மருத்துவ களஞ்சியப் பேரகராதி/அணிந்துரை
மலேசிய இந்தியர் காங்கிரசின் தேசியத் தலைவரும் மலேசியப் பொதுப்பணித்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ச. சாமிவேலு அவர்கள் வழங்கிய
அணிந்துரை
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" எனத் தமிழின் இனிமைச் சிறப்பைப் புகழ்ந்து பாடினான் பாரதி. 'தமிழ் இனிய மொழி மட்டுமல்ல ஆற்றல்மிகு அறிவியல் மொழியுமாகும்' எனப் போற்றிப் புகழ்வதோடு அமையாது, தம் கடும் முயற்சியாலும் செயல்பாடுகளாலும் கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக "தமிழ் ஒர் அறிவியல் மொழி" என்பதை வெறும் சொற்களால் அல்லாமல் செயல் வடிவில் காண்பித்து வருகிறார் திரு. மணவை முஸ்தபா அவர்கள்
"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவில, கால வகையினானே"
என்ற பொருள் பொதிந்த பழம்பாடலுக்கிணங்க இன்றைய காலத்தின் போக்குக்கும் தேவைக்கும் ஏற்ப முதன்மைத் தமிழ்ப் பணியாக திரு. மணவையார் தேர்ந்தெடுத்திருப்பது 'அறிவியல் கலைச் செயலாக்கப் பணி' ஆகும். 1996 இல் வெளியிடப்பட்ட 'மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்' எனும் நூலினை 48,686 கலைச் சொற்களாக விரிவாக்கி விளக்கம் தந்து புதிய வடிவில் 1200 பக்கங்களைக் கொண்டு "மருத்துவக் களஞ்சியப் பேரகராதி" உருவாக்கியுள்ளார் திரு. மணவை முஸ்தபா அவர்கள்.
உருவாக்கம் பெறும் கலைச் சொற்களை வெறும் பட்டியலாக அமைக்காமல் அவற்றை ஆங்கிலக் கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்க் கலைச்சொல், சொல் விளக்கம், பொருள் விளக்கங்களை படங்களோடு, பட விளக்கங் களோடும் வெளியிடுவதன் மூலம் அகராதித் தன்மையையும் களஞ்சியப் போக்கையும் ஒருங்கிணைத்து 'களஞ்சிய அகராதி' எனும் புதுவகை அமைப்பில் உருவாக்கியிருப்பது எல்லா வகையிலும் பாராட்டத்தக்க புது முயற்சியாகும்.
மருத்துவம் பயிலாத ஒருவர் ஒரு ஆங்கில மருத்துவக் கலைச்சொல் மூலம், அதற்கு நிகரான தமிழ்க் கலைச்சொல், அதன் பொருள் விளக்கங்களைப் படம் மற்றும் பட விளக்கத்தோடு படிக்கும்போது, அச்சொல் மூலம் மருத்துவத் தகவல்களை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. சான்றாக "Pancreas' என்ற ஆங்கிலக் கலைச் சொல்லுக்குக் 'கணையம்' எனும் தமிழ்க் கலைச்சொல்லைத் தருவதோடு அமையாது அது இதயத்தின் எப்பகுதியில் எவ்வடிவில் அமைந்துள்ளது மற்றும் எவ்வகைப் பணிகளைச் செய்கிறது என்பதையும் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.
"Pancreas : கணையம் : இது இரைப்பையின் அருகிலுள்ள செரிமானத்துக்குரிய நீர் சுரக்கும் சுரப்பி. இது நாக்கு போன்ற வடிவுடையது. இதன் வால் பகுதி மண்ணிரலைத் தொட்டுக் கொண்டிருக்கும். இது சுமார் 18 செ.மீ. நீளமும் சுமார் 100 கிராம் எடையும் உடையது. இதில் இன்சுலின் என்ற இயக்கு நீரும் (ஹார்மோன்) சிறுகுடலில் கொழுப்புகளையும் புரதங்களையும் சீரணிக்கக்கூடிய செரிமானப் பொருள்கள் அடங்கிய கணைய நீரும் சுரக்கின்றன." எனப் படத்தோடு தரும் விளக்கம் தெளிவாகவும் திட்ப நுட்பமாகவும் இருக்கிறது. இதே முறை இம்மருத்துவக் 'களஞ்சியப் பேரகராதி' முழுமையும் கையாளப்பட்டுள்ளது.
மலேசியத் தமிழர்களால் பெரிதும் புகழப்படும் திரு. முஸ்தபாவின் தமிழ்ப்பணி பெரிதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. 'செம்மொழி' என தமிழ்மொழியை அறிவிக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சி, "கூரியர்" இதழ் மூலம் ஆற்றிய தமிழ்த் தொண்டு அனைவரும் பாராட்ட வேண்டிய ஒன்றாகும்.
இன்றைய இன்றியமையாக் காலத் தேவையை முழுமையாக நிறைவு செய்யும் இவரது அறிவியல் கலைச் சொல்லாக்கப் பணி நாளும் தொடர வேண்டும். அதற்குத் துணையாயிருப்பது நம் அனைவரின் கடமையாகும். அவர் முயற்சி எல்லா வகையிலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
ச. சாமிவேலு