அதிசயப் பெண்/இணைந்த அழகு

விக்கிமூலம் இலிருந்து


இணைந்த அழகு

திருவாலங்காட்டுத் தியாகராஜ சாஸ்திரிகள் என்பவர் புதுக்கோட்டைச் சம்ஸ்தானத்தில் இருந்தார். நல்ல சம்ஸ்கிருத வித்துவான். சங்கீதம் தெரிந்தவர்; தமிழ் வக்கீல். இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு இருந்தவர். புதுக்கோட்டை மகாராஜாவுக்கு மிகவும் வேண்டியவர்.

அவர் ஒரு நாள் மகாராஜாவைப் பார்த்து உரையாடிக் கொண்டிருக்கையில் மகாராஜாவிடம் எதையோ கொடுப்பதற்கு ஒருவன் வந்தான். மிகவும் குருபியான அவனைப் பார்த்தபோது சாஸ்திரிகளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் குரலில் கேட்கச் சகிக்காத கரகரப்பு ஒன்று இருந்தது. அவனுடைய உருவத்தைக் கண்டு சாஸ்திரிகள், “இவன் யார்?” என்று மகாராஜாவைக் கேட்டார்.

“இவனா? இவன் நமக்குப் பிரியமானவன்; சமையற்காரன்” என்றார் மகாராஜா.

தன்னைப்பற்றிய பேச்சு வருவதை உணர்ந்த அந்தக் குரூபி தலை நிமிர்ந்து புன்முறுவல் பூத்தான்.

“சாஸ்திரிகளுக்கு இவனைக் கண்டால் ஆச்சரியமாக இருக்கிறதோ? இந்தமாதிரி ரூபத்தை வேறு எங்கும் பார்த்திருக்க மாட்டீர்கள். காவியங்களிலே வருணித்திருக்கிறார்களே, அந்தப் புருஷர்களிலே இப்படி ஒரு பிரகிருதி அகப்படுமா?” என்று அரசர் சொன்னார்.

“இந்தமாதிரி யாரையாவது பார்த்திருந்தால் கவிகள் வர்ணித்திருப்பார்கள். அவர்கள் பாராத தோஷத்தால்தான் அத்தகைய வருணனை நமக்குக் கிடைக்கவில்லை” என்றார் சாஸ்திரிகள்.

“இப்போதுதான் இவனைப் பார்த்துப் பிரமித்து விட்டீர்களே! நீங்கள் இவனைப்பற்றி ஒரு சுலோகம் சொல்லுங்களேன்!” என்று மகாராஜா விளையாட்டாகச் சொன்னார். சாஸ்திரிகள் வேடிக்கையாகப் பேசுபவர்; நல்ல ரசிகர்; ஆசுகவி; நினைத்தால் ரஸமாகச் சுலோகங்களை இயற்றும் பழக்கம் உடையவர்.

“அப்படியே செய்தால் போகிறது!” என்றார் சாஸ்திரிகள்.

மகாராஜாவுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. சாஸ்திரகளிடமிருந்து மிகவும் ரஸமான சுலோகம் ஒன்று வெளி வரப்போகிறது என்ற குதூகலம் அவருக்கு உண்டாயிற்று.

“டேய், உன்னைப்பற்றிச் சாஸ்திரிகள் ஒரு சுலோகம் சொல்லப் போகிறார்!” என்று சமையற்காரனைப் பார்த்துச் சொல்லி, சாஸ்திரிகள் வாயிலிருந்து சுலோகம் வெளி வருவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

சமையற்காரனுக்கும் உற்சாகம் உண்டாயிற்று. தன்னைப்பற்றி மகாராஜாவும் அந்த வித்துவானும் பேசிக் கொள்வதென்றால் அதுவே பெரிய காரியம் அல்லவா?

சாஸ்திரிகள் சிறிது நேரத்தில் மிகவும் அருமையான சுலோகம் ஒன்றை இயற்றிச் சொல்லி அர்த்த விசேஷத்தையும் எடுத்துரைத்தார்.

***

ர் அழகான வேப்ப மரம்: தழைத்து அடர்ந்து பூவும் காயும் கனியும் பொதுளி யிருந்தது. அந்த வேப்ப மரத்தை நச்சி இரண்டு பிராணிகள் அடைந்தன. வேப்ப மரத்தின் இலையை மிகவும் ஊக்கத்தோடு உண்பதில் பிரியமுள்ள ஒட்டகம் ஒன்று வேப்ப மரத்தடியில் வந்து நின்றது. வேப்பம் பழத்தை அமிர்தம்போல் எண்ணி உண்ணும் காகம் ஒன்று தனக்கு இயற்கையாகவே ஒரு பெரு விருந்து அந்த மரத்தில் இருந்தது கண்டு பரமானந்தத்தோடு அந்த மரத்துக் கிளையில் வந்து அமர்ந்தது. அந்தப் பறவையும் விலங்கும் அதிகப் பசியோடு வந்தவை. ஆகையால் முதலில் தமக்குப் பிரியமான உணவை உண்பதிலேயே தம்முடைய முழுக் கவனத்தையும் செலுத்தின. ஒருவிதமாக முதற் பசியை ஆற்றிக்கொண்ட பிறகு மேலே இருந்த காக்கை தன் பார்வையைக் கொஞ்சம் கீழே திருப்பியது. தன்னைப் போலவே ஏகாக்கிரசித்தத்தோடு அந்தவேப்ப மரத்திலே விருந்துண்ணும் ஒட்டகத்தைப் பார்த்தபோது தன்னை அறியாமலே அதன்பால் அன்பு உண்டாயிற்று. அதனுடைய உயரமான உருவத்தை அடிமுதல் முடிவரையில் உற்று நோக்கியது. ஈசுவர சிருஷ்டியில் எவ்வளவோ பிராணிகளைக் காகம் பார்த்திருக்கிறது. இதுவரையில் அந்தமாதிரி உன்னதமான பிராணியை அது பார்த்ததே இல்லை. அதைக் காட்டிலும் உன்னதமான-—உயரமான —ஒரு சிருஷ்டி பிராணி யுலகத்திலே உண்டோ என்று கூட அது நினைக்கத் தொடங்கியது.

ஒட்டகத்தின் உயரம் கிடக்கட்டும். எந்தப் பிராணியிடத்திலும் காணப்படாத ஒரு தனி விசேஷம் அதனிடம் இருந்தது. அவ்வளவு உயரமான உருவத்தில் எல்லாம் கோணல் மயம். தலை கோணல்; கழுத்துக் கோணல்; உடம்போ கோணல்கள் நிறைந்து விளங்குவது. ஓரிடமாவது நேராக இருக்க வேண்டுமே! வளைந்து வளைந்து செல்லும் அந்தக் கோணல்களை அழகின் திவலைகளாகக் கண்டு பிரமித்தது காக்கை."என்ன ஆச்சரியம்!” என்று வாய் திறந்து கூறிவிட்டது. மனத்துள் தோன்றிய உணர்ச்சி அதை அறியாமலே வெளிப்பட்டபோது அதன் குரல் ஒட்டகத்தின் காதில் விழுந்தது. வேப்பிலையை மென்று விழுங்கும் காரியத்தில் ஈடுபட்டிருந்த ஒட்டகம் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தது. ஒரு சிறிய கரிய உருவம், “கா, கா” என்று தன்னை அழைப்பதைக் கண்டது. அதைக் கண்ணாலே காணுவதற்கு முன்பே அதன் ஒலி ஒட்டகதின் உள்ளத்தைப் பிணித்துவிட்டது.

இரண்டு பிராணிகளும் தங்கள் பார்வையால் அன்பைப் பரிமாறிக்கொண்டன. காக்கை, “அண்ணா, நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்!” என்று பேச ஆரம்பித்தது.

ஒட்டகம்:—உன்னுடைய குரல் அல்லவா என்னே மயக்கிவிட்டது!.

காக்கை:— பேசும்போது உன் உதடு அசங்கும் அழகு ஒன்றே போதுமே! கீழே மடிந்து தொங்கும் அதற்கு உபமானம் சொல்ல எந்தக் கவியாலும் முடியாது.

ஒட்டகம்:—உன்னுடைய கிருஷ்ண வர்ணத்தை, இந்த உலகத்தில் எங்கே காண முடியும்?

காக்கை:—உன் முதுகுதான் எவ்வளவு அழகு! படிப்படியாக வளைந்து வளைந்து ஒரு மலையிலே சிகரம் அமைந்தது போலத் திமிலோடு மகோன்னதமாகக் காட்சி அளிக்கிறதே!

இப்படி இரண்டும் தங்களுடைய அழகை வருணித்துக்கொண்டன.

நாம் இருவரும் இவ்வாறு அழகு மயமாக இருந்து தனித் தனியே உலாவுகிறோமே! நம் இருவருடைய அழகும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? உலகமே பிரமித்துப் போகாதா?” என்றது ஒட்டகம்.

“அதற்கு ஏதாவது வழி பண்ணலாம். தெய்வ உபாசனை பண்ணித் தவம் செய்து நாம் இருவரும் சேர்ந்து ஒன்றாகப் பிறக்க முயற்சி செய்வோம்” என்ற காக்கை.

அப்படியே இரண்டும் வேப்பிலையைப் பூஷணமாக அணிந்த மகாமாரியை நோக்கித் தவம் புரிந்தன. பராசக்தி வரம் கொடுத்தாள். அந்த இரண்டு பிராணிகளும் இணைந்து வந்த அவதாரமே இந்த மூர்த்தி!

***

சுலோகப் பொருளைச் சாஸ்திரிகள் சமற்காரமாக விரித்துச் சொல்லி, ‘இந்த மூர்த்தி’ என்று சமையற்காரனைச் சுட்டிக்காட்டியபோது மகாராஜாவுக்கு உண்டான ஆனந்தம் சொல்லி முடியாது. சமையற்காரனுக்குக்கூட உள்ளத்திலே மகிழ்ச்சி உண்டாயிற்று என்பதை அவன் முகத்திலே மலர்ந்த புன்னகை விளக்கியது.