இராணி மங்கம்மாள்/இருள் சூழ்ந்தது
உணர்வு மங்கிய அந்த நிலையிலும் கூடப் பேரனுக்குக் கெடுதல் நினைக்கவில்லை ராணி மங்கம்மாள். 'தனக்குக் கெடுதல் செய்தாலும் நாட்டு மக்களுக்கு அவன் நன்மை செய்து சிறப்பாக ஆட்சி நடத்தி நாயக்க வம்சத்துக்கு நற்பெயர் தேடித்தர வேண்டும்' என்றே அவள் உள்ளூற எண்ணி அவனை வாழ்த்தினாள்.
பிரக்ஞை தவறிக்கொண்டிருந்த நிலையில் அரண்மனைக் காவலன் ஒருவன் வந்து அறையின் வெளிப்பக்கமாக நின்ற படியே அவளைக் கவனித்தான். அவளிருந்த நிலை கண்டு அவன் மனம் இளகிப் பாகாய் உருகியது.
"தான தர்மங்களைத் தாராளமாகச் செய்து சத்திரம் - சாவடிகளைத் திறந்து சாலைகள் அமைத்து, குளங்கள் வெட்டி அறம் செய்த மகாராணி மங்கம்மாள் தலையில் கடைசிக் காலத்தில் இப்படியா எழுதியிருக்க வேண்டும்? பாவம்" என்று அந்தக் காவலன் அனுதாப உணர்வோடு தனக்குத் தானே முணுமுணுத்தது அவள் செவிகளில் விழுந்ததா இல்லையா எனத் தெரியவில்லை.
ராணிமங்கம்மாளைச் சொந்தப் பேரன் அரண்மனையிலேயே சிறை வைத்துவிட்டான் என்ற செய்தி மெல்ல மெல்ல வெளி உலகில் மக்களிடையே பரவி விட்டது. அப்படிப் பரவுவதைத் தடுக்கவோ தவிர்க்கவோ முடியவில்லை.
'இத்தனை தானதர்மங்களைச் செய்த புண்ணியவதிக்கா இந்தக் கதி நேர்ந்தது?' என்று தனியாகவும் இரகசியமாகவும் தங்களுக்குள் அநுதாபமாகப் பேசிக் கொண்டமக்கள் கூடத் தங்கள் உள்ளுணர்வை வெளிப்படையாகக் காண்பித்துக்கொள்ள அஞ்சித் தயங்கினார்கள். பாட்டியின் மேல் தீராப் பகையும் குரோதமும் கொண்டுவிட்ட பேரன் தங்களை என்னென்ன தண்டனைக்கு உள்ளாக்குவானோ என்று யாவரும் பயந்தார்கள். அநுதாபத்தைப் பயமும் தயக்கமும் வென்று விட்டன்.
ராஜ விசுவாசத்துக்குப் பங்கமில்லாதது போன்ற ஒரு வகை அடக்கமும் அமைதியும் நாடு முழுவதும் தென்பட்டாலும் உள்ளூற இந்த அக்கிரமத்தைக் கேட்டு மக்கள் மனம் குமுறிக் கொண்டிருந்தார்கள். வெளிப்படையாகத் தெரியாத ஒருவகை உள்ளடங்கிய வெறுப்பு நாடு முழுவதும் பரவியிருந்தது. நீறுபூத்த நெருப்பாயிருந்த இந்த வெறுப்புணர்வை விஜயரங்கனோ, அவனுக்குத் துணையாயிருந்த அவனை ஆட்சியில் அமர்த்திய கலகக்காரர்களோ புரிந்து கொள்ளவில்லை. எதையும் தங்களால் அடக்கிவிட முடியும் என்ற திமிரோடு இருந்தார்கள். ஆட்சி கையிலிருந்ததுதான் அதற்குக் காரணம.
ஆனால் அரண்மனை முழுவதும் இது அடாத செயல் என்ற எண்ணமே பரவியிருந்தது. விஜயரங்கனை எதிர்த்தும் முரண்பட்டும் கலகம் செய்ய அவர்களால் முடியவில்லையேயன்றி, 'ராணியை இப்படிச் செய்தது அக்கிரமம்' என்று அரண்மனை ஊழியர்கள் அனைவரும் உணர்ந்திருந்தார்கள்.
பிரக்ஞை தவறுகிற நிலையில் ராணி மங்கம்மாளைச் சிறையில் பார்த்த காவலன் பதறி நிலைகுலைந்து ஓடிப் போய் அதை விஜயரங்கனிடம் தெரிவித்தான். பாட்டியார் ஏறக்குறைய மரணப் படுக்கையில் இருப்பதாகப் புரிந்து கொண்ட விஜயரங்கன் உடனே தன் சகாக்களைக் கலந்தாலோசித்தான்.
"இறக்கும் தறுவாயிலிருக்கிற ராணி மங்கம்மாளை வெறுக்க வேண்டிய அவசியமில்லை. பாட்டி சாகும்போது கூடஉங்களுடைய முகத்தில் விழிக்க விரும்பாமல் செத்தாள் என்ற கெட்ட பெயர் உங்களுக்கு வரக்கூடாது" என்றார்கள் அவனுடைய சகாக்களில் சிலர். விஜயனும் பாட்டியின் அந்திமக் காலத்தில் ஒரு நாடகமாடித் தீர்த்து விடுவதென்று தீர்மானித்துக் கொண்டான். சிறையிலிருந்து தேடிவந்து செய்தி சொன்ன காவலனையே திரும்பவும் சிறைக்கு அனுப்பி, "முகத்தில் நீர் தெளித்துப் பருகத் தண்ணீர் கொடுத்து பாட்டிக்குத் தெளிவு வரச் செய்!" என்று அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்தான் விஜயரங்க சொக்கநாதன்.
அந்தக் காவலனும் உடனே ஓடோடிச் சென்று சிறை வைக்கப்பட்டிருந்த ராணி மங்கம்மாளின் அறைக் கதவைத் திறந்து அவள் முகத்தில் நீர் தெளித்தான். மெல்ல மெல்லப்பிரக்ஞை வந்தது. சற்றே தெளிவும் பிறந்தது. "மகாராணீ! உங்களை இக்கதிக்கு ஆளாக்கியவர்கள் நன்றாயிருக்க மாட்டார்கள்" என்று காவலன் ஆத்திரமாகச் சொன்னபோது கூட, "அவர்களை அப்படிச் சபிக்காதே எனக்குக் கெடுதல் செய்தவர்களுக்குக்கூட நான் கேடு நினைக்க மாட்டேன்" என்று ஈனஸ்வரத்தில் கருணையோடும் பரிவோடும் பதில் கூறினாள் மங்கம்மாள். அவளுடைய குரல் கிணற்றிற்குள்ளிருந்து வருவது போலிருந்தது.
அவளுக்குப் பருக நீர் அளித்தான் அவன். ஆனால் அந்த நிலையிலும் அவள் அதைப் பருக மறுத்துவிட்டாள்.
"ஊழியனே உன்மேல் எனக்கு எந்தக் கோபமுமில்லை! இதுவரை எனக்குப் பருக நீரோ உண்ண உணவோ தரக்கூடாது என்று உத்தரவு போட்டிருந்த என் பேரன் இன்றாவது தன் உத்தரவை மாற்றினானே என்பதில் எனக்கும் மகிழ்ச்சிதான். பாட்டி நிச்சயமாகப் பிழைக்கமாட்டாள் என்பது தெரிந்த பின்னாவது பேரனுக்குக் கருணை வந்ததே அந்த மட்டில் நிம்மதிதான். ஆனால் இதுவரை மானத்தோடு வாழ்ந்துவிட்ட நான் இன்று இந்த நீரைப்பருகி அதை இழக்க விரும்பவில்லை. தயவுசெய்து இப்போது என்னை நிம்மதியாகச் சாகவிடு; போதும்."
பேசிக்கொண்டிருக்கும் போதே அவள் கண்களில் நீர் மல்கியது. அவள் மேலும் தொடர்ந்தாள்:
"நான் சாவதற்குள் என் பேரனைப் பார்க்க முடியுமானால் எனக்கு அவனிடம் கடைசியாக ஒரு கேள்வி கேட்க வேண்டும். அது தவிர இப்போது எனக்கு அவன்மேல் கோபமோ ஆத்திரமோ எதுவும் இல்லை."
"முதலில் தண்ணீரைப் பருகுங்கள் மகாராணி தயைகூர்ந்து மறுக்காதீர்கள்."
"என் தாகத்தைத் தணிப்பதற்காக நீ தண்ணீர் தருகிறாய்! அது என் தாகத்தை அதிகமாக்குமேயல்லாமல் குறைக்காது அப்பா! நான் இவ்வளவு அவமானப்பட்டது போதாது. என்னை இன்னும் சிறிது அதிகமாக அவமானப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் உனக்கு இருந்தால் என்னைத் தண்ணீர் பருகும்படி நீ வற்புறுத்தலாம்."
இதைக் கேட்டபின் அந்தக் காவலன் நீர் பருகும்படி அவளை வற்புறுத்தவில்லை. அவள் மனநிலை அவனுக்கு நன்றாகப் புரிந்தது. விஜயரங்கனை அழைத்து வருவதற்காக ஓடினான். காவலன் விஜயரங்கனோடும் மந்திரிகள் பிரதானிகளோடும் அங்கே வந்து சேர்ந்தபோது ராணி மங்கம்மாளின் நிலை மேலும் கவலைக்கிடமாகி இருந்தது.
பேரனைப் பார்த்ததும் கண்களில் நீர் மல்கிப் பளபளக்க அவள் ஏதோ பேச முயன்றாள். ஆனால் குரல் எழவில்லை. தளர்ச்சியும், சோர்வும் பசியும் தாகமும் ஏற்கெனவே அவளை முக்கால்வாசி கொன்றிருந்தன.
விஜயரங்கன் அவள் அருகே வந்தான். அவனை வாழ்த்த உயர்வதுபோல் மேலெழுந்த அவளுடைய தளர்ந்த வலக்கரம் பாதி எழுவதற்குள்ளேயே சரிந்து கீழே நழுவியது. கண்கள் இருண்டு மூடின. நா உலர்ந்தது. தலை துவண்டு சரிந்து மடங்கியது.
விஜயரங்கனோடு வந்திருந்த வயது மூத்த பிரதானி ஒருவர், ராணி மங்கம்மாளின் வலக் கரத்தைப் பற்றிப் பரிசோதித்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார். "நாடி பேசவில்லை. குளிர்ந்துவிட்டது" என்றார். விஜயரங்கன் கூட இருந்தவர்களுக்காக ஏதோ அழுது புலம்புவது போலப் போலியாக நடித்தான்.
புகழ்பெற்ற ராணி மங்கம்மாளின் கதை முடிந்து விட்டது. பதினெட்டு ஆண்டுக்காலம் மதுரைச் சீமையை ஆண்ட மகாராணி மரணம் அடைந்துவிட்டாள். அன்னசத்திரங்களையும், ஆலயங்களையும், அறச் சாலைகளையும் வேறு பல தானதர்மங்களையும் செய்த புண்ணியவதி நிம்மதியாக அரங்கநாதப் பெருமானின் திருவடிகளைச் சென்று அடைந்துவிட்டாள்.
பேரனின் சிறையிலிருந்து கிடைக்காத விடுதலையை மரணம் இன்று சுலபமாக அவளுக்கு அளித்துவிட்டது. உடற் சிறையிலிருந்து உயிர்ப்பறவையே விடுதலை பெற்றுப் போன பின், மனிதர்கள் இட்ட வெறும் சிறை அவளை இனிமேல் என்ன செய்ய முடியும்?
மகாராணி மங்கம்மாள் வரலாறானாள். மனிதர்கள் கேட்கும் கதையானாள். கர்ண பரம்பரையாய் வழங்கும் சுவையான செவிவழி நிகழ்ச்சிகளின் தலைவியானாள். தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்று புகழ்பெற்றாள். போற்றுதல் அடைந்தாள்.
தன் வாழ்வின் இறுதியில் பேரனின் சூழ்ச்சியால் அவள் அடைந்த கொடுமைகள் வரலாற்றில் மெல்ல மெல்ல மறைந்து மங்கிப்போயின. ஆனால் அவள் ஆண்டது, புகழ்பரப்பியது, தானதருமங்கள் செய்தது ஆகியவையே வரலாற்றில் நிலைத்தன. நின்று நிலவின. அவள் மரணத்தின்போது அந்த அரண்மனையைச் சூழ்ந்த இருள் மட்டும் அப்புறம் அங்கிருந்து விலகவேயில்லை. விஜயரங்கனின் பக்குவமின்மையாலும், அவசர புத்தியாலும் ஆத்திரத்தாலும் நாயக்க சாம்ராஜ்யம் ஒளிமங்கி அழிய ஆரம்பித்தது. எங்கும் விலகமுடியாத இருள் சூழ்ந்தது.