பாதுகாப்புக் கல்வி/விபத்தும் விளக்கமும்
விபத்துக்கான காரணங்கள்
விபத்து என்பது ஏதோ விதி வசத்தினால் நேர்வது அல்ல. பெரும்பான்மையான விபத்துகளுக்குக் காரணம், யாரோ ஒருவரின் அஜாக்கிரதை அல்லது தேவையான பாதுகாப்பு முறைகளை அனுசரிக்காமை, அல்லது தேவையற்ற அபாயகரமான முறைகளில் இறங்குவது அல்லது தெரிந்தே பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவது என்பதுதான்.
ஆகவே, விபத்தின் மூலகாரணங்களை இனி ஆராய்வோம்.
1. அறியாமை
ஒரு காரியத்தைச் செய்யும்போது, அந்தக் காரியத்தின் அடிப்படை தன்மை என்ன? அதற்குரிய பாதுகாப்பு விதிமுறை என்ன? எந்த வழிமுறை எப்படி ஆபத்துக்குள் சிக்கவைக்கும்? ஏன் நாம் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? என்றெல்லாம் சுய சிந்தனை இல்லாமல், ஆராய்ந்து பார்க்காமல், தான் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற முறையில் நடந்து கொள்வது.
உதாரணமாக மின்சாரம், அதைப்பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் கைவைத்தால் 'ஷாக்' அடிக்காதா அதுபோல்தான் பிற செயல்களிலும் சிக்கிக் கொள்ளுதல்.
2. ஒழுங்கற்ற செயல்கள்
உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல், ஊதாரித் தனமான நினைவுகளுடன் காரியங்களை செய்வது விபத்துக்கு வழிகோலுவதாகும்.
ஒரு காரியத்தில் ஆபத்து உண்டென்று தெரிந்து பிறகும் 'நாம் செய்துதான் பார்ப்போமே. நம்மை மீறி என்ன நடந்துவிடும், என்கிற அசட்டுத் தைரியம்.
'என்னால் இதைச் செய்ய முடியாதா என்று முடியாத ஒன்றை முண்டிக்கொண்டு புரியாமல் செய்யும் மடத்தனமான முயற்சி.
'பிறரைப்போல நான் என்ன ஒன்றும் தெரியாதவனா? பிறர் மெச்ச என்னால் செய்ய முடியும் என்ற வீறாப்பு, அகம்பாவம்.
இவைகள், ஒருவரது அறிவை அணைத்துவிடுவதுடன், ஆணவத்தையும் பெருக்கி, விரைவாக செயல்பட வைத்துவிடுகிறது. கண்மூடித் தனமான வீரம் அவரைக் கட்டவிழ்த்து விடுகிறது.
எதையும் கூர்ந்து பார்க்காமல், மேலோட்டமாக நினைத்து, செயல்படுகின்றபோக்கு, எளிதில் விபத்துக்கு வித்திட்டுவிடுகிறது.
3. பாதுகாப்பற்றப் பழக்க வழக்கங்கள்
வளர்ந்து வரும் நாகரீகத்தால், பழக்கவழக்கங்கள் அனைத்தும் மாறிக்கொண்டே வருகின்றன. பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கைகளும், அகலமில்லாத சாலைகளில் நெருக்கடியான வாகனப் போக்குவரத்துக்களும், எந்திரப்பெருக்கமும், எடுத்ததற்கெல்லாம் முன்னோடிவரும் மின்சார சாதனங்களும், புதிய பிரச்சினைகளைத்தான் பிறப்பித்திருக்கின்றன.
பயணத்தை மேற்கொண்டாலும் சரி, பாங்காக வீட்டிற்குள்ளே இருந்தாலும் சரி, பரபரப்புடன் விளையாடினாலும் சரி, பாதுகாப்பான பழக்கவழக்கங்களை மேற்கொண்டால்தான் பிழைக்க முடியும் என்ற ஓர் இக்கட்டான சூழ்நிலைதான், இன்றைய வாழ்க்கை முறையாக அமைந்துவிட்டிருக்கிறது.
எனவே பாதுகாப்பு விதிமுறைகளை புரிந்தும் புரியாமலும், மறந்தும் குழம்பியும் மேற்கொள்ளும் போதும், கைவிடும்போதும், விபத்துக்கள் ஏற்படுவது இயற்கையே.
உலகத்தைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட மனித முயற்சிகளால், இன்று உலகமே மாறித் தோற்றமளிக்கிறது. இதனை சரியாகப் பயன்படுத்தும் பழக்க வழக்கங்கள்தான். ஒருவருக்குப் பாதுகாப்பாகும்.இல்லையேல், விபத்தின் விரித்த கரங்களில் போய் விழ நேரும். அழவும் நேரிடும்.
4. திறமைக் குறைவு
எதையும் முழுதும் கற்றுக் கொள்வது என்பது ஒருவரது அடிப்படை முயற்சியின்பாற்பட்டதாகும், அறிவும் முயற்சியும் பயிற்சியுமே ஒருவரது திறமையைப் பெரிதும் வளர்ப்பனவாகும்.
அரைகுறையாகப் புரிந்துகொள்வதும், தனது சக்திக்கு மீறிய காரியங்களை மிகவும் சிரமப்பட்டு செய்வதும், மிகவும் ஆபத்தானதாகும்.
சாலை விதிகள் தெரியாமல், ஒட்டத் தெரியாமலேயே நடு சாலையில் சைக்கிள் ஒட்டுதல், நீந்தத் தெரியாமலோ அல்லது கொஞ்சம் தெரிந்தோநீச்சல் குளத்தில் நீந்த முயலுதல் எல்லாம் அபாயத்திற்கு அறிகுறிதானே?
பார்வை மந்தம், பசிகளைப்பு சக்தியில்லாமை, போதைப் பொருட்கள் விளைத்த தள்ளாமை, முதுமையில் ஏற்படும் களைப்பு, இளைப்பு, மற்றும் மனக்குழப்பங்கள் எல்லாம் ஒருவரது திறமையைக் குறைவு படுத்துவனவாகும்.
இதுபோன்ற சமயங்களில் மேற்கொள்கின்ற செயல்கள் அனைத்தும் விபத்தினை விளைக்கும் விபரீத நிலைகளாகும்.
5. சூழ்நிலை தரும் சிக்கல்கள்
கார் ஒட்டுதல், எந்திரங்களை இயக்குதல் மற்றும் விரைவான இயக்கமுள்ள காரியங்கள் செய்தல் எல்லாம் சிக்கலான சூழ்நிலையாகும். அப்பொழுதுதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
வேலை செய்யத்தொடங்குவதற்குமுன், தான் என்ன செய்யப்போகிறோம் என்று சிந்திக்க வேண்டும்.
வேலை செய்யும் பொழுது, என்ன செய்துக் கொண்டிருக்கிறோம் என்ற விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
வேலை செய்து முடித்தவுடன், அதற்குண்டான முறைகளுடன் முடிக்க வேண்டும். ஏதேனும் மறந்து விட்டோமா என்பதை நினைவு கூர்ந்து, பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
எந்திரங்களுக்கருகில் இருக்கும் போது பறக்கும் ஆடைகளுடன் இருப்பதோ, பெட்ரோல் இருக்கும் பகுதிகளில் புகைபிடித்துக்கொண்டு நிற்பதோ, தனது கட்டுப் பாட்டுக்கும் மேலாக காரை விரைவாக ஒட்டுவதோ எல்லாம் சூழ்நிலை தரும் சிக்கல்கள்தான்.
கட்டுப்படாத சூழ்நிலையின் காரணமாகத்தான் விபத்துக்கள் உண்டாகின்றன என்பதை நாம் மறக்கவே கூடாது.
மேலும், வேலை செய்யும் நேரத்தில் மனக் குழப்பத்துடன் பணியாற்றுதல்; மேற்பார்வை இல்லாமல் தான்தோன்றித்தனமாக செயல்படுதல்; தனக்குரிய உரிமை என்ன! கடமை என்ன என்று உணராது, மிருகப் போக்குடன் நடந்து கொள்ளல்; விதிமுறைகளைப் பின்பற்றாது மனம் போன வழியில் செல்ல முயற்சித்தல் எல்லாம் ஆபத்துக்குத்துதுவிடும் அரக்கர்களாவார்கள்.
எனவே, விபத்துக்கு வித்தாக விளங்கும் முறைகளையெல்லாம் நாம் உணர்ந்துகொண்டு, அவற்றை ஒதுக்கியும், முடிந்தவரை எல்லா நேரங்களிலும் ஒதுங்கியும் வாழவேண்டும்.
இத்தகைய இனிய வாழ்வு முறையை அமைத்துத் தருவதுதான் பாதுகாப்புக் கல்வியாகும்.