இராணி மங்கம்மாள்/ராஜதந்திரச் சிக்கல்

விக்கிமூலம் இலிருந்து

10. ராஜதந்திரச் சிக்கல்

"கிறிஸ்தவர்களுக்கு வேறு இடங்களில் நிலம் ஒதுக்கிவிடுங்கள்" என்றே தொடர்ந்து வாதிட்டனர் கோயில்களை நிர்வகித்து வருபவர்கள். இனிமேல் எங்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பு அவர்களிடம் இருப்பதைக் கண்டுணர்ந்திருந்த ரங்க கிருஷ்ணன், அவர்களைக் கேட்டான்.

"இதே நிலங்கள் உங்களுக்குச் சொந்தமாயிருந்து நீங்கள் எங்காவது வெளியேறிச் சென்றிருக்கும் போது அவர்கள் தங்கள் சிலுவைக் கோயில்களை அங்கே கட்டியிருந்தால் நீங்கள் திரும்பி வந்ததும் என்ன செய்வீர்கள்?"

தனது இந்தக் கேள்விக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதை அவன் கூர்ந்து கவனித்தான். ஆனால் அவர்களது பதில் அவனுக்கு ஏமாற்றமளிப்பதாயிருந்தது! "அரசே! நாங்கள் வெளியேறிச் சென்றிருந்தாலும் எங்கள் நிலங்களை அவர்கள் அவ்வளவு சுலபமாகக் கைப்பற்றி அவற்றின் மேல் சிலுவைக் கோயில் கட்டிவிடலாம் என்று நினைக்கக்கூட முடியாது."

"ஏன் முடியாது?

"அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் தடுக்காமல் சும்மா விட மாட்டார்கள்."

"மிகவும் சரி அதே போல் அவர்களுடைய நிலத்தில் நீங்கள் ஆலயங்கள் கட்டும்போது அக்கம்பக்கத்திலுள்ளவர் ஏன் தடுக்கவில்லை?"

“தடுப்பதற்கு அக்கம்பக்கத்திலே அப்போது அவர்களில் யாருமேயில்லையே?"

"ஓகோ? ஓர் அநியாயத்தைத் தடுக்க முடிந்தவர்கள் நேரில் இருந்தால் ஒரு நீதி, இல்லாவிட்டால் வேறொரு நீதியா? வேடிக்கையாயிருக்கிறதே நீங்கள் சொல்லுவது?"

"நீதியோ அநீதியோ கட்டிய கோயிலை இனிமேல் என்ன செய்யமுடியும்? சாஸ்திர சம்மதமாகிவிட்ட ஒரு நிறைவேறிய காரியத்தைக் குறை சொல்லிப் பயனில்லை."

"நியாயமும், சாஸ்திரமும் வேறு வேறானவை என்று நான் நினைக்கவில்லை பெருமக்களே!"

"சாஸ்திரம் என்ன சொல்லுகிறதோ அதற்கு நியாயமும் கட்டுப்பட்டாக வேண்டும்."

"நியாயத்துக்குப் புறம்பான ஒன்றை சாஸ்திர, அங்கீகாரம் பெற்றதென்று நீங்கள் கட்டிப் பிரதிஷ்டை செய்து வழிபடுகிற தேவாலயங்களில் உள்ள சர்வ சக்தியும் வாய்ந்த தெய்வங்கள் கூட ஒப்புக்கொள்ளப் போவதில்லை..."

அரசர் தங்களுக்குச் சாதகமாக இல்லை என்பது வந்தவர்களுக்கு மெல்ல மெல்லப் புரிந்தது. உடனே வாதிடுவதை விடுத்து அவனைத் தன்னைக் கட்டிக்கொண்டு காரியத்தை சாதிக்க முயன்றார்கள் அவர்கள்.

"எப்படியோ கட்டிய கோயிலை ஒன்றும் செய்ய முடியாது அரசே!”

இதற்கு ரங்ககிருஷ்ணன் மறுமொழி எதுவும் கூறவில்லை. அவர்களை உறுத்துப் பார்த்தான். முகபாவத்திலிருந்து அவன் உறுதியானதொரு முடிவுக்கு வந்துவிட்டான் என்று புரிந்தது.

"தயை கூர்த்து அரசர் கருணை காட்டவேண்டும். அரசராகிய தாங்களும் மக்களாகிய நாங்களும் எந்தத் தெய்வங்களை வழிபட்டு அருள் வேண்டுகிறோமோ அதே தெய்வங்களுக்குத்தான் நாங்கள் கோயில் கட்டியிருக்கிறோம்."

மறுபடியும் அவர்களைக் கடுமையாக உறுத்துப் பார்த்தான் அவன்.

"கும்பாபிஷேகம் செய்து முறைப்படி குடியேற்றிவிட்ட மூர்த்திகளை இனி எங்கே கொண்டு போக முடியும் அரசே?"

இதற்கு அப்போது ரங்ககிருஷ்ணன் கூறிய மறுமொழி அங்கிருந்த அனைவரையுமே துணுக்குறச் செய்தது. திகைத்துப் போய் நின்றார்கள் அவர்கள்.

சமயப்பற்றும் பக்தியும் மிக்கவனான ரங்ககிருஷ்ணனின் மனத்தில் நியாயத்தைக் காட்டிலும் உயர்ந்த தெய்வமில்லை என்ற உணர்வு மட்டுமே அப்போது ஓங்கியிருந்தது. ஆகவே அவர்களிடம் அவன் தார்மிகக் கோபத்தோடு கேட்டான்.

"விக்கிரகங்களைக் கொண்டு போய் வைக்க வேறு இடமில்லை என்றால் காவேரியில் போடுவதுதானே?"

இந்த வார்த்தைகளிலிருந்த சூடும் கடுமையும் உறைத்து இனி இதில் இவனுடைய முடிவு வேறுவிதமாக இராது என்று வந்திருந்தவர்களுக்குப் புரிந்ததும் தயங்கி நின்றனர் அவர்கள்.

அவர்களிடம் ரங்ககிருஷ்ணனே மேலும் தொடர்ந்தான்.

"ஏதடா அபசாரமான வார்த்தைகளைப் பேசுகிறானே என்று நினைக்க வேண்டாம். உண்மையை விட உயர்ந்த தெய்வமில்லை என்பது எல்லாச் சமயங்களும் ஏற்கிற உண்மை. பெரும்பாலானவர்கள் ஒன்று சேர்ந்து செய்திருக்கிறார்கள் என்பதனால் ஒரு தப்பான காரியம் நியாயமாகிவிடாது. சிறுபான்மையோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதனால் ஒரு நியாயத்தைப் புறக்கணித்துவிட முடியாது."

"ஆனால் அரசரின் இந்த முடிவால் பெரும்பாலான பக்தர்களின் மனஸ்தாபத்தைத்தான் எதிர்பார்க்க முடியும்" என்று சற்றே துணிவுடன் ஆரம்பித்தார் வந்தவர்களில் ஒருவர். துணிந்து வாய்திறந்து விட்டாலும் பயந்து கொண்டேதான் பேசினார் அவர்.

"நீதி நியாயங்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு விதம், சிறுபான்மையோருக்கு மற்றொரு விதம் என்று பார்க்க முடியாது."

தீர்மானமாக இப்படி அவர்களுக்கு மறுமொழி கூறி அனுப்பினான் ரங்ககிருஷ்ணன். அவனுடைய தீர்ப்பின் நடுநிலைமைப் பண்பையும், நியாயத்தையும் தாய் மங்கம்மாள் பாராட்டினாள். தொடர்ந்து இப்படியே நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமென்று அவனை மேலும் வாழ்த்தினாள்.

மிகச் சில தினங்களிலேயே கிறிஸ்தவர்களுக்கு உரிய இடங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பாதிரியாரும், கிறிஸ்தவ மக்களும் ரங்ககிருஷ்ணனைச் சந்தித்து அவனுக்குத் தங்கள் விசுவாசத்தைத் தெரிவித்தனர்.

இவை எல்லாம் முடிந்த பின் பட்டத்தரசி சின்ன முத்தம்மாள் மட்டும் ஒரு நாள் இதைப் பற்றி ரங்க கிருஷ்ணனிடம் பேசியபோது சிறிது வருத்தப்பட்டாள்.

"விக்கிரகங்களைத் தூக்கி ஆற்றில் எறியச் சொன்னீர்களென்று நம் குடிமக்களின் சிலர் உங்கள் மீது கோபமாயிருக்கிறார்கள். நீங்கள் அத்தனை கடுமையாகச் சொல்லியிருக்கக் கூடாது."

"மெய்யாகவே ஆற்றில் கொண்டு போய் எறியுங்கள் என்ற அர்த்தத்தில் நான் அப்படிச் சொல்லவில்லை. நியாயத்தைப் பாராமல் தாங்கள் பிடித்த 'முயலுக்கு மூன்றே கால்' என்று அவர்கள் பிடிவாதமாகப் பேசினார்கள். அதனால் தான் நானும் அப்படிப் பதில் பேசவேண்டியதாயிற்று."

"’ஒரு சொல் வெல்லும், மற்றொரு சொல் கொல்லும்’ என்பார்கள். நீங்கள் நினைத்ததையே இன்னும் இதமாகச் சொல்லியிருக்கலாம்."

"அவர்களது முரண்டும் பிடிவாதமும் மட்டுமே என்னை அப்படிப் பேசவைத்தன. தவிர இன்னொரு காரணமும் இருக்கலாம் முத்தம்மா! அவ்வப்போது நமது நண்பராகவும் எதிரியாகவும், சில வேளைகளில் நண்பரா எதிரியா என்று கண்டு பிடிக்க முடியாத நிலையிலும் இருக்கும் இரகுநாத சேதுபதி இந்தப் பிரச்னையில் எப்படி நடந்து கொள்கிறாரோ அப்படி நாமும் நடந்து கொண்டு நமது பேரைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பது என்னுடைய கருத்து."

"நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே கொஞ்சம் புரியும்படியாகத் தான் சொல்லுங்களேன்."

"ஒரு பிரச்னையில் நமது எதிரியின் முடிவு சரியில்லையானால் அதே பிரச்னையில் நாம் சரியான முடிவெடுத்து மற்றவர்களின் அன்பையும் அநுதாபத்தையும் நம் பக்கம் திரட்ட வேண்டும். இப்பிரச்னையை இப்படி ஒரு நோக்கிலும் நான் கவனித்திருக்கிறேன் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இது ராஜதந்திரப்போக்கான காரியம். மறவர் நாட்டிலும் கிழவன் சேதுபதியின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளிலும் விதேசிகளும், கிறிஸ்தவர்களும் மிக அதிகமாக கொடுமைப்படுத்தப் பெற்றிருக்கிறார்கள். 'மங்கலம்' என்னும் மறவர் நாட்டு ஊரில் பிரிட்டோ பாதிரியாரும் அவருடன் வந்த ஆட்களும் பலவந்தமாகச் சிவலிங்க வழிபாடு செய்யும்படி வற்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்."

"அதற்குக் காரணம் அவர்களில் சிலர் சிவலிங்க வழிபாட்டை எள்ளி நகையாடிப் பேசியதால் நேர்ந்தது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒவ்வொருவரும் பிறருடைய உணர்வுகளைப் புண்படுத்தாமல் இருக்கக் கடமைப் பட்டிருக்கிறார்கள் அல்லவா? பிறரால் நாம் புண்படுகிற போது வருந்துவதும், பிறரை நாம் புண்படுத்துகிற போது மகிழ்வதும் சரியில்லையே?"

"நியாயம்தான்! தவறு செய்யும் ஒரு சிலர் எல்லாத் தரப்புகளிலும் இருப்பார்கள். அதற்காக எல்லாத் தரப்புகளுமே தவறானவை என்று முடிவு செய்து விடலாமா? சிவலிங்க வழிபாடு செய்ய மறுத்தார்கள் என்பதற்காகப் பிற மதத்தினரை மரங்களில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்ட கொடுமை சேது நாட்டில் நடந்திருக்கிறது. அதனால் தான் பிற சமய நிந்தனையைத் தவிர்க்க வேண்டும் என்பதில் நான் தீவிரமாக இருக்கிறேன்."

"சேதுநாட்டில் மட்டும்தானா இப்படி நடந்தது? விதேசிகள் மேல் வெறுப்புள்ள இடங்களில் எல்லாம் இப்படித்தானே நடப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள்?"

"இல்லை முத்தம்மா! நீ சொல்வது தவறு வெறுப்பு வந்துவிட்டால் அப்புறம் அது விதேசி சுதேசி என்றெல்லாம் வித்தியாசம் பாராது. இங்கே நம் திரிசிரபுரத்தில் புதிதாகக் கோயில்கள் கட்டப்பட்ட இடம் விதேசிக் கிறிஸ்தவர்களுடைய தென்றோ அவர்களை வெறுத்தார்கள் நம்மவர்கள்? உதாரணத்திற்கு மறவர் சீமை ஆட்சியில் அடங்காத நமது 'வடுகர் பட்டி' ஊரில் என்ன நடந்தது என்று இப்போது சொல்கிறேன், கேள் வடுகர்பட்டியின் தலைக்கட்டாக இருக்கும் லிங்கரெட்டியார் வீரசைவராக இருந்தும் தம்முடைய பிரதேசத்தில் கிறிஸ்தவ மதப்பிரசாரத்துக்கு வந்த பாதிரிகளை வெறுக்காமல் அவர்களுக்கு வசதிகள் செய்து கொடுத்திருக்கிறார். லிங்கரெட்டியாரின் குருவாகிய வீரசைவ சமயத் தலைவரே ஒரு சமயம் ரெட்டியாரை அழைத்து. 'லிங்க வழிபாட்டை ஏளனம் செய்யும் கிறிஸ்தவப் பாதிரிமார்களை உன் ஊரில் நுழைய விடாதே' என்று தடுத்தும் ரெட்டியார் அதைக் கேட்கவில்லை. தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் எவ்வளவு கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கு எடுத்துக்கொண்டு அவர்களை முன்போலவே சகல உரிமைகளுடனும் வாழும்படி பார்த்துக் கொண்டார் ரெட்டியார். மறவர் நாட்டு எல்லையிலேயே மறவர் சீமை ஆட்சிக்குட்படாத பகுதியில்தான் இந்த நிலை. மறவர் சீமை எல்லைக்குள் மட்டும் இந்தச் சமரச நிலை நிலவ முடியவில்லை."

"நீங்கள் பிறரிடம் எவ்வளவுதான் சுமுகமாக நடந்து கொண்டாலும் உங்களால் சேதுபதியின் குணம் மாறிவிடப் போவதில்லை."

"அது எனக்கும் தெரியும் முத்தம்மா சேதுபதி வல்லாளகண்டர் அவருடைய அஞ்சாமையும், பிடிவாதமும் எதனாலும் மாறிவிடப் போவதில்லைதான்."

"பின் நீங்கள் செய்கிற இதெல்லாம் எந்தவித்தில் அவரைப் பாதிக்கும்?"

"இதன் மூலம் சேதுபதிக்கு ஒரு ராஜதந்திரச் சிக்கலை உருவாக்கிவிட முடிந்தாலே எனக்கு ஓரளவு வெற்றிதான் முத்தம்மா” .

"மனிதர்களைப் புரிகிற அளவு இந்த ராஜதந்திரங்கள் எனக்கு எப்போதுமே புரிவதில்லை."

"மிகவும் நல்லது. அவை புரியாத ஒரே காரணத்தால் நீயாவது நிம்மதியாக இரு" என்று அவளை நோக்கிக் குறும்புப் புன்னகை பூத்தான் ரங்ககிருஷ்ணன்.