள்கள் உரிய இடத்தில் நிலை பெற நாள்கள் நன்மை பெற்றன. மழை உரிய காலத்தில் பெய்ய வறிய நிலை மாறியது. மன நிறைவு பெற்று அவன் தன் கடமை முடிந்தது என்று கருதி ஆட்சியைத் தன் மகனின் கையில் ஒப்புவித்துப் பொறுப்புகளினின்று தப்புவித்துக் கொண்டான்; முதுமை தரும் ஓய்வு அவனுக்கு ஆறுதல் அளித்தது. உலக வாழ்லில் பற்று நீங்கி இறைத் திருவடிகளில் சேர்ந்து இறைவனோடு இரண்டறக் கலந்தான். 

16. வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம்

வேதம் என்ற சொல் "வித்யா" என்ற பொருளுடையது. ஞானம் தரும் நூலே வேதம் எனப்படுகிறது. கிருதயுகமே இதன் தொடக்ககாலம் என்பர். அக் காலத்தில் சிவனின் வாக்கினின்று பிரணவம் தோன்றிற்று. அதனின்றே வேதங்கள் எல்லாம் தோன்றின என்று கூறப்படுகிறது. எனவே வேதம் என்பது இறைவன் அருளிச் செய்தது என்ற கருத்து நிலவியது.

நைமி சாரணியம் என்னும் வனத்தில் வசித்து வந்த கண்ணுகர் கர்க்கர் முதலிய முனிவர்கள் வேதங்களின் பொருளை அறியாமலேயே அவற்றை ஓதிக்கொண்டு வந்தனர். அரபத்தர் என்னும் பெயருடைய வேதியர் ஒருவர் அவர்களைச் சந்தித்தார். வேதத்தின் பொருளை அறியாத அந்த வித்தகர்கள் அவ்வேதியரை அணுகி வேதத்தின் பொருளை யாரிடம் சென்று கேட்டு அறியலாம் என்று வினவினர்.

சோமசுந்தரக் கடவுள் வீற்றிருக்கும் மதுரையில் இந்திர விமானத்துக்குத் தெற்கே தட்சிணாமூர்த்தி வடிவில் இறைவன் தங்கி இருக்கிறார். வழிபட்டு விளக்கம் கேட்டால் வேதத்தின் பொருளை அறிய முடியும்" என்று கூறி அவர்களுக்கு வழிகாட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவிளையாடற்_புராணம்/15&oldid=1111426" இலிருந்து மீள்விக்கப்பட்டது